Published:Updated:

மதியம் சிறப்பு உணவு, மாலையில் சிற்றுண்டி; சென்னை முன்னேற்றக் கழக மேல்நிலைப்பள்ளி அசத்தல்! #WorldFoodDay

School
School

அரசின் சார்பில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் பள்ளி ஆசிரியர்கள் ஆண்டுதோறும் கொடுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் மற்றும் சேவை உள்ளத்துடன் உதவும் பொதுமக்களின் நிதியுதவியைக் கொண்டு `மிட் டே ஃபீடிங் பண்ட்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று உலக உணவு தினம்(World Food Day).

`அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' - மகாகவி பாரதியின் இந்த வாக்கிற்கிணங்க, சென்னையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது ஒரு பள்ளி. நூற்றாண்டு விழா கண்ட இந்தப் பள்ளி, தன் மாணவர்களுக்குக் கல்வியுடன் சேர்த்து நல் உணவும் அளித்து வருவது வியக்கவைக்கிறது. மிக முக்கியமாக சத்துணவுடன் கூட்டு, பொரியல், அப்பளம் வழங்கப்படுகிறது. சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகின்றன. மாலை வேளைகளில் சிற்றுண்டியும் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு.

Mid-day meals
Mid-day meals

இன்றைய சௌகார்பேட்டை அன்றைக்கு பெத்தநாயக்கன்பேட்டை என்று அழைக்கப்பட்டது. அப்போது கல்வியறிவு குறைவு என்பதால், அன்றைய கொத்தவால்சாவடி மற்றும் அதைச் சுற்றி வாழும் மக்களின் பிள்ளைகளின் நலனைக் கருத்தில்கொண்டு 1888-ம் ஆண்டு, பெத்தநாயக்கன்பேட்டையின் கவுன்சிலராக இருந்த கரிக்கலவாக்கம் சுப்புராயமுதலியார், ஓர் ஆசிரியர், இரண்டு மாணவர்களைக் கொண்டு சென்னை முன்னேற்றக் கழக மேல்நிலைப்பள்ளியைத் தொடங்கினார். சென்னை முன்னேற்றக் கழக உறுப்பினர்களின் நிதி மற்றும் அண்ணாமலை முதலியார் உள்ளிட்ட பலரது நன்கொடையால் பள்ளி செயல்படத் தொடங்கியது. ராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியை புரவலராகக் கொண்டிருந்த இப்பள்ளியின் இன்றைய புரவலர், நல்லி குப்புசாமி செட்டியார்.

சுப்புராய முதலியாரின் கொள்ளுப்பேரன் சி.சத்தியமூர்த்தி, இன்று பள்ளியின் செயலாளர் மற்றும் தாளாளராக இருக்கிறார். "காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம் போன்றவை தொடங்கப்படுவதற்கு முன்பே எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 130 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தப் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறையாக கல்வி கற்பவர்கள். அவர்களில் 90 சதவிகிதம் பேர் வறுமையில் வாழும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது'' என்றார்.

meals
meals
`பட்டினி!' - இந்தியாவின் மொத்த உற்பத்தியையும் பாதிக்கும் சமூகப் பொருளாதாரப் பிரச்னை! #WorldFoodDay

பள்ளி தலைமையாசிரியர் எம்.நிர்மலா, "அரசு உதவி பெறும் எங்களது பள்ளியில் 1888-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இப்போது அரசின் சார்பில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் பள்ளி ஆசிரியர்கள் ஆண்டுதோறும் கொடுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் மற்றும் சேவை உள்ளத்துடன் உதவும் பொதுமக்களின் நிதியுதவியைக் கொண்டு `மிட் டே ஃபீடிங் பண்ட்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மதிய உணவுடன் மாணவர்களுக்குக் கூடுதலாக முட்டை, அப்பளம், காய்கறி, கீரை உணவுகளை வழங்கி வருகிறோம். மேலும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் 30 பேரின் வீட்டுத் திருமணம் மற்றும் மற்ற விசேஷ நாள்களிலும் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு உணவு வழங்குகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

265 மாணவர்களைக் கொண்ட எங்கள் பள்ளியில், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அப்போது அவர்களுக்குச் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. அன்றைய சூழலுக்கேற்ப உப்புமா, சுண்டல், அவித்த வேர்க்கடலை, பன், பழம், பிஸ்கட் போன்றவற்றை வழங்குகிறோம். போதிய அளவு காலை உணவு சாப்பிடாத மாணவர்களுக்கு மதிய உணவு நிறைவைத் தருகிறது. மாலையில் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பவர்கள் வீடு திரும்ப 6.30, 7 மணி வரை ஆகிவிடும் என்பதால், நாங்கள் வழங்கும் இந்தச் சிற்றுண்டி அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.

Nirmala
Nirmala
Vikatan

சௌகார்பேட்டையில் வசதிபடைத்தவர்கள் இருந்தாலும் இங்கே படிக்கும் மாணவர்களில் வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். சௌகார்பேட்டை மட்டுமல்லாமல் பழைய கொத்தவால் சாவடி பகுதி தொழிலாளர்களின் குழந்தைகள், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, சால்ட் குவாட்டர்ஸ், புளியந்தோப்பு போன்ற இடங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் இங்கே வந்து கல்வி கற்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கல்வி அறிவு தரப்படுவதுடன், வயிற்றுப் பசியும் தீர்க்கப்படுவது எங்களுக்கு நிறைவாக இருக்கிறது'' என்றார் பெருமிதத்துடன்.

Teachers
Teachers

சென்னை முன்னேற்றக் கழக மேல்நிலைப்பள்ளியின் 130 ஆண்டுக்கால பள்ளி வரலாற்றில் நிர்மலாதான் முதல் பெண் தலைமையாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றுள்ள இவருக்கு வணிகவியல் முதுகலை ஆசிரியர் ஆர்.ஆனந்தன், பள்ளியின் வளர்ச்சிப் பணிகளில் உதவியாக உள்ளார். நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே, தொலைபேசியில் அழைத்த பலர், மாணவர்களின் நல் உணவுக்காக நன்கொடை தொகை அனுப்புவது தொடர்பாக விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இன்னும் பல நூறு மாணவர்கள் பலன் பெறட்டும்!

அடுத்த கட்டுரைக்கு