Published:Updated:

ஆயிரம் ரசங்கள் கண்ட அபூர்வ ராணி!

 ரசம்
பிரீமியம் ஸ்டோரி
ரசம்

ரசமும் ரசனையும்

ஆயிரம் ரசங்கள் கண்ட அபூர்வ ராணி!

ரசமும் ரசனையும்

Published:Updated:
 ரசம்
பிரீமியம் ஸ்டோரி
ரசம்
'இன்னிக்கும் ரசமா...’ என ரசத்தைக் கரித்துக்கொட்டியவர்கள்கூட, ‘வெறும் ரசம் போதும்’ என்ற ஞானத்தைப் பெறக் காரணமாகியிருக்கிறது கோவிட்-19.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா வைரஸ் தொற்றுக்கான வேறு வேறு சிகிச்சைகளில் முரண்பட்ட பல்துறை மருத்துவர்களும் ஒருமித்த குரலில், கருத்து வேறுபாடின்றி பரிந்துரைத்த மருந்துணவு ரசம். இதையடுத்து வீட்டுச் சமையலறையில் மட்டுமல்ல; விமான நிலைய உணவகங்களில்கூட ரசம் சாதத்துக்கு வரவேற்பு கூடியது.

ஆயிரம் ரசங்கள் கண்ட அபூர்வ ராணி!

ரசத்தின் மகிமையை மக்கள் உணரத் தொடங்கியிருக்கும் இந்நாளில் உஷா பிரபாகரனின் முயற்சியும் உழைப்பும் கவனம் பெறுகின்றன. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான உஷா பிரபாகரன், ‘ரசம் டைஜெஸ்ட்’ என்ற பெயரில் 1,000 வகையான ரசம் செய்முறைகளைக்கொண்ட புத்தகத்தை எழுதியிருக்கிறார். வெளியீட்டுக்குக் காத்திருக்கும் இந்தப் புத்தகம் வெறும் செய்முறைகளின் தொகுப்பு மட்டுமல்ல; ரசத்தின் வரலாறு முதல் விஞ்ஞானம்வரை சகலத்தையும் பேசுகிறது. `ரசங்களின் ராணி’ என்பது இவரது அடையாளம்.

``ஹைகோர்ட்ல வக்கீலா பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தேன். டி.ஐ சைக்கிள்ஸ்லேயும் ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ்லயும் வொர்க் பண்ணியிருக்கேன். என் பையன் பிறந்தபோது தொடர்ச்சியா சில மாதங்களுக்கு பெட் ரெஸ்ட்டுல இருக்கச் சொன்னாங்க. அதனால வேலையை விட்டேன். என் மாமியார் ஊறுகாய் எக்ஸ்பெர்ட். சமையல்ல அவங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். நான் பண்ற ஊறுகாய் வெரைட்டீஸ் எல்லாருக்கும் பிடிக்கும். எப்போ, என்ன ஊறுகாய் போட்டாலும் உடனே காலியாயிடும். நிறைய பேர் ரெசிப்பி எழுதிக் கேட்டாங்க. பத்து ரெசிப்பீஸ்ல ஆரம்பிச்சது, 5,000 ரெசிப்பீஸ்ல போய் நின்னது. அதுலேருந்து 1,000 ரெசிப்பீஸை மட்டும் தேர்ந்தெடுத்து 99-ம் வருஷம் என்னுடைய ‘பிக்கெல் டைஜெஸ்ட்’ புத்தகத்தை ரிலீஸ் பண்ணினேன். 5,000 வகை ஊறுகாயான்னு ஆச்சர்யப்படாதீங்க... இலை, காய், பழம், தோல்னு எதுல வேணாலும் ஊறுகாய் போடலாம்...’’ உஷா சொல்லும்போதே நமக்கு நாக்கு ஊறுகிறது.

உஷா பிரபாகரன்
உஷா பிரபாகரன்

தன்னுடைய முதல் புத்தகம் வெளியானபோது உஷா, மருத்துவமனையில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தாராம்.

‘`திடீர்னு எனக்கு மூளை யில இன்ஃபெக்‌ஷன்... அவசரமா ரெண்டு மேஜர் ஆபரேஷன் பண்ண வேண்டிய நிலைமை. ஏன் வந்ததுன்னு யாருக்கும் தெரியலை. இந்தப் பிரச்னை வந்தா பெரும்பாலும் யாரும் பிழைக்க மாட்டாங்களாம். உலக அளவுல இதுவரை 30 பேர்தான் பிழைச்சிருக்காங்களாம். அப்படியே பிழைச்சாலும் பக்கவாதம், பார்வையிழப்புன்னு முக்கியமான உறுப்புகள் செயலிழந்துபோயிடுமாம். நான் பிழைச்சதும் பிரச்னைகள் இல்லாம தப்பிச்சதும் அதிசயம்’’ - இரும்பு மனுஷிக்கு இப்போது வயது 64.

``ஊறுகாய் புத்தகத்துக்குக் கிடைச்ச வரவேற்பை அடுத்து, ரசம் பற்றி ஒரு புத்தகம் எழுத நினைச்சேன். பருப்பு ரசம், பூண்டு ரசம், தக்காளி ரசம், பைனாப்பிள் ரசம்னு எல்லா வீடுகளிலும் பத்து, பதினஞ்சு வெரைட்டிக்கு மேல யாருக்கும் ரசம்வைக்கத் தெரியாது. ஆனா, அதிலும் ஆயிரக்கணக்கான வெரைட்டி பண்ண முடியும். ரசம் ஓர் அற்புதமான உணவு. சாப்பாட்டுக்கு முன்னாடி சூப் மாதிரியும் குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு செரிமானத்துக்கும் குடிக்கலாம். சாதத்துல விட்டுப் பிசைஞ்சும் சாப்பிடலாம்.

சங்க காலத்துலேயே ரசம் முக்கியமான ஓர் உணவா இருந்திருக்கு. அதை சாறுன்னு சொல்லியிருக்காங்க. `ரஸ்’ என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு எசென்ஸ்னு அர்த்தம். அதாவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் எசென்ஸா ரசம் இருக்கு. அது மட்டுமா... உணவே மருந்துங்கிற கருத்தாக்கம் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தப்பட்டிருக்கு. ஹிப்போகிரேட்டஸ் ஆரோக்கியமான உணவின் அவசியத்தை வலியுறுத்தி யிருக்கார். அங்கெல்லாம் ரசம் முக்கிய இடம் வகிச்சிருக்கு. இப்படி தமிழிலக்கியம் முதல் மருத்துவர்கள்வரை கொண்டாடின ரசத்துக்கு இன்னிக்கு மரியாதையே இல்லை. ரசம் வைக்கிறதுக்கும் ஒரு ரசனை வேணும். பொறுமையும் பக்குவமும் வேணும்.’’ ரசனையோடு சொல்பவர், இந்தப் புத்தகம் 10 ஆண்டுக் கால உழைப்பு என்கிறார்.

``ரசம் வைக்கச் சொல்லிக்கொடுக்கிற புத்தகம் எழுத 10 வருஷமானு தோணலாம். இந்தப் புத்தகத்துக்காக நான் 1,500-க்கும் மேலான செய்முறைகளைச் சேகரிச்சேன். யார் வீட்டுக்குப் போனாலும் அவங்க வீட்டு ரசத்தின் செய்முறையைக் கேட்டுக் குறிச்சுப்பேன். கல்யாண வீடு, ஹோட்டல்னு எங்கே போனாலும் என்னுடைய இந்த ரசத் தேடல் தொடர்ந்திருக்கு. இதுக்காக ஒவ்வொருத்தர்கிட்டயும் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் காத்திருந்து தகவல்கள் திரட்டியிருக்கேன். இவையெல்லாமே பாரம்பர்ய செய்முறைகள். இன்னிக்குப் பலரும் புளித்தண்ணீரில் மிளகு, சீரகம், பூண்டு தட்டிப்போட்டு கொதிக்கவெச்சு, கடுகு, கறிவேப்பிலை தாளிச்சுக் கொட்டினா ரசம் ஆயிடும்னு நினைக்கிறாங்க. ரசம்வைக்கிறது ஒரு கலை. நிறைய நுணுக்கங்கள் தேவைப்படற விஷயமும்கூட’’ என்பவர் அப்படிச் சில நுணுக்கங்களையும் பகிர்கிறார்.

``ரசத்தைக் கொதிக்கவிடக் கூடாது. நுரைச்சு வரும்போது அடுப்பை அணைச்சிடணும். நுரைவரும்போதே தாளிப்புக் கரண்டியில் நெய்விட்டு சூடானதும் கடுகு வெடிக்கவிடணும். நெய் சூடாவதற்கு முன் கடுகு சேர்த்தா வெடிக்காது. கசக்கும். கடுகு வெடிச்சதும் கறிவேப்பிலை சேர்த்து அதை ரசத்தில் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு மூடிவைக்கணும். அப்பதான் அந்த மணம் ரசத்துல இறங்கும்.

ஈயச்சொம்பில் ரசம்வைக்கிறபோது அதன் சுவை பலமடங்கு கூடும். ஆனா, இன்னிக்கு நிறைய பேர் ஈயம் உடம்புக்கு ஆகாதுன்னு பயப்படறாங்க. ஆனா, உண்மையில் அதுல உள்ளது தகரம். அதனாலதான் ஈயச்சொம்பை பெரிய தீயில் வைக்கக் கூடாது, உருகிடும்னு சொல்வாங்க.

ரசத்தைக் கூட்டி, ஈயச்சொம்பில் விட்டு குறைந்த தணலில் கொதிக்கவைக்கணும். ரசத்தை மட்டுமல்ல, எந்த உணவையும் பெரிய தீயில் சமைக்கவே கூடாது. அதுதான் ருசி, அதுதான் ஆரோக்கியம்.

ரசத்துக்கு பழைய புளிதான் பெஸ்ட். ஆனா, அது கறுப்பா இருப்பதால் பலரும் விரும்பறதில்லை. பழைய புளியோடு புதுப்புளி சேர்த்து உருண்டைகள் போட்டு வெச்சுக்கிட்டு தினம் ஓர் உருண்டையா உபயோகிக்கலாம். புளி உடம்புக்கு ஆகாதுங்கிற பயமும் பலருக்கு உண்டு. உண்மையில் புளிக்கு கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தற தன்மை உண்டு. புளி மட்டுமல்ல, ரசத்துல சேர்க்கிற ஒவ்வொரு பொருளுமே மருத்துவ குணம் வாய்ந்ததுதான்.

மிளகில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம், புரதத்தை செரிக்கவைக்க உதவுது. சீரகத்தில் உள்ள மக்னீசியம் செரிமான இயக்கத்தைப் பாதுகாக்கும். பூண்டு, ரத்தச் சுத்திகரிப்புக்கு உதவும். தக்காளியில் வைட்டமின் ஏ, பி அதிகம், இதயநலனுக்கு உதவும். சிவப்பு மிளகாய்ல வைட்டமின் ஏ, சி சத்துகளும், கொத்தமல்லித் தழையில் இரும்புச்சத்தும் அதிகம். எலும்புகளுக்கும் நல்லது’’ - ரச மகாத்மியம் சொல்பவர், இறுதியாகச் சொன்னவை இன்னும் ருசியானவை.

‘`தினம் ரசமானு கேட்கறவங்களுக்கு தினம் ஒரு ரசம் செய்துகொடுத்துப் பாருங்க. பருப்பு, காய்கறி, பழம், தோல், மூலிகைகள்னு எதில் வேணாலும் ரசம் செய்யலாம். நீரிழிவு உள்ளவங்களுக்கு வெந்தய ரசம், பருமனானவங்களுக்கு கொள்ளு ரசம்... இப்படி தனிப்பட்ட தேவைக்கேற்பவும் ரசம் செய்யலாம்.

ரசம்னா நீர்க்க இருக்கணும்னு அவசியமில்லை, கெட்டியாகவும் இருக்கலாம். தாமரைத் தண்டு ரசம், இளநீர் ரசம், வெற்றிலை ரசம்... ரசம்னா தலைதெறிக்க ஓடறவங்களையும் இழுத்து உட்காரவைக்கிற ஸ்பெஷல் ரெசிப்பீஸ் இவையெல்லாம்’’ என்கிறார் மணமணக்க.

அவள் விகடன் வாசகர்களுக்காக உஷா பிரபாகரன் பகிரும் ஸ்பெஷல் ரசம் ரெசிப்பி இங்கே...

கொரோனா காலத்துக்கேற்ற

மஞ்சள் கஷாய ரசம்

தேவை: ஃப்ரெஷ்ஷான மஞ்சள் கிழங்கு (கழுவி, தோலுடன் வட்டமாக நறுக்கியது) - சிறிது, தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, புளி - நெல்லிக்காய் அளவு, பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று, ரசப்பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, மல்லித்தழை - சிறிதளவு.

தாளிக்க: நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - சிறிது, தோலுரித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு.

ஆயிரம் ரசங்கள் கண்ட அபூர்வ ராணி!

செய்முறை: துவரம்பருப்பில் ஒரு சிட்டிகை உப்பும் ஒன்றரை டம்ளர் தண்ணீரும் சேர்த்து பிரஷர் குக் செய்துகொள்ளவும். புளியில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, மஞ்சள்கிழங்கு சேர்த்து குறைந்த தணலில் வைத்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும். தேங்காய்த்துருவல் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். இரண்டையும் ஆறவைத்து விழுதாக அரைக்கவும். பருப்பை அதை வேகவைத்த நீருடன், புளிக்கரைசலில் சேர்த்து புளியின் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். அதில் தக்காளி, ரசப்பொடி, உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். ரசம் கொதித்து நுரைத்துவரும்போது மஞ்சள், தேங்காய் விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். தாளிப்புக் கரண்டியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். பிறகு சீரகம், சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். இதை சூடான ரசத்தில் விட்டுக்கலக்கி, ஒரு நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். மல்லித்தழை தூவவும்.

இது, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது. வைரஸ், பாக்டீரியா என எல்லாவித தொற்றுகளையும் எதிர்த்துப் போராடக்கூடியது.

ஆயிரம் ரசங்கள் கண்ட அபூர்வ ராணி!

வெங்காயம் சேர்த்த பச்சை மோர் ரசம்

தேவை: லேசான புளிப்புள்ள மோர் - 450 மில்லி, மஞ்சள்தூள்- பெரிய சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, தோலுரித்து நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - மூன்று, கறிவேப்பிலை - சிறிதளவு.

தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம், சீரகம், சோம்பு - சிறிதளவு.

செய்முறை: மோரில் 200 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரைத்து உப்பும் மஞ்சள்தூளும் சேர்க்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து அதில் சேர்த்துக் கலக்கவும்.