ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது...

குழந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தை

ஹெல்த்

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது...

‘குழந்தை லேசாக இருமினால் போதும். உடனடியாக மருந்துக் கடைக்குச் சென்று கைதேர்ந்த மருத்துவரைப்போல சுயமாக மருந்து வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், `இது மாதிரி சுயமருத்துவம் செய்வதால், குழந்தையின் உடல்நலன் பெரிதும் பாதிக்கப்படலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

“குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது, பெற்றோர் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். ஆனால், பலர் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள்...” என்கிற குழந்தைகள்நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டி, குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கும் விஷயத்தில், பெற்றோர் தங்களை அறியாமல் செய்யும் சில தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

  • ஆயின்மென்ட், சொட்டு மருந்து, டானிக் போன்றவற்றை ஒரு முறை திறந்துவிட்டால், அதிகபட்சம் ஒரு மாதம்வரை உபயோகப்படுத்தலாம். அதற்குமேல் மருந்தின் வீரியம் குறைந்துவிடும். சில பக்கவிளைவுகளும் ஏற்படலாம். முறையாக அவற்றை அப்புறப்படுத்திவிடுவது நல்லது.

  • `குழந்தையின் வயதைப் பொறுத்து மருந்தின் அளவு பரிந்துரைக்கப்படுகிறது’ எனச் சிலர் நினைக்கிறார்கள். அப்படி நினைத்து, ஒரே வயதுள்ள இரண்டு குழந்தைகளுக்கு, ஒரே அளவிலான மாத்திரை, மருந்துகளைக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் உடல் எடையைப் பொறுத்துதான் மருந்தின் அளவு பரிந்துரைக்கப்படும். மாத்திரை மட்டுமன்றி, ஆயின்மென்ட், டிராப்ஸ், லோஷன் அனைத்துக்குமே இது பொருந்தும்.

  • சில பெற்றோர், ஏற்கெனவே வைத்திருக்கும் டானிக் வகைகளோடு புதிதாக வாங்கும் மருந்துகளையும் வைத்துவிடுவார்கள். அடுத்த முறை டானிக்கை எடுக்கும்போது இது குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே, உங்களுக்குப் புரியும்படி மருந்தின் பெயரைத் தமிழில் எழுதி ஒட்டிவைத்துக்கொள்வது நல்லது.

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது...
  • மருத்துவர் 5 மி.லி பரிந்துரைத்தால், 5 மி.லி மட்டுமே கொடுக்க வேண்டும். டானிக் வாங்கும்போதே, மருத்துவரிடம் அளவை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்.

  • உபயோகப்படுத்திய டானிக் பாட்டில்களை, உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். பாட்டில்களை மறு பயன்பாட்டுக்கு உட்படுத்தினால், உணவுப் பொருள்களை அவற்றில் சேமிக்கக் கூடாது.

  • வீட்டிலுள்ள முதியவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கும் பொறுப்பை வீட்டிலிருக்கும் பெரியவர்கள்தான் ஏற்க வேண்டும். குழந்தைகளிடம் தரக் கூடாது. சில குழந்தைகள் ஆர்வமிகுதியில் அவர்களே அவற்றைச் சாப்பிட்டுவிடும் ஆபத்து இருக்கிறது.

  • ‘போன முறை சளி பிடித்தபோது, இந்த மாத்திரைதான் கொடுத்தேன். சரியாகிடுச்சு. இப்போதும் இதையே கொடுப்போம்...’ என்று கொடுப்பார்கள். இது தவறு. மருத்துவர் பரிந்துரையின்றி குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகளைத் தரவே கூடாது.