Published:Updated:

அதீத டயட் அக்கறையும் ஆபத்தில் முடியலாம்... எப்படி? - மனநல மருத்துவர் சொல்றார்... கேளுங்க!

Diet
Diet ( Image by mohamed Hassan from Pixabay )

சாப்பிடுவதால் உடல் எடை கூடிவிடும் என்பதால் தேவையான அளவு உணவைக்கூட எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்துவிடுகிறார்கள் சிலர். இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள்.

இன்றைய தலைமுறையினர் பலரும், குறிப்பாக இளம்பெண்கள், ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்று நினைக்கிறார்கள். அதனாலேயே, எடை அதிகரித்துவிடுமோ என்கிற பதற்ற நிலைக்கு ஆளாகிறார்கள். திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் இதற்கு முக்கியக் காரணம். உடற்பருமனாகிவிடக் கூடாது என்கிற பதற்றத்தில் போதுமான அளவு உணவு எடுத்துக் கொள்ளாமல், ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகின்றனர். அந்தப் பதற்றத்தின் உச்சநிலை `அனோரெக்சியா நெர்வோசா' (Anorexia nervosa) என்கிற உளவியல் பிரச்னையாக மாறிவிடுகிறது. உயிரிழப்புவரை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான இந்த உளவியல் பிரச்னை குறித்து மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி பேசினார்.

``உளவியல் பிரச்னைகள் பெரும்பாலும் மரபு ரீதியில் ஏற்படக்கூடியதாய் இருக்கும். ஆனால், Anorexia nervosa இதற்கு விதி விலக்கானது. சமூகத்தின் பொது மனநிலை காரணமாக ஏற்படும் பிரச்னைதான் இது. ஸ்லிம் ஃபிட் ஆக இருப்பதுதான் அழகு என்கிற மனநிலை காலங்காலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த மனநிலை உடல் அமைப்பின் மீதான பெரும் பதற்றத்தை உருவாக்கிவிடுகிறது. உடல் எடை கூடிவிட்டால் அழகு பறிபோய்விடும் என்கிற பிரம்மைக்கு சிலர் ஆட்பட்டு விடுகிறார்கள்.

diet
diet
pixabay

சாப்பிடுவதால் உடல் எடை கூடிவிடும் என்பதால் தேவையான அளவு உணவைக்கூட எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து விடுகிறார்கள் சிலர். இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு மிகவும் மெலிந்து போய்க் காணப்படுவார்கள். இதன் உச்சமாகத் தசைப்பகுதிகள் வற்றி எலும்புகள் வெளியே தெரியும் நிலைக்கு ஆளானாலும்கூட, அவர்கள் தாங்கள் இன்னும் எடை குறைய வேண்டும் என்றே நினைப்பார்கள். இப்படித் தொடர்ந்து போதிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால் பல வகையான உடற்பிரச்னைகளைச் சந்திப்பார்கள். அரிதாகச் சிலர், ஒரு கட்டத்தில் உயிரிழக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Eating disorder-ன் ஒரு பகுதியாகவும் இப்பிரச்னை இருக்கிறது. இதில் இன்னொரு வகையான Bulimia nervosa எனும் பிரச்னைக்கு ஆளானவர்கள், நன்றாகச் சாப்பிடுவார்கள். ஆனால், உடற்பருமன் ஏற்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்துவிடுவார்கள்.

திரைப்பட நடிகைகள், மாடல்கள், பாடகிகள் எனப் பிரபலங்களே பெரும்பாலும் இப்பிரச்னைக்கு ஆளாகி வந்தனர். உடற்பருமனாகிவிட்டால் தங்களது அழகு போய்விடும், இதனால் தங்களது மார்க்கெட் சரிந்துவிடும் என்கிற பதற்றமே அதற்குக் காரணமாக இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகியான கேரன் கார்ப்பென்டர், இப்பிரச்னைக்கு ஆளாகி உயிரிழந்ததை அடுத்து இது குறித்த விழிப்புணர்வு உலக அளவில் பரலாக ஏற்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இது இன்னும் கவனிக்கப்படாத பிரச்னையாக இருக்கிறது. இன்றைக்கு பதின்ம வயதுப் பெண்கள் அதிக அளவில் இப்பிரச்னைக்கு ஆளாகி வருவதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்னும் முழுமையான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.

மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி
மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி

சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிறகு, தங்களை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடம் இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. ஸ்லிம் ஃபிட் ஆக இருக்கும் தங்களது புகைப்படங்களைப் பதிவிட விரும்புகின்ற பெண்கள் பலர். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் #thinspiration, #bonespiration போன்ற ஹாஷ்டாக்குகளில் ஸ்லிம் ஃபிட் ஆக இருக்கும் பெண்களின் புகைப்படத் தொகுப்பைப் பார்க்க முடியும். இன்றைக்குத் திரைப்பட நடிகைகள் பெரும்பாலும் ஒல்லியாகத்தான் இருக்கிறார்கள். இவையெல்லாம் ஏற்படுத்தும் தாக்கத்தால் தானும் ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் சில பெண்களுக்கு ஏற்படுகிறது. இதற்காக டயட் மேற்கொள்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டயட் என்பது, தேவைக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளாமலிருப்பதுதான். ஆனால், ஸ்லிம் ஆக வேண்டும் என்பதற்காகத் தேவையான அளவு உணவைக்கூட உட்கொள்ளாமல் இருக்கின்றனர் பலர். இதன் ஆபத்தை யாரும் உணர்வதில்லை. காரணம், இப்பிரச்னை குறித்த பரவலான விழிப்புணர்வு இல்லாததே” என்றவர் இப்பிரச்னைக்கான தீர்வு குறித்துப் பேசினார்.

``இது மிகவும் தீவிரமான பிரச்னை. எவ்வளவு மெலிந்து போனாலும், எடை குறைப்பில் இன்னமும் தான் தனது இலக்கை அடையவில்லை என்று ஏமாற்றமடைவர். இதனால் மனச்சோர்வுக்கு ஆட்படுவர். அதுவே, பெரும் மன அழுத்தமாகவும் மாறும் அபாயம் இருக்கிறது. ஆகவே டயட் மேற்கொள்பவர்களைக் கண்காணிப்பது அவசியம். டயட் ஆரோக்கியமானதுதான். ஆனால், அது தேவையைப் பொறுத்து மாறுபடும். தேவையே இல்லாமல் ஒருவர் டயட் இருக்கிறார் என்றால், போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் உடல் மெலிந்து போகிறார் என்றால். உடனே மனநல மருத்துவரை அணுகுவது சிறந்தது.

Depression
Depression
Photo by Andrik Langfield on Unsplash

உடல் எடை கூடிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதில் தவறொன்றுமில்லை. அதற்காக ஊட்டச்சத்து குறைபட்டுப் போகுமளவுக்கு நடந்துகொள்வதுதான் தவறானது. போதுமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டு, உடல் பருமனடையாமல் இருக்கத் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது பலனளிக்கும். ஒருவரது கட்டுப்பாட்டை மீறி, எடை குறைப்பு எண்ணங்கள் அவரை ஆளத் தொடங்கினால் உடனே மனநல மருத்துவரை அணுக வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர்களை அணுகி சரிவிகித உணவுக்கான பட்டியலை வாங்கி அதைப் பின் தொடரலாம்.

ஒருவருக்கு Anorexia nervosa இருப்பது உறுதி செய்யப்பட்டால் உளவியல் மற்றும் ஊட்டச்சத்துக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மனதிலிருக்கும் ஆழமான எண்ணங்களை மாற்றும் Cognitive behavior therapy, ஆற்றுப்படுத்துதல் மற்றும் மருந்து, மாத்திரைகள் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணலாம்” என்கிறார் மோகன வெங்கடாசலபதி.

உடற்பருமன் ஏற்படாமல் தவிர்க்க நமது உணவுப் பழக்கத்தை எவ்விதம் அமைத்துக்கொள்ள வேண்டும் என விளக்குகிறார் உணவியல் நிபுணர் ப்ரியா ராஜேந்திரன்…

``உடற்பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்க முறையான உணவுப் பழக்கம்தான் முதன்மையான தீர்வு. உடற்பருமன் ஏற்பட்டுவிடும் என்கிற பயத்தில் மாவுச்சத்துள்ள பொருள்களை முற்றிலுமாகத் தவிர்ப்பார்கள். அது கூடாது. ஒவ்வொருவருக்கும் அவரவரது வயதுக்கேற்ப மாவுச்சத்து மிகவும் அவசியமானது. அரிசி மற்றும் சிறுதானியங்களிலிருந்து நாம் அவற்றைப் பெறலாம்.

food
food

புரதச்சத்துள்ள உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளில் புரதம் மிகுந்திருக்கிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் பருப்பு வகைகள், பனீர், சோயா போன்ற சைவ உணவுகளிலிருந்து புரதத்தைப் பெறலாம். மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க நார்ச்சத்து மிகுந்த கீரை வகைகளை வாரத்துக்கு மூன்று நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்துள்ள பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்பிலேயே நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரு வகை உள்ளது. அவற்றில் முட்டை, பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, அவகோடா போன்ற நல்ல கொழுப்புள்ள பொருள்களை எடுத்துக் கொள்ளலாம்.

பீட்ஸா, பர்க்கர் போன்ற ஜங்க் உணவுகளில் கெட்ட கொழுப்பு மிகுந்திருப்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. உடற்பருமனாகிவிடக் கூடாது என்பதில் அக்கறை இருக்கலாம். ஆனால், அதுவே பதற்றமாகிவிடக் கூடாது. ஒவ்வொருவருக்கும் அவரவரது வயதுக்கு ஏற்ற எடை என்கிற கணக்கு இருக்கிறது. அதன்படி இருக்கிறோமா என்று பார்த்தால் போதும். கலோரி பதற்றம் வேண்டாம்” என்கிறார் ப்ரியா ராஜேந்திரன்.

டயட்டில் இருப்பவர்கள்... ப்ளீஸ் நோட்!

அடுத்த கட்டுரைக்கு