Published:Updated:

`தேங்காய்ப் பண்டிகை'... சேலம், நாமக்கல் பகுதியில் கொண்டாடப்படும் பாரம்பர்யத் திருவிழா!

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

`தேங்காய்ப் பண்டிகை’ அல்லது `தேங்காய் சுடும் திருவிழா’ என்று அழைக்கப்படும் அந்த விழா சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் சில கிராமப்பகுதிகளில் ஆடி மாதம் 1-ம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தேங்காய்ப் பண்டிகை

`உணவில் தேங்காய் சேர்த்தால் உடலில் கொழுப்பு சேர்ந்துவிடும்' என்ற தவறான கருத்து நம்மிடையே நிலவுகிறது. அதனால்தான் தேங்காய், தேங்காய் எண்ணெய் என எதையும் சமையலறை பக்கம் கொண்டு செல்வதே இல்லை. ரீஃபைண்ட் சமையல் எண்ணெய்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு வணிக நிறுவனங்கள் செய்த பொய் பிரசாரத்தின் விளைவு நமது மண்ணில் விளையும் ஆரோக்கியமான தேங்காய் எண்ணெய்யை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆலிவ் எண்ணெய் பாட்டிலின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறோம்.

இத்தகைய சூழலில், தேங்காயின் பெருமையைப் போற்றுவதுடன் தமிழகத்தின் சில பகுதிகளில் அதற்கென ஒரு விழாவே கொண்டாடப்படுகிறது. `தேங்காய்ப் பண்டிகை’ அல்லது `தேங்காய் சுடும் திருவிழா’ என்று அழைக்கப்படும் அந்த விழா சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் சில கிராமப்பகுதிகளில் ஆடி மாதம் 1-ம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தேங்காய்ப் பண்டிகை உருவாக செவிவழிக் கதைகள் பல கூறப்பட்டாலும், தேங்காயின் மருத்துவக் குணத்தை அனைவருக்கும் தெரிவிக்கவே இத்தகைய விழா உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே சொல்லப்படுகிறது. திருவிழாக்கள் நிறைந்த ஆடி மாதத்தைக் கோலாகலமாகத் தொடங்கிவைப்பதில் தேங்காய்ப் பண்டிகைக்கு முக்கியப் பங்கு உண்டு.

1
தேங்காய்

தேங்காய் அலங்காரம்!

தேங்காயின் ஒரு கண்ணைத் துளைத்து, அதிலிருக்கும் நீரை வெளியேற்றுவார்கள். பிறகு தேங்காயின்மீது இருக்கும் நார்களை அகற்றிவிட்டு, தேங்காய் முழுவதும் மஞ்சள் பூசுவார்கள். தேங்காயை மண்ணில் தேய்த்து, அதன் நாரை நீக்கும் பொறுப்பை சிறுவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எள், பாசிப்பயறு, நாட்டுவெல்லம், பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை போன்றவற்றை அரைத்து அந்தக் கலவையை துளையின் வழியாக உள்ளே செலுத்துவார்கள். அத்துடன் வெளியேற்றிய தேங்காய்த் தண்ணீரை மீண்டும் சிறிதளவு உள்ளே சேர்ப்பார்கள். (தேங்காய்க்குள் இருக்கும் பொருள்களை வேக வைப்பதற்காக தேங்காய்த் தண்ணீர் மீண்டும் சேர்க்கப்படுகிறது). தேங்காயின் உள்ளே முக்கால் பாகம் மேற்சொன்ன கலவையும் கால் பங்கு தேங்காய்த் தண்ணீரும் இருக்கும். பின்னர் துளைக்குள் பொருந்துமாறு ஒரு நீளமான குச்சியின் முனையைச் சீவி, தேங்காய்க்குள் பொருத்திவிடுவார்கள். குச்சிகளுக்கும் மஞ்சள் அலங்காரம் உண்டு. கிராமங்களில் பொதுவாக அழிஞ்சில் குச்சிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் வாதநாராயணன் குச்சிகளையும் பயன்படுத்துவதுண்டு.

2
கேம்ப் ஃபயர்

தீ மூட்டிக் கொண்டாட்டம்!

காய்ந்த குச்சிகள், சருகுகள், காகிதங்களைக் கொண்டு தீ மூட்டி, சூழ்ந்து நின்றபடி, ஆரவாரத்துடன் சிறுவர்கள் தேங்காயைச் சுடுவார்கள். முற்காலத்திலிருந்தே சிறுவர்களுக்கென நடைபெறும் `கேம்ப் ஃபயர்' (Camp fire) நிகழ்வாக இதை எடுத்துக்கொள்ளலாம். குச்சியிலிருந்து தேங்காய் நழுவி விழுந்துவிடாமலிருக்க, கையாளப்பட வேண்டிய பல நுணுக்கங்களைச் சுற்றி இருக்கும் பெரியவர்கள் தெரிவிப்பார்கள். தேங்காயின் அனைத்துப் பகுதிகளும் தீயில்படும்படி, குச்சியின் உதவியால் தேங்காயைச் சுழற்றிக்கொண்டே இருக்க வேண்டும். சில நேரங்களில் தீயில் வேகும்போதே, குச்சியைவிட்டு நழுவி தேங்காய் உருண்டு ஓடுவதைப் பிடிக்க சிறுவர்கள் பின்தொடர்வது சுவாரஸ்யமாக இருக்கும். சிறிது நேரத்தில் உள்ளே இருக்கும் பொருள்களும் தேங்காயும் நன்றாக வெந்ததைத் தெரிவிக்கும்விதமாக, தேங்காயின் ஓடு கருகி லேசாக தீப்பிடிக்கத் தொடங்கும். தேங்காய் ஓட்டில் வெடிப்புகள் ஏற்பட்டால் தேங்காய் முழுமையாக வெந்துவிட்டது என்று அர்த்தம்.

3
வெல்லம்

மருத்துவக் குணம்!

நெருப்பிலிருந்து எடுத்து தனியாக வைத்ததும். அதன் உள்ளே இருக்கும் பொருள்களின் மணத்தோடு தேங்காயின் மணமும் தீயின் வெப்பத்தில் அற்புதமான வாசனையைக் கொடுக்கும். சூடு ஆறியதும் விருப்பக் கடவுளுக்கு படையல் பொருளாகப் படைக்கப்படும். அதன்பிறகு சுட்ட தேங்காயைப் பங்கிட்டு பக்கத்து வீடுகளுக்கு மணமிக்க பிரசாதமாக வழங்குவார்கள். எள்ளு, பாசிப்பயறு, நாட்டுவெல்லம், அவல், பொட்டுக்கடலையுடன் தேங்காயின் சுவையும் சேரும்போது உண்டாகும் சுவைக்கு ஈடுயிணையில்லை. இந்த `தேங்காய் உணவு’ வயிற்றுப் புண்களை ஆற்றும். புரதக்கூறுகள் நிறைந்த இந்த உணவு, உடலுக்கு வலிமை அளிப்பதுடன், தேவையான நெய்ப்புத்தன்மையையும் கொடுக்கும். தேங்காய் சுடுவதற்குப் பயன்படும் அழிஞ்சில் குச்சியும் மருத்துவக் குணம் நிறைந்தது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதை திருவிழா நாள் மட்டுமன்றி அவ்வப்போது சிற்றுண்டியாகவும்செய்து சாப்பிடலாம்.

4
தென்னை

குறையும் மோகம்!

நெடுங்காலமாகத் தவறாமல் கொண்டாடப்பட்டு வந்த இந்த திருவிழா மீதுள்ள மோகம் இப்போது குறையத் தொடங்கிவிட்டது. பல குடும்பங்கள் ஒன்றிணைந்தும் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் சேர்ந்தும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்த விழா, சமீபகாலமாக களையிழக்கத் தொடங்கிவிட்டது. வீட்டு வாசலில் தீ மூட்டி தேங்காய் சுட்ட நிகழ்வுகள், இன்று சமையலறைக்குள் கேஸ் அடுப்புகளில் தேங்காய் சுடும் நிகழ்வுகளாக மாறி வருகின்றன. சூரியனுக்கு வணக்கம் தெரிவிக்கும்விதமாக பொதுவெளியில் வைக்கப்பட்ட பொங்கல், கேஸ் அடுப்புகளில் வைக்கப்படுவதைப் போல!

5
தென்னை

மனநலம், உடல்நலம்!

Vikatan

பெரும்பாலும், நாம் கொண்டாடும் ஒவ்வொரு திருவிழாவுக்குப் பின்னும் ஒரு மருத்துவ சூட்சுமம் நிச்சயமாக உண்டு. அந்த வகையில், `முடியரசன்’ எனப் பெயர்பெற்ற தேங்காய்க்காக பிரத்யேகமாக கொண்டாடப்படும் திருவிழாவுக்கும் மருத்துவத்தொடர்பு உண்டு. மனநலத்தையும் உடல்நலத்தையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள இதுபோன்ற திருவிழாக்கள் உதவும். அந்த வகையில் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக, தேங்காயின் மருத்துவக் குணங்களை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் உருவான `தேங்காய் சுடும் பண்டிகை’, சமூகத்தை ஒன்றிணைத்து, சமூகநலத்தைப் பாதுகாக்கும் விழா என்றால் மிகையல்ல!