Election bannerElection banner
Published:Updated:

கொரோனா 2வது அலை... எதிர்கொள்ள கைகொடுக்கும் இயற்கை... மீண்டும் இந்த வழிகளைக் கையிலெடுப்போமா?

Representational Image
Representational Image

நோய்த் தடுப்பாற்றலுக்கு கபசுரக் குடிநீர் மட்டும் போதுமா... வேறு எப்படிப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்ளலாம் என விளக்குகிறார் மருத்துவர்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்கா, லண்டன், இத்தாலி, இந்தியா என உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி, லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்ததோடு, உலக பொருளாதரத்திலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. 2020-ம் ஆண்டை கொரோனா பாதிப்பு ஆண்டு எனச் சொல்லும் அளவுக்கு மனிதர் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்ட நிலையில், மக்கள் சற்றே மூச்சுவாங்கிக்கொள்ள, பட்ட துன்பங்களிலிருந்து மீள முற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கோவிட்-19 இரண்டாம் அலை வெகு தீவிரமாகத் தாக்கலாம் என்று வரும் தகவல்களால் மக்கள் மிகவும் கவலை கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின்போது, அரசு மற்றும் முன்களப் பணியாளர்கள் எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக பெரும் அழிவிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். நமது பாரம்பர்ய இந்திய மருத்துவ முறையில் சித்த மருத்துவர்களும் தொற்றை எதிர்த்துப் போராட உதவும் கபசுரக் குடிநீர் பயன்பாட்டைப் பரிந்துரைத்துச் செயல்படுத்தினர். தற்போது, கோவிட்-19 மீண்டும் தாக்கலாம் என்ற நிலையில் கபசுர குடிநீர் பற்றி யாரும் பேசுவதில்லை. நோய்த் தடுப்பாற்றலுக்கு கபசுரக் குடிநீர் மட்டும் போதுமா, வேறு எப்படிப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சித்த மருத்துவர் M.P.அகத்தியரிடம் கேட்டோம்...

 சித்த மருத்துவர் M.P.அகத்தியர்
சித்த மருத்துவர் M.P.அகத்தியர்

``கபசுரக் குடிநீர் நம் உடலில் எதிர்ப்பாற்றலை உண்டாக்கி வைரஸ் நம்மை பாதிக்காதபடி செய்யும். இது போலவே, நிலவேம்புக் கஷாயத்திலும் நோய் எதிப்பாற்றல் அதிகமுள்ளது. இவற்றோடு நாம் உண்ணும் உணவின் மூலமும் எண்ணெய்க் குளியல், மூலிகைக் கஷாயம் மற்றும் நித்தம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்களாலும் நோய் பரப்பும் கிருமிகளைத் தடுக்க முடியும். அவை...

`நோய் வந்தபின் மருந்தைத் தேடுவதைவிட, அது வருமுன் தடுப்பதே சிறந்தது' என்று தேரையர் கூறுகிறார்.

மனிதர்களின் உடம்பில் ஏழு தாதுக்கள் உள்ளன. அவை, நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே உண்டாகும். முதலில் சாரம் தாதுவில் ஆரம்பித்து, ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை உண்டாகி, கடைசியாக சுக்கில தாது உண்டாகும். இவற்றின் ஆற்றல் சரியாக இருந்தால் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாக இருக்கும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீரகம், மிளகு, தனியா, மிளகாய், கிராம்பு ஆகிய பொருள்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். கீரை வகையில் முருங்கை, தூதுவளை, குப்பைமேனி, கரிசலாங்கண்ணி இவற்றைச் சாப்பிடும்போது, ஈரல் நன்றாக வேலை செய்யும். ஈரலில்தான் வளர்சிதை மாற்றம் நிகழ்கிறது; ஈரல்தான் நோய் எதிர்ப்பாற்றலைத் நிர்மாணிக்கிறது. ஆனால் நாம், நேரம் தவறிச் சாப்பிடுதல், அதிக காரம் சேர்த்துக் கொள்ளுதல், செயற்கையான வண்ணம் கலந்த உணவுகளையும் டின்களில் அடைத்து விற்பனைக்கு வரும் உணவு மற்றும் குளிர்பானங்களையும் உட்கொள்ளுதல், உடல் உழைப்பு இல்லாமை, குறைவான நேரமே தூங்குதல் போன்ற எதிர்மறையான செயல்களால் ஈரல் கெட்டுப்போய்விடுகிறது.

கண்டங்கத்திரிக்காய் மற்றும் சுண்டைக்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், குடல் வலிமை பெற்று உணவின் சத்துகளை உறிஞ்சும் வேலையை ஒழுங்காகச் செய்யும்.

கீரை
கீரை
Photo: Vikatan / Devarajan

இன்றைய அறிவியல், எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளையெல்லாம் கண்டுபிடிக்கிறது. ஆனால் நம் சித்தர்கள், நோய் எதிர்ப்பாற்றலால் நுண்கிருமிகள் எதுவானாலும் உடலில் நுழையாமலும், அவை பல்பெருக்கம் ஆகாமலும், நம் உடலை உறுதியாக வைத்துக்கொண்டால், எந்தக் கிருமிக்கும் நாம் பயப்பட வேண்டியதில்லை என்பதை உணர்ந்து, நமக்கும் சித்த மருத்துவ நூல்களின் வழியே உறுதிப்படுத்துகிறார்கள்.

இதன் அடிப்படையில்தான் சுரத்தை 64 வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்த 64 சுரத்துக்கும் ஒரே மருந்தையும் சிறப்பாக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனாலேதான் சுரத்துக்கு நிலவேம்புக் கஷாயம் குடிக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறுகிறார்கள். நிலவேம்புக் கஷாயத்தில் இருக்கக்கூடிய நஞ்சு முறிவு ஆற்றல், மற்ற மூலிகைகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என்பது இப்போது ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கோடைக்காலத்திலும் பெரும்பாலானோர்க்கு சுரம் ஏற்பாடுவதற்குக் காரணம், குறிப்பிட்ட வெப்பத்தில் சில கிருமிகள் வாழும். அதுபோலவே, அவை உடலில் அதிக வெப்பத்தையும் உண்டாக்கும்

இதுபோன்ற வெப்ப காலத்தில், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க எண்ணெய்க் குளியல் அவசியமானது. நல்லெண்ணெய்க் குளியல் செய்தால் உடம்பு அமிலத் தன்மையிலிருந்து காரத் தன்மைக்கு மாறும். காரத் தன்மையில் பெரும்பாலான நுண்ணுயிர்கள் வாழாது. அப்படியும் வாழ்பவை, நன்மை பயக்கக்கூடியவையாகக் குடலில் வாழ்ந்துகொண்டு உடலின் செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.

எண்ணெய்க் குளியல்:

நல்லெண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடுபண்ணி, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுவதும் தடவிய பின், 10 முதல் 25 நிமிடங்கள் வரை வெயிலில் இருக்க வேண்டும். பிறகு, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

``எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்'' என்று தேரையர் கூறுவதனால், குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். முதலில் சீயக்காய் தேய்த்துக் குளித்துவிட்டு, பின்னர் சோப்பு போட்டுக்கொள்ளலாம். வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் செய்துவந்தால், கோடைக்காலத்தின் வேனிற்பிணிகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

எண்ணெய்க் குளியல் செய்த நாளில், பகலில் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். உணவுப் பொருள்களில் வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி, இளநீர், எலுமிச்சம்பழம், தயிர் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்கவும்.

Representational Image
Representational Image

பால் அருந்தும் முறை:

பாலைக் காய்ச்சும்போது, அதில் பாதி அளவுக்குத் தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். காய்ந்த பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து, வெது வெதுப்பாகவே பருக வேண்டும். ஆறிய பாலை பருகக் கூடாது.

சிற்றரத்தை:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய சிற்றரத்தையைக் கஷாயம் வைத்து, வாரம் இரண்டு முறை குடிக்கலாம்.

தும்பைப்பூ கஷாயம்:

ஆடாதொடை இலை -5

மிளகு - 10

இவை இரண்டையும் 400 மில்லி தண்ணீர் ஊற்றிக் காய்ச்சி, 100 மில்லியாக வற்றவைத்து, அதில் புதிதாக செடியிலிருந்து பறித்த தும்பைப்பூவை போட்டு மூடிவைக்க வேண்டும். ஆறிய பிறகு எடுத்து வடிகட்டி, 50 மில்லி காலையிலும் 50 மில்லி மாலையிலும் உட்கொண்டுவர வேண்டும்.

பப்பாளி இலைச்சாறு:

இது, ரத்தத்தில் சென்று வேலை செய்வதால் டெங்கு காய்ச்சலுக்கு மட்டுமல்லாமல், அது கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதிலும் உதவும்.

பிரண்டை:

பிரண்டையைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கும்போது, இடைப்பட்ட கணுக்களைத் தவிர்க்க வேண்டும். அதை கட்டாயம் ஒரு மணி நேரம் மோரில் ஊறவைத்து, பின்னர் நன்றாகக் கழுவிவிட்டு, நெய் சேர்த்து வதக்கி, சிறு வெங்காயம் (சாம்பார் வெங்காயம்), பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, வறுத்த உளுத்தம் பருப்பு சேர்த்து துவையலாக அரைத்து, ஒருநாள் விட்டு ஒரு நாள் எனச் சாப்பிட்டு வர, உடலில் சுண்ணாம்புச் சத்தை எளிதாகப் பெற முடியும்.

பெரும்பாலான நோய்களுக்கு எதிர்ப்பாற்றல் இல்லாததே காரணம் என்கிறோம். காரணம், சில வேளைகளில் நாம் உண்ட உணவு முழுமையாக வளர்சிதை மாற்றம் அடையாமல், free radicals எனப்படும் நச்சுப் பொருள்கள் உடலில் அதிகரிக்கப் படுவதால் நோய் எதிர்ப்பாற்றல் திறன் குறையும். உணவு சரியான விகிதத்தில் செரிமானம் ஆனாலே எந்த நோயும் வராது. உணவு உட்கொள்ளும் நேரத்தை நம் இஷ்டத்துக்கு மாற்றிக்கொண்டதாலேயே, இளமையிலேயே பல நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. அதோடு, சரியான உணவு இடைவேளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பப்பாளி இலை
பப்பாளி இலை
Pixabay

காலை உணவைத் தவிர்த்தல் அல்லது காலம் கடந்து சாப்பிடும்போது, உடலின் வலிமை குன்றும். காலை 7 - 8 மணிக் குள்ளும் மதியம் 12 - 2 மணிக்குள்ளாகவும் இரவு உணவு 6 - 8 மணிக்குள்ளும் உண்ணும் வழக்கம் வேண்டும்.

காலை வேளையில் வெந்நீரில் 10 புதினா இலைகளைப் போட்டு குடிப்பது ஆரோக்கியம் தரும்.

மது அருந்துதல், புகைப்பிடித்தல், நேரம் தவறிச் சாப்பிடுதல், அதிக மசாலா கலந்த பிரியாணி சாப்பிடுதல், அதிக நேரம் கண்விழித்தல், அதிக நேரம் மொபைல் பயன்படுத்துதல், அலட்சியப் போக்கு இவை நம்மிடம் இருக்கும் வரை ஆரோக்கியம் கேள்விக்குறிதான்.

- கே.ஆர்.ராஜமாணிக்கம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு