Published:Updated:

வெங்காயம் விலை நாட் ரீச்சபிள்... வெங்காயம் சேர்க்காத 5 வித்தியாச ரெசிப்பிக்கள்!

வெங்காயம் இல்லாமலும் சூப்பராகச் சமைக்கலாம் என, சில ரெசிபிக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் யூடியூப் புகழ் `சமையல்காரன்' செஃப் ரவிசங்கர்.

Ravi Shankar

வெங்காயம் இல்லாத சமையலை நினைத்துப் பார்ப்பதே கடினம். சாம்பாருக்குச் சிறிய வெங்காயம், பிரியாணிக்குப் பெரிய வெங்காயம் எனச் சுவைக்கு ஏற்ப வெங்காயத்தைப் பயன்படுத்திவரும் நமக்கு, இனி 'வெங்காயம் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள்' மீம்ஸ்களைதாம் அதிகம் பார்க்க நேரிடும் போல. வெங்காயம் இல்லாத சமையல்... அநேகமாக எல்லா வீடுகளிலும் இன்னும் சில தினங்களுக்கு இதுதான் தினசரி டாஸ்க். வெங்காயம் இல்லாமலும் சூப்பராகச் சமைக்கலாம் என்று நம்பிக்கை தருகிறார் யூடியூப் புகழ் செஃப் ரவிசங்கர். அப்படிச் சில ரெசிபிக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் அவர்.

1
Tomato Rice

இன்ஸ்டன்ட் தக்காளி சாதம்:

தேவையான பொருள்கள் பொடிக்கு:

தக்காளி - 1 கிலோ

கடலைப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

உடைத்த உளுந்து - 3 டேபிள் ஸ்பூன்

மல்லி விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 12-15

தாளிக்க:

கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - 1/2 கைப்பிடி

கொத்தமல்லி - 1/2 கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

வேகவைத்த சாதம் - 1 கப் (200 கிராம்)

செய்முறை:

தக்காளியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, இரண்டு நாள்கள் வெயிலில் காயவைக்கவேண்டும். நன்கு காய்ந்த தக்காளியுடன், கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து, மல்லி விதைகள் மற்றும் காய்ந்த மிளகாய், சேர்த்து வெறும் கடாயில் வறுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, கடாயில் எண்ணெய் சூடானதும், கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, 1 முதல் 1 1/2 டேபிள் ஸ்பூன் அளவு அரைத்து வைத்த இன்ஸ்டன்ட் தக்காளி பொடியைச் சேர்த்துக் கருகவிடாமல் நன்கு கலந்துவிடவும். இதோடு, வேகவைத்த சாதம் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, இறுதியாக மல்லி இலைகளைச் சேர்த்து சூடாகப் பரிமாறலாம். மீதமிருக்கும் பொடியைச் சுத்தமான காற்றுப் புகாத பாட்டிலில் மூடிவைத்து உபயோகிக்கலாம். நான்கு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

2
Chutney

சட்னி சாதம்:

காலை பிரேக்ஃபாஸ்ட் மற்றும் மதிய உணவு இரண்டிற்கும் இந்த ஒரு சட்னி போதும். இந்த 2 இன் 1 ரெசிபிக்கு தேவையான பொருள்கள்...

தாளிப்புப் பொருள்கள்:

கடலை எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - 1/2 கைப்பிடி

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 5 பற்கள்

இஞ்சி - 1 இன்ச்

தக்காளி - 1/4 கிலோ

உப்பு - தேவையான அளவு

மிளகாய்த் தூள் - 1/2 முதல் 3/4 டீஸ்பூன்

கலவை சாதத்திற்கு:

கடலை எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

பிரியாணி இலை - 2

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

கறிவேப்பிலை - 1/2 கைப்பிடி

கொத்தமல்லி இலை - 1/2 கைப்பிடி

அரிசி - 1 கப் (200 கிராம்)

செய்முறை: கடாயில், எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்ததும், தாளிப்புப் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கி அரைத்துக்கொள்ளவும். பிரேக்ஃபாஸ்ட்டுக்கான சட்னி தயார். மதிய உணவிற்கு, அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளுங்கள். பிறகு, குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். அரைத்து வைத்த சட்னி மற்றும் ஊறவைத்த அரிசி இரண்டையும் சேர்த்துக் கலந்துவிடவும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அதனுடன் கொத்தமல்லித் தழைகளைச் சேர்த்து மூடிவிடவும். இதனை, மிதமான தீயில் 10 நிமிடங்களும், அடுப்பை அணைத்துவிட்டு 10 நிமிடங்களும் வேகவைக்க வேண்டும். சுவையான தக்காளி சட்னி சாதம் தயார். இதேபோல, கொத்தமல்லி, கறிவேப்பிலை, சவ்-சவ், பஜ்ஜி மிளகாய் போன்ற காய்கறி வகைகளிலும் சட்னி செய்து, இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறலாம். குக்கருக்கு வெயிட் போட அவசியமில்லை.

3
Mixed Rice

பஜ்ஜி மிளகாய் சாதம்:

எப்போதும் ஒரே காய்கறிகளில் சமைத்துச் சலித்துப் போனவர்கள், இந்த எளிமையான பஜ்ஜி மிளகாய் சாதம் செய்து அசத்தலாம். இதற்குத் தேவையான பொருள்கள்

பஜ்ஜி மிளகாய் - 4

தக்காளி சிறியது - 2

மிளகாய்த் தூள் - 3/4 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்

கடலை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

பிரியாணி இலை - 2

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

சோம்பு - 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

சீரகச் சம்பா அரிசி - 1 கப் (200 கிராம்)

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி

புதினா இலை - 1 கைப்பிடி

செய்முறை: முதலில் தக்காளி மற்றும் பஜ்ஜி மிளகாயைச் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். அரிசியைக் கழுவி, 20 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளுங்கள். குக்கர் அல்லது கடாயில், எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதன் பச்சை வாசனை போனதும், தக்காளி, பஜ்ஜி மிளகாய், உப்பு, மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்துவிடவும். இதனோடு, ஊறவைத்த அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்துவிடவும். 3 கப் தண்ணீர் சேர்த்து, அதனோடு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து, குக்கர் அல்லது கடாயை மூடி மிதமான தீயில் 10 நிமிடங்களும், அடுப்பை அணைத்துவிட்டு 10 நிமிடங்களும் வேகவைக்கவேண்டும். சுவையான பஜ்ஜி மிளகாய் சாதம் தயார். குக்கருக்கு வெயிட் போட அவசியமில்லை.

4
Pulav

இடித்த கொண்டைக்கடலை சாதம்:

மிகவும் சத்தான உணவு வகை, இந்த இடித்த கொண்டைக்கடலை சாதம். இதற்கு வெள்ளை அல்லது கறுப்பு கொண்டைக்கடலை இரண்டுமே எடுத்துக்கொள்ளலாம். வெள்ளை கொண்டைக்கடலை என்றால் 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும். கறுப்பு கொண்டைக்கடலை என்றால் முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும்.

தேவையான பொருள்கள்:

கொண்டைக்கடலை - 100 கிராம்

தக்காளி சிறியது - 2

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 1/2 டீஸ்பூன்

கடலை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

பாசுமதி அரிசி - 1 கப் (200 கிராம்)

செய்முறை:

ஊறவைத்த கொண்டைக்கடலையைக் குக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு வேகவைத்துக்கொள்ளவேண்டும். இந்த வேகவைத்த கொண்டைக்கடலையை மிக்சியில் நரநரவென அரைத்துக்கொள்ள வேண்டும். அரிசியைக் கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். பிறகு, குக்கரில் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். இதன் பச்சை வாசனை போனதும், தக்காளி, உப்பு, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்துக் கலந்து விடவும். இதனோடு, இடித்து வைத்த கொண்டைக்கடலையைச் சேர்க்கவும். இது மசாலாவோடு நன்கு கலந்ததும், ஊறவைத்த அரிசி, 1 1/2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடங்கள் மிதமான தீயிலும், 10 நிமிடங்கள் அடுப்பை அணைத்தபின்னும் வேகவிடவேண்டும். சுவையான இடித்த கொண்டைக்கடலை சாதம் ரெடி. இவற்றோடு ஃபிரைடு பிரெட் துண்டுகளைச் சேர்த்தும் பரிமாறலாம்.

5
Puttu

மிக்ஸ்டு வெஜிடபுள் புட்டு:

டெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? ஓர் அலெர்ட் #DoubtOfCommonMan

இது சத்தான அதே நேரத்தில் சுவையான பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி. இதற்குத் தேவையான பொருள்கள்

கேரட் சிறியது - 1

பீன்ஸ் - 4

பச்சை பட்டாணி - 25 கிராம்

காலிஃபிளவர் - 1/4 கப்

உருளைக்கிழங்கு சிறியது - 1

கடலை எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - சிறிதளவு

பூண்டு - 5 பற்கள்

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரிசி மாவு - 1 கப் (100 கிராம்)

செய்முறை:

காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, பூண்டு, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும். இதனோடு, உப்பு, மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலந்துவிடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். 75 சதவிகிதம் காய்கறிகள் வெந்ததும் தீயை அணைத்துவிடவும். பிறகு, அரிசி மாவுடன் உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து, உதிரியாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையோடு வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து, இட்லி குக்கர் அல்லது புட்டு மேக்கரில் 10 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும். அவ்வளவுதான், காய்கறி புட்டு தயார். இதனோடு தேங்காய் சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.