
`உடற்பயிற்சி செய்பவர்கள் தசை வளர்ப்பதற்கும், உடல்நலமில்லாமல் போனவர்கள் நலம் பெறுவதற்குமே புரதம் அவசியம்' என்பது நம் மக்களிடையே இருக்கும் தவறான எண்ணம்.
உணவுகளில் உள்ள மாவுச்சத்து குறித்தும், அது நம் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும், கடந்த சில வாரங்களாக விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் உடலுக்குத் தேவையான இன்னொரு சத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். புரோட்டீன் என்கிற புரதச்சத்து.
இந்தப் புரதச்சத்து நம் உடலுக்கு எவ்வளவு தேவை என்பது பற்றி நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் `குழந்தைகளும் கர்ப்பிணிகளும் புரதச்சத்துகளை நிறைய எடுத்துக்கொள்ளவேண்டும்' என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ``ஐயோ, புரோட்டீன் எடுத்துக்கொள்கிறீர்களா? நிறைய சாப்பிட்டால் கிட்னி சட்னி ஆகிடுமே” என்று சொல்கிறார்கள். எனவே, புரதம் என்றால் என்ன? உடலுக்கு அது எவ்வளவு தேவை? அது எங்கெல்லாம் பயன்படுகிறது? எந்தெந்த உணவுகள் வழியாக அது கிடைக்கும்? அசைவர்களுக்கு மட்டும்தான் புரதம் கிடைக்குமா, சைவ உணவுகளில் கிடைக்காதா? இதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
ஆரம்பத்திலேயே நாம் மூன்று மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் பற்றிப் பேசினோம். கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்பு. தான் எரிந்து உடலுக்கு சத்துகளைக் கொடுக்கக்கூடியவைதான் இந்த மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ். பொதுவான உணவுகளில் மாவுச்சத்துக்கு அடுத்தபடியாக நம் உடலுக்கு அதிக எரிசக்தியைக் கொடுப்பவை இந்தப் புரதச்சத்துகள்தான். ஆனால், மாவுச்சத்துக்கு இல்லாத தனித்தன்மை புரதத்துக்கு உண்டு. மாவுச்சத்தின் ஒரே வேலை குளுக்கோஸாக மாறி உடலின் அனைத்து செல்களுக்கும் எரிசக்தியைத் தருவது. புரதங்கள் அப்படிக் கிடையாது.

`உடற்பயிற்சி செய்பவர்கள் தசை வளர்ப்பதற்கும், உடல்நலமில்லாமல் போனவர்கள் நலம் பெறுவதற்குமே புரதம் அவசியம்' என்பது நம் மக்களிடையே இருக்கும் தவறான எண்ணம். சுமார் 60 கிலோ எடையுள்ள ஒரு ஆணின் உடலில் தண்ணீர் போக மற்றவற்றின் எடை 26 கிலோ இருக்கும். அதில் புரதம் மட்டுமே 10 கிலோ இருக்கும். தண்ணீர் போக மீதமிருக்கும் 26 கிலோவில் 10 கிலோ என்பது மிகப்பெரிய அளவுதான். மொத்த எடையில் சுமார் 15% இந்தப் புரதம்தான். புரதம்தான் நம் உடம்பில் எல்லாமே. தசைகளில் இருக்கக்கூடியவை வெறும் ‘Structural’ புரதம்தான். மற்றபடி நம் உடலின் செல்களில் இருக்கக்கூடிய செல் ஜவ்வுகள், உடலில் நடக்கக்கூடிய கோடானுகோடி உயிர் வேதியியல் ரியாக்ஷன்கள் ஒவ்வொன்றிற்கும் உதவக்கூடிய என்சைம்கள் அனைத்துமே புரதங்களால் ஆனவை. இது தவிர ‘Immunoglobulin’ என்று சொல்லக்கூடிய நோய் எதிர்ப்புச் சக்தியும் புரதம்தான். மேலும், இன்சுலின் போன்ற பெரும்பாலான ஹார்மோன்களும் புரதம்தான். எனவே தசைகளில் மட்டுமல்லாமல் உடலின் அனைத்து வேலைகளிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன இந்தப் புரதங்கள்.
மேக்ரோ நியூட்ரியன்ட்ஸான இந்தப் புரதங்கள், வெறும் எரிசக்தி கொடுப்பதைத் தாண்டி ‘இவை இல்லாமல் நம்மால் உயிர் வாழவே இயலாது’ என்பதுதான் உண்மை. மாவுச்சத்து இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியும். ஏனென்றால், மாவுச்சத்தை நாம் உணவுவழி எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் புரதங்களில் இருந்தும் கொழுப்பில் இருந்தும் நம் உடலுக்குத் தேவையானவற்றைத் தயார் செய்துகொள்வதற்கு நம் உடலில் வழிவகைகள் இருக்கின்றன. ஆனால் பலவகைப் புரதங்களை நம் உடலால் உற்பத்தி செய்ய இயலாது. உணவு மூலம் மட்டுமே எடுத்தாக வேண்டும்.
இரண்டாவது, புரதம் நம் தினசரித் தேவை. நம் தோலில் தொடங்கி வயிற்றில் இருக்கக்கூடிய செல்கள், நகங்கள், முடி என உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு செல்லும் தொடர்ச்சியாக உடைந்து மறுபடியும் உருவாவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இதை ‘செல் டர்ன் ஓவர்’ (cell Turnover) என்று சொல்வோம். இந்தச் செயல்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் புரதங்கள் தேவை. செல்கள் உடைகின்றன; அதனால் புரோட்டீன்கள் உடைந்து கழிவுகளாய் மாறி வெளியேறுகின்றன. மறுபடியும் கோடானுகோடி செல்கள் தினமும் உருவாகின்றன. இதற்காக நாம் புரதங்களை எடுத்துக்கொண்டே ஆகவேண்டும். எவ்வளவு புரதங்கள் தினசரி உடைந்து கழிவாக மாறுகின்றனவோ அதற்கு நிகரான புரதங்களை நாம் தினசரி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இதை ‘Nitrogen balance’ என்றும் சொல்வோம்.
சரி, `ஒரு நாளைக்கு எவ்வளவு புரதங்கள் தேவை' என்று கேட்டால், இதன் அளவு சுருக்கமாக 0.8 கிராம்/கிலோ. அதாவது ஒரு கிலோ எடைக்கு 0.8 முதல் 1 கிராம் வரை புரதம் தேவை. 60 கிலோ எடை கொண்ட ஒருவருக்கு 48 முதல் 60 கிராம் புரதம் தினசரி தேவை. அதுவும் நல்ல தரமான புரதங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். தரத்துக்கான அர்த்தம் என்ன என்பதைப் பின்னர் சொல்கிறேன். நான் கூறிய இந்த தினசரித்தேவை என்பது ஒரு சராசரி மனிதனுக்குத்தான். கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், வளரும் குழந்தைகள், பருவமடைந்திருக்கும் பிள்ளைகள், நோயிலிருந்து மீண்டு வரும் நபர்களுக்கு இந்தத் தேவை அதிகமாகிறது. இங்கு அதே 60 கிலோ எடையுள்ள ஒருவருக்கு தினசரி 90 கிராம் புரதம் தேவைப்படுகிறது. இதேபோல விளையாட்டு வீரர்கள், உடல் கட்டமைப்பு செய்பவர்கள் ஆகியோருக்கு தினசரி 120 கிராம் வரை தேவைப்படுகிறது. அதாவது 2 கிராம் / கிலோ.
நம் தினசரித்தேவையைவிடக் குறைவான அளவை எடுத்துக்கொண்டால் நம் உடல் என்ன செய்யும் தெரியுமா? ஏற்கெனவே உடலில் இருக்கக்கூடிய அந்த 10 கிலோ புரதத்திலிருந்து இந்த தினசரித்தேவைக்காக எடுத்துக் கொள்ளப்படும். தசைகளில் இருக்கக்கூடிய, எதிர்ப்பு சக்திக்குக் காரணமான புரதங்களும் இதில் சேரும். இதனால் ‘Muscle wasting’ என்று சொல்லப்படக்கூடிய தசை இழப்பு ஏற்பட்டு உடல் பலவீனமாகும். இதுதவிர நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், `Cachexia' எனப்படும் உடல் மெலிந்து போகும் ஒரு குறைபாடு ஆகியவையும் ஏற்படும். இவற்றால் உயிருக்கேகூட ஆபத்து ஏற்படலாம். எனவேதான் நாம் உயிர்வாழ்தலில் புரதங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொல்கிறோம்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த புரதத்தை எப்படி எடுத்துக்கொள்வது, எந்த உணவுகளின் மூலமாக எடுத்துக்கொள்வது என்ற குழப்பங்களும் நம்மிடையே இருக்கின்றன. `அசைவ உணவுகளே சிறந்த புரத உணவுகள், சைவ உணவுகளில் புரதங்களே இல்லை' என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கிறது. இந்த சந்தேகங்களுக்குள் போவதற்கு முன்பாக, ஒரு முக்கியமான கான்செப்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு வீட்டைக் கட்ட செங்கல்லும் சிமென்ட்டும் தேவையாய் இருப்பதுபோல இந்தப் புரதங்களின் அடிப்படைக்கூறு அமினோ அமிலங்கள் (Amino acids). பலவிதமான அமினோ அமிலங்கள் வெவ்வேறு அளவில் வெவ்வேறு காம்பினேஷனில் சேரும்போது நம் உடலில் வெவ்வேறு புரதங்கள் உருவாகின்றன. நம் உடலில் 20 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. இவைதான் உடலில் பல்லாயிரக்கணக்கான புரதங்களை உருவாக்குகின்றன. இதில் 9 அமிலங்களை ‘Essential amino acids’ என்கிறோம். காரணம், மீதமிருக்கும் 11 அமிலங்களை நம் உடல் பிற சத்துகளிலிருந்து தானே உற்பத்தி செய்துகொள்ளும். இந்த 9 Essential amino அமிலங்களை உடலால் உற்பத்தி செய்ய முடியாது. உணவிலிருந்து மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். போதிய அளவில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் சத்துக்குறைபாடு மட்டுமல்ல, இறப்புகூட நேரலாம். Histidine, Isoleucine, Leucine, Lysine, Methionine, Phenylalanine, Threonine, Tryptophan, Valine ஆகியவையே இந்த 9 Essential அமிலங்கள். இவற்றை வைத்துதான் ஒரு புரதம் நல்லதா இல்லையா என்பதை அறிய முடியும். விலங்குகளின் புரதங்கள் அனைத்தையும் நல்ல புரதங்கள் என்றே சொல்கிறோம். காரணம், அவற்றின் புரத அமைப்பு, அவற்றில் இருக்கக்கூடிய essential அமிலங்கள் நம் உடலை ஒத்தே இருக்கின்றன. 9 Essential அமினோ அமிலங்களும் அசைவ உணவுகளிலிருந்து முழுவதும் நமக்குக் கிடைத்துவிடுகின்றன. அதனால்தான், விலங்கு களிலிருந்து பெறக்கூடிய புரதங்களை நாம் ‘Complete Protein’ என்று அழைக்கிறோம். ``அப்படியென்றால் தாவரங்களில் புரதங்களே கிடையாதா டாக்டர்? சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்கள் பலவீனமாகி யிருக்க வேண்டுமே?'' என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.
தாவரங்களில் சோயா பீன்ஸ் மட்டுமே முழுப்புரதம். அதில் இந்த 9 அமிலங்களும் கிடைத்து விடும். ஆனால் சோயா, பரவலாக விரும்பிச் சாப்பிடும் உணவு கிடையாது. அப்படி யென்றால் மற்றவர்களுக்கு இந்தச் சத்து எப்படிக் கிடைக்கிறது? இங்கு நாம் இன்னொரு முக்கியமான கான்செப்டைத் தெரிந்துகொள்ள வேண்டும். பாரம்பரியமாக, நாம் தெரிந்தோ தெரியாமலோ பலவகையான சைவ உணவுகளைச் சேர்த்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அதில் ஆச்சரியப்படக்கூடிய ஓர் அறிவியல் உண்மை இருக்கிறது. சைவ உணவுகளில் புரதம் என்பது பருப்பு வகைகளில் மட்டுமே கிடைக்கிறது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். 100 கிராம் எடையுள்ள சமைக்காத, ஏதேனும் ஒரு பருப்பு அல்லது சுண்டலை எடுத்துக்கொண்டால் அதில் இருக்கக்கூடிய அதிகபட்ச புரத அளவு 18-20 கிராம்தான். பருப்பு வகைகளில் 50 சதவிகிதம் மாவுச்சத்துதான் உள்ளது. அதனால் பருப்பு வகைகளை புரோட்டீன் உணவுகள் என்று மட்டுமே கூறிவிடமுடியாது.
தானியங்களிலும் ஓரளவு புரதம் இருக்கிறது. 100 கிராம் பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் 7 கிராம் அளவுக்குப் புரதம் இருக்கிறது. கோதுமையில் 12 கிராம் வரை இருக்கிறது. ஓட்ஸில் 16 கிராம், தினை, சாமை போன்ற சிறு தானியங்களில் 10-12 கிராம் வரை புரதம் இருக்கிறது. பிரவுன் அரிசி, சிகப்பரிசி, கறுப்பு கவுனி ஆகியவற்றில் 10 கிராம் வரை புரதம் இருக்கிறது. இப்போது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புரதம் அதிகமிருக்கும் உணவுகள் என்று சொல்லப்படக்கூடிய பருப்பு வகைகளிலேயே 18 கிராம்தான் இருக்கிறது. ஆனால் பருப்பு வகைகளில் இருக்கக்கூடிய புரதத்தில் பாதி அரிசி முதலிய தானியங்களில் இருக்கிறது. நிறைய பேருக்கு தானியங்களில் புரதம் இருக்கிறது என்பதே தெரிவதில்லை.
சைவ உணவுகளில் எல்லா ‘Essential’ அமிலங்களும் இருப்பதில்லை. உதாரணத்துக்கு, தானியங்கள், சிறுதானியங்களில் எல்லா முக்கிய அமிலங்களும் இருக்கும், `லைசின்' (Lysine) என்ற ஒன்றைத் தவிர. பருப்பு வகைகளில் `Methionine' மற்றும் `Cysteine' ஆகிய இரண்டும் இருக்காது. அதனால்தான் நாம் பருப்பு வகைகளையும் தானியங்களையும் சேர்த்தே நம் பாரம்பரிய உணவு முறையில் சாப்பிடுகிறோம். நாம் சாப்பிடும் இட்லி, தோசையில் அரிசியும் உளுத்தம்பருப்பும் இருக்கின்றன. அரிசி சாதத்திற்குப் பருப்பு சாம்பார் தொட்டுக்கொள்கிறோம். வடஇந்தியாவில் சப்பாத்திகூடவே `தால்' எனப்படும் பருப்பு மசியல். யோசித்துப் பார்த்தால், வடை தொடங்கி நாம் சாப்பிடும் பல உணவுகளில் அரிசியும் பருப்பும் சேர்ந்தே இருக்கின்றன. அப்படிச் சாப்பிடுவதால் தானியத்தில் இல்லாத லைசின் அமிலம் பருப்பு மூலமும், பருப்பில் இல்லாத இரண்டு அமினோ அமிலங்கள் தானியங்கள் மூலமாகவும் நமக்குக் கிடைத்துவிடுகின்றன. எனக்குப் பருப்பு சாம்பார் பிடிக்காது என்று தோசைக்குத் தக்காளி சாஸ் தொட்டுச் சாப்பிட்டால் இந்தச் சமநிலை போய்விடும். எளிமையாகச் சொன்னால், நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசி சாதம், பருப்பு சாம்பார், இட்லி, தோசை மூலமாகவே நமக்கு வேண்டிய புரதங்கள் கிடைத்துவிடும். எப்படி ஒவ்வொரு உணவு காம்பினேஷனும் நமது முன்னோர்கள் ஓர் அர்த்தத்தோடு வைத்திருக்கிறார்கள் பாருங்கள்!

சரி, கூடுதல் புரதம் வேண்டும் என்று சிலர் புரோட்டீன் பவுடரையெல்லாம் எடுத்துக்கொள்கிறார்களே... அது தேவையா?
நான் சொன்னதுபோல், 60 கிலோ எடையுள்ள நபர் 48-50 கிராம் வரை புரோட்டீனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை எப்படி எடுத்துக்கொள்வது என்று பார்ப்போம். அசைவம் சாப்பிடுபவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். அதிலேயே 12 கிராம் வரை நல்ல புரதங்கள் கிடைத்துவிடும். அடுத்ததாக அன்றாடம் சாப்பிடும் பால் மற்றும் தயிர் (200-250 மில்லி) மூலம் 10 கிராம் புரதம் கிடைத்துவிடும். இதுதவிர 300-400 கிராம் சாப்பாடு, பருப்பு எடுத்துக்கொண்டால் அதன் மூலம் 30-40 கிராம் புரதம் கிடைத்துவிடும். எனவே, நமது அடிப்படையான உணவுப்பழக்கம் மூலமாகவே நமக்குத் தேவையான புரதங்கள் கிடைத்துவிடுகின்றன. கொஞ்சம் கூடுதலாக எடுத்துக்கொள்ள நினைத்தால் பருப்பு வகைகளைச் சற்று அதிகரிக்கலாம். வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். 100 கிராம் இறைச்சியில், 25 கிராம் வரை புரதங்கள் உள்ளன. சைவம் சாப்பிடுபவர்கள், பருப்பு வகைகளுடன் சோயா, பால், பனீர் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். நம் தினசரி உணவுகளின் மூலமாகவே இந்தத் தேவை பூர்த்தியாகிவிடும். கூடுதலாகத் தேவைப்படும்போது மட்டும் முட்டைகள், பருப்பு வகைகள் மற்றும் அசைவ உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
புரோட்டீன் பவுடர் தேவையா என்று கேட்டால், அதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. பொதுவாக கடைகளில் நாம் வாங்குவது புரோட்டீன் பவுடரே கிடையாது. அவற்றில் 100 கிராமுக்கு 15 கிராம் புரோட்டீன் இருந்தாலே ஆச்சர்யம்தான். பெரும்பாலும் சர்க்கரை மட்டுமே இருக்கும். ஒரு பொருளில் எது அதிகமாக இருக்கிறதோ அதன் பெயர் சொல்லித்தானே அழைக்க வேண்டும்? அப்படிப் பார்த்தால் புரோட்டீன் பவுடர் என்று சொல்வதே தவறு. அது வெறும் சர்க்கரை பவுடர்தான். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், புரோட்டீன் பவுடர் என்பதே ஏமாற்று வேலை. புரோட்டீன் பானங்கள், சத்து பானங்கள் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி விற்கப்படும் எல்லாமே அதே ரகம்தான். அதேநேரம், பாடி பில்டிங் செய்பவர்கள் எடுத்துக்கொள்ளும் ‘Whey’ மற்றும் ‘Casein’ புரோட்டீன்களில் 100 கிராமுக்கு 70 முதல் 80 கிராம் வரை புரதங்கள் இருக்கும். ஆனால் அவற்றின் விலை மிக அதிகம். வெறும் 300 முதல் 400 கிராம் இருக்கும் டின் விலை 3,000 முதல் 4,000 ரூபாய் வரை ஆகலாம்.
பாடி பில்டிங் செய்பவர்கள்கூட இவ்வளவு அதிகமாகச் செலவு செய்யத் தேவையில்லை. குறைந்த செலவிலேயே இந்தப் புரதங்களை எடுக்கமுடியும். உதாரணங்கள் சொல்கிறேன். விலையுயர்ந்த புரோட்டீன் பவுடர் மூலம் நமக்கு 500 கிராம் புரதம் கிடைக்க, குறைந்தபட்சம் 5,000 ரூபாய் செலவு செய்யவேண்டும். இதே 500 கிராம் புரதத்தை நாம் முட்டையின் வழி 500 ரூபாய்க்குள்ளாகவே எடுத்துவிடலாம். புரோட்டீன் பவுடர்களில் கிடைப்பதைவிட தரமான புரதம் 500 ரூபாயில் முட்டை மூலம் நமக்குக் கிடைக்கிறது. பருப்பு வகைகளை எடுத்துகொண்டால் 500 கிராம் புரதம் கிடைக்க இரண்டரைக் கிலோ போதுமானது. 250 முதல் 300 ரூபாய்க்குள் முடிந்துவிடும். இதுவே அசைவத்தின் வழி புரதத்தை எடுக்க வேண்டும் என்றால் பிராய்லர் சிக்கன் விலை மலிவாகக் கிடைக்கும். 400 ரூபாயில் இரண்டு கிலோ சிக்கன் மூலம் தரமான புரதம் கிடைத்துவிடும். மட்டன் என்றால் சிக்கனைவிட விலையை இரண்டுமடங்காக வைத்துக்கொள்ள வேண்டியதுதான். அதேபோல் சோயா சம்பந்தப்பட்ட ‘மீல் மேக்கர்’ போன்றவற்றிலிருந்து அதே அளவு புரதத்தை எடுக்கவேண்டுமானால் 100 முதல் 150 ரூபாய் போதுமானது.
எவ்வளவு எளிதாகவும் விலை மலிவாகவும் தரமான புரதங்களை நாம் தினசரி உணவிலிருந்தே எடுத்துக்கொள்ளலாம் பாருங்கள்.
சரி, புரதங்களின் அத்தியாவசியம் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். ஆனால் புரதங்கள் நம் சிறுநீரகத்தை பாதிக்கும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா? இந்தக் கேள்வியையும் புரதம் குறித்த முரண்பாடான செய்திகளையும் பற்றி நாம் அடுத்தடுத்த வாரங்களில் பேசுவோம்.
- பரிமாறுவோம்
******
கொண்டக்கடலையை இரவு முழுவதும் ஊறவைப்பது வழக்கம். ஊறவைக்கும் தண்ணீரை பிற உணவுகள் சமைக்கப் பயன்படுத்தலாமா? - விக்னேஷ்
பெரும்பாலும் தானியங்கள், பயிறு வகைகளை ஊறவைப்பது அதில் உள்ள பைட்டிக் ஆசிட் போன்ற சத்துகளை உடலில் சேரவிடாமல் தடுக்கும் சில ரசாயனங்களை நீக்குவதற்குத்தான். அதே தண்ணீரை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவது நல்லதில்லை.
வெளிநாடுகளில் கலோரி என்ற அளவைக் கணக்கிட்டு உணவை எடுத்துக்கொள்கிறார்கள். அது நமக்கு சரியாக வருமா? -அண்ணா அன்பழகன்
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கலோரிகள் கணக்கிட்டுச் சாப்பிடுவது பயன் கொடுக்கும். ஆனால், எவ்வளவு கலோரிகள் சாப்பிடுகிறோம் என்பதைவிட என்ன சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். கலோரிகளை மட்டும் கணக்கிட்டுக் குறைவாகச் சாப்பிட்டு உடல் எடையைக் குறைத்தாலும் அதைத் தக்க வைக்க இயலாது. இதைப் பற்றி பின்வரும் வாரங்களில் விரிவாக எழுதுவேன். வாசியுங்கள்.

டாக்டரிடம் கேளுங்கள்!
ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.