ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஹேண்ட்பேக் பயன்பாடு முதல் இருக்கையில் உட்காருவது வரை... எது சரி... எது தவறு?

எது சரி... எது தவறு?
பிரீமியம் ஸ்டோரி
News
எது சரி... எது தவறு?

- ஆரா

``நல்லாதான் இருந்தேன்... சில தினங்களா முதுகு வலிக்குது!”

“கழுத்தைத் திருப்பவே முடியலை... ரொம்ப வலியா இருக்கு!”

“நடக்கவே சிரமப்படுறேன்... தசைப்பிடிப்பு மாதிரி தெரியுது!”

- இவ்வாறு சொல்பவர்கள் நம்மில் பலர் உண்டு. சில நேரங்களில் இதுபோன்ற எதிர் பாராத பாதிப்புகள், நம் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போடலாம். நாம் அறியாமல் செய்யும் சில பழக்கவழக்கங்கள்கூட, இந்தப் பிரச்னைகளுக்கு காரணமாகலாம் என்று எச்சரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ரம்யா ராகவன். அன்றாடச் செயல்பாடுகளில் நம் உடலமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தையும் விளக்குகிறார் இவர்.

ஹேண்ட்பேக் பயன்பாடு முதல் இருக்கையில் உட்காருவது வரை... எது சரி... எது தவறு?

தரையில் உட்காருகிறீர்களா?

“வீட்டிலிருக்கும்போது சோஃபாவில்தான் அதிக நேரம் அமர்ந்திருப்போம். பலரும் வெஸ்டர்ன் டாய்லெட்தான் பயன்படுத்து கின்றனர். அலுவலகத்திலும் சேரில்தான் உட்காருகிறோம். வேலை முடிந்து வீடு திரும்பியதும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு, சிறிதுநேரத்தில் படுக்கைக்குச் சென்றுவிடுகிறோம். பெரும்பாலானோர் தரையில் உட்கார்வதே இல்லை. இதனால், சீரான ஆற்றல் கிடைக்காமல், இடுப்பு தசைகள் இறுக்கமாகலாம். முழங்கால் வலி அல்லது முதுகுவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. தரையில் உட்கார்ந்து எழுந்திருக்கும்போது உடல் இயக்கம் சீராக இருக்கும். எனவே, தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேர மாவது தரையில் அமர்வதை வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

படுத்துக்கொண்டே செல்போன் பயன் படுத்தாதீர்கள்!

படுத்துக்கொண்டே போன் பேசுவது, படுக்கையில் சில தலையணைகளை அடுக்கி அதன்மீது தலை சாய்த்து செல்போன் பயன் படுத்துபவர்கள் அதிகம். இதனால், கழுத்து மற்றும் மார்புத்தசைகள் இறுக்கமாகலாம். மூச்சுவிடுவது, குனிந்து எழுவதில்கூட சிரமம் ஏற்படலாம். சேரில் அல்லது படுக்கையில் நேராக உட்கார்ந்தபடி செல்போனை பயன் படுத்துவதால் இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

ஹேண்ட்பேக் பயன்பாடு முதல் இருக்கையில் உட்காருவது வரை... எது சரி... எது தவறு?

ஒரே நிலையில் (Position) செல்போனை வைத்தபடி நீண்ட நேரம் பேசுவதால், அந்தப் பகுதியில் தசைகள் இறுக்கமாக, ரத்த ஓட்டம் பாதிக்கப்பட, மரத்துப்போன உணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதே நிலை தொடர்ந் தால், கழுத்தைத் திருப்புவதில் சிரமம் ஏற்படுவதுடன், கழுத்தின் அமைப்பே மாறி யிருப்பதுபோல தோன்றலாம். எனவே, சில நிமிடங்களுக்கு ஒருமுறை இடப்புறம் மற்றும் வலப்புறத்தில் செல்போனை மாற்றி வைத்துப் பயன்படுத்தலாம். நீண்ட நேர உரையாடலுக்கு, மிதமான ஒலியுடன் இயர்போனை பயன் படுத்துவது நல்லது.

கணினிக்கும் நமக்கும் இடைவெளி அவசியம்!

எந்தக் கணினியைப் பயன்படுத்தினாலும், கணினியின் ஸ்கிரீனுக்கும் நம் உடலுக்கும் ஒன்று முதல் மூன்று அடி வரை இடைவெளி இருப்பது நல்லது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கணினி பயன்பாட்டுக்கு ஓரிரு நிமிட இடைவெளி கொடுத்து, கொஞ்சம் நடந்துவிட்டு வருவது, கண் மற்றும் உடலின் பெரும்பாலான தசை களுக்கும் நல்லது.

கால்களுக்குப் பிடிமானம் கிடைக்கிறதா?

அலுவலகத்தில் அதிக நேரம் சேரில் உட்கார்ந்திருப் போம். அப்போது நம் கால்கள், பாத தசைகளுக்கும் ஓய்வு கொடுத்திருப்பது போல வைத்திருக்கப்பட வேண்டும். மாறாக, கால் விரல்கள் மட்டும் தரையைத் தொட்டுக் கொண்டிருப்பதுபோலவோ, கால்களைத் தொங்கவிட்டபடியோ, கால்களைக் குறுக்கிய வடிவிலோ வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு செய்வதால், கால் களுக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், கால் வீக்கம், கால்வலி, குதிகால்வலி, கெண்டைக்கால் சதை இறுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சேரில் அல்லது சோஃபாவில் அமர்ந்திருக்கும்போது, தரையில் அல்லது சேரின் கீழ்முனையில் என ஏதாவதோர் அமைப்பில் பாதம் முழுமையாக ஓய்வு நிலையில் இருப்பதுபோல கால்களை வைத்திருக்க வேண்டும்.

கழுத்துவலிக்கு ஹேண்ட்பேக் காரணமாகலாம்!

பெண்கள் தங்கள் ஹேண்ட்பேகை இடப்புறத் தோள்பட்டையில்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அலுவலகம் செல்பவர்கள், உணவு முதல் அலங்காரப் பொருள்கள் வரை அதிக எடையிலான பொருள்களை ஹேண்ட்பேகில் வைத்திருக்க வாய்ப்புள்ளது. அதிகமான எடை இடப்புறத் தோள்பட்டையில் சேர்ந்து, கழுத்துத் தசைகள் இறுக்கமாகி, கழுத்துவலி, தலைவலி, கை மரத்துப்போன உணர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, ஹேண்ட்பேகின் எடையைக் குறைப்பதுடன், அதில் மிக அவசியமானதை மட்டும் பயன்படுத்தலாம். சிறிதுநேரம் தோள்பட்டையில், பின்னர் கையில் பிடித்திருப்பது என ஹேண்ட்பேக் வைத்திருக்கும் அமைப்பையும் மாற்றிப் பயன்படுத்தலாம். பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது போல, தோள்பட்டையின் இரண்டு புறங்களிலும் மாட்டிப் பயன்படுத்துவது போன்ற பேக் (Backpack) பயன்படுத்துவது நல்லது.

ஹேண்ட்பேக் பயன்பாடு முதல் இருக்கையில் உட்காருவது வரை... எது சரி... எது தவறு?

ஓரிடத்தில் எவ்வளவு நேரம் உட்காரலாம்?

நம் உடல் இயக்கத்துக்கு முதுகுத்தண்டின் பங்களிப்பு முக்கியமானது. முதுகுத்தண்டு நன்கு வளையும் தன்மை கொண்டது. அதை நீண்டநேரம் ஒரே அமைப்பில் வைத்திருந்தால், அதன் இயக்கம் சரிவர இயங்காமல், முதுகுவலி வரலாம். பெரிதாக உடல் உழைப்பு, உடல் அசைவுகள் இன்றி ஓரிடத்திலேயே அதிக நேரம் அமர்ந்திருந்தால், தசைப்பிடிப்பு, கழுத்துவலி, கையில் வீக்கம், மரத்துப்போன உணர்வு, இடுப்புவலி, கால்வலி, மூட்டுவலி, நடப்பதற்கு சிரமம் என காலப்போக்கில் அடுத்தடுத்த இணை பாதிப்புகளும் ஏற்படலாம். எனவே, என்ன வேலை செய்தாலும், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுந்து கொஞ்ச தூரமாவது நடப்பது, கைகள் மற்றும் கால்களின் இயக்கத்தை உறுதிசெய்வது, குனிந்து எழுந்து முதுகுத்தண்டுக்கு வேலை கொடுப்பது என உடல் இயக்கம் முறையாக நடப்பதை உறுதிசெய்வதால் மேற்கண்ட பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

சேரில் சாய்ந்துதானே உட்காருகிறீர்கள்?

சேரில் அமரும்போது, முதுகுக்கும் இருக்கையின் பின்புறத்துக்கும் இடையில் சிறிது இடைவெளிவிட்டு அல்லது தங்களின் விருப்பம்போல சாய்ந்தவாறு சிலர் உட்கார்ந்திருப்பார்கள். அப்படியெல்லாம் அமரக் கூடாது. இருக்கையில் நன்றாகச் சாய்ந்தபடிதான் உட்கார வேண்டும். சேரில் சாயாமல் நிமிர்ந்தபடி உட்கார விரும்புபவர்கள், முதுகுக்கும் இருக்கையின் பின்புறத்துக்கும் இடையில் சிறிய தலையணை பயன்படுத்தலாம்.

அடிக்கடி மாடிப்படி ஏறலாமா?

அடிக்கடி மாடிப்படி ஏறி இறங்குவதால் முழங்கால் சவ்வு மெள்ள தேய்மானமாகவும், மூட்டு வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தினமும் 5,000 - 10,000 அடி தூரம் நடப்பது நல்லது. இயல்பான வேலைகளுக்கு நடப்பதுபோக, மூன்று - நான்கு மாடிகள் கொண்ட வீடு அல்லது அலுவலகத்தில் தினமும் ஓரிருமுறை ஏறி இறங்கினாலே போதுமானது” என்கிறார் ரம்யா.