கொரோனா வைரஸின் தாக்கம், சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இந்தியா முழுவதும், சர்வதேசப் பயணிகள் அனைவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நம் அண்டை மாநிலமான கேரளாவில், இதுவரை 436 பேர் கொரோனா பாதிப்புக்கான சந்தேகப்பட்டியலில் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மருத்துவமனையிலும், மற்றவர்கள் அவரவர் வீடுகளிலும் தனிப்பட்ட முறையில் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனராம்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை அறிய, பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம்.
``கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்தே சென்னை துறைமுகத்திலும், தமிழகத்தின் நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் அரசு மருத்துவக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் குழு மூலம், இதுவரை இரண்டாயிரம் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் யாருக்கும் கொரோனாவுக்கான பாதிப்பு எதுவும் தெரியவரவில்லை என்பதால், பொதுமக்கள் பதற்றத்தை முழுமையாகத் தவிர்க்கலாம். வரும் நாள்களில், ஒருவேளை யாருக்கேனும் ஏதேனும் பாதிப்பு தெரியவந்தால், அவர்களை அருகிலிருக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கென சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது இடங்களிலுள்ள ஆம்புலன்ஸ் சேவைகள் யாவும் துரிதமாக்கப்பட்டுள்ளன.

நாளுக்கு நாள் சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது என்பதால், இங்கு தொற்று ஏற்படும் வாய்ப்பும் குறைவுதான். தகுந்த முன்னெச்சரிக்கையோடு கைகளை அடிக்கடி கழுவியும், இருமல், தும்மல் பாதிப்பை உதாசீனப்படுத்தாமலும் இருக்கும்பட்சத்தில் கொரோனாவை நாம் நிச்சயம் தடுக்கலாம்" என்றார் அவர்.