Published:Updated:

`அம்பட்பாத் முதல் ஆட்டுக்கறி பிரியாணி வரை!' - பட்டையைக் கிளப்பிய சௌராஷ்டிர உணவுத் திருவிழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சவுராஷ்டிரா உணவுத் திருவிழா
சவுராஷ்டிரா உணவுத் திருவிழா

சௌராஷ்டிரா உணவு என்றாலே சைவம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஆட்டுக்கறி கொழுப்புக் குழம்பு, மட்டன் பிரியாணி என அசைவ உணவு வகைகளிலும் அவர்கள் கைவண்ணம் கொடிகட்டிப் பறக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் அறுசுவை உணவுகளின் தலைநகரமாக மதுரை இருப்பது அனைவருக்கும் தெரியும். அதில் சௌராஷ்டிரா மக்களின் விதவிதமான உணவுகளும் முக்கியமானவை.

கஜலி அம்பட்
கஜலி அம்பட்

பாண்டியர்களுக்குப் பிறகு பல்வேறு மன்னர்களின் ஆளுகைக்குள் மதுரை இருந்ததால், தமிழகப் பாரம்பர்ய உணவுகளுடன் வெவ்வேறு பிரதேச உணவு வகைகளும் சேர்ந்து, புதுவிதமான உணவுப் பண்பாடு மதுரையில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளவை, சௌராஷ்டிரா சமூக மக்களின் உணவு வகைகள்.

தனித்துத் தெரியும் சுவைகொண்ட இனிப்புகள், பலகாரங்கள், சிற்றுண்டிகள், கலவை சாதங்களில் சௌராஷ்டிரர்களின் கைப்பக்குவம் வாயூற வைக்கும்.

சிக்கன் சுக்கா
சிக்கன் சுக்கா

பாரம்பர்யமிக்க செட்டிநாட்டு உணவு வகைகள் எப்படி வயிற்றுக்குத் தொந்தரவில்லாத வீட்டுப்பக்குவ முறையில் தயார் செய்யப்படுகின்றனவோ, அதுபோல் சௌராஷ்டிரா உணவுகளின் சிறப்பும் வீட்டுப் பக்குவத் தயாரிப்பு முறையே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சௌராஷ்டிரா உணவு என்றாலே சைவம் என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. அசைவ உணவு வகைகளிலும் தங்கள் கைவண்ணத்தை காட்டி வருகிறார்கள்.

வெண் பொங்கல்
வெண் பொங்கல்

மதுரையிலுள்ள பனைமரத்து பிரியாணிக்கடை, எக்ஸ்பிரஸ் பிரியாணி, குள்ளங்கிடி போன்ற உணவகங்கள் இதற்கு எடுத்துக்காட்டு.

இந்நிலையில், மதுரை மக்கள் மட்டுமே அதிகம் அறிந்த சௌராஷ்டிரா உணவுகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் உணவுத்திருவிழாவை சமீபத்தில் மதுரையில் நடத்தினார்கள்.

பிரியாணி
பிரியாணி
பிரியாணிக்கு தொடைக்கறி, குழம்புக்கு நெஞ்சுக்கறி; என்ன சமையலுக்கு எந்தக் கறி வாங்கணும்?

சௌராஷ்டிரா சிறுதொழில் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, ஹோட்டல் ஜேசி ரெசிடென்ஸியில் இரண்டு நாள்கள் நடந்தது.

சௌராஷ்டிர உணவு வகைகளில் தனிச்சிறப்பான அம்பட்பாத் (புளியோதரை) முதல், ஆட்டுக்கறி பிரியாணி வரை தெறிக்க விட்டிருந்தார்கள்.

பன் ஹல்வா
பன் ஹல்வா

மூன்று வகையான வெண்பொங்கல், கலவை சாதங்கள், ஈரல் கிரேவி போலவே சைவத்தில் சுவையாகத் தயாரிக்கப்பட்ட கஜலி அம்பட், வித்தியாசமான சுவையில் கோழி சுக்கா, மசாலா முட்டை எனச் சட்டிகளைப் பரப்பியிருந்தார்கள்.

குறிப்பாக தற்போது விருந்துகளில் பிரியாணியுடன் வைக்கப்படும் பன் ஹல்வாவை இவர்கள் அதிக சுவையுடன் தயாரிக்கிறார்கள்.

மட்டன் குழம்பு
மட்டன் குழம்பு

முந்திரிப்பருப்புடன் நெய்யில் மிதக்கும் ஹல்வாவை திகட்டாமல் சாப்பிடலாம்.

ஆட்டுக்கறிக் கொழுப்பு குழம்பு, மொச்சை குழம்புகளுடன் வழக்கமான சாம்பார், பூண்டுக்குழம்பு, ரசம் என எல்லாவற்றிலும் ஒரு தனி சுவை.

அம்பட்பாத்
அம்பட்பாத்

இது மட்டுமில்லாமல் வேக வைக்காத காய்கறிக் கூட்டுகள், பச்சடிகள், விதவிதமான ஊறுகாய்கள், அல்வா, மைசூர்பாகு, லட்டு, பர்பி, தேங்காய் போலி, திகட்டாத பால் கொழுக்கட்டை எனப் பல உணவுகள்.

இந்த உணவுத்திருவிழாவுக்கு வருகை தந்த மக்கள் சௌராஷ்டிரா உணவுகளை ஒரு பிடி பிடித்தார்கள்.

அரவிந்த்
அரவிந்த்

சௌராஷ்டிரா சமையல் கலைஞர் அரவிந்திடம் பேசினோம். ``உடலுக்கு உபத்திரவமில்லாத, அதே நேரம் நாவுக்கு அதிக சுவை தருபவைதான் சௌராஷ்டிரா உணவுகள்.

அது மட்டுமில்லாமல் காரத்தை குறைத்து, உடலுக்கு நலன் தரக்கூடிய மசாலாப் பொருள்களை அதிகம் சேர்ப்போம்.

கல்லொ கென்னு அவுண்டி (பாவக்காய் மொச்ச குழம்பு)
கல்லொ கென்னு அவுண்டி (பாவக்காய் மொச்ச குழம்பு)

எல்லாவற்றிலும் ஒரு ஹோம்லி டச் இருக்கும். குறிப்பாக மற்ற பன் அல்வாவை விட நாங்கள் தயாரிக்கும் பன் அல்வா ரொம்ப விசேஷமானது" என்றார்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சௌராஷ்டிரா சிறுதொழில் சங்கத்தின் நிர்வாகிகள் வெங்கடேஷ் அருண்லால், யோகேஷ் ஆகியோர், ``தமிழகத்தின் உணவுப் பாரம்பர்யத்தில் சௌராஷ்டிரா மக்களின் பங்களிப்பு முக்கியமானது.

பால் கொழுக்கட்டை
பால் கொழுக்கட்டை
30 நிமிடங்களில் 134 உணவு வகைகள்; ``அடுத்து கின்னஸ்தான்!" - சாதனைப் புத்தகத்தில் மதுரைப் பெண்

அதன் பெருமை மதுரை உட்பட தென் மாவட்ட மக்களுக்கு மட்டுமே அதிகம் தெரிந்துள்ள நிலையில் இதை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த உணவுத் திருவிழாவை நடத்துகிறோம். நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்து ஒவ்வொரு நகரத்திலும் நடத்த உள்ளோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு