மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 14

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

ஆரோக்கியமான மனிதனின் உடல் எடையில் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் என்ற அளவில் புரதம் தேவை. பெண்களுக்கும் வளரும் குழந்தைகளுக்கும் ஒன்றரை கிராம் வரை தேவை.

புரதங்கள் பற்றிய மூடநம்பிக்கைகளையும் மாயைகளையும் கடந்த வாரம் உடைத்தோம். புரதங்களின் அத்தியாவசியத் தேவைகளையும் அலசினோம். புரதங்கள் உடலில் நடக்கும் இன்றியமையாத பல பணிகளுக்கு உதவுகின்றன. ஆனால், அவற்றை எடுத்துக்கொள்ள மக்கள் அஞ்சுகிறார்கள். அளவுக்கு அதிகமாகப் புரதங்களை எடுத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று சில மருத்துவர்களும் நம்புகிறார்கள். அதனால் சர்க்கரை நோய், இதய நோய் இருப்பவர்கள் புரத உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்று வழிகாட்டுகிறார்கள். உண்மையில் கூடுதலாகப் புரதங்கள் எடுத்து கிட்னி பாதிப்பு ஏற்படுவதைவிட சரியான அளவு புரதங்களை எடுத்துக்கொள்ளாமல் விடுவதால்தான் பெரும்பாலான பாதிப்புகள் வருகின்றன.

சரி... புரதங்களுக்கும் சிறுநீரகத்துக்கும் என்ன தொடர்பு?

மாவுச்சத்து, கொழுப்புச் சத்து இரண்டிலுமே இல்லாத ஒன்று புரதச்சத்தில் உள்ளது. அது நைட்ரஜன். இந்த நைட்ரஜன்தான் உடலில் நடக்கும் பல்வேறு வேலைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் நைட்ரஜன் கழிவுகளை நம் உடலிலிருந்து வெளியேற்றியாக வேண்டும். இல்லையென்றால், இதே நைட்ரஜன் சில பிரச்னைகளையும் உருவாக்கும். நீரில் இருக்கக்கூடிய மிகச்சிறிய உயிரினங்கள் முதல் மனிதர்கள் வரை இந்த நைட்ரஜன் கழிவுகளைப் பல்வேறு வகையில் உடலிலிருந்து வெளியேற்றுகிறார்கள். நுண்ணுயிரிகள் நைட்ரஜனை அம்மோனியாவாக வெளியேற்றும். பறவைகள், பல்லிகள் யூரிக் அமிலமாக வெளியேற்றும். பாலூட்டிகளான நாம் யூரியா (Urea) என்னும் உப்பாக மாற்றி வெளியேற்றுகிறோம்.

இந்தச் செயலை நம் உடலில் மேற்கொள்வது கல்லீரலும் சிறுநீரகமும். யூரியாவை உருவாக்குவதில் கல்லீரல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது, அதைச் சிறுநீராக மாற்றி உடலை விட்டு வெளியேற்றும் பணியைச் சிறுநீரகம் செய்கிறது. தேவையான அளவு புரதங்களை எடுத்துக்கொண்டால் சிறுநீரகம் தன் வேலையைச் சரியாகச் செய்துவிடும். ஆனால், எந்த அளவுக்குப் புரதங்களை அதனால் வெளியேற்றமுடியும், அதன் திறன் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

ஆரோக்கியமான மனிதனின் உடல் எடையில் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் என்ற அளவில் புரதம் தேவை. பெண்களுக்கும் வளரும் குழந்தைகளுக்கும் ஒன்றரை கிராம் வரை தேவை. உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு 2 கிராம் வரை தேவை. சிறுநீரகம் குறித்து ஆராய்ச்சிகளின்படி ஆரோக்கியமான ஒரு மனிதரின் சிறுநீரகம், ஒரு கிலோவிற்கு இரண்டரை முதல் மூன்று கிராம் புரதங்களை எளிதாக வெளியேற்றும். கூடுதலாகப் புரதங்கள் தேவைப்படும் விளையாட்டு வீரர்கள் எடுத்துக்கொள்ளும் அளவைவிட இது அதிகம். நாம் சாதாரணமாகச் சாப்பிடும் புரத அளவை விட சுமார் நான்கு மடங்கை சிறுநீரகத்தால் பிராசஸ் செய்ய முடியும். எனவே தேவையான புரத அளவைவிட சற்று அதிகமாக எடுத்தால் அது சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இந்த பயத்தைப் போக்க நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 14

இந்த பயம் எதனால் ஏற்படுகிறது என்று பார்க்கும்பொழுது சில சிறுநீரக நோய்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் அவசியம் ஏற்படுகிறது. மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஓர் ஆரோக்கியமான மனிதரை வைத்துச் சொன்னது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் முதலியவை பாதித்திருக்கும் நபர்களுக்கு சிறுநீரகத்தில் ஏற்கெனவே பிரச்னை இருக்கும். அதனால்தான் புரதங்களைக் குறைவாக எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இல்லையென்றால் ரத்தத்தில் யூரியா, யூரிக் ஆசிட், Creatinine போன்றவற்றின் அளவு அதிகரித்துவிடும்.

சிறுநீரக பாதிப்புள்ளவர்களுக்கு மருத்துவர்கள் சொல்வதை வைத்து, ‘ஆரோக்கியமாக உள்ளவர்களும் அதிக புரதங்களை எடுத்துக்கொண்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுவிடும்' என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. மஞ்சள் காமாலை இருந்தால் எண்ணெய்ப் பதார்த்தங்கள், அசைவம் வேண்டாம் என்று சொல்லுவோம். அதற்காக, அவற்றைச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வந்துவிடும் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

இதை இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ள எளிய உதாரணம் சொல்கிறேன்.

நம் சிறுநீரகம் ஒரு வகையான வடிகட்டி என்று நமக்குத் தெரியும். இதை நம் கிச்சனில் இருக்கக்கூடிய சல்லடையுடன் ஒப்பிடலாம். நம் உடலின் கழிவுகளைச் சிறுநீரகம் வடிகட்டி வெளியேற்றுவதைப்போல நம் கிச்சன் சிங்கிலும் கழிவுநீர் வெளியேறுகிறது. சல்லடை நார்மலாக இருக்கும்வரை அதன் வழியாக எவ்வளவு தண்ணீரை ஊற்றினாலும் எந்த இடரும் இல்லாமல் சென்றுவிடும். சல்லடையில் நிறைய அழுக்குப் படிந்து அதன் ஓட்டைகள் அடைபட்டு இருந்தால், அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றினாலும் வெளியேறாது. இதை அப்படியே சிறுநீரகத்தோடு ஒப்பீடு செய்வோம். அழுக்குப் படிந்து சரியாக வேலை செய்யாத சல்லடைதான், நோயால் பாதிப்பட்டிருக்கும் சிறுநீரகங்கள். புரதங்களை வெளியேற்றும் தன்மை அவர்களின் சிறுநீரகங்களுக்கு இருக்காது.இதுபோன்ற சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் புரதங்களை அதிக அளவில் எடுக்கும்பொழுது யூரியா, Creatinine, யூரிக் ஆசிட் ஆகியவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகி உடலில் பலவித பிரச்னைகளை ஏற்படுத்தும்.

சல்லடை நல்ல நிலையில் இருக்கும்போது எப்படி அனைத்துக் கழிவுகளையும் வெளியேற்றுகிறதோ, அதேபோல ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஒரு கிலோவிற்கு 2 கிராம் வரை புரதம் எடுத்தாலும் நம் உடல் அதை வெளியேற்றிவிடும். அது எந்தவித சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தாது.

சர்க்கரை நோய், உடல் பருமன் அல்லது உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், புரதம் எடுத்துக்கொண்டால் பிரச்னை வருமா என்பதையும் சல்லடையை வைத்தே பார்த்துவிடுவோம். ஒரு சல்லடை அடைக்காமல் இருக்க என்ன செய்வோம்? நன்றாகத் தண்ணீர் ஊற்றி அழுக்கு அடைக்காமல் பார்த்துக்கொள்வோம் அல்லவா? அதேதான் இங்கேயும்... மேற்சொன்ன நோய்களால் நம் உடலின் சல்லடையான சிறுநீரகம் பாதிக்காமல் இருக்க புரதங்களை நன்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 14

மாவுச்சத்துகளைக் குறைத்து புரதங்களை நன்கு சேர்த்துக்கொண்டால் உடல் பருமன் குறையும். அதேபோல சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் புரதங்கள் மிக நல்ல உணவு. முன்பே சொல்லியிருக்கிறேன், நாலு இட்லி சாப்பிடுவதற்குப் பதில் இரண்டு இட்லி, இரண்டு முட்டை; நான்கு சப்பாத்தி சாப்பிடும் இடத்தில் இரண்டு சப்பாத்தி, அதனுடன் சுண்டல் வகைகள் அல்லது சில மீன், சிக்கன் துண்டுகள் எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவு பாதிக்கும் மேல் குறையும். நம்மூரில் 100 பேர் டயாலிசிஸ் எடுத்துக்கொள்கிறார்கள் என்றால் அதில் 70-80 பேருக்கு சர்க்கரை நோயே காரணமாக இருக்கிறது. சிறுநீரகத்துக்கு முக்கிய எதிரி சர்க்கரை நோய்தான். அதேபோல உயர் ரத்த அழுத்தம் ஏற்படக் காரணமும் உடல் பருமன்தான். 50 சதவிகித சர்க்கரை நோய்க்குக் காரணமும் உடல் பருமன்தான்.

உண்மையில் நல்ல புரதங்களை எடுத்துக்கொண்டு உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைத்தால் சிறுநீரக பாதிப்பு வராமல் உடலைப் பாதுகாக்கலாம்.

நிறைய சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரம்பத்தில் சிறுநீர் வழியாகப் புரதக்கசிவு ஏற்படுவதுண்டு. இதை urine microalbumin leakage என்று சொல்லுவோம். அவர்களுக்கு மாவுச்சத்தைக் குறைத்து, புரதங்களை அளித்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்போது ஆரம்பக்கட்ட சிறுநீரக பாதிப்புகள் ரிவர்ஸ் ஆவதை நாங்கள் பார்த்துள்ளோம். இது எந்த ஒரு மருந்தாலும் சாத்தியமில்லை. சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் இந்தப் புரதக்கசிவுகூட, நல்ல புரதங்களைக் கொடுக்கும்போது நெகட்டிவ் ஆன நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாங்கள் ஆச்சர்யப்பட்டிருக்கிறோம். எனவே, நல்ல ஆரோக்கியமான புரதங்களைப் போதிய அளவில் எடுப்பது உங்களின் சிறுநீரகங்களைப் பாதுகாக்கும்.

மழைபெய்வதால் குடைபிடித்துச் செல்கிறோம். குடைபிடிப்பதால்தான் மழை வருகிறது என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதுபோன்றதே ‘புரதங்களால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்' என்பது. அதே சமயத்தில் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் புரதங்களை தொடவே கூடாது என்பது தவறு. அவர்களுக்கும் கட்டாயம் ஒரு கிலோ எடைக்கு 0.4 முதல் 0.5 கிராம் புரதம் வரை நல்ல புரதங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள் சிறுநீரக மருத்துவர் ஆலோசனைப்படி தேவையான புரதங்களை எடுத்துக் கொள்வது அவசியம். குறைவாக எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர, அவர்களுக்கும் புரதம் அத்தியாவசியமானதே.

இந்த விஷயத்தில் சில மருத்துவர்களுக்குக் குழப்பம் ஏற்பட ஒரு காரணம் இருக்கிறது. புரதங்கள் நிறைந்த உணவுகள், அசைவ உணவுகளைச் சாப்பிட்டு அடுத்தநாள் ரத்தப் பரிசோதனை செய்து பார்க்கும்பொழுது யூரியா, Creatinine ஆகியவற்றின் அளவு சற்று கூடுதலாக இருக்கும். இதைப் பார்த்து மருத்துவர்கள் பயந்துவிடுகிறார்கள். புரதங்கள் நிறைந்த உணவுமுறையைக் கடைப்பிடிக்கும் ஒருவர், அசைவம் சாப்பிட்டு மறுநாள் எடுக்கும் டெஸ்டில் 10% கூடுதலாகக் காட்டுவது இயல்பே. அவரிடம் “உங்கள் கிட்னியெல்லாம் போச்சுங்க” என்று பயமுறுத்துவதுதான் தவறு.

புரதம் மிகுந்த உணவுகளை எடுக்கும்போது நம் ரத்தத்தில் யூரியாவின் அளவு தற்காலிகமாக அதிகரிக்கும். அது உணவில் இருக்கக்கூடிய யூரியா மட்டுமே. அசைவம் சாப்பிடும்போது அதிலிருக்கும் Creatine என்ற புரதம், சமைக்கும்போது Creatinine-ஆக மாறிவிடும். 300-400 கிராம் அசைவம் சாப்பிட்டால் இதன் அளவு 0.2 கிராம் என்ற அளவில் அதிகமாவதற்குக் காரணம் இதுதான். உணவில் இருக்கக்கூடிய இவை வெளியேறும்வரை இந்த அளவு இருக்கும். புரதம் இல்லாத உணவுகளை அடுத்த 12 மணி நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தாலே இந்த அளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடும். எனவே சிறிதளவு யூரியா மற்றும் கிரியாட்டினின் அதிகமாக இருந்தாலே சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று நம்புவதும் தவறு. இது உணவினால் ஏற்படும் தற்காலிக மாற்றம் மட்டுமே. உடனடியாக நார்மல் ஆகிவிடும். இது பயப்படவேண்டிய விஷயமே கிடையாது.

இதுபோன்ற பயங்களின் காரணமாக 40 அல்லது 50 வயதிற்கு மேல் உள்ள பல நபர்கள் புரதங்கள் பக்கம் போவதே இல்லை. ஒரு வயதிற்கு மேலே புரதங்களை மிகக் குறைவாக எடுத்தால், ஒட்டுமொத்த இறப்பு விகிதம் பல மடங்கு அதிகமாகிறது என்று பல ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியுள்ளது. அதனால் அனைவரும் தேவையான புரதங்களை எடுப்பது மிக அவசியம்.

ஒரு பக்கம் புரதம் எடுப்பதற்கு மக்கள் பயந்து கொண்டிருக்கையில், இன்னொரு பக்கம் உடற்பயிற்சி செய்பவர்கள், மிக அதிக அளவு புரோட்டீன் சாப்பிட்டால் தசை கட்டுக்கட்டாக மாறிவிடும் என்று நினைக்கிறார்கள். அதற்காக புரோட்டீன் பவுடர்களை டப்பா டப்பாவாக பல ஆயிரங்கள் செலவு செய்து எடுத்துக்கொள்கிறார்கள்.

இது முற்றிலும் தவறு. கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது கண்ணுக்குத் தெரியாத தசைநார்கள் சேதமாகும். இந்த சேதமும் அதனால் ஏற்பட்ட காயமும் ஆறும்போது தசைகள் பெரிதாகும். இதை Muscle Hypertrophy என்று சொல்வோம். இதைத்தான் நாம் தசைக்கூடுதல் என்று சொல்கிறோம். இந்த டேமேஜ் ஏற்பட்டு ரிப்பேராகும் பிராசஸுக்குத் தேவையான அளவு புரதங்கள் நமக்கு அவசியம். எனவே நல்ல உடற்பயிற்சிகள் செய்து தேவையான அளவு புரதங்கள்... அதாவது ஒரு கிலோவுக்கு 2 கிராம் புரதம் என்ற அளவில் எடுத்துக்கொண்டாலே தசைகள் கூடும். ஆனால் தசை கூடுவதற்கு முக்கியமான காரணம் இந்தப் புரதங்கள்தானா என்றால், கிடையாது. தசைகள் கூடுவதற்கு முக்கியமான காரணம் உடற்பயிற்சிகள்தான். புரதங்கள் இதற்கு சப்போர்ட் மட்டுமே செய்யும். எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் வெறும் புரதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு இருந்தால் அவை யூரியாவாக மாறி சிறுநீரில்தான் வெளியேறும். கட்டட வேலை போன்ற கடினமான வேலைசெய்யும் நபர்களைப் பாருங்கள். எந்தவித பிரத்தியேகப் புரத உணவும் சாப்பிடாமலேயே அவர்களுக்கு தசைகள் கட்டுக்கட்டாக இருக்கும். காரணம் அவர்களது கடின உடல் உழைப்புதான்.

ஆரோக்கியமான புரதங்களைத் தேவைக்கு ஏற்ப தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். சிறுநீரகப் பிரச்னைகள் உட்பட பல நோய்களைத் தடுக்கும் மிகப்பெரும் வல்லமையே அதற்கு உண்டு.

- பரிமாறுவோம்

****

சமச்சீர் உணவு என்றால் என்ன?- அண்ணா அன்பழகன்

உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்துகின்ற மாதிரி, சமச்சீர் அல்லது பேலன்ஸ்டு டயட் என்று ஒன்று இல்லவே இல்லை. உலக சுகாதார நிறுவனம் 50% மாவுச்சத்து, 20% புரதச்சத்து, 30% கொழுப்புச்சத்து எடுப்பது சமச்சீர் உணவு என்று வரையறை செய்துள்ளது. எந்த நோய்களும் இல்லாத மக்கள் இந்த விகிதத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வேறு பல பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இந்த ஃபார்முலா பொருந்தாது. அவரவர் பிரச்னையைப் பொறுத்து சமச்சீர் உணவு விகிதம் மாறுபடும்.

காய்கறி, கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்கள். தற்போது நிறைய செயற்கை உரங்கள், பூச்சிமருந்துகள் பயன்படுத்துகிறார்கள். இது ஆபத்தில்லையா? - கிடையூர் மாணிக்கம்

நீங்கள் கூறியிருக்கும் பூச்சிக்கொல்லி பற்றிய பயம் நியாயம்தான். இதற்கு இரண்டு தீர்வுகள் உண்டு. ஒன்று, நீங்களே மாடித்தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டம் போட்டு தேவையான குறைந்தபட்ச காய்கறிகளை சுத்தமாக விளைவித்துக்கொள்ள வேண்டும். அல்லது, காய்கறி, கீரைகளை 2-3 முறை நன்றாகத் தண்ணீரில் அலசிப் பயன்படுத்த வேண்டும். நான் கூறிய முதல் விஷயம் எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்பதால் இரண்டாவது விஷயத்தைப் பின்பற்றுவது எளிதானது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 14

டாக்டரிடம் கேளுங்கள்: ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.