Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்லிம்மாக இருப்பதன் ரகசியம்!

எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
எடைக்குறைப்பு

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்லிம்மாக இருப்பதன் ரகசியம்!

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

Published:Updated:
எடைக்குறைப்பு
பிரீமியம் ஸ்டோரி
எடைக்குறைப்பு

புத்திசாலித்தனமாகச் சாப்பிடுவது என்பது ஒரு கலை!

அநேகமாக எல்லோருக்கும் இப்படியோர் அனுபவம் இருக்கும். ‘இது கொழுப்பு, அது கொலஸ்ட்ரால்’ என நீங்கள் பார்த்துப்பார்த்துச் சாப்பிட்டுக்கொண்டிருப்பீர்கள். ஆனாலும், `எடை குறைவேனா பார்' என்று சவால் விடும்.

வீட்டுக்குள்ளேயோ, நட்பு வட்டத்திலோ இப்படி ஒருவர் இருக்கலாம். `டயட்டாவது ஒண்ணாவது' என அவர் கண்டதையும் சாப்பிடுபவராக இருப்பார். கல்யாண வீட்டில் பிரியாணியை பிளேட் பிளேட்டாக உள்ளே தள்ளுவார், எந்தக் குற்ற உணர்வுமின்றி. ஆனாலும், ஒரு கிலோ கூட எடை அதிகரிக்காமல் பல வருடங்களாக ஒரே மாதிரி இருப்பார். அப்படியோர் உடல்வாகு நமக்கு அமையாதா என ஏக்கம் பெருக்கெடுக்கும். சட்டென எடை கூடுகிற பிரச்னை நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. எகிறுகிற எடையை நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டும், கலோரிகளைக் கணக்கு பார்த்துக்கொண்டும், உடற்பயிற்சிகளைச் செய்துகொண்டும், அளந்து அளந்து சாப்பிட்டுக்கொண்டும்... இன்னும் எதையெல்லாமோ முயன்று எடையைக் குறைக்கப் போராடிக்கொண்டிருப்பீர்கள். எந்தக் கவலையுமின்றி, டயட், உடற்பயிற்சி என எதையும் பின்பற்றாமல் உங்களுக்குத் தெரிந்த அந்த நபர் மட்டும் ஸ்லிம்மாக இருப்பதன் ரகசியம் மட்டும் புரியவில்லைதானே... தெரிந்துகொள்வோம் வாருங்கள்!

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்லிம்மாக இருப்பதன் ரகசியம்!

ரகசியம் 1

அந்த நபருக்கு வளர்சிதை மாற்ற விகிதம் அதிகமிருக்கலாம்

வளர்சிதை மாற்றம் என்பது நாம் ஓய்வில் இருக்கும்போதுகூட நம் உடல் அடிப்படை இயக்கங்களான சுவாசம், செரிமானம், ரத்த ஓட்டம் போன்ற செயல்களைச் செய்யத் தேவைப்படும் கலோரி அல்லது ஆற்றலின் அளவு. அதிக வளர்சிதை மாற்றத் திறன் இருப்பவர்களின் உடல், குறைந்த வளர்சிதை மாற்றத் திறன் கொண்டவர்களின் உடலோடு ஒப்பிடும்போது குறிப்பிட்ட நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கக்கூடியதாக இருக்கும். இந்த வளர்சிதை மாற்றத் திறனானது சிலருக்கு மரபியல்ரீதியாக வருவது. பெரும்பாலானவர்களுக்கு அவர்களது வாழ்வியல் முறையின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்படுகிறது. வளர்சிதை மாற்றம் மட்டுமன்றி, வேறு சில காரணிகளும் ஒருவரது எடையைத் தீர்மானிக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.

ரகசியம் 2

அவர்களுக்கு லெப்டின் ஹார்மோன் அதிக சென்சிட்டிவ்வாக இருக்கலாம்

நம் உடலிலுள்ள கொழுப்பு செல்கள் சுரக்கும் லெப்டின் ஹார்மோன்தான் ‘போதும்’ என்ற உணர்வைத் தருவது. அதாவது பசியைக் கட்டுப்படுத்தி, அதிகம் உண்பதைத் தவிர்த்து எடை கூடாமல் பார்த்துக்கொள்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பு சிலருக்கு மிகச் சரியாக அல்லது அதிகமாக இருக்கும். அதனால், அவர்கள் சரியான அளவே உண்பார்கள். இது சரியாகச் சுரக்காதவர்களுக்கு அல்லது பருமனானவர்களுக்கு அதன் விளைவாக அதிகம் சாப்பிடுவதும், எடை கூடுவதும் நடக்கும்.

ரகசியம் 3

அந்த நபர் உடலியக்கத்துக்கு அதிக நேரம் செலவிடலாம்

உங்கள் வீட்டுச் செல்ல நாய்க்குட்டியை வாக்கிங் அழைத்துச் செல்வது, மாடிப் படிகளில் ஏறி இறங்குவது, குழந்தைகளுடன் விளையாடுவது, பாத்திரம் தேய்ப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, தோட்ட வேலை போன்றவை எல்லாம் உங்கள் எடையைச் சீராக வைத்திருக்க உதவும் என்பது தெரியுமா... இந்தச் செயல்களைச் செய்வதற்குச் செலவிடப்பட்ட ஆற்றல் NEAT எனப்படுகிறது. அதாவது Non – Exercise Activity Thermogenesis. வழக்கமான வேலைகளாகச் செய்யப்படுகிற இவை ஒருவரது வளர்சிதை மாற்றத்திலும், எடை நிர்வாகத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்லிம்மாக இருப்பதன் ரகசியம்!

ரகசியம் 4

அந்த நபரின் உடல் அமைப்பும் கருத்தில்கொள்ளப்பட வேண்டும்

ஒருவரது உடலிலுள்ள தசை மற்றும் கொழுப்பின் கலவையும் வளர்சிதை மாற்றத்தைப் பெரிதும் பாதிக்கும். ஒரு நபருக்கு கொழுப்பைவிட தசை அடர்த்தி அதிகமிருந்தால் அவரது வளர்சிதை மாற்ற அளவும் அதிகமாக இருக்கும். உணவின் அளவை அதிகரிப்பதால் இந்த நபருக்கு அவ்வளவு சுலபத்தில் எடை அதிகரிக்காது.

ஒல்லியாக இருப்பது என்பது ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம் கொள்ளப்படக்கூடியதல்ல. வெளித் தோற்றத்தில் ஒல்லியாகத் தெரிகிற இந்தியர்கள் பலருக்கும் உடலுக்குள் அதிக கொழுப்புக் கலவையும் இடுப்புச் சுற்றளவும் இருக்கலாம். அந்த வகை உடல்வாகுக்கு Thin – fat phenotype என்று பெயர். இவர்களுக்கு ரத்த அழுத்தமும் இதயநோய்களும் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். உடலின் கொழுப்பு அளவை டெக்ஸா அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்வதன் மூலம் அந்த நபரின் ஆரோக்கியத்தையும் அறிந்து கொள்ளலாம்.

ரகசியம் 5

அந்த நபருக்கு பசிக்கும்,உணவுத் தேடலுக்குமான வித்தியாசம் தெரிந்திருக்கும்

உடலின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்வதும் இந்த விஷயத்தில் உதவும். பசி என்பது உணவுக்கான உடலியல் தேவை. உணவுத்தேடல் என்பது உளவியல் தேவை. உங்கள் உடல் தீவிர நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப் பட்டிருக்கும்போது மூளையானது அதை பசி என்று தவறாகப் புரிந்து கொள்ளும். அது, தாக உணர்வு என்பது மூளைக்குத் தெரியாது. இந்த வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளத் தெரிந்தவர்கள், தாகம் என்பதைப் புரிந்து கொள்வார்கள். உடனே உணவைத் தேடி ஓட மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு எடையும் அதிகரிக்காது. தண்ணீர் குடித்தாலே பசிபோன்ற அந்த உணர்வு மட்டுப்படுவதையும் உணர்வார்கள்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: ஸ்லிம்மாக இருப்பதன் ரகசியம்!

ரகசியம் 6

அந்த நபரின் தூக்கச் சுழற்சி முறையாக இருக்கும்

உடலின் பல்வேறு ஹார்மோன்களின் சுரப்புகளுக்கு முறையான தூக்கச் சுழற்சி மிக முக்கியம். ராத்திரி தூங்க வேண்டிய நேரத்தில் விழித்துக்கொண்டிருப்பது, தாமதமாகத் தூங்கச் செல்வது போன்றவையெல்லாம் கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். இந்த ஹார்மோன் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கக்கூடியது. தவிர, ரத்தத்தில் இன்சுலின் அளவையும் அதிகரிக்கும். பசி உணர்வை அதிகரித்து, இனிப்பு, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளின் மீதான தேடலை அதிகரிக்கும். தினமும் இரவில் எட்டு மணி நேரம் தூங்குபவர்களுக்கு இத்தகைய உணவுத்தேடல்கள் குறைவு என்பதால், அவர்களுக்கு எடை அதிகரிக்கும் பிரச்னையும் இருப்பதில்லை.

ரகசியம் 7

அந்த நபரின் உணவுத் தேர்வு சிறப்பானதாக இருக்கலாம்

நீங்கள் வியந்த அந்த நபர் எப்போதாவது ஒன்றிரண்டு முறை டபுள் சீஸ் பீட்சாவோ, ஃப்ரைடு சிக்கனோ சாப்பிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். மற்றபடி அவரின் உணவுத் தேர்வு எப்போதும் சிறந்ததாக இருந்திருக்கலாம். வானவில்லின் அனைத்து நிறங்களிலும் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள், தரமான புரதம், முழுத்தானியங்கள், தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் போன்றவற்றைத் தவறாமல் எடுத்துக்கொள்பவராக இருக்கலாம். சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், பொரித்த உணவுகள், இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது எடைக்குறைப்புக்கு மிக முக்கியம்.

ஆசீர்வதிக்கப்பட்ட உடல்வாகுடன் அடுத்த முறை இப்படியொரு நபரைப் பார்க்கும்போது பொறாமைப்படாதீர்கள். அதை அடைய அந்த நபர் மேற்கொண்ட முயற்சிகள் உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.

சாப்பிடுவது என்பது தேவை. ஆனால், புத்திசாலித்தனமாகச் சாப்பிடுவது என்பது ஒரு கலை.

உங்கள் வாழ்க்கையில் நிகழும் பல விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. நீங்கள் உண்ணும் உணவு அப்படியல்ல. முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, போதுமான தூக்கம் இவை எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டுக்குட்பட்டவை. எடைக் குறைப்புக்கு அடிப்படையானவை.

நம்மால் முடியும் நிச்சயம். நம்புவோம்.

நலமுடன் வாழ்வோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism