மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 12

பழங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பழங்கள்

ஃப்ரக்டோஸ் சர்க்கரையை உடலின் எந்த ஒரு பகுதிக்கும் ரத்தத்தின் வழியாகச் செலுத்தினால் அதனால் எரிசக்தியாக மாறமுடியாது.

சர்க்கரை பற்றி நிறைய விஷயங்கள் அலசினோம். இந்த வாரம் நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் பழங்களைப் பற்றிப் பேசுவோம். பழங்கள் என்றாலே நமக்கு அதன் இனிப்புத்தன்மைதான் நினைவுக்கு வரும். பழங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அதேநேரத்தில் அது தொடர்பாக நிறைய கேள்விகள் நம்மிடம் இருக்கின்றன. பழங்களை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமா? நாம் நினைக்கும் அளவுக்கு அதில் சத்துகள் இருக்கின்றனவா? சர்க்கரை நோயாளிகள் பழங்களைச் சாப்பிடலாமா? இவையெல்லாம்விட முக்கியமான இன்னொரு விஷயம், பழங்களை மட்டுமே உணவாகச் சாப்பிடும் `Fruitarian' டயட்டை சிலர் பின்பற்றுகிறார்கள். அந்த அளவுக்கு உடலுக்குத் தேவையான சத்துகள் பழங்களில் உண்டா? பழங்களை மட்டுமே சாப்பிட்டு சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம் என்பது போன்ற பிரசாரங்கள் எல்லாம் உண்மைதானா? எல்லாக் கேள்விகளுக்கும் விடை தேடுவோம்.

நம்மூரில் விளையும் பழங்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். தாவரவியல்ரீதியாகப் பார்த்தால் ஒரு செடியின் பூ, அதன் விதைகளை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி இனப்பெருக்கம் செய்வதற்காக உருவாக்கக் கூடியவைதான் பழங்கள். உண்மையில் நாம் காய்கறிகள் என்று நம்பக்கூடிய சில, அறிவியல் ரீதியாகப் பழங்கள்தான். உதாரணத்திற்கு வெள்ளரிக்காய், பூசணிக்காய், பீன்ஸ், நிலக்கடலை, பட்டாணி வகைகள், சோளம், கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், முந்திரி, பாதாம்... ஏன், கோதுமைகூடப் பழம்தான். இனிப்பாக இருந்தால்தான் பழங்கள் என்றில்லை. இது முதல் விஷயம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 12

பழங்களில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன? நாம் அதிகம் பயன்படுத்தும் அரிசி, கோதுமை, தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் சர்க்கரையில் பெரும்பாலும் கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து தான் இருக்கிறது. இவற்றில் மாவுச்சத்து ஸ்டார்ச் (Starch) அல்லது செல்லுலோஸ் (Cellulose) வடிவங்களில் இருக்கும். காய்கறிகளைப் பொறுத்தவரை செல்லுலோஸ் எனப்படும் ஜீரணம் செய்யமுடியாத வகை மாவுச்சத்தே இருக்கும். இவை ஜீரணமாகி எரிசக்தியாக மாறி நம் உடலுக்கு குளுக்கோஸைத் தர இயலாது. ஆனாலும் பழங்கள் இனிப்புத் தன்மையுடன் இருப்பது ஏன் என்று பார்த்தால், ஒரு காய் பழமாக மாறும்போது அதில் இருக்கக்கூடிய மற்ற வகை மாவுச்சத்துகள் சில முக்கியமான சர்க்கரைகளாக மாறுகின்றன. அவற்றில் முக்கியமானது `ஃப்ரக்டோஸ்' என்னும் சர்க்கரை. இதுவே பழங்களுக்கு இனிப்புத்தன்மையைக் கொடுக்கிறது. ஆனால் பழங்களில் `ஃப்ரக்டோஸ்' எனும் சர்க்கரைதான் முழுமையாக இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். பெரும்பாலான பழங்களில் ஃப்ரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் இரண்டும் சேர்ந்த கலவையான சுக்ரோஸ் ஆகிய மூன்றும் இருக்கின்றன. இந்த மூன்று சர்க்கரைகளும் ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விகிதத்தில் இருக்கும். அதிலும் ஆப்பிள், பேரிக்காய் ஆகிய ஒன்றிரண்டு பழங்களில்தான் ஃப்ரக்டோஸ் சர்க்கரை மற்றவற்றைவிட மிக அதிகமாக இருக்கும். வாழைப்பழத்தில் பாதிக்கும் மேல் குளுக்கோஸ் சர்க்கரைதான்; ஃப்ரக்டோஸ் மிகவும் குறைவாகவே உள்ளது. அன்னாசி, மாதுளை, ஆரஞ்சு, திராட்சை முதலியவற்றில் பாதிக்கும்மேல் சுக்ரோஸ் அல்லது குளுக்கோஸ்தான் இருக்கும். 75% சுக்ரோஸ் சர்க்கரையைக் கொண்டுள்ளது நாம் சாப்பிடும் மாம்பழம். அதேபோல, 70 சதவிகிதத்துக்கு மேல் ஃப்ரக்டோஸ் சர்க்கரை இருக்கும் பழம் எதுவுமே கிடையாது. இதுதான் உண்மை.

``சரி டாக்டர்... ஏதேதோ ரசாயனப் பெயர்களைச் சொல்கிறீர்கள். ஆனால் எல்லாமே சர்க்கரைதானே'' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதில் ஒரு உள்குத்து இருக்கிறது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 12

குளுக்கோஸ் என்னும் சர்க்கரை நம் உடலுக்கு சக்தியைக் கொடுக்கும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறேன். இந்த குளுக்கோஸைவிட இனிப்புத்தன்மை அதிகம் உள்ள ஃப்ரக்டோஸைப் பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன். இந்த ஃப்ரக்டோஸ் சர்க்கரையை உடலின் எந்த ஒரு பகுதிக்கும் ரத்தத்தின் வழியாகச் செலுத்தினால் அதனால் எரிசக்தியாக மாறமுடியாது. ஏனென்றால் அந்தச் சர்க்கரையை பிராசஸ் செய்யக்கூடிய என்சைம்கள் உடலில் ஒரே ஒரு பகுதியில் மட்டும்தான் இருக்கின்றன. அதுதான் கல்லீரல். எனவே நாம் எவ்வளவு ஃப்ரக்டோஸ் சர்க்கரையைச் சாப்பிட்டாலும் அது கல்லீரலில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு, பின்னரே எரிசக்தியாக மாறுகிறது. இது நிறைய பேருக்குத் தெரியாத முக்கியமான விஷயம்.

சரி, இதற்கும் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழும். ஃப்ரக்டோஸ் சர்க்கரைக்கு இப்படி ஒரு தன்மை இருப்பதால், அதை எவ்வளவு எடுத்துக்கொண்டாலும் அதை பிராசஸ் செய்வது கல்லீரல்தான். ஃப்ரக்டோஸைப் போல கல்லீரலால் மட்டுமே பிராசஸ் செய்யக்கூடிய இன்னொரு பொருளும் இருக்கிறது, அதுதான் ‘ஆல்கஹால்.’ எனவே நாம் அளவுக்கு அதிகமாக ஃப்ரக்டோஸை எடுத்துக்கொண்டாலும் ஆல்கஹாலை உட்கொண்டாலும் நம் கல்லீரலுக்குத்தான் வேலைப்பளு அதிகரிக்கும். ஃப்ரக்டோஸை மிதமான அளவில் உட்கொண்டால் நம் கல்லீரல் மெதுவாக வேலை செய்து குளுக்கோஸாக மாற்றி நம் உடலுக்கு எரிசக்தியைக் கொடுக்கும். அளவுக்கு அதிகமாக இரண்டையும் எடுத்துக் கொண்டால் அவற்றைக் கல்லீரலால் உடனடியாக பிராசஸ் செய்ய இயலாது. இதனால் மீதமிருக்கும் ஃப்ரக்டோஸ் சர்க்கரை கொழுப்பாக மாறி கல்லீரலிலேயே படியத் தொடங்கிவிடும். இதைத்தான் நாம் `Fatty Liver' என்று அழைக்கிறோம். இப்பிரச்னை தற்போது பெரிய அளவில் உருவெடுத்துவருகிறது. இதற்குக் காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் அதிக அளவிலான சர்க்கரை. அதாவது சர்க்கரை என்றால் வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை மட்டும் கிடையாது... பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதும் இந்த `Fatty liver' ஏற்படக் காரணமாக இருக்கும். இதன் காரணமாகத்தான் பழங்களாகவே இருந்தாலும் அளவோடு சாப்பிடவேண்டும் என்கிறோம். முன்பு மதுப் பழக்கத்தினால் அதிகமாகிக்கொண்டிருந்த இந்தக் கல்லீரல் கொழுப்புப் பிரச்னை தற்பொழுது அதிகமாக முதல் காரணம் - அளவுக்கு அதிகமான சர்க்கரைச்சத்தும் மாவுச்சத்தும்தான்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 12

வெளிநாட்டுக் குளிர்பானங்களில் High Fructose corn syrup என்று சொல்லக்கூடிய அதிக ஃப்ரக்டோஸ் இருக்கக்கூடிய செயற்கைச் சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை மோசமான ஒன்றாக நாம் கருதுகிறோம். ஆனால் பழங்கள் மற்றும் பழ ஜூஸ்களை அதிகம் எடுத்துக்கொண்டாலும் Fatty Liver ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுமட்டுமல்லாமல் உடலில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை மோசமடையச் செய்து சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு நோயை ஏற்படுத்தும், இருப்பவர்களுக்கு அதை மேலும் தீவிரமாக்கும்.

``அது சரி சார், பழங்களை மட்டுமே சாப்பிடுங்கள்... சர்க்கரை நோயை நன்கு கட்டுப்படுத்தலாம் என்று ஒரு வீடியோ வைரலானதே'' என்று நீங்கள் கேட்டால், அதில் பாதி உண்மை, பாதி பொய் என்று சொல்வேன். நான் சொன்னதுபோல பழங்களில் சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ் சர்க்கரைகள் அதிக அளவில் இருப்பதால் அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக ஏற்றாது. சாப்பாடு, சப்பாத்தி சர்க்கரையை ஏற்றும் வேகத்துக்கு இவை ஏற்றாது. ஏனென்றால் ஃப்ரக்டோஸ் சர்க்கரை, கல்லீரலுக்குப் போய் குளுக்கோஸாக மாற குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதனால்தான் பழங்களைச் சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு உடனடியாக ஏறாதவாறு ஒரு மாயத்தோற்றம் இருக்கும். இதுதான் மக்கள் ஏமாறும் இடம். பழங்களை அதிக அளவு எடுத்துக்கொள்ளும்போது Fatty Liver, இன்சுலின் எதிர்ப்புத் தன்மை ஆகியவை ஏற்பட்டு நாளடைவில் நோயின் தன்மை தீவிரமாகும். எனவே சர்க்கரை அளவு மெதுவாக உயர்வது உண்மையென்றாலும் அளவுக்கதிமாகச் சாப்பிடும்போது நோயின் தன்மை மோசமாகும் என்பதே அதிர்ச்சியூட்டும் உண்மை.

அதனால்தான் பழங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளக்கூடிய ஃப்ரூட்டேரியன் டயட்டில் பலவிதமான கணையப் பிரச்னைகள் வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ், ஃப்ரூட்டேரியன் டயட்டில் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஏன் மகாத்மா காந்தியும் சில ஆண்டுகள் பழங்களை மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுமுறையில் இருந்ததாகவும் படித்துள்ளேன். அவருக்கு நிறைய உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைகளின்படி அந்த உணவுமுறையிலிருந்து வெளியேறியதாகவும் செய்திகள் இருக்கின்றன.

அப்படியானால் சர்க்கரை நோயாளிகள் பழங்களே சாப்பிடக்கூடாதா? இதை அப்படிப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி, சிறுதானியங்கள் போன்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில் பழங்களில் இருக்கும் மாவுச்சத்தின் அளவு குறைவுதான். ஒரு குறிப்பிட்ட அளவிலான கலோரி நம் அன்றாட உணவின் வழி எளிதாகக் கிடைத்துவிடும். ஆனால், பழங்கள் அவ்வளவு கலோரிகளைத் தராது. உதாரணமாக, நாம் காலை உணவாகச் சாப்பிடும் நான்கு அல்லது ஐந்து இட்லி மற்றும் சாம்பார், சட்னி சுமார் 800 கலோரிகளைக் கொடுத்துவிடும். பழங்களிலேயே அதிக இனிப்பானது என்று சொல்லப்படும் மாம்பழத்தை ஒன்றரைக் கிலோ சாப்பிட்டால்தான் இவ்வளவு கலோரிகள் சேரும். எனவே ஒருவகையில் இட்லி, தோசை போன்ற நமது அன்றாட உணவுகளுடன் ஒப்பிடுகையில் பழங்கள் நல்லதே. ஆனால், `எவ்வளவு பழங்கள் சாப்பிட்டாலும் நன்மையே என்கிற கூற்று தவறு' என்பதே நான் சொல்வது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 12

சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றை முழுப்பழமாக எடுத்துக்கொள்வதே நல்லது. ஏனெனில் பழங்கள் உண்பதால் கிடைக்கும் நன்மைகளுக்குக் காரணமே, அவற்றில் சர்க்கரையுடன் சேர்ந்திருக்கும் நார்ச்சத்துதான். இந்த நார்ச்சத்து, நாம் பழங்களை அரைத்து வடிகட்டி ஜூஸ் போட்டுக் குடிக்கும்போது இல்லாமல் போய்விடுகிறது. பழங்களை ஜூஸாகக் குடிப்பதும் குளிர் பானங்களைக் குடிப்பதும் ஒன்றுதான். எனவே முழுப்பழமாக ஒன்று அல்லது இரண்டு எடுத்துக்கொள்வது நன்மையே. அளவிற்கு மேல் பழங்கள் சாப்பிடுவது நல்லதல்ல. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் இருப்பவர்கள், கல்லீரலில் கொழுப்பு படிந்தவர்கள் இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

``எல்லாம் சரி டாக்டர், பொதுவாக பழங்களில் நிறைய சத்துகள் இருக்கின்றன, ஆயுள் நீடிக்கும், உடலில் இருக்கும் நச்சுப்பொருள்களை நீக்கும், ரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்றெல்லாம் சொல்கிறார்களே, இது எந்த அளவுக்கு உண்மை?'' என்று நீங்கள் கேட்கலாம்.

பழங்களில் வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் ஆகியவை எந்த அளவில் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டால் உங்களுக்கு உண்மை புரிந்துவிடும். உதாரணத்திற்கு ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டால் அது மூலமாக ‘வைட்டமின் சி’ கிடைக்கும் என்பது நமக்குத் தெரியும். 500 மில்லி கிராம் ‘வைட்டமின் சி’ கிடைக்கவேண்டுமென்றால் நாம் ஒன்றேகால் கிலோ ஆரஞ்சு சாப்பிடவேண்டும். ஆனால், அதே அளவு ‘வைட்டமின் சி’ மூன்றே நெல்லிக்காயில் அல்லது 100 கிராம் இலந்தை வடையில் கிடைத்துவிடும். எனவே தினசரி ஒரு ஆரஞ்சு சாப்பிட்டுவிட்டு எனக்குத் தேவையான ‘வைட்டமின் சி’ கிடைத்துவிட்டது என்று நம்புவது தவறு. பப்பாளி, மாம்பழம் போன்ற நிறமான பழங்களில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நம் உடலுக்கு ஒரு நாள் தேவைக்கான வைட்டமின் ஏ கிடைக்கவேண்டும் என்றால் இரண்டு கிலோ பப்பாளியோ அல்லது ஒன்றரைக் கிலோ மாம்பழமோ சாப்பிடவேண்டும். ஆனால் அதே அளவு வைட்டமின் ஏ, இரண்டே கேரட்களில் அல்லது அசைவம் சாப்பிடுபவர்களுக்கு இரண்டு துண்டு ஈரலில் கிடைத்துவிடும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 12

இதேபோலதான் மற்ற சத்துகளும்! இரும்புச்சத்து என்றால் எல்லோரும் பேரீச்சை மற்றும் உலர்திராட்சையைக் கைகாட்டுவோம். ஆனால், ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்க இரண்டு கிலோ பேரீச்சை அல்லது ஒரு கிலோ உலர் திராட்சை சாப்பிடவேண்டும். ஆனால் 300 கிராம் கீரை அல்லது ஒரு கப் முளைக்கட்டிய பச்சைப்பயிறு மாதிரியான தானியங்கள் சாப்பிட்டாலோ, 50 முதல் 100 கிராம் ஈரல் சாப்பிட்டாலோ அதே அளவு இரும்புச்சத்து எளிதாகக் கிடைத்துவிடும். தினமும் இரண்டு மூன்று உலர்பழங்களைச் சாப்பிட்டுவிட்டு எனக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கவில்லை என்று வருந்துவோருக்கு இப்போது அதற்கான காரணம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ரத்த சுத்திகரிப்பு போன்ற செயல்பாடுகளுக்கு உதவும் Anti-oxidants மாதுளை, ஸ்ட்ராபெரி, கிவி போன்ற ஃபேன்ஸியான பழங்களில் நிறைய இருப்பதாகச் சொல்வார்கள். ஒருநாளின் தேவைக்கான அடிப்படை அளவு Anti-oxidants கிடைக்கவேண்டும் என்றால் அரைக் கிலோ மாதுளையோ அல்லது ஒரு லிட்டர் மாதுளை ஜூஸோ குடிக்கவேண்டும். ஆனால் ஒரு கிலோ மாதுளையில் இருக்கக்கூடிய Anti-oxidants 10 கிராம் புதினா இலைகளில், ஒரு நெல்லிக்காயில், ஒரு ஸ்பூன் லவங்கத்தில், 50 கிராம் இஞ்சியில் மிக எளிதாகக் கிடைத்துவிடும்.

பழங்களில் சத்துகள் இருக்கின்றன. ஆனால் நம் உடலுக்குத் தேவையான அளவு சத்துகளை நாம் பழங்களில் இருந்து எடுக்கவேண்டும் என்றால் நாம் மிக அதிக அளவில் பழங்களைச் சாப்பிடவேண்டும். இப்படி அதிக அளவில் பழங்கள் சாப்பிடும்போது அதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் பிற சத்துகளைத் தாண்டி இயற்கையான சர்க்கரை தன் வேலையைக் காட்டத் தொடங்கி உடலின் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை அதிகமாகிவிடும். எனவே, ``பழங்கள் மூலமாக பிற தாதுச்சத்துகள் கிடைக்கும். அதற்காகவே நான் பழங்கள் சாப்பிடுகிறேன்'' என்கிற வாதம் அறிவியலுக்கு எதிரானது. பழங்கள் நல்ல ஆரோக்கியமான உணவுதான் என்றாலும் அதற்கும் அளவு இருக்கிறது. வைட்டமின்கள், தாதுச்சத்துகள், நார்ச்சத்து என எதுவாக இருந்தாலும் பழங்களில் வரையறுக்கப்பட்ட அளவில்தான் இருக்கிறது. அளவுக்கதிமாகச் சாப்பிடும்போது பயன்களைவிட சர்க்கரையால் ஏற்படும் பிரச்னைகளே அதிகம்.

என் பரிந்துரை என்னவென்றால், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் ஒரு நாளுக்கு 200 கிராம் முதல் 250 கிராம் வரை பழங்கள் சாப்பிடலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் பெரும்பாலும் பழங்களைத் தவிர்க்கலாம். அல்லது அதிகபட்சம் 100 கிராம் சாப்பிடலாம். 100 கிராம் என்பது பாதுகாப்பான அளவு.

250 கிராமுக்கு மேல் பழங்களைச் சாப்பிடவேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது. பழங்களில் இருக்கும் அனைத்து சத்துகளும் மிக எளிதாக மிக மலிவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் மற்ற உணவுப் பொருள்களிலேயே கிடைக்கின்றன. இந்த அறிவியலை நாம் புரிந்துகொண்டால் விலையுயர்ந்த பழங்களை கஷ்டப்பட்டு வாங்கிச் சாப்பிடவேண்டிய அவசியம் இல்லை. அளவோடு பழங்களை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும். அளவில்லாமல் பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு நிச்சயம் கெடுதலை உண்டாக்கும் என்ற உண்மையை நாம் புரிந்துக்கொண்டால் நம் உணவுத்தட்டு ஆரோக்கியமாக இருக்கும்.

- பரிமாறுவோம்

****

கோதுமை பற்றி விரிவாக எழுதியிருந்தீர்கள்... பிரெட்டில் கோதுமை பிரெட் நல்லதா, மில்க் பிரெட் நல்லதா? - யூசுப் ஜாகிர்

கோதுமையை மாவாக அரைத்துவிட்டாலே அதன் கிளைசெமிக் இன்டெக்ஸ், 54-லிருந்து 68-ஆக (அதாவது அரிசிக்கு நிகராக) மாறிவிடும் என்று கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு பிரட் வகைகளிலும் இனிப்பு சேர்ப்பார்கள். எனவே கோதுமை பிரட் அல்லது மைதாவில் செய்த சர்க்கரை சேர்த்த இனிப்பான மில்க் பிரட் இரண்டுமே அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ராகியில் களி செய்து சாப்பிடலாம் என்கிறீர்கள். அதை அரைத்துத்தானே செய்யவேண்டும். பிராசஸ் செய்யாமல் களி எப்படிச் செய்வது? - பாபநாசம் நடராஜன்

ராகியை உமி நீக்காமல் அப்படியே மில்லில் கொடுத்து அரைத்துப் பயன்படுத்த வேண்டும். நீங்களே அரைத்து, சலித்து, உமியை நீக்கினால்தான் அதனுடைய சத்துக்கள் மாறுபடும். அப்படியே அரைத்து எந்த உணவுக்குப் பயன்படுத்தினாலும் அது நல்லுணவுதான்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 12

டாக்டரிடம் கேளுங்கள்!

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.