Published:Updated:

சருமப்பொலிவு, ரத்த ஓட்டம், இயற்கை வயாக்ரா; அளவற்ற பலன்கள் நிறைந்த தர்பூசணி!

தர்பூசணி
News
தர்பூசணி

இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. மிக முக்கியமாக ஆண் உறுப்பில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஆகவேதான் இது இயற்கை வயாகரா என்று சொல்லப்படுகிறது.

Published:Updated:

சருமப்பொலிவு, ரத்த ஓட்டம், இயற்கை வயாக்ரா; அளவற்ற பலன்கள் நிறைந்த தர்பூசணி!

இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. மிக முக்கியமாக ஆண் உறுப்பில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஆகவேதான் இது இயற்கை வயாகரா என்று சொல்லப்படுகிறது.

தர்பூசணி
News
தர்பூசணி

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆங்காங்கே தென்படும் நுங்கு, தர்பூசணி போன்றவை தாகம் தணித்து உடல் சூட்டை போக்கும் அற்புதத்தைச் செய்கின்றன. சுவையாக இருப்பதோடு மலிவாகவும் கிடைக்கும் தர்பூசணியில் பல சத்துகள் நிறைந்துள்ளன.

நீர்ச்சத்து நிரம்பிய தர்பூசணி, வெள்ளரி இனத்தைச் சேர்ந்தது. இதை வாட்டர்மெலான் (Watermelon), குமட்டிப்பழம், தர்பீஸ் எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள். கோடையின் வெம்மையில் இருந்து நம்மைக் காக்கும் தர்பூசணியில் இரும்புச்சத்து உள்ளது. இதில் உள்ள இரும்புச்சத்தின் அளவு, பசலைக் கீரைக்குச் சமம். வைட்டமின் ஏ, சி, பி1, பி6 மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.

தர்பூசணி
தர்பூசணி

நரம்புகளுக்குத் தெம்பு தரும் தர்பூசணி!

தர்பூசணி என்றதுமே நமக்கு உடல்சூட்டைக் குறைக்கும் என்பதுதான் தெரியும். ஆனால், இதைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பு கரையும். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை உள்ளது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்துவிடும். அத்துடன் ரத்தக்குழாயில் படியக்கூடிய கழிவுகளைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியைச் செய்யக்கூடியது தர்பூசணி.

மற்ற பழங்களில் இல்லாத ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்து இருப்பதால் இது உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப் பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகிறது.

இயற்கை வயாகரா

தர்பூசணியில், பவர் ஹவுஸ் என்று கூறப்படும் சிட்ருலின் (citrulline) என்ற அரிய வகைப் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. இது ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தர்பூசணியைச் சாப்பிட்டதும் அதில் உள்ள `சிட்ருலின்' வேதியியல் மாற்றம் அடைந்து `அர்ஜினைன்' (arginine) என்ற வேதிப்பொருளாக மாறுகிறது. அது இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. மிக முக்கியமாக ஆண் உறுப்பில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகளைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஆகவேதான் இதை ஒரு இயற்கை வயாகரா என்று சொல்வதுண்டு.

தர்பூசணி என்றதும் `செக்கச்செவேல்' என்ற அந்தச் சிவப்புநிற சதைப்பாகம்தான் நமக்குத் தெரியும். ஆனால், அந்தச் சிவப்புநிற சதைப்பாகத்தை ஒட்டியுள்ள வெள்ளை நிற சதைப்பாகம்தான் ஆண்மையை அதிகரிக்கும் வல்லமை படைத்தது. தர்பூசணியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமி, சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. மேலும், இதய நோய், புற்றுநோயிலிருந்து நம்மை காக்கிறது.

முகப் பொலிவு | மாதிரிப்படம்
முகப் பொலிவு | மாதிரிப்படம்

முகப்பொலிவு தரும் தர்பூஸ்

தர்பூசணியானது பசியை அடக்கக்கூடியது. சிறுநீரை நன்றாகப் பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் கூடிய வயிற்றுவலியையும் குணப்படுத்துகிறது. இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்துச் சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்டச் சத்து நிறைந்த பானம் இது.

விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, சிறிதுநேரம் ஓடவிட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து அருந்தலாம். விருப்பமானால், சிறிது நாட்டுச் சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தோல், கொட்டை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - ஒரு கப், சோற்றுக் கற்றாழை ஜெல் - 2 டேபிள்ஸ்பூன் எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, இரண்டு நிமிடங்கள் நன்றாகத் தேய்த்துக் கழுவினால் முகம் மெருகேறி ஜொலிஜொலிக்கும். மேலும் இது வயதாவதால் ஏற்படும் முகச்சுருக்கங்களைச் சீர் செய்யும்.

ஒரு கப்பில் தர்பூசணி ஜூஸை எடுத்து, அதில் பஞ்சை நனைத்து, முகத்தை ஒற்றி எடுத்து 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இதைத் தினமும் செய்து வந்தால் சருமத்தின் சுருக்கம் நீங்குவதோடு இளமை திரும்பும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் அனைவருக்குமே இது ஏற்ற சிகிச்சையாகும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள், இரண்டு வாழைப்பழத் துண்டுகளுடன், 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது சேர்த்து நன்றாகப் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், சருமம் மிருதுவாகி மினுமினுக்கும்.

எண்ணெய்ப் பசை சருமத்தினர், 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுதுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர, அதிகப்படியான எண்ணெய்ப் பசை விலகும்.

கூந்தல் வளர்ச்சி
கூந்தல் வளர்ச்சி

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் விதை

தர்பூசணியில் பழம் போலவே அதன் விதைகளும் அரும்பணியாற்றுகின்றன. கூந்தலைப் பராமரிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன.

அரை கிலோ நல்லெண்ணெயில் வெந்தயப் பவுடர் - 50 கிராம், தர்பூசணி விதை பவுடர் - 50 கிராம் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து, சீயக்காய் போட்டு, வாரம் இரண்டு நாள்கள் குளித்து வந்தால் கண்டிஷனிங் செய்ததுபோல கூந்தல் பளபளக்கும்.

மேலும், 100 கிராம் சீயக்காய், 100 கிராம் தர்பூசணி விதை மற்றும் 20 கிராம் வெட்டிவேர், 100 கிராம் பயத்தம்பருப்பு சேர்த்துக் காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியைக்கொண்டு வாரம் இரண்டுநாள் தலையை அலசி வர, கூந்தல் பட்டுப்போல மின்னும்.

ஒரு டீஸ்பூன் கடுகுப் பொடியுடன், ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸைக் கலந்து பூசினால், மங்குகள் உள்ள பகுதியில் தர்பூசணியின் சாறு ஊடுருவிச் சென்று மங்குகளை மறையச் செய்யும். தர்பூசணி விதை எண்ணெயை (இது கடைகளில் கிடைக்கிறது) பிறந்த குழந்தைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டி வர, சருமம் மெருகேறி ஜொலிக்கத் தொடங்கும்.

ஜூஸ்
ஜூஸ்

கவனமும் தேவை!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமானலும் ஆபத்து என்பார்கள். தர்பூசணி கோடைக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், 92 சதவிகிதம் நீரின் பங்கு இருப்பதால் அசீரணக்கோளாறு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு உப்புசம் அடைதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும், தர்பூசணியில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், மிக எளிதாகக் கொழுப்பாக மாறும் தன்மை உடையது. சளிப்பிரச்னை உள்ளவர்கள், தர்பூசணியை சாப்பிட்டால் அதிகப்படியான காய்ச்சல், தொண்டை கரகரப்பு மற்றும் சிறுநீரின் நிறம் மாறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாகத் தர்பூசணி சாப்பிட வேண்டாம். காரணம் இதில் உள்ள அதிகப்படியான நீரின் அளவு சிறுநீரகப் பிரச்னையை அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்றாலும் அதிகமாகச் சாப்பிட்டால் உயர் சர்க்கரை அளவு ஏற்பட்டுப் பாதிப்பு உண்டாகலாம். அதிகப்படியாகத் தர்பூசணி சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது என்பதால், அவரவர் உடல் தன்மைக்கேற்ப அளவாக தர்பூசணி உட்கொண்டு பயனடையலாம்.

- எம்.மரிய பெல்சின்