மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 11

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

சர்க்கரை என்பது சுக்ரோஸ் (Sucrose) எனப்படும் இனிப்புத்தன்மை வாய்ந்த ஒரு கார்போஹைட்ரேட். சுக்ரோஸில் இரண்டு மூலப்பொருள்கள் இருக்கின்றன

சர்க்கரை நோயைப் பற்றி கடந்த வாரம் விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் அது தொடர்பான இன்னொரு விஷயத்தை அலசுவோம். எந்தச் சர்க்கரை உடம்புக்கு நல்லது? குழந்தையிலிருந்து பெரியவர் வரை சர்க்கரையைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ‘வெள்ளைச் சர்க்கரை ரொம்பவே மோசம்... நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, தேன்... இதெல்லாம் நல்லது' என்று சிலர் சொல்கிறார்கள். டீக்கடைகளில் நாட்டுச் சர்க்கரையா, கருப்பட்டியா என்று சாய்ஸ் கேட்கிறார்கள். மக்களும், ‘வெள்ளைச் சர்க்கரை ஆபத்து... பனங்கருப்பட்டி மைசூர்ப் பாகை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்' என சந்தோஷமாகச் சாப்பிடத் தொடங்கிவிட்டனர்.

சர்க்கரை சார்ந்து நிறைய கேள்விகள் உள்ளன. எந்தச் சர்க்கரை உண்மையிலேயே நல்ல சர்க்கரை, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது எது, சர்க்கரை சாப்பிட்டால் உடல் எடை கூடுமா கூடாதா, செயற்கைச் சர்க்கரை பயன்படுத்தலாமா, வேண்டாமா?

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 11

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அறிவியல் பூர்வமாக விடை தேடுவோம். அதற்கு முன்னால் சர்க்கரை பற்றிய ஒரு சுவாரஸ்யமான வரலாறு சொல்கிறேன். ஆஸ்திரேலியாவிற்கு அருகே இருக்கும் பபுவா நியூ கினியா, ஆஸ்திரனேசியா போன்ற தீவுகளே சர்க்கரையின் பூர்வீகம். அங்கிருந்து சுமார் 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வந்து சேர்ந்திருக்கிறது சர்க்கரை. ஆனால் முதன்முதலில் சர்க்கரையை ஆட்டி, பாகாக்கிப் பயன்படுத்தக்கூடிய வழக்கம் இந்தியாவில்தான் தொடங்கியது. கரும்பு, அதை ஆட்டும் இயந்திரம் பற்றியெல்லாம் சங்க இலக்கியங்களிலேயே பாடப்பட்டிருக்கிறது. ‘கரும்பின் எந்திரம் களிற்றொடு பிளிரும்’ என்று கரும்பு இயந்திரத்தை யானையின் சத்தத்தோடு ஒப்பிடுகிறது ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று. இங்கிருந்துதான் அரபு நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் சர்க்கரை சென்றதாகச் சொல்கிறார்கள். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு இன்னும் தாமதமாகவே சென்றடைந்திருக்கிறது.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 15-ம் நூற்றாண்டு வரை இனிப்புக்குத் தேன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினுக்கு அருகே உள்ள கேனரி தீவுகளுக்குப் பயணம் செய்தபோது அங்கே Beatriz de Bobadilla என்ற இளவரசியைச் சந்தித்திருக்கிறார். அந்த இளவரசி கொலம்பஸுக்குக் கரும்புத்துண்டு ஒன்றைத் தந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அதன்பிறகுதான் உலகம் முழுவதும் கரும்பு பயிரிடப்பட்டது. இருந்தாலும், ‘ட்ராப்பிக்கல் நாடுகள்' என்று சொல்லக்கூடிய மிதமான வெப்பநிலை உள்ள நாடுகளில்தான் பெரும்பாலும் கரும்பு பயிரிடப்படுகிறது. இப்போது நாம் சாப்பிடும் சர்க்கரையில் 80% கரும்பு பயிரிலிருந்து வந்தாலும் மீதமுள்ளவை Sugar beet என்றுசொல்லக்கூடிய ஒரு வகை இனிப்புக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை என்பது சுக்ரோஸ் (Sucrose) எனப்படும் இனிப்புத்தன்மை வாய்ந்த ஒரு கார்போஹைட்ரேட். சுக்ரோஸில் இரண்டு மூலப்பொருள்கள் இருக்கின்றன. எல்லா உணவுப் பொருள்களிலும் இருக்கக்கூடிய குளுக்கோஸ், பழங்களுக்கு இனிப்புத் தன்மையைத் தரக்கூடிய ஃப்ரக்டோஸ் (Fructose). இவை இரண்டும் சேர்ந்த கலவைதான் சுக்ரோஸ்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 11

மிகத் தூய்மையாகச் சுத்திகரித்து (Refine), அதில் இருக்கக்கூடிய சுத்தமான சுக்ரோஸை மட்டும் பிரித்தெடுத்தால் அதுதான் வெள்ளைச் சர்க்கரை. அது 100% சுக்ரோஸால் மட்டுமே ஆனது. நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டியை எடுத்துக்கொண்டால், அதிலும் இருப்பது சுக்ரோஸ்தான். அவை மிகக் குறைவான சர்க்கரை அளவு கொண்டது என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. வெள்ளைச் சர்க்கரையில் 100% சுக்ரோஸ் உண்டென்றால் நாட்டுச் சர்க்கரையில் 88% சுக்ரோஸ் உள்ளது. பனைவெல்லத்திலும் கிட்டத்தட்ட 88 முதல் 90% சுக்ரோஸ் இருக்கிறது. அது சுத்திகரிப்பு எதுவும் இல்லாமல் தயாரிக்கப்படுவதால் மீதமுள்ள 10% முதல் 15% அளவுக்கு மொலாசஸ் (molasses) மற்றும் சில தாதுப்பொருள்களுடன் ஒன்றிரண்டு கழிவுப்பொருள்களும் அதில் உள்ளன. ‘‘சரி, தேன் எப்படி டாக்டர்'' என்று கேட்டால், சுக்ரோஸாக இல்லாமல் 50% ஃப்ரக்டோஸ், 40 முதல் 50% குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை இயற்கையாய்க் கலந்த ஒரு கலவைதான் தேன். எல்லாவிதமான சர்க்கரையும் இந்த சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றின் கலவைதான். வெள்ளைச் சர்க்கரைக்கும் நாட்டுச் சர்க்கரைக்கும் உள்ள வித்தியாசம் வெறும் 10% தான்.

உண்மை இப்படி இருக்க, ‘நாட்டுச் சர்க்கரை சேர்த்த உணவு சர்க்கரை நோயாளிகளுக்கும், உடல் பருமனைக் குறைப்பதற்கும் நல்லது' என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றி நான் முந்தைய வாரங்களிலேயே எழுதியிருக்கிறேன். எவ்வளவு மாவுச்சத்து எடுத்துக்கொள்கிறோம் என்பது எப்படி முக்கியமோ, அப்படித்தான் எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்பதும். 4 ஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதும் 5 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சாப்பிடுவதும் நம் உடலுக்கு ஒரே அளவிலான சுக்ரோஸையே தரும். நாட்டுச் சர்க்கரையில் சர்க்கரையே இல்லை என்று நம்புவது மிகப்பெரிய அறியாமை. இதுகுறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரை, சுத்தமான தேன், மிகவும் மோசமான சர்க்கரை என்று சொல்லப்படக்கூடிய High fructose corn syrup... இவையெல்லாம் உடலில் எந்த அளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று பார்க்கும்பொழுது பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. உடலில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை அதிகப்படுத்துதல், triglycerides கொழுப்பை அதிகப்படுத்துதல் ஆகியவற்றை மூன்றுமே சம அளவில்தான் செய்திருக்கின்றன.

இதற்கு ஆராய்ச்சிகள்கூட எதுவும் தேவையில்லை. குளுக்கோமீட்டரை எடுத்துக் கொள்ளுங்கள். 4 ஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை ஒரு நாள், ஐந்து ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி அல்லது தேன் இன்னொரு நாள் என எடுத்துக்கொண்டு 2 மணி நேரத்துக்குப் பிறகு சர்க்கரை லெவல் எந்த அளவுக்கு அதிகமாகியிருக்கிறது என்று பாருங்கள். பெரிய வித்தியாசம் இல்லை என்பது தெரியும்.

இதையெல்லாம் தாண்டி சர்க்கரையில் இன்னொரு முக்கிய பிரச்னை இருக்கிறது. அதில் இருக்கக்கூடிய கலோரிகள், மாவுச்சத்து என்பதையெல்லாம் தாண்டி சுக்ரோஸின் மூலப்பொருளான ஃப்ரக்டோஸ், உடலின் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைப் பெருமளவு உயர்த்தும். அது கல்லீரலில் கொழுப்பைச் சேகரிப்பது, ரத்தத்தில் triglycerides கொழுப்பை அதிகப்படுத்துவது முதலிய பலவித உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். கலோரிகள் என்பதைத் தாண்டி உடலுக்கு நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை சர்க்கரைக்கு இருப்பதால்தான் அதை ‘பாய்சன்’ என்னும் அளவுக்கு மக்கள் நினைக்கிறார்கள். எந்த அளவுக்கு சர்க்கரையைக் குறைக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. எந்தச் சர்க்கரைக்கும் இது பொருந்தும். அதிலும் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

‘‘சரி, எல்லாச் சர்க்கரையிலும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் சுக்ரோஸ் இருக்கிறது. ஆனால் நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டியில் பொட்டாசியம், தாதுச்சத்துகள், கால்சியம், இரும்புச்சத்தெல்லாம் இருக்கிறதாமே... அது உண்மையா?'' என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். சுத்திகரிக்கப்படாத நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி ஆகியவற்றில் தாதுச்சத்துகள் இருக்கும். சுத்திகரிக்கப்படுவதால் வெள்ளைச் சர்க்கரையில் தாதுச்சத்துகள் இருக்காது. நம் உடலுக்கு ஒரு நாள் தேவைக்கான தாதுச்சத்துகளை நாம் டீ, காபியில் சேர்த்துக்கொள்ளும் ஓரிரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையோ அல்லது பனங்கருப்பட்டியோ கொடுத்துவிடுமா என்றால் நிச்சயமாகக் கிடையாது. ஒரு வாழைப்பழம் நமக்குக் கொடுக்கும் பொட்டாசியம் அளவை நாம் நாட்டுச் சர்க்கரை வழி எடுத்துக்கொள்ள வேண்டுமானால் ஒன்றரைக் கிலோ நாட்டுச் சர்க்கரை சாப்பிடவேண்டும். ஒரு கப் கீரையில் நமக்குக் கிடைக்கும் இரும்புச்சத்தின் அளவு ஒன்றே முக்கால் கிலோ நாட்டுச் சர்க்கரை சாப்பிட்டால்தான் கிடைக்கும். ஒரு கப் பாலில் இருக்கும் கால்சியம், இரண்டரைக் கிலோ நாட்டுச் சர்க்கரையில்தான் கிடைக்கும். நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டியில் தாதுச் சத்துகள் இருக்கின்றன. ஆனால் மிகக்குறைந்த அளவே இருக்கின்றன. நாம் தினசரி ஓரிரு ஸ்பூன் பயன்படுத்துவதால் நம் உடலுக்குத் தேவையான தாதுச்சத்துகள் கிடைத்துவிடாது. உணவுகளின் வழியே நமக்கு அதைவிட நிறைய தாதுச்சத்துகள் கிடைக்கும்.

என்னிடம் பலரும் கேட்கும் இன்னொரு கேள்வி, ‘வெள்ளைச் சர்க்கரையை சுத்திகரிப்பு செய்யும்போது எலும்பு சேர்ப்பதாகச் சொல்கிறார்கள், சல்பர் நிறைய இருக்கிறது என்கிறார்கள். பிளீச்சிங் செய்யப்படுகிறது என்கிறார்கள். நாட்டுச் சர்க்கரையில் இதெல்லாம் இல்லை அல்லவா?'

இதில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், சுக்ரோஸ் என்கிற மூலப்பொருளின் நிறமே வெள்ளைதான். ஆனால் நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி பிரௌன் நிறத்தில் இருக்கக்காரணம் அதிலிருக்கும் மொலாசஸ் என்ற மூலப்பொருள். சர்க்கரை ஆலைகளில் மொலாசஸை சர்க்கரையிலிருந்து பிரித்து எடுப்பதற்காக centrifugation எனும் முறையைப் செயல்படுத்துவார்கள். அதாவது சர்க்கரைப் பாகை மிஷின்களில் வேகமாகச் சுழலவிடுவார்கள். இந்தச் செயல்பாட்டில் சுக்ரோஸ் மற்றும் மொலாசஸ் இரண்டும் பிரிந்துவிடும். இவ்வாறு மொலாசஸ் பிரித்தெடுக்கப்பட்டாலும் ‘Oxidation' நடந்து அந்தச் சர்க்கரை மீண்டும் பிரௌன் நிறமாக மாறுவதற்கு சிறிய வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு நிகழாமல் இருப்பதற்காகவும் மேலும் சுத்திகரிப்பதற்காகவும் முன்பெல்லாம் ‘Bone char' என்று சொல்லப்படும் ஆடு மாடுகளின் எலும்புச் சாம்பல் மற்றும் அதில் இருந்து பெறக்கூடிய கார்பன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெண்மை நிறத்தைக் கொண்டு வந்தார்கள். இன்னும் சிலநாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் ‘Sulphitation' என்ற முறையிலும், சில இடங்களில் ‘Ion exchange' அல்லது ‘Carbonitation' என்ற செயல்களின்வழியும் சுத்திகரிக்கிறார்கள். ‘Sulphitation' முறையில் சல்பர் டை ஆக்சைடு வாயுவை சர்க்கரைப் பாகில் செலுத்துவார்கள். அது சில ரசாயன மாற்றங்களை நிகழ்த்தி சர்க்கரையின் வெள்ளை நிறத்தை நிரந்தரமாக்கும். பின்னர் அந்த சல்பர் கழிவுகள் நீக்கப்படும். இருந்தாலும் 70 ppm என்ற அளவில் சல்பர் சர்க்கரையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாகவே வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாடு சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆலைகளில் தயாரிக்கப்படும் சர்க்கரையில் நிர்ணயிக்கப்பட்ட 70 ppm என்ற அளவில் சல்பர் இருந்தால் மட்டுமே அதை விற்பனைக்கு அரசு அனுமதிக்கிறது. இது சாதாரணமாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் இருக்கக்கூடிய அளவுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இது உடல்நலத்தை பாதிக்கும் என்பதற்கு எந்தவித திடமான ஆராய்ச்சி ஆதாரங்களும் இல்லை.

இருப்பினும் மக்களுக்கு இதன் மீதான பயம் தொடர்வதனால் லேட்டஸ்டாக ‘Ion exchange' அல்லது ‘Carbonitation' போன்ற முறைகளைப் பயன்படுத்தி சல்பரின் பயன்பாடே இல்லாமல் சர்க்கரை உற்பத்தியைச் செய்கிறார்கள். இதில் ஆடு மாடுகளின் எலும்பைப் பற்றிய பயமோ அல்லது சல்பர் குறித்த பயமோ கிடையாது.

‘‘செயற்கைச் சர்க்கரை என்று சொல்கிறார்களே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன டாக்டர்?'' என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. Aspartame, Sucralose, Saccharin, Acesulfame... மேலும் இயற்கையான சில மூலிகைகளில் இருந்து தயாரிக்கக்கூடிய இனிப்புத் தன்மை வாய்ந்த பொருள்களான Stevia, Sorbitol, Xylitol, Lactitol முதலியவை இந்தவகையில் சேரும். இவற்றில் சுக்ரோஸ் இருக்காது. அதேபோல எந்தவிதமான கலோரிகளையும் இவை அளிக்காது. ஆனால், நம் நாக்கில் செயற்கையாக இனிப்புச் சுவையை மட்டும் தூண்டிடும். அடிப்படையில் இவற்றில் மாவுச்சத்து, சுக்ரோஸ் ஆகியவை இல்லையென்றாலும் இனிப்புத்தன்மையைத் தூண்டுவதாலேயே நம் மூளையில் உள்ள சில பகுதிகளை பாதித்து இன்சுலின் சுரப்பை அதிகரித்து இன்சுலின் எதிர்ப்புத் தன்மையையும் அதிகரித்துவிடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவற்றை அதிகம் உட்கொண்டாலும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதுமட்டுமல்லாமல் நம் குடலில் உள்ள Probiotic Bacteria என்று சொல்லக்கூடிய நல்ல பாக்டீரியாக்களிலும் இந்தச் செயற்கைச் சர்க்கரை நிறைய மாற்றங்களை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 11

மேலும், நம் நாக்கில் இனிப்புத்தன்மையை உணரக்கூடிய Receptors, இந்தச் செயற்கைச் சர்க்கரையை எடுத்துக்கொள்வதால் மாற்றங்களுக்கு உள்ளாகி, குழம்பிப்போகிறது என்ற ரீதியிலும் ஆராய்ச்சி முடிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, செயற்கைச் சர்க்கரையால் செய்யப்பட்ட ஸ்வீட்கள் ‘சுகர் ஃப்ரீ’ என்ற பெயரில் விற்கப்படுகின்றன. மைதா போன்ற ஏதோ ஒரு மாவால் செய்யப்பட்டு, அதில் இந்தச் செயற்கைச் சர்க்கரையைச் சேர்த்தால் மட்டுமே அது ‘சுகர் ஃப்ரீ’ ஆகிவிடாது. ஏற்கெனவே சொன்னதுபோல அந்த ஸ்வீட்டைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மாவில் ஏகப்பட்ட குளுக்கோஸ் சர்க்கரை இருக்கும். எனவே சுகர் ஃப்ரீ பிஸ்கட், டயாபெடிக் பிஸ்கட் அனைத்தும் வெறும் பம்மாத்து வேலைதான். சர்க்கரை நோயாளிகள், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இதுபோன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

‘Coconut sugar’ போன்ற கரும்பு இல்லாமல் வேறு தாவரங்களிலிருந்து கிடைக்கும் சர்க்கரையைப் பயன்படுத்துவது லேட்டஸ்ட் ட்ரெண்டாக உள்ளது. கரும்பு, சுகர் பீட் கிழங்கு, தேங்காய் என எதிலிருந்து எடுத்தாலும் சர்க்கரை சர்க்கரைதான். அளவோடுதான் பயன்படுத்த வேண்டும்.

அப்படி என்றால், ‘‘எல்லாம் ஒன்றுதான், வெள்ளைச் சர்க்கரையையே பயன்படுத்தலாம்'' என்று சொல்ல வருகிறீர்களா என்று கேட்டால், நான் அப்படிச் சொல்லவில்லை. எந்தச் சர்க்கரையானாலும் சரி, குறைந்த அளவிலேயே பயன்படுத்துங்கள். உடல் பருமன் இருப்பவர்களோ, சர்க்கரை நோயாளிகளோ சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கமுயலுங்கள். குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை நேரடியாக சர்க்கரையைக் கொடுக்க வேண்டாம் என்றே அறிவுறுத்துகிறோம். மற்றபடி ஆரோக்கியமாக இருப்பவர்கள் எந்தச் சர்க்கரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டியைப் பயன் படுத்த நினைத்தால் நல்லது. நம் விவசாயிகளுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் செயல் அது.

நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி என்பதாலேயே அதை அதிக அளவில் உணவில் சேர்த்து சாப்பிட்டாலோ, அதில் நிறைய இனிப்புப் பலகாரங்கள் செய்து சாப்பிட்டாலோ உடல் பருமன் தொடங்கி மற்ற ஹார்மோன் பிரச்னைகள் வரை அனைத்தும் வந்துசேரும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சர்க்கரை மாதிரியான பொருள்களுக்கு நன்றாகவே பொருந்தும். சர்க்கரை சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட ஒரு போதைப்பொருள் சாப்பிடுவது போல அடிக்‌ஷன் என்கிறார்கள். அதிலிருந்து முற்றிலும் வெளியே வந்தால் அது இன்னும் அருமையான விஷயம்.

- பரிமாறுவோம்

****

விகடன் வாசகர்கள் கேட்டுள்ள சில கேள்விகளுக்கு என் பதில்!

பழைய சோறு பற்றி நீங்கள் ஒன்றும் கூறவில்லையே? சோற்றில் தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கலாமா? வெளியில் வைத்து சாப்பிடுவது நல்லதா? - ராம்குமார்

பழைய சோற்றை தாராளமாக சாப்பிடலாம். பழைய சோற்றின் பயனே அது ஃபெர்மென்ட் (Ferment) ஆவதுதான். அப்படி ஆகும்பொழுது உடலுக்கு உகந்த நல்ல பாக்டீரியாக்கள் அதில் உருவாகும். நமது ஜீரண மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். நீங்கள் பழைய சோற்றை ஃப்ரிட்ஜில் வைத்தால் ஃபெர்மென்டேஷன் தடைபடும். முழுப் பயன் கொடுக்காது.

மாப்பிள்ளைச் சம்பா அரிசி சாப்பிட்டால் நரம்பு வலுப்பெறும் என்று சொல்கிறார்கள். அதை 7-8 மணி நேரம் ஊறவைத்துச் சமைக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். உண்மையா? - எழிலன்

மாப்பிள்ளைச் சம்பா அரிசி மட்டுமல்ல, உமியோடு உட்கொள்ளும் எந்த முழுத் தானியமும், Thiamine எனப்படும் நரம்புக்கு உகந்த முக்கியமான வைட்டமினை அதிக அளவு தரும். Neuropathy எனப்படும் நரம்புப் பிரச்னைகளை அது குறைக்கும். இந்த விஷயத்தில், மாப்பிள்ளைச் சம்பா, கறுப்பு கவுனி, பிரவுன் ரைஸ் போன்ற அனைத்து உமி நீக்காத அரிசி வகைகளும் ஒரே அளவு நல்ல Thiamine வைட்டமினைக் கொடுத்து நரம்புப் பிரச்னைகள் வராமல் தடுக்கும். மற்றபடி நீண்டநேரம் ஊற வைப்பது ஜீரணத் தன்மையை அதிகரிக்கும். சமைப்பதை எளிதாக்கும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 11

டாக்டரிடம் கேளுங்கள்!

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.