மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 10

இட்லி
பிரீமியம் ஸ்டோரி
News
இட்லி

கொழுப்புச்சத்தையும் புரதச்சத்தையும் எரிசக்தியாக மாற்றும்போது உடல் இன்சுலின் பயன்பாடு இல்லாத வேறொரு முறையில் எரிசக்தி மாற்றத்தை நிகழ்த்துகிறது

சர்க்கரை நோய் நம் உணவுமுறை, வாழ்க்கை முறையோடு எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதையும் அந்நோயை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதையும் கடந்த இதழில் பார்த்தோம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவுமுறை எது என்பதையும் உணவைக்கொண்டு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி என்றும் இந்த வாரம் பார்க்கலாம்.

உணவுக்கு ஏன் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால், சர்க்கரை நோயின் அடிப்படைப் பிரச்னையே மாவுச்சத்தை உடல் பிராசஸ் செய்யாததுதான். எனவே, நம் உணவுமுறையைக் கட்டுப்படுத்தாமல் மருந்து, மாத்திரை சாப்பிட்டாலோ, இன்சுலின் ஹார்மோனையே ஊசியாகப் போட்டு க்கொண்டாலோ பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் வராது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 10

சர்க்கரை பாதித்த சிலருக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டாலும், 80 யூனிட் இன்சுலின் போட்டுக்கொண்டாலும்கூட சராசரி சர்க்கரை அளவு 300 முதல் 400 வரை இருக்கும். சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாகவே இருந்தால் எதிர்காலத்தில் சிறுநீரகப் பிரச்னை, பார்வைக் குறைபாடு, நரம்புப் பிரச்னை, கால் மரத்துப் போவது, தீராத கிருமித்தொற்று போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம். காயங்கள் பெரிதாகி உறுப்புகளை வெட்டி எடுக்கும்நிலைகூட வர வாய்ப்புண்டு. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு உணவுமுறை மாற்றம் மட்டும்தான்.

அதே போல, ஆரம்ப கட்ட சர்க்கரை நோய் இருப்பவர்கள், உணவு கட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் எடுத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முயற்சித்தால், அதீத சோர்வு, உடல் நடுக்கம், லோ சுகர், போன்ற பிரச்சனைகளையே அதிகம் சந்திப்பார்கள். அவர்களும் மிக எளிதாக உணவுமுறை மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முயற்சிப்பதே புத்திசாலித்தனம். எனவே ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும் சரி முற்றிய நிலையில் இருந்தாலும் சரி உணவுக்கட்டுப்பாடு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பிரதான தூணாக இருக்கும்.

நாம் சாப்பிடும் உணவில் நம் உடலுக்கு எரிசக்தி தரக்கூடிய வேறு என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று பார்த்தால் ஒன்று கொழுப்புச்சத்து, மற்றொன்று புரதச்சத்து. சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்புத்தன்மை, இன்சுலின் பற்றாக்குறை போன்றவை ஏற்படக் காரணம் மாவுச்சத்து பிராசஸிங்கில் ஏற்படும் பிரச்னைதான். ஆனால் அவர்களுக்குக் கொழுப்புச்சத்தையோ புரதச்சத்தையோ பிராசஸ் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை. அதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் மெலிகிறது. உடல், உணவில் கிடைக்கும் மாவுச்சத்தை பிராசஸ் செய்யமுடியாமல் உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் புரதச்சத்துகளை எல்லாம் எரிசக்தியாக மாற்றுகிறது. இதிலிருந்து நம் உடல் நமக்குத் தெளிவாகச் சொல்வது, சர்க்கரை நோய் இருப்பதால் கொழுப்பு மற்றும் புரதங்களை பிராசஸ் செய்வதில் எந்தவிதத் தடையும் இல்லை என்பதையே.

கொழுப்புச்சத்தையும் புரதச்சத்தையும் எரிசக்தியாக மாற்றும்போது உடல் இன்சுலின் பயன்பாடு இல்லாத வேறொரு முறையில் எரிசக்தி மாற்றத்தை நிகழ்த்துகிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் உணவில் மாவுச்சத்தின் அளவைக் குறைத்து ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்களை சரியான அளவில் எடுத்துக்கொண்டாலே சர்க்கரை அளவு அருமையாகக் கட்டுப்படும்.

நம்மில் நிறைய பேர், புரதம் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கும்; கொழுப்புச்சத்து இதயத்தை பாதிக்கும் என்று இந்தச் சத்துகளின் பக்கமே போகாமல் இருக்கிறோம். உண்மை என்னவென்றால், நம் ஊரில் டயாலிசிஸ் செய்யக்கூடிய 70% முதல் 80% நபர்களுக்கு, சிறுநீரகம் செயலிழந்ததற்கான காரணம் சர்க்கரை நோய் சரியாகக் கட்டுப்படாததுதான். இதனை `Diabetic nephropathy' என்போம். அதேபோல் இங்கு ஏற்படும் பாதி மாரடைப்புகளுக்குக் காரணம், சர்க்கரை நோயால் வரக்கூடிய `Angiopathy' என்னும் ரத்தக்குழாய் பாதிப்பே. ஆக, உண்மையான பிரச்னை என்பது சர்க்கரை நோய் கட்டுப்படாமல் இருப்பதே. அதனால் அனாவசியமாக புரதச்சத்துக்கும் கொழுப்புச்சத்துக்கும் பயந்து நாம் அவற்றை உட்கொள்ளாமல் இருப்பது தவறு.

நாம் தானியங்கள் குறித்துப் பேசியபோது Glycemic index, Glycemic load பற்றியும் பேசினோம். அதற்குச் சில உதாரணங்களைக்கூடப் பார்த்தோம். உடலில் சர்க்கரை அளவை அதிகப்படுத்துவதை வைத்து நல்ல உணவு அரிசியா, சிறுதானியமா, பாரம்பரிய அரிசிகளா, கோதுமையா, ஓட்ஸா என்று நாம் ஒப்பீடு செய்வது, தீப்பிடித்து எரிவதில் சிறந்தது பெட்ரோலா, டீசலா, மண்ணெண்ணெயா அல்லது விளக்கெண்ணெயா என்று ஒப்பீடு செய்வது போலதான். எல்லாமே கொழுந்துவிட்டுத்தான் எரியும். `பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியும், மைதாவும் பெட்ரோலுக்கு சமம்' என்று நீங்கள் நினைத்தால் கோதுமையையும் சிறுதானியங்களையும் நாம் டீசல் என்று வைத்துக்கொள்ளலாம். பாரம்பரிய அரிசிகளை மெதுவாக எரியக்கூடிய மண்ணெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்க்கு இணையாகச் சொல்லலாம். ஏனென்றால் இந்த அனைத்து உணவுகளிலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் 50 முதல் 80 வரை. கிளைசீமிக் லோடு மிக அதிகம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 10

ஊரே பேசக்கூடிய Glycemic index, Glycemic load இரண்டையும் வைத்து வேறு சில உணவுகள் பற்றியும் சொல்கிறேன். அந்தப் பட்டியல் உங்களை ஆச்சர்யப்படுத்தலாம். தேங்காயின் Glycemic index அளவு வெறும் 10 மட்டுமே. பாதாம், நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளின் Glycemic index அளவு 5-க்கும் கீழ்தான். முட்டை, பன்னீர், சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளின் Glycemic index அளவு பூஜ்யம். இவற்றைச் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு துளிகூட அதிகமாகாது. சுண்டல், பட்டாணி, பச்சைப்பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளில் ஓரளவு மாவுச்சத்து இருந்தாலும் அதன் Glycemic index அளவு 30 முதல் 35 வரைதான். நாம் 50 முதல் 80 வரை Glycemic index அளவு இருக்கும் உணவு வகைகளில் எது உகந்தது என்று விவாதம் செய்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், Glycemic index அளவு பத்துக்குள் இருக்கிற உணவுகளைப் பற்றிய விழிப்புணர்வே நம்மிடம் இல்லை.

மேற்சொன்ன உணவுகளின் Glycemic load அளவும்கூட கிட்டத்தட்ட பூஜ்யம்தான். இந்த உணவுகளும் காய்கறிகளும் ரத்தத்தில் குறைவாகவும் மெதுவாகவும் சர்க்கரை அளவைச் சேர்க்கும். இவற்றை வைத்து நாம் உணவுமுறையை வடிவமைத்தோம் என்றால் சர்க்கரை அளவு மிக அருமையாகக் கட்டுப்படும். குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் கொண்ட சர்க்கரை நோயாளிகள், மாவுச்சத்தின் அளவை எவ்வளவு குறைக்கிறார்களோ அவ்வளவுக்கு சர்க்கரை நோயிலிருந்து விடுபடுவதற்கான சாத்தியம் இருக்கிறது. இதனை நாம் `Reversal' என்று சொல்வோம். `சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும்' என்று சிலர் சொல்வார்கள். அது உண்மையில்லை. உடல் பருமன் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுமுறையை மாற்றுவதன்மூலம் உடல் எடையைக் குறைத்து மருந்துகளே இல்லாமல், இன்சுலின் தேவைப்படாத அளவுக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். அதுமட்டும் இல்லாமல், தீவிரமான இன்சுலின் பற்றாக்குறை உள்ள சர்க்கரை நோயாளிகள், குறிப்பாக டைப்-1 சர்க்கரை நோயாளிகளுக்கும் உணவுமுறை மாற்றம் நிச்சயம் பயனளிக்கும். மருந்துகள் மற்றும் இன்சுலின் எடுத்துக்கொள்வதன் தேவையைப் பன்மடங்கு குறைக்கவும் முடியும்.

உணவுமுறையை மாற்றம் செய்யாமல் 80 முதல் 100 யூனிட் வரை இன்சுலின் எடுத்து கொள்ளும்போது சர்க்கரை அளவு கட்டுப்படுவதைவிட, உணவுமுறை மாற்றத்துடன் வெறும் 20 முதல் 25 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரை அளவு நன்றாகவே கட்டுப்படும். அந்த அளவிற்கு உணவுமுறை மாற்றம் என்பது சர்க்கரை நோயின் முகவரியை மொத்தமாக மாற்றும் வல்லமை கொண்டது.

சரி, சர்க்கரை நோய் தாக்கத்தைப் பொறுத்து என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

மாவுச்சத்தை சுத்தமாகத் தவிர்த்துவிட்டு வெறும் கொழுப்பு, புரதங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது ஒரு பக்கம் உள்ள எக்ஸ்ட்ரீம். இதை, நாம் லோ-கார்போஹைட்ரேட், கீட்டோ, LCFH, பேலியோ என வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுவோம். இதில் நிறைய பயன்கள் உண்டு. ஆனால் இந்த உணவுமுறையை அவரவர் உடல்நிலைக்குத் தகுந்தாற்போல மருத்துவரின் ஆலோசனையுடனே பின்பற்ற வேண்டும். இதைச் சரியாக, முறையாகப் பின்பற்றினால் டைப்-2 சர்க்கரை நோயாளிகள் மருந்துகளிலிருந்து விடுபடலாம். சர்க்கரை நோய் சம்பந்தமான Fatty liver, PCOD போன்ற மற்ற பிரச்னைகளையும் இந்த உணவு முறையால் பெரிய அளவில் கட்டுப்படுத்தமுடியும். ``இது ரொம்பவும் கஷ்டம், இட்லி தோசை, சோறு சாப்பிடாமல் என்னால் உயிர்வாழவே முடியாது. அதையெல்லாம் நிறுத்தச் சொன்னால் எப்படி டாக்டர்?'' என்று சிலர் கேட்கலாம். இதுபோன்ற உணவுமுறைகளை ஆர்வத்துடன் தொடங்கும் பலர், கொஞ்ச காலம்கூட தொடர்ந்து அவற்றைப் பின்பற்றுவதில்லை. என்னைக் கேட்டால், முறையான அறிவுரைகளுடன் பேலியோ உணவுமுறையைக் கடைப்பிடிப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் புரதம், கொழுப்பு அதிகம் வருகிறதே, அவை உடலுக்கு கெடுதி இல்லையா என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதிலை அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 10

``கடினமான உணவுமுறைகள் எல்லாம் எனக்கு வேண்டாம் சார், தினமும் நார்மலான உணவுகளையே நான் எடுத்துக்கொள்கிறேன். அதன்மூலமாக சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வாய்ப்பிருக்கிறதா?'' என்று நீங்கள் கேட்டால் அதற்கும் என்னிடம் பதில் இருக்கிறது. தினமும் நாம் உண்ணும் உணவிலிருந்து 300-400 கிராம் மாவுச்சத்தைச் சாப்பிடுகிறோம். ஒரு நாளைக்கு 100-150 கிராமுக்கு மேல் மாவுச்சத்தைச் சாப்பிடக்கூடாது என்பது என் அட்வைஸ். அதை எப்படி சாத்தியமாக்குவது? முதலில் மூன்று வேளையும் மாவுச்சத்து எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இப்போது அரிசி சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, சிறுதானியக் கஞ்சி, கூழ்... இவையே நமது மூன்று வேளை உணவாக இருக்கின்றன. உணவின் வகையை மட்டும் ஒவ்வொரு வேளையும் மாற்றிக் கொள்கிறோம். சரி, வேறெதைத்தான் சாப்பிடுவது என்று நீங்கள் கேட்டால், Glycemic index குறைவாக உள்ள வேர்க்கடலை, பச்சைத் தேங்காய் இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம். மிகவும் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள் அவை. இதே அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் இரண்டு மூன்று முட்டைகளை ஆம்லேட் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம். இவற்றிலெல்லாம் Glycemic index கிட்டத்தட்ட பூஜ்யம். அவை சர்க்கரை அளவைச் சிறிதும் உயர்த்தாது.

அடுத்த வேளை உணவாக உங்களுக்குப் பிடித்த தானியத்தை எடுத்துக்கொள்ளலாம். அது சோறாக இருக்கட்டும், சிறுதானியமாக இருக்கட்டும், அல்லது ஏதேனும் பாரம்பரிய உணவு வகைகளாகக்கூட இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டும் அதை எடுத்துக்கொண்டு, அந்த அளவில் இரண்டு மடங்குக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். மூன்றாவது வேளைக்குப் புரதங்கள் நிறைந்த உணவு. ஐந்து தோசைகள் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அதற்கு பதில் இரண்டு தோசை இரண்டு முட்டை அல்லது 250 கிராம் இறைச்சி எடுத்துக்கொள்ளலாம். சைவம் என்றால் வெறும் சுண்டலை மட்டுமேகூட ஒரு வேளை உணவாகச் சாப்பிடலாம். அப்படி வேண்டாம் என்றால் இரண்டு தோசைகளோடு சுண்டல் சேர்த்துக்கொள்ளலாம். மாவுச்சத்தை முழுவதுமாகக் குறைக்கமுடியவில்லை என்றாலும், அதை சரிபாதியாவது குறைத்துவிட்டு அதற்கு நிகராக முட்டை, தேங்காய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் உடைய உணவுகளைச் சாப்பிட்டாலே சர்க்கரை பாதிப்பை அருமையாகக் கட்டுப்படுத்தலாம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 10

அடுத்து, ஸ்நாக்ஸ். பிஸ்கட்டில் டயாபெடிக் பிஸ்கட், ஸ்வீட்டில் டயாபெடிக் ஸ்வீட் என்றெல்லாம் இப்போது விற்கப்படுகின்றன. இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை. சர்க்கரைக்குப் பதில் ஏதோ ஒரு செயற்கைச் சர்க்கரையைச் சேர்த்தாலும் அதே அளவு மாவுச்சத்தைத்தான் கொடுக்கப்போகிறது. எனவே அந்த மாய வலையில் விழாதீர்கள். ஸ்நாக்ஸ் சாப்பிடவேண்டும் என்றால் நிலக்கடலையை வறுத்து சாப்பிடுங்கள். அல்லது சிறு சிறு தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிடுங்கள். சிறு கேரட் துண்டு, இனிப்பு குறைந்த கொய்யாப்பழம் என்று சாப்பிடுவதற்கு நிறையவே இருக்கின்றன. இதையெல்லாம் செய்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். சர்க்கரை நோய் கட்டுப்படுவது மட்டுமல்லாமல் உங்களுக்கு உடல் பருமன் இருந்தால் அதுவும் அது சார்ந்த PCOD போன்ற பிரச்னைகளும் கட்டுப்பாட்டுக்குள் வந்து உடலில் மிக நல்ல மாற்றங்கள் உண்டாகும். மருந்துகளின் தேவை பாதிக்குமேல் குறையும்.

இத்தொடரைப் படித்துக்கொண்டிருக்கும் சர்க்கரை நோயாளிகள் வீட்டிலேயே Glucometer கொண்டு அந்த மாற்றத்தைக் கண்டுபிடிக்கமுடியும். இரவு சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவைக் குறித்துக்கொள்ளுங்கள். பின்னர் நான்கு தோசை சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சர்க்கரை அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள். நாளை தோசைக்கு பதில் சப்பாத்தி சாப்பிட்டு சர்க்கரையின் அளவைக் கணக்கிடுங்கள். அடுத்ததாக ராகி அல்லது ஏதேனும் சிறுதானியத்தில் செய்யப்பட்ட தோசை சாப்பிட்டு அந்த அளவையும் எழுதிக்கொள்ளுங்கள். இவை அனைத்திற்கும் பிறகு வெறும் சுண்டல் பயறை மட்டும் சாப்பிட்டுக் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்து ஏதேனும் ஒரு அசைவ உணவை வறுவலாக 300 கிராம் அளவுக்கு எடுத்துக்கொண்டு இரண்டு தோசை சாப்பிட்டுப் பாருங்கள். அல்லது அதே அளவில் வெறும் அசைவம், முட்டை மட்டும் சாப்பிட்டு சர்க்கரை அளவை சோதித்துப் பாருங்கள். வரும் முடிவுகளை மின்னஞ்சல் அல்லது கடிதம் வழியாக என்னிடம் தெரிவியுங்கள்.

மாற்றத்தை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். அந்த மாற்றங்கள் சர்க்கரை நோய் பற்றிய உங்கள் புரிதலை தலைகீழாக மாற்றி உங்களுக்கு ஷாக் தெரபியே கொடுத்து விடும். சரியான உணவுமுறையைப் பின்பற்றி மாவுச்சத்தைக் குறைத்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். முன்னாள் முதல்வரில் தொடங்கி பலர் உயிரை இந்த சர்க்கரை நோய் பறித்திருக்கிறது. உண்மையில் சரியான புரிதலோடு உணவுமுறையைப் பின்பற்றினால் இந்தக் கொடிய நோயை மிகவும் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்!

பரிமாறுவோம்

****

விகடன் வாசகர்கள் கேட்டுள்ள சில கேள்விகளுக்கு என் பதில்!

"பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லதா? ஜூஸ் போட்டுக் குடிப்பது நல்லதா?" - சந்திரமௌலி, திருநின்றவூர்

பழங்களில் மாவுச்சத்து, குறிப்பாக glucose, sucrose, fructose ஆகிய மூன்று வகை சர்க்கரை சத்துக்களும் ஒவ்வொரு அளவில் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். ஆனால் இதைவிட முக்கியம் அதில் இருக்கும் நார்ச்சத்து. பழத்தை அரைத்து வடிகட்டி ஜூசாக குடிக்கும்போது, அதிலிருக்கும் நார்ச்சத்து போய்விடும். நார்சத்து இல்லாமல் போடப்படும் ஜுஸ் கலர்கலராக விற்கப்படும் குளிர்பானங்களுக்கு சமம். வைட்டமின் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். பழங்களை அப்படியே நார்ச்சத்தோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது.

"வீட்டில் சாதம் வடிக்கும்போது கிடைக்கும் தண்ணீரை நாங்கள் உப்பு சேர்த்துக் குடிப்போம். அது நல்லதா?" - கருணாகரன், மண்டபம்.

சாதத்தை வடிக்கும்போது அந்தத் தண்ணீரில் 10% - 15% வரை ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து இருக்கும். எனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள், உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் அந்தத் தண்ணீரைத் தவிர்ப்பது நல்லது. அது மிக எளிதாக ஜீரணம் ஆகக்கூடியது. அதனால் சர்க்கரை அளவு அதிகமாகும். மற்றபடி ஆரோக்கியமாக இருப்பவர்கள், அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் இதைத் தாராளமாகக் குடிக்கலாம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 10

டாக்டரிடம் கேளுங்கள்!

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.