மகாராஷ்டிராவில் மீன் பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் அனைவரும் கடந்த மாத இறுதியில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். இந்நிலையில், மும்பை அருகில் உள்ள பால்கர் என்ற இடத்தை சேர்ந்த மீனவர் சந்திரகாந்த் தாரே என்பவரும், தனது படகில் 10 பேருடன் மீன் பிடிக்கச் சென்றார். முதல் நாளில் அதிக மீன் கிடைக்கும் என்ற ஆசையில் கடலின் மையப்பகுதிக்கு சென்றார். அப்போது, வாத்வான் கடல் பகுதியில் மீன் பிடித்த போது அவரது வலையில் ஒரே நேரத்தில் மிகவும் அபூர்வமான `கடல் தங்கம்' என்று அழைக்கப்படும் கோல் மீன்கள் ஏராளமாக வலையில் சிக்கியிருந்தன. மொத்தம் 157 மீன்கள் இருந்தது. அவை மிகவும் அதிக விலை கொண்டதாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மீன்களை கடற்கரைக்கு கொண்டு வந்ததும் அவற்றை வாங்க வியாபாரிகள் வரிசையில் காத்திருந்தனர். ஏலத்தின் முடிவில் 157 மீன்களும் மொத்தம் ரூ.1.33 கோடிக்கு விலை போனது. வழக்கமாக ஒரு மீட்டர் நீளம் இருக்கும் இந்த மீன்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.85,000 விலை போனது. உடலில் கருப்பு புள்ளிகளை கொண்ட இந்த மீன்களின் அனைத்து பாகங்களுக்கும் சந்தையில் நல்ல மதிப்பு உண்டு. மருந்து தயாரிக்கவும், உணவு பொருள்கள் மற்றும் அழகு சாதனப்பொருள்கள் தயாரிக்கவும் இவை பயன்படுகின்றன.
மருந்து கம்பெனிகள் இந்த வகை மீன்களை சில உயிர் காக்கும் மருந்துகளையும் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா, சீனா, ஹாங்காங், மலேசியா போன்ற நாடுகளில் இந்த வகை மீன்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மூளை செல்கள் வளர்ச்சிக்கும், முதுமை அடைவதை தடுப்பதற்கும், கண்ணின் ஆரோக்கியத்திற்கும் இந்த மீன்கள் உதவுவதாக நம்பப்படுகிறது. அதோடு ஒமேகா-3, இரும்பு சத்து, மெக்னீசியம் போன்ற பல விதமான சத்துக்கள், வைட்டமின், புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த இந்த வகை மீன்கள் சிறுநீரகத்தில் உள்ள கல்லை கரைக்கவும், பாலியல் சக்தியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது.

சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில் இந்த மீனில் இருந்து ஒயின் தயாரிக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த அபூர்வமான மீன்கள் ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு அதிகமாக கிடைப்பது மிகவும் அபூர்வமாகும். மீனவர் சந்திரகாந்த் கடலில் இருக்கும் போது இந்த மீன்களை பிடித்த போது அதனை வீடியோ எடுத்து வெளியிட்டார். இதனால் அவர் கடலில் இருந்து கரைக்கு வரும் முன்பாக அவரது புகழ் அனைத்து இடங்களிலும் பரவி வியாபாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் அதனை போட்டி போட்டு வாங்க குவிந்தனர். ஆனால் அவற்றை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். இது குறித்து மீனவர் சந்திரகாந்த் கூறுகையில், இந்த அளவுக்கு மீன்கள் விலை போயிருப்பதால் என் நிதிப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது என்றார்.