Published:Updated:

புத்தம் புது காலை : உங்கள் உப்பில் ஏன் அயோடின் இருக்கவேண்டும்? #6AMClub

தூத்துக்குடி உப்பு
News
தூத்துக்குடி உப்பு

8000 வருடங்களுக்கு மேலாக நமது சமையலறையில் இடம்பெற்று வந்த உப்பு, சமீப காலமாக அயோடைஸ்ட் சால்ட் என்று மாறியது ஏன்... எதற்காக உப்பில் அயோடின் சேர்க்கப்படவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோமா?

ஒரு மனிதன் கருவாய் உருவாகும் நாளிலிருந்து, மனிதனின் இறுதிநாள் வரை, அவனது தலையிலிருந்து கால்வரை அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி, அவனது நோயெதிர்ப்பு ஆற்றலையும் அதிகப்படுத்துவது அவன் கழுத்துப்பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியில் இருந்து உருவாகும் தைராய்டு ஹார்மோன்கள்தான். உண்மையில் Thyreos என்றால் கிரேக்க மொழியில் கேடயம் என்று பொருளாம். பெயரில் மட்டுமல்லாமல், செயலிலும் உடலுக்கு கேடயம்போல நின்று இயங்கும் பட்டாம்பூச்சி வடிவிலான இந்தச் சுரப்பிக்கு, மிக முக்கியமான தேவை இந்த அயோடின் என்கிறது மருத்துவ அறிவியல்.

ஆனால், அயோடின் ஒரு கனமான கனிமம். அதனால் இது பூமியின் மேலடுக்குகளில் காணப்படுவது குறைவு என்பதால், நாம் உண்ணும் காய்கறிகளிலோ, இறைச்சியிலோ குறைவாகவே கிடைக்கும். மேலும், சர்க்கரையைக் காட்டிலும் உப்பு விலைகுறைந்த, சிறந்த எளிய வாகனம் என்பதால் உடலுக்குள் அயோடினைச் சேர்க்க உப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு, பொட்டாசியம் அயோடேட், பொட்டாசியம் அயோடைடு, சோடியம் அயோடேட் மற்றும் சோடியம் அயோடைடு என்ற நான்கு அயோடின்கள் தனித்தனியாகவோ, சேர்க்கையாகவோ உப்புடன் சேர்த்து வழங்கப்பட்டது.

Salt
Salt

பொதுவாக மலைப்பகுதிகளின் மண்ணில் அயோடின் இன்னும் குறைவாக இருப்பதால், உலகெங்கும் உள்ள மலைவாழ் மக்களிடையே அதிகம் காணப்படும் Goitre என்ற முன்கழுத்துக்கழலை வீக்கம் ஏற்படுவதை கவனித்த அமெரிக்காவின் டேவிட் கோவி என்ற மருத்துவ விஞ்ஞானி, 1920-ம் ஆண்டு ஆப்பலேச்சிய மலைவாழ் மக்களிடையே சோடியம் அயோடைடு சேர்த்த உப்பை முதன்முதலில் பரிந்துரைத்து, அது நன்கு பயனளிக்கவே, அன்றுமுதல் "உங்க உப்புல அயோடின் இருக்கா?" என்ற Food Fortification திட்டம் இந்த வியாதிக்கான எளிய தீர்வாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உலகெங்கும் ஐம்பதிற்கும் அதிகமான நாடுகளில், நூறு கோடிக்கும் அதிகமான மக்கள், குறிப்பாக நமது நாட்டில் மட்டுமே இருபது கோடி மக்கள் இந்த அயோடின் குறைபாட்டினால் அவதியுறுகிறார்கள். இதற்கு எளிய தீர்வாக அயோடின் கலந்த உப்பு உட்கொள்வதை பிரேசில் அரசு முதன்முதலாக நடைமுறைப்படுத்த, உலகெங்கும் இது பின்பற்றப்படுகிறது.

1962-ம் ஆண்டு நமது நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை இன்றளவில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்பதுடன், இந்த அயோடின் உப்பை மக்களுக்கு கொண்டு சேர்த்ததில் டாடா உப்பு பெரும் பங்கு வகிக்கிறது என்பதும் உண்மை.

Salt
Salt

வேறுபாடற்ற சமத்தன்மையோடு விளங்கும் ஒரே பொருள் உப்பு என்பதாலும் கூழ் மட்டுமே குடித்து உயிர்வாழும் ஏழைகளுக்கும் அயோடினை எளிதில், உப்பு சென்று சேர்த்துவிடும் என்பதாலும், நமது சமையலறைகளில் 'அயோடைஸ்ட் சால்ட்' என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

ஆம்... சாதாரண உணவை சுவைமிக்கதாக செய்யும் உப்பு, அதனைச் சத்துள்ளதாகவும் மாற்றுவதற்கு முக்கியக் காரணம் உப்பின் எளிமையும், அதன் குணமும் தான்!