Published:Updated:

மட்டன் ஆம்லெட் புலாவ், இறால் வறுவல் புலாவ், மட்டன் & பீன்ஸ் கப் கேக் இட்லி- வீக் எண்டு ரெசிப்பீஸ்

அசைவம்

மட்டனில் என்னவெல்லாம் வெரைட்டியாக செய்யலாம்? அட, கப் கேக் வரை செய்யலாமே! இந்த வார வீக் எண்டுக்கு, மட்டன் ஸ்பெஷல் ரெசிப்பிகள் இங்கே. என்ஜாய் செய்யுங்கள்...

மட்டன் ஆம்லெட் புலாவ், இறால் வறுவல் புலாவ், மட்டன் & பீன்ஸ் கப் கேக் இட்லி- வீக் எண்டு ரெசிப்பீஸ்

மட்டனில் என்னவெல்லாம் வெரைட்டியாக செய்யலாம்? அட, கப் கேக் வரை செய்யலாமே! இந்த வார வீக் எண்டுக்கு, மட்டன் ஸ்பெஷல் ரெசிப்பிகள் இங்கே. என்ஜாய் செய்யுங்கள்...

Published:Updated:
அசைவம்

மட்டன் ஆம்லெட் புலாவ்

ஆம்லெட் செய்ய...

முட்டை - 6

மட்டன் கீமா - அரை கப்

பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - 2

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாயத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப்

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

மீடியமாக நறுக்கிய தக்காளி - 2

ஏலக்காய் - 2

பட்டை - ஒரு துண்டு

அன்னாசிப்பூ - ஒன்று

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

கீறிய பச்சை மிளகாய் - 2

புதினா இலை - சிறிதளவு

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தேங்காய்ப்பால் - ஒரு கப்

பிரிஞ்சி இலை - ஒன்று

சீரகம் - கால் டீஸ்பூன்

மட்டன் ஆம்லெட் புலாவ்
மட்டன் ஆம்லெட் புலாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை:

கீமா செய்வதற்கு ஏற்ப மட்டனை கொத்தி வாங்கி வைத்துக் கொள்ளவும். மட்டன் கீமா ரெசிப்பியை ரெடி செய்து கொள்ளுங்கள். வெங்காயம், ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். பாஸ்மதி அரிசியைக் கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

முட்டையை உடைத்து, வாய் அகலமான பாத்திரத்தில் சேர்த்து, எக் பீட்டரால் நன்கு அடித்துக்கொள்ளவும். இத்துடன் வெங்காயம், மட்டன் கீமா, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அடுப்பில் நான்ஸ்டிக் பேனை வைத்து சிறிது எண்ணெய் தடவி சூடானதும், கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றி வேகவிடவும்.

இனி, பேனின் மேல் தட்டையான ஒரு தட்டை வைத்து மூடி, அப்படியே பேனை கவிழ்க்கவும். மறுபடியும் பேனை அடுப்பில் வைத்து தட்டில் உள்ள ஆம்லெட்டை மெதுவாக பேனுக்கு மாற்றவும். வேகாத அடிப்பக்கத்தை பேனில் வேகவிட்டு எடுத்து ஆறவிட்டு மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் பச்சைமிளகாய், புதினா இலை சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது, அரைத்த வெங்காயக் கலவை விழுது, தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து வதக்கவும். கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது நறுக்கி வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்து மெதுவாகக் கிளறிவிடவும். இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். கூடவே ஊறவைத்த அரிசி சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடவும். பிறகு மிதமான தீயில் 20 நிமிடம் `தம்’ போட்டு இறக்கவும். சூடு ஆறியதும், அலங்கரித்து ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிக்கன்-வால்நட் ஸ்பைஸி கிரேவி

தேவையானவை:

எலும்பில்லாத சிக்கன் - 350 கிராம்

பச்சைமிளகாய் - 2

பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - ஒன்று

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

பாலக்கீரை விழுது - ஒரு கப்

வால்நட் - அரை கப்

கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

சிக்கன்-வால்நட் ஸ்பைஸி கிரேவி
சிக்கன்-வால்நட் ஸ்பைஸி கிரேவி

செய்முறை:

சிக்கனை நறுக்கி சுத்தம் செய்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வால்நட் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, பாலக்கீரை விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும். இத்துடன் அரைத்த வால்நட் விழுது சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். கிரேவி பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கவும். சூடான சாதம், ரொட்டி, புல்காவுடன் சிக்கன்-வால்நட் ஸ்பைஸி கிரேவியைப் பரிமாறவும்.

கொண்டைக்கடலை - இறால் வறுவல் புலாவ்

இறால் வறுவல் செய்ய:

பொடியாக நறுக்கிய இறால் - 250 கிராம்

கொண்டைக்கடலை - அரை கப்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப்

எண்ணெய் - தேவையான அளவு

புலாவ் செய்ய:

வேகவைத்த பாஸ்மதி அரிசி - ஒரு கப்

வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

பிரிஞ்சி இலை - ஒன்று

ஏலக்காய் - ஒன்று

பட்டை - ஒரு துண்டு

பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்

கீறிய பச்சைமிளகாய் - 2

காய்ந்த மிளகாய் - 2

நீளமாக நறுக்கிய பெரியவெங்காயம் - ஒன்று

காயந்த மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

மிளகாய் எண்ணெய் - 2 டீஸ்பூன் (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

கொண்டைக்கடலை - இறால் வறுவல் புலாவ்
கொண்டைக்கடலை - இறால் வறுவல் புலாவ்

செய்முறை:

கொண்டைக்கடலையைக் கழுவி 6 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, இத்துடன் இறால், மிளகாய்த்தூள், உப்பு, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து, வடை மாவு பதத்துக்குப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும் மிளகாய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பிறகு பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, பெருஞ்சீரகம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி, நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய் விழுது, உப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த உருண்டைகளைச் சேர்த்து மெதுவாகக் கிளறிவிடவும். பிறகு வேகவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்துக் கிளறி, மீதம் இருக்கும் வெண்ணெயைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இத்துடன் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

மட்டன் அண்ட் பீன்ஸ் கப் கேக் இட்லி

ஸ்டப்பிங் செய்ய:

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய மட்டன் - ஒரு கப்

பொடியாக நறுக்கிய பீன்ஸ் - அரை கப்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாயத்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

இட்லி செய்ய:

இட்லி மாவு - தேவையான அளவு

முட்டை - 2

சிலிக்கான் கப் கேக் மோல்டு - தேவையான அளவு

மட்டன் அண்ட் பீன்ஸ் கப் கேக் இட்லி
மட்டன் அண்ட் பீன்ஸ் கப் கேக் இட்லி

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கி, இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்துக் கரையும்வரை வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மட்டன், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி, இறக்கி ஆறவிடவும்.

ஒரு பவுலில் முட்டையை உடைத்துச் சேர்த்து, நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும். சிலிக்கான் கப் கேக் கப் மோல்டில் கால் கப்புக்கு இட்லி மாவை ஊற்றவும். அதன் மீது வதக்கி வைத்துள்ள மட்டன் கலவையை வைக்கவும். மீண்டும் இட்லி மாவை ஊற்றி அதன் மீது முட்டைக் கலவையை ஊற்றவும். இனி, அடுப்பில் இட்லிப் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி, இட்லித் தட்டுகளில் இட்லி கப் மோல்டுகளை வைத்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கி பரிமாறவும்.