Election bannerElection banner
Published:Updated:

உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள்... நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு ஓர் அலெர்ட்!

Snacks
Snacks ( pixabay )

உடல்பருமன் இன்று மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வாரத்தில் மூன்று நாள்கள் ஒரு குழந்தை நொறுக்குத்தீனி சாப்பிடும்போது, அதற்கு ஆஸ்துமா வர வாய்ப்புள்ளதாக `ஜர்னல் ஆஃப் தோராக்ஸ் (Journal of Thorax)' நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

`ஆபீஸ் விட்டு வரும்போது மறக்காம பீட்ஸா வாங்கிட்டு வாங்க டாடி’, `எதையாவது சாப்பிடணும்போல இருக்கு... கொஞ்சம் மிக்ஸர், சிப்ஸ், பஃப்ஸ் வாங்கிட்டு வாங்க மம்மி...’ - அலுவலகம் விட்டு வீடு திரும்பும் பெற்றோர்களுக்கு, பல வீடுகளிலும் குழந்தைகள் அனுப்பும் செய்திகள் இவை. பலரும், போகும் வழியிலேயே அவற்றை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். கிரிக்கெட் மேட்ச், சினிமா பார்க்கும்போது பெரியவர்களும்கூட நொறுக்குத் தீனிகளை விரும்பி உண்பதுண்டு. ஆனால், இத்தகைய நொறுக்குத் தீனிகள் எந்த அளவிற்கு உடல் நலனுக்கு எதிரானவை தெரியுமா? 'நொறுக்குத் தீனிகள் உடலில் பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும்’ என்று எச்சரிக்கிறது மருத்துவ உலகம். நொறுக்குத் தீனிகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இங்கே விளக்குகிறார், ஊட்டச்சத்து நிபுணர் மேனகா.

Snacks
Snacks
pixabay

“சிப்ஸ், மிக்சர், முறுக்கு, பிஸ்கட், பன், பிரெட், ரஸ்க், சோடா, சாண்ட்விச், கேக்ஸ், ஏரேட்டட் பானம், பீட்ஸா, பர்கர் உள்ளிட்ட தீனிகளில் சர்க்கரை, கொழுப்பு, உப்பு போன்றவை அதிகமாக இருக்கும். இதை, `ஹை ஃபேட் சுகர் அண்ட் சால்ட் (High Fat Sugar and Salt - HFSS)' என்போம். இவற்றில் கொழுப்புச் சத்து நிறைந்திருக்கும். அது, உடலுக்கு நிறைய பிரச்னைகளை உண்டாக்கும். இதை உண்பதன் மூலம் உடல்பருமன், இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் சருமப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

`அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன்’ வெளியிட்ட ஓர் ஆய்வு, ஒருவர் தன்னுடைய மாத ஊதியத்தில் 45 சதவிகிதத்தை நொறுக்குத்தீனிக்குச் செலவிடுகிறார் என்று தெரிவிக்கிறது. நொறுக்குத்தீனி அதிகமாகச் சாப்பிடும்போது, அது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்திவிடும். இதனால், இன்சுலின் செயலிழப்பு உருவாகி, சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும்.

Burger
Burger
pixabay

'அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷனின்' அறிவுறுத்தலின்படி, ஒருவர் நாளொன்றுக்கு ஆறு டீஸ்பூனிலிருந்து ஒன்பது டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏரேட்டட், கார்பனேட்டட் குளிர்பானங்களில், சராசரியாக ஒரு கேனில் எட்டு டீஸ்பூன் சர்க்கரை நிறைந்துள்ளது. ஒருவர், ஒரு ஏரேட்டட் பானம் குடித்தாலே அவருக்கு எட்டு டீஸ்பூன் சர்க்கரை கிடைத்துவிடும்.

இது மட்டுமன்றி பிஸ்கட்,கேக், பஃப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட்டால், உட்கொள்பவரின் சர்க்கரை அளவு இன்னும் அதிகரித்துவிடும். அதுமட்டுமன்றி, `டிரான்ஸ் ஃபேட்(Trans fat)' நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, உடலில் கெட்ட கொழுப்பும் அதிகமாகிறது. பயன்படுத்திய சமையல் எண்ணெயையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, அது டிரான்ஸ் ஃபேட் ஏற்பட வழிவகுக்கிறது. அப்படியான எண்ணெயில்தான் பஜ்ஜி, வடை முதல் காளிஃப்ளவர் ஃப்ரை வரை சமைத்து நமக்கு விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

diabetes
diabetes
pixabay

ஏற்கெனவே, `எல்டிஎல் (Low-density lipoproteins)' எனும் கெட்ட கொழுப்பு உடலில் இருக்கும். டிரான்ஸ் ஃபேட் உணவுகளைச் சாப்பிடும்போது அது இன்னும் அதிகரிக்கவே செய்யும். இதனால் மாரடைப்பு, வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

பொதுவாக பீட்ஸா, பர்கர் போன்ற நொறுக்குத்தீனிகளில் உப்பு ( சோடியம் குளோரைடு) அதிகமாக இருக்கும். ஒருவர் நாளொன்றுக்கு 2,300 மில்லி கிராம் உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் பீட்ஸா, பர்கர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உட்கொண்டால், அதிலிருந்து மட்டுமே 1,150 மில்லி கிராம் உப்பு உடலுக்குக் கிடைத்துவிடும். மற்ற உணவுகளில் இருந்தும் கிடைக்கும் உப்பு, உடல் தேவைக்கும் மீறியதாக அமைந்துவிடும். ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, இந்த அதிகப்படியான உப்பு அதை இன்னும் அதிகரிக்கச் செய்யும்; இதயத்தைப் பாதிக்கும். அதேபோல உடலில் நீர் சேர ஆரம்பிக்கும். இதனால் வயிறு, கால்களில் வீக்கம் ஏற்படும்.

Heart disease
Heart disease
pixabay

உடல்பருமன், இன்று மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வாரத்தில் மூன்று நாள்கள் ஒரு குழந்தை நொறுக்குத்தீனி சாப்பிடும்போது, அதற்கு ஆஸ்துமா வர வாய்ப்புள்ளதாக `ஜர்னல் ஆஃப் தோராக்ஸ் (Journal of Thorax)' நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல நொறுக்குத் தீனிகள் மனச்சோர்வையும் உருவாக்கிவிடுபவை. மட்டுமன்றி `அல்சைமர் (Alzheimer)' பிரச்னை ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் `Phthalates' எனும் வேதிப்பொருள் நிறைந்திருக்கும். இது, உடலின் ஹார்மோனை பாதிக்கக்கூடியது. இதனால் கருத்தரித்தலில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், எண்ணெயில் பொறிக்கப்பட்ட சிப்ஸ் வகை நொறுக்குத் தீனிகளை உட்கொள்ளும்போது, சரும நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். மேலும், வாயில் இருக்கும் அமிலத்தை அதிகரிக்கச் செய்வதால், பற்களின் வெளிப்புறம் அமைந்திருக்கும் எனாமலை அரிக்க ஆரம்பித்து, பற்சொத்தை ஏற்படும்.

ஊட்டச்சத்து நிபுணர் மேனகா
ஊட்டச்சத்து நிபுணர் மேனகா

நொறுக்குத்தீனிகளில் நார்ச்சத்து கிடையாது. உடலுக்குத் தேவையான இந்த சத்து இல்லாததால் மலச்சிக்கல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் உருவாகவும் வாய்ப்புண்டு. எனவே, மறுமுறை பை நிறைய ஸ்நாக்ஸ் வாங்கிக்கொண்டு பில் போடும் முன்னர், இவையெல்லாம் ஆரோக்கியமான உணவல்ல என்பதை உணரவும்.

சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இல்லாதவர்கள், நொறுக்குத்தீனி சாப்பிடத் தோன்றும் போதெல்லாம் பாக்கெட் அயிட்டங்கள், ஏரேட்டட் பானங்களைத் தவிர்த்து, அவற்றுக்குப் பதிலாக எள்ளுருண்டை, பாசிப்பருப்பு உருண்டை, கடலை மிட்டாய் போன்ற நம் பாரம்பர்ய பண்டங்களை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

Sugar
Sugar
pixabay

முக்கியமாக, குழந்தைகளை அந்த விஷத் தீனிகளிலிருந்து மடைமாற்றி, வீட்டுத் தீனிகளுக்குப் பழக்கவேண்டியது அவசியம். அதேபோல முளைகட்டிய பயறு, பச்சைப் பயறு தோசை, சோயா தோசை, சுண்டல், முட்டையின் வெள்ளைக்கரு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம்” என்கிறார் மேனகா.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு