`உணவு' என்றாலே அனைவர்க்கும் கொண்டாட்டம்தான். அதிலும் பகிர்ந்து உண்ணும்போது வழக்கத்திற்கும் அதிகமாகவே சாப்பிடத் தோன்றும். ஆனால், டயட் என்ற பெயரில் உணவிற்குக் கட்டுப்பாடு விதிக்கும்போது உடல் எடையோடு மன வலிமையும் குறைகிறது என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

ஒவ்வாமை, சுகாதாரப் பிரச்னைகள், மத அல்லது கலாசார விதிமுறைகள் காரணமாகப் பலர் 'டயட்' அல்லது விரதம் போன்றவற்றைப் பின்பற்றுவார்கள். இதுபோன்று உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தனிமையாக உணர்கிறார்கள் என்று ஆய்வுகளின்மூலம் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கண்டறிந்துள்ளனர்.
``மற்றவர்களுடன் இணைந்து பேசினாலும் அவர்களுடன் சகஜமாகப் பழகினாலும் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது உணவைப் பகிர முடியாமல் போவதனால் அவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே உணர்கிறார்கள். இயல்பாகவே உணவுடன் பிணைப்பு என்பது அற்புதமான சமூக அனுபவம். அதைக் கட்டுப்படுத்தும்போது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்" என்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கைட்லின் வூலி (Kaitlin Woolley) அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

உணவுக் கட்டுப்பாடு கொண்டிருப்பதன்மூலம் `தனிமை அதிகரிக்கும்' என்பதற்கான முதல் சான்று, Journal of Personality and Social Psychology எனும் இதழில் வெளியிடப்பட்டது. இதற்கு முன் நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வெளி நபர்கள் உணவைப் பகிர்ந்து உண்ணும்போது அவர்களுக்குள் அதிக நம்பிக்கை உருவாகிறது என்று கண்டறிந்துள்ளனர். மேலும், ஒரே தட்டிலிருந்து உணவை உட்கொள்வது, அந்நியர்களிடையே அதிக பிணைப்பை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், உணவுப் பகிர்தலைக் குறைக்கும்போது உணவு மீதான கவலை அவர்களிடையே அதிகரிக்கச் செய்யும். என்ன சாப்பிடலாம், மற்றவர்களைப்போல் சாப்பிடாமல் இருப்பதற்கான காரணமாக அவர்களிடம் என்ன சொல்லலாம் போன்ற கவலையில்தான் அவர்கள் அதிகம் மூழ்கி இருக்கிறார்கள்.

இந்தத் தனிமையின் கவலை திருமணமாகாதவர்கள் மற்றும் குறைந்த வருமானம் வாங்குபவர்களுக்கே அதிகம் இருக்கிறது என்றும் ஆங்கிலேயர்கள் அல்லாத வேற்று நாட்டுக் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உணவைத் தடையில்லாமல் உண்ணும் நபர்களுடன் ஒப்பிடுகையில், உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுபவர்கள் 19 சதவிகிதம் தனிமையாக உணர்கிறார்கள் என்று இந்த ஆய்வின் முடிவில் கண்டறிந்துள்ளனர்.