Published:Updated:

யூஸ் அண்ட் த்ரோ தட்டு, டம்ளர்கள், வாழையிலை, லிமிடெட் மெனு... தளர்வுக்குப் பின் தயாராகும் உணவகங்கள்!

Restaurant (Representational Image)
Restaurant (Representational Image)

``இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சி சாப்பிடக் கெடச்சது. அத நெனைச்சுதான் மனம் உலகம் முழுக்கப் பறக்கது” எனும் பாடல் வரிகளின் காட்சிகளைப் போல அனைவரும் நமக்குப் பிடித்தமான உணவுகளை தேடித் தேடி உணவகங்களில் சென்று சாப்பிட்டிருப்போம்.

ஆனால், இப்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்த நிலையில், ஒரு நாளாக அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தற்போது, சுமார் 70 நாள்களாக நடைமுறையில் இருந்து வருகிறது.

ஊரடங்கு விதிகளில் குறிப்பிடப்பட்ட கட்டுப்பாடுகளால் நாம் தேடிச்சென்று உணவருந்திய உணவகங்கள் இதுநாள் வரையில் மூடப்பட்டுள்ளன. வார இறுதியில் உணவகங்களுக்கு அழைத்துச்செல்கிறேன் என்ற சமாதான பேச்சுகளைக் கேட்கத் தவறி மாதங்களாகிவிட்டன. உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது அலாதி இன்பம் என்ற நிலையில், மூடப்பட்ட உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளது நமக்கு ஆனந்தமான செய்தியாகத்தான் இருக்கும்.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்கு 5.0 கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகளுடன் உணவகங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளன. மாநில அரசின் ஐந்தாம் கட்ட ஊரடங்கு விதிமுறைகளிலும் உணவகங்கள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உணவக உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Restaurant (Representational Image)
Restaurant (Representational Image)

இருப்பினும், சுகாதார இக்கட்டுச் சூழல் நிலவி வருவதால் உணவகங்கள் செயல்படுவதிலும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளினாலும், வாடிக்கையாளர்களின் ஐயத்தினானும் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. இவ்வாறான சிக்கல்களுக்குத் தீர்வாக தமிழகத்தின் உணவகங்கள் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சீனிவாசனிடம் பேசினோம்.

̀`உணவகங்களைத் திறக்க வேண்டும் என்ற உணவக உரிமையாளர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அரசு தற்போது அனுமதியைத் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உணவகங்கள் திறப்புக்குப் பின் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அவற்றை முழுமையாகக் கடைப்பிடிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உள்ளோம்.

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சீனிவாசன்
ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சீனிவாசன்

மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் உள்செல்லும் போது மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உணவகங்களிலும் செயல்படுத்துவோம். அதன்படி, வாடிக்கையாளர்கள் உணவகங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்படும் முன், சானிட்டைஸர் அல்லது சோப் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்தவும், முகக் கவசம் அணிந்தவர்களை மட்டுமே உணவகங்களுக்கு உள்ளே அனுமதிப்பது என்றும் தீர்மானித்துள்ளோம்.

ஒருவேளை அவர்களுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அவர்களை உணவகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளோம். அதே வேளையில், உணவகத்தில் பணிபுரியும் சமையல்காரர்கள், சப்ளையர்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் சந்தேகம் ஏற்படக்கூடும். அதைப் போக்கும் வகையில் அனைத்துப் பணியாளர்களுக்கும் தினமும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். அதில் ஏதேனும் மாற்றம் தெரியும் வேளையில், அவர் உடனடியாக பணியிலிருந்து விலக்கப்படுவார்.

Restaurant (Representational Image)
Restaurant (Representational Image)

சமூக இடைவெளியை உணவகங்களிலும் பின்பற்றுவதற்கு அரசானது 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒரு மேஜைக்கு எதிரெதிரே இருவர் மட்டும் அமர்ந்து உண்ண ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உணவுகளை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் போது, சப்ளையர்கள் அவர்களிடம் நெருக்கமாக நிற்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளோம். மேஜைகளில் அமர்ந்து சாப்பிட்ட பின், இருக்கைகள் உட்பட வாடிக்கையாளர்கள் பயனபடுத்திய அனைத்துப் பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.

மண்டலங்களுக்கு உள்ளாகப் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான உணவகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்வர். அந்தச் சூழலில், அவர்கள் பயன்படுத்திவிட்டுச் சென்ற பிறகு, முறையான கிருமிநாசினி கொண்டு தொடர்ச்சியாகச் சுத்தம் செய்யப்படும். மேலும், கழிவறையைப் பயன்படுத்திவிட்டு வாடிக்கையாளர்கள் கைகளை சோப் போட்டுக் கழுவ அனைத்து விதமான வசதிகளும் செய்து தரப்படும்.

Restaurant (Representational Image)
Restaurant (Representational Image)

சப்ளையர்கள் உணவு பரிமாறும்போது எந்த வகையிலும் உணவுப் பொருள்களை கைகளினால் தொடக்கூடாது எனக் கண்டிப்புடன் தெரிவித்துள்ளோம். இட்லி, தோசை, பூரி, வடை போன்றவற்றை இடுக்கிகளைக் கொண்டு பரிமாற அறிவுறுத்தியுள்ளோம். சப்ளையர்கள் கைகளில் க்ளவுஸ் போடுவதையும் உறுதிப்படுத்தியுள்ளோம். உணவு உண்ணும்போது, வாடிக்கையாளர்கள் சாப்பிடும் உணவுப் பொருள்களைத் தவிர வேறு பொருள்கள் எதையும் வைக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளோம். கூடுதலாக, ஏதேனும் தேவைப்பட்டால் சப்ளையர்களிடம் வாடிக்கையாளர்கள் தெரிவித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

தற்போதைய இக்கட்டான சூழலில், உணவகங்களில் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு தான் சாப்பிடும் தட்டுகளை முன்பு யார் பயன்படுத்தியிருக்கக் கூடும் என்ற ஐயம் பெருமளவில் ஏற்படக்கூடும். இதைப் போக்க, தட்டுகளையும் டம்ளர்களையும் ஸ்டெரிலைசேஷன் முறை மூலம் சுத்தம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளோம். 70 டிகிரி சுடுநீரில் பாத்திரங்களை மூழ்கச்செய்து சுத்தம் செய்யப்படும். இது, அனைத்து உணவகங்களிலும் முன்பே நடைமுறையில் இருந்தாலும், தற்போது கண்டிப்புடன் செயல்படுத்த உணவகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

Restaurant (Representational Image)
Restaurant (Representational Image)

சில உணவகங்களில் பாத்திரங்கள் கழுவும் இயந்திரங்கள் மூலமும் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யப்படுகின்றன'' என்றார். மேலும் பேசிய அவர், ``வாடிக்கையாளர்களுக்கும் உணவகத்தாருக்கும் எளிமையான வகையில் பயன்படுத்த உதவும் யூஸ் அண்ட் த்ரோ தட்டு, டம்ளர்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளோம். மேலும், அனைவருக்கும் பாதுகாப்பான வாழை இலைகளையும் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளோம்.

சைனீஸ் உணவுகள் மற்றும் தந்தூரி உட்பட வட இந்திய உணவு வகைகளைத் தயாரிக்கும் வட மாநில ஊழியர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். இதனால், வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த பெரும்பாலான உணவு வகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில், வட இந்திய சமையல் கலைஞர்களுக்குத் துணையாகப் பணிபுரிந்தவர்களைக் கொண்டு முடிந்த அளவில் அனைத்து உணவு வகைகளும் வழங்க முயற்சி எடுக்கப்படும். தற்போது, அரசு அனுமதித்துள்ள 50 சதவிகித இருக்கை வசதி, விற்பனையில் பாதியைக் குறைத்துள்ளது ஒரு புறமிருக்க, சில உணவு வகைகளைத் தயாரித்து வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாலும் வருமானம் பாதிப்படையும்.

Restaurant (Representational Image)
Restaurant (Representational Image)

அனைத்தையும் கடந்து செல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். உணவகங்களில் துரித உணவுகளைக் காத்திருந்து சாப்பிட விருப்பப்படுவோர்க்கு உணவகங்களில் உள்ள காற்றோட்டமான அறைகளில் ஏசி பயன்படுத்தாமல் 50 சதவிகித இருக்கைகளுடன் அமர்ந்து சாப்பிடும் வசதிக்கு ஏற்பாடு செய்து தரப்படும்.

தற்போது, வளைகுடா நாடுகளில் பணியாற்றிய சமையல் கலைஞர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்பிக்கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் இங்குள்ள உணவகங்களுக்கு வேலைக்குச் சேரும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்'' என்றார். இக்கட்டான இந்தச் சூழலில் உணவுகளின் விலை உயர்வு என்பது சாத்தியமற்றது. உரிமையாளர்கள் யாரும் அது மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

உணவகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாடுகளை நம் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கையாக நினைத்துப் பின்பற்றினால் நலம்.

அடுத்த கட்டுரைக்கு