மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 15

ஆரோக்கியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம்

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் சுமார் 60 கிராம் புரதம் பிராய்லர் கோழி மூலமாகக் கிடைக்கவேண்டுமென்றால் 200 கிராம் எடுத்துக்கொண்டால் போதும்.

புரதங்கள் பற்றி இரண்டு வாரங்களாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். அசைவம் சாப்பிடுபவர்களுக்குக் கோழிக்கறி பிரதான உணவு. கோழிக்கறி என்றாலே ஒரு கேள்வி நமக்கு முன் வந்து நிற்கும். பிராய்லர் கோழி நல்லதா, கெட்டதா? ``பிராய்லர் கோழி மிகவும் மோசமானது. ஹார்மோன் ஊசி போட்டு வளரவைக்கிறார்கள்'' என்று சிலர் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் சிக்கன் மூலம் செய்யப்படும் பிரியாணி, ஷவர்மா, கிரில் சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உண்மை என்ன?

என் சமூகவலைதளப் பக்கங்களில் சில நாள்களுக்குமுன் பிராய்லர் சிக்கன் குறித்து ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினேன். நூற்றுக்கு 40 பேர், ‘சிக்கன் நல்லதல்ல, அதனாலேயே நாங்கள் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதில்லை' என்று கூறியிருந்தார்கள். 25 பேர், ‘விலை குறைவாக இருப்பதால் சாப்பிடுகிறேன். ஆனால் அது நல்லதல்ல என்ற சந்தேகம் எனக்கும் இருக்கிறது' என்றனர். இன்னொரு 25 சதவிகித மக்கள் இதை சுவைக்காக உண்பதாகக் கூறினர். மீதமுள்ள 10 சதவிகித மக்கள் ‘இது ஆரோக்கியமானதுதான். இதைப் புரதத்திற்காகவே எடுத்துக்கொள்கிறேன்' என்று கூறினர். எந்த அளவுக்கு மாறுபட்ட கருத்து நம் மக்களிடம் இருக்கிறது பாருங்கள்.

உண்மையில் பிராய்லர் கோழி நல்லதா கெட்டதா, அதன் வரலாறு என்ன, புரதத்துக்காக அதை எடுத்துக்கொள்ளலாமா, அதைத் தாண்டி அதில் என்ன சத்துகளெல்லாம் உள்ளன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 15

பிராய்லர் முறை எப்போது தொடங்கியது என்பதிலிருந்து இதை ஆரம்பிக்கலாம். அந்தக் காலத்தில் கோழிகள் வீட்டில் மனிதர்களோடு வளர்ந்தன. கால்போன போக்கில் காடுமேடுகளில் உணவைத் தேடித் தின்றன. தேவை ஏற்படும்போது மக்கள் அதை உணவாக்கிக்கொண்டார்கள். நிறைய பேர் சிக்கன் சாப்பிட விரும்பியபோது அதைப் பண்ணைகளில் வளர்க்க ஆரம்பித்தனர்.

முதன்முதலில் 1975-களில் பிராய்லர் கோழிகள் புழக்கத்தில் வந்தன. கோழிகளில் பல்வேறு ரகங்கள் இருந்தாலும் பிராய்லர் கோழிகள் சீக்கிரம் வளர்ந்து நல்ல எடை மற்றும் சுவையைக் கொடுப்பதால் அதையே தேர்வு செய்து வளர்த்தார்கள். தொடக்கத்தில் ஒரு கோழி வளர்ந்து உணவாக மாறக்கூடிய தன்மையை அடைவதற்கு 60-70 நாள்கள் வரை ஆனது. இப்போது அதன் வளர்ப்புக்காலம் வெறும் 40 நாள்கள் மட்டுமே. பிராய்லர் கோழி வளர்ப்பில் உலகின் நான்காவது பெரிய நாடாக இருக்கிறது இந்தியா. 38 லட்சம் டன் கோழிக்கறி இங்கு வருடம்தோறும் உற்பத்தி செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள். இதில் நிறைய சத்துகள் இருக்கின்றன என்று ஒரு பக்கம் சொன்னாலும், ‘இதைச் சாப்பிடுவதால்தான் பெண் குழந்தைகள் சீக்கிரம் பருவமடைகிறார்கள், மகளிருக்கு PCOD, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன' எனப் பலர் சொல்கிறார்கள்.

இதுபற்றியெல்லாம் அலசுவதற்கு முன்பாக பிராய்லர் கோழிக்கறியில் உள்ள சத்துகளைப் பார்த்துவிடுவோம். 100 கிராம் கோழிக்கறியில் சுமார் 27-30 கிராம் வரை உயர்தரப் புரதங்கள் உள்ளன. அதாவது 9 முக்கியமான அமினோ அமிலங்கள் கோழிக்கறியில் இருக்கின்றன. இக்கறியில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என நிறைய பேர் நினைக்கிறார்கள். அது தவறு. 100 கிராமில் வெறும் 14 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது. அதுவும் தோலோடு சேர்த்து சாப்பிட்டால்தான். தோலை நீக்கிய கோழிக்கறியில் 34 கிராம் புரதங்களும் 3 கிராம் கொழுப்பும் மட்டுமே உள்ளன.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் சுமார் 60 கிராம் புரதம் பிராய்லர் கோழி மூலமாகக் கிடைக்கவேண்டுமென்றால் 200 கிராம் எடுத்துக்கொண்டால் போதும். 1 கிலோ பிராய்லர் சிக்கன் 200 ரூபாய் என வைத்துக்கொண்டாலும் ஒரு நபரின் புரதத்தேவைக்கு ஆகும் செலவு வெறும் 40 ரூபாய்.

எனவே பிராய்லர் கோழிபோல புரதங்களை அளிக்கக்கூடிய உணவுகள் வேறெதுவும் இல்லை. முட்டையேகூட சற்று விலை அதிகம்தான். ஏன், பருப்பு, பயறு வகைகளைவிட மிகக் குறைந்த விலையில் பிராய்லர் கோழியில் புரதம் கிடைக்கிறது. அதேநேரம், தரம் அதிகமாக உள்ள உணவாகவும் இதைச் சொல்லலாம். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, தனக்கு தினசரி தேவைப்படும் சத்துகளைக் கோழிக்கறி மூலமாகவே எடுத்துக் கொண்ட தாகப் பேட்டி ஒன்றில் சொன்னார். நான் ஏற்கெனவே சொன்னதைப்போல பல ஆயிரம் செலவு செய்து வாங்கும் புரோட்டீன் பவுடர்களைவிட விலை மலிவான, மிக உயரிய புரதங்களைக் கோழிக்கறி அளிக்கிறது. அதனால்தான் இதைப் பற்றி நாம் மீண்டும் மீண்டும் பேசவேண்டியுள்ளது.

முக்கியமான விஷயத்தை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். இணையத்தில் ஏதோ நான்கு விஷயங்களைப் படித்து மட்டும் நான் இந்தக் கட்டுரையை எழுதவில்லை. கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை உரிமை யாளர்கள் பலரிடமும் இதுகுறித்து நன்கு பேசி ஆய்வு செய்தபிறகே எழுதுகிறேன். பண்ணை உரிமையாளர்கள் பணம் கொடுத்துதான் இதை எழுதச் சொல்கிறார்கள் என்றுகூட சிலர் குற்றம் சாட்டலாம். நான் அந்த நிலையிலெல்லாம் இல்லை. ஓர் ஆரோக்கியமான உணவு பற்றி மக்களிடையே நிலவிவரும் பயம், வதந்திகள் ஆகியவற்றை அறிவியல்பூர்வமாக அலசாமல் இந்த உணவுத் தொடர் முழுமை பெறாது என்பதால்தான் இந்தச் சர்ச்சைக்குரிய விஷயத்தைக் கையில் எடுத்து அலசியிருக்கிறேன்.

பிராய்லர் கோழிகள் ஹார்மோன் ஊசிபோட்டு வளர்க்கப்படுகின்றன. அதனால் தான் அவை வேகமாக வளர்கின்றன என்பது ஒரு பிரதான குற்றச்சாட்டு. உண்மையில் கோழிகளுக்கு ஊசிகள் போடப்படுகின்றனவா என்றால், கண்டிப்பாகப் போடப்படுகின்றன. ஆனால் என்ன ஊசி என்பதில்தான் விஷயமே உள்ளது. ஒரு கோழி வளர்வதற்குள் 5 ஊசிகள் போடப்படும். ஆனால், அவை வெறும் தடுப்பூசிகள் மட்டுமே. குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்க நாம் தடுப்பூசி போடுவதைப் போல கோழிகளைத் தாக்கக்கூடிய Ranikhet, Flu போன்ற நோய்களைத் தடுக்கத் தடுப்பூசிகளைப் போடுகிறார்கள். பண்ணையில் ஒரு கோழிக்கு நோய் ஏற்பட்டாலும், அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான கோழிகளும் பாதிக்கப்படும். அதைத் தவிர்க்கவே தடுப்பூசி போடுகிறார்கள்.

சில தடுப்பு மருந்துகளைச் சொட்டு மருந்தாகவும் கொடுக்கிறார்கள். இதில் மக்களுக்குத் தெரியாத இன்னொரு முக்கிய விஷயமும் உள்ளது. பிராய்லர் கோழிக்குப் பதில் நிறைய பேர் கடைகளில் நாட்டுக்கோழி வாங்கு வதுண்டு. தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்காக வீட்டிலேயே வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் வேண்டுமானால் இயற்கை முறையில் மேய்ந்து ஆரோக்கியமாக வளரலாம். ஆனால் கடைகளில் வாங்கும் நாட்டுக்கோழிகள் அனைத்துக்கும் பண்ணைகளில் அனைத்துத் தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன. நிறைய கால்நடை மருத்துவர்கள் என்னிடம் பகிர்ந்த விஷயம் இது.

எனில், கோழிகளுக்கு ஹார்மோன் தடுப்பூசி போடப்படுவதே இல்லையா, ஹார்மோன் செலுத்தி ஓர் உயிரை வளர்க்க முடியுமா என்ற கேள்விகளுக்கான விடையை முதலில் பார்த்துவிடுவோம். வளர்ச்சிக்குரிய ஹார்மோன் களைக் கொண்டு உடலை வளர்க்கவேண்டும் என்றால் உயரத்தை மட்டுமே அதிகப்படுத்த முடியும். உயரக்குறைபாட்டால் பாதிக்கப் பட்டவர்களுக்கு Growth ஹார்மோன் ஊசிகளை குறிப்பிட்ட வயதில் செலுத்துவார்கள். ஆனால் அதே ஊசியைக் கோழிகளுக்கும் செலுத்த வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை போட வேண்டும். இந்த ஊசிகளின் விலை மிக அதிகம். இதை 40 நாள்களுக்கு தினமும் செலுத்தினால் 20,000 ரூபாய்க்கு மேல் செலவாகும். இருபதாயிரம் ரூபாய் செலவு செய்து வளர்க்கப்பட்ட ஒரு கோழியின் கறியை கிலோ 150 ரூபாய்க்கு விற்பது சாத்தியமா?

ஹார்மோன் இல்லாமல் ஸ்டீராய்டு ஹார்மோன்களைச் செலுத்த முடியுமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. ‘Anabolic steroids' என்று சொல்லப்படும் மருந்துகள் சில புழக்கத்தில் இருந்தாலும் அவற்றின் விலை மிக அதிகம். அவற்றால் ஏற்படும் பயனும் மிகக்குறைவு. மேலும் இவ்வளவு செலவழித்து இந்த ஹார்மோன்கள் மற்றும் ஸ்டீராய்டுகளைக் கோழிகளுக்குச் செலுத்தினால் உண்மையிலேயே அவை வேகமாகவும் பெரிதாகவும் வளர்கின்றனவா என்று ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டன. அந்த ஆராய்ச்சிகளில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. உடல் எடையிலும் வளரும் காலத்திலும் எந்த வித மாற்றமும் இந்த ஹார்மோன்கள் கொடுப்பதில்லை என்றுதான் உண்மையில் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. எனவே, ஹார்மோன் ஊசி போட்டுக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன என்று கூறுவது அறிவியல் தெரியாமல் வைக்கப்படும் அபத்தமான வாதம். இதற்கான தரவுகளை நீங்களே பற்பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இணையத்தில் காணலாம்.

‘ஊசி போடப்படுகிறது. ஆனால் அது தடுப்பூசி என்கிறீர்கள். ஹார்மோன் ஊசி இல்லை என்றும் சொல்கிறீர்கள். இருந்தும் அந்தக் கோழி வேகமாக வளர்வது ஏன்?' என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று அந்தக் கோழியின் Breed. நாட்டுக் கோழி வளர்வதற்கு மூன்று மாதங்கள்வரை ஆகும். பிராய்லர் கோழி முதன்முதலில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டதே அதன் வேகமான வளர்ச்சிக்காகத்தான். எப்படி மாடுகளில் குறிப்பிட்ட இனம் மட்டும் அதிக பாலைக் கொடுக்கிறதோ, குறிப்பிட்ட அரிசி வகை அதிக விளைச்சல் தருகிறதோ அதேபோலத்தான் இதுவும். எனவே பிராய்லர் கோழிகள் விரைவாக வளரும் தன்மை பெற்றவை என்பது முதல் காரணம். தொடக்கத்தில் 60-70 நாள்கள்வரை வளர்ந்த அவை தற்போது 45 நாள்களிலேயே முழு வளர்ச்சியை எட்டிவிடுகின்றன. காரணம், அது வளரும் சூழ்நிலை, கொடுக்கப்படும் உணவு. இதை Controlled environment என்று கூறுவார்கள். அதாவது பண்ணையின் தட்பவெட்ப நிலை, காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு தொடங்கி அவை வளர்வதற்கு சாதகமாகவே அனைத்தும் முடிவு செய்யப்படுகின்றன. அதேபோல கோழிகளுக்குக் கொடுக்கக்கூடிய தீவனங்களைப் பார்த்தால், நம் குழந்தைகளுக்குக்கூட இப்படிக் கணக்கிட்டு உணவளிக்க மாட்டோம். அந்த அளவுக்கு இந்த உணவில் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு தொடங்கி நுண்சத்துகளின் அளவுவரை இவ்வளவுதான் இருக்கவேண்டும் எனச் சிறந்தமுறையில் உருவாக்கியிருக்கிறார்கள் கால்நடை ஆராய்ச்சியாளர்கள்.

‘அப்படியென்றால் பெண் குழந்தைகள் சிலர் குறைந்த வயதிலேயே பருவமடைகிறார்களே... அதற்கும் பிராய்லர் சிக்கனுக்கும் சம்பந்தமில்லையா' என்று நீங்கள் கேட்கலாம். உலகம் முழுக்கவே பூப்படையும் வயது கடந்த நூறாண்டுகளில் 2-4 ஆண்டுகள் வரை சராசரியாகக் குறைந்துள்ளது. நிறைய ஆராய்ச்சிகளில் இது நிரூபணமாகியுள்ளது. இந்த மாற்றம் பிராய்லர் கோழிகள் வருவதற்கு முன்பாகவே, அதாவது 1900-ங்களில் இருந்தே நிகழ்ந்துவருகிறது. மேலும் சைவர்கள், அசைவர்கள் என இரு தரப்பினருக்கும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோழிக்கறி இதற்கான காரணமாக இருந்தால் அதைச் சாப்பிடாத சைவ உணவுக்காரர்களின் பூப்படையும் வயது எப்படிக் குறைந்திருக்கும்?

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 15

பூப்பெய்தும் வயது குறைந்ததற்கான காரணம், நம் வாழ்க்கைத் தர முன்னேற்றம்தான் என்பது என் கருத்து. 1960-70களில் நம் வாழ்க்கையைப் பசியும் பட்டினியும் சூழ்ந்திருந்தது. தற்போதிருக்கும் அளவுக்கு உணவு உற்பத்தி இல்லை. இன்று அனைவருக்கும் சத்துள்ள உணவு கிடைக்கிறது, வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. புரதங்கள் நிறைந்த சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது சராசரி பூப்பெய்தும் வயது குறைகிறது.

சீக்கிரம் பூப்பெய்துவதற்குக் கூறப்படும் மற்றொரு காரணம் உடல் பருமன். மாவுச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் உணவுகள், இனிப்புகள், அதிக அளவு சாதம், இட்லி, தோசை போன்றவை சாப்பிட்டு உடல் பருமன் ஏற்படும்போது பெண்களுக்கு கொழுப்பில் இருந்து Extragonadal Estrogen ஹார்மோன் உற்பத்தியாகி ஹார்மோன் குளறுபடிகள் ஏற்பட்டுப் பூப்பெய்தும் தன்மையை விரைவில் கொடுக்கிறது என்பதுதான் உண்மை. பெண்கள் சீக்கிரமாகப் பூப்படைவதற்கு மாறியுள்ள உணவுமுறை காரணமே தவிர, குறிப்பிட்ட உணவுமீது குற்றம் சாட்டுவது தவறு. அதேபோல பெண்களுக்கு PCOD, மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்பட்டால் அதற்கும் இந்தக் கோழிகள்மீதே குற்றம் சாட்டுவதும் தவறு. PCOD-க்கு முக்கிய காரணம் உடலின் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை. உடல் பருமன், மாவுச்சத்து உணவு ஆகியவற்றைக் குறைத்து, தரமான புரதங்கள் மற்றும் மாவுச்சத்துகளைச் சாப்பிட்டால் PCOD காணாமல்போய்விடும்.

இந்தப் பிரச்னைகள் இருக்கும் நிறைய பெண்களுக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். கோழிக்கறி போன்ற உணவுகளை பயந்து அவர்கள் சாப்பிடாமல் இருந்தபோது மீண்டும் சாப்பிடவைத்து மாவுச்சத்தைக் குறைத்தேன். பல வருடங்கள் ஹார்மோன் பிரச்னையுடன் தவித்த பெண்கள், மிகக் குறுகிய காலத்திலேயே குணமாகினர். கோழிக்கறி, முட்டை போன்றவற்றை பயத்தால் தவிர்த்து, எட்டு வருடம் பத்து வருடம் கர்ப்பம் தரிக்க முடியாமல் இருந்த பல பெண்கள், இந்த ஆரோக்கியமான புரத உணவுகளைச் சாப்பிட்டு மாவுச்சத்தைக் குறைத்து ஐந்தாறு மாதங்களில் குழந்தைப்பேறு அடைந்த கதைகள் ஏராளம்.

எனில், ‘இந்தக் கோழிகள் தட்டில் வைத்துக் கும்பிடும் அளவுக்கு அப்பழுக்கற்ற உணவா' என்று கேட்டால், அதுவும் இல்லை. கோழிகளுக்கு நோய்கள் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக அதன் தீவனங்களில் Antibiotics மிக அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவற்றில் Tetracycline, colistin போன்றவை மிகவும் சக்திவாய்ந்தவை. மிகத்தீவிர சிகிச்சையின் கடைசிக்கட்டத்தில் கொடுக்கப்படுபவை இவை. இவற்றைத் தீவனத்தில் கலந்து கோழிகளுக்குக் கொடுப்பது, சாப்பிடுபவர்களுக்கு மட்டும் பிரச்னையில்லை. மொத்தச் சமூகத்துக்குமே பிரச்னை. ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்திய அந்தக் கோழிக்கறியைச் சாப்பிடுவதால் நேரடிப் பிரச்னை நமக்கு ஏற்படுவது இல்லை. ஏனென்றால் Antibiotic மருந்துகள் கோழியின் உடலிலிருந்து 24 மணி நேரத்திற்குள்ளாகவே வெளியேறிவிடும். அதை நாம் சமைத்துச் சாப்பிடும்போது அதன் சுவடுகள் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் தன்மையும் மாறுபட்டுவிடும். ஆனால், இப்படி Antibiotics-ஐக் கண்டபடி உபயோகிக்கும்போது இதனால் பாதிப்பாகாத வகையில் Antibiotic resistant பாக்டீரியாக்கள் உருவாகும். இவை நம் தண்ணீரில், மண்ணில் கலந்து, மீண்டும் அந்த பாக்டீரியாக்கள் மனிதர்களுக்குத் தொற்று ஏற்படுத்தும்பொழுது, சாதாரண மருந்துகள் கொடுத்து அவற்றுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. இதனால் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு படி மேலான மருந்துகளே பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக கணக்கற்ற Antibiotic பயன்பாடு இருப்பதால் குறிப்பிட்ட வகைகளைத் தடைசெய்ய அரசு வலியுறுத்திவருகிறது. அதைப் பண்ணை உரிமையாளர்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

மேலும், கோழிகள் வளர்க்கப்படும்போது அவை நடந்தால்கூட எடை குறைந்துவிடும் என்பதால் அவற்றை நகரக்கூட விடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இதனால் கறியை உண்பவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றாலும், அவற்றைக் கொஞ்சமேனும் மேயவிட்டால் ஒமேகா 3 போன்ற சத்துகள் அதிகரித்துத் தரமும் கூடும் என்று சிலர் சொல்கிறார்கள். தற்போது Antibiotic Free என்ற வகை பிராய்லர் கோழிகள் வந்துள்ளன. அதேபோல ஃப்ரீ ரேஞ்ச் சிக்கன் என்ற பெயரில் கோழிகளை மேயவிடுவதும் தொடங்கியுள்ளது.

குறைந்த விலையில் ஒரு குடும்பத்திற்குத் தேவையான மொத்தப் புரதத்தை ஒரே வேளையில் தரக்கூடிய உணவு பிராய்லர் கோழிக் கறி. அதைப் பற்றிய வதந்திகள் பெரும்பாலும் அறிவியலுக்கு அப்பாற்பட்டவையே. அதேநேரத்தில் சில இடங்களில் தவறான செயல்பாடுகள் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கண்காணித்து சரிசெய்ய வேண்டிய பொறுப்பு கால்நடை மருத்துவர்கள், பண்ணை உரிமையாளர்கள் மற்றும் அரசுக்கு இருக்கிறது. அதையும் சரிசெய்து இன்னும் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்த உணவுகளை மக்களுக்குத் தருவார்கள் என்று நம்புகிறேன்.

- பரிமாறுவோம்

******

Intermediate diet பற்றி எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் பின்பற்றலாமா? - காந்தி மணிபாலன்

Intermittent fasting எனப்படும் விரதமுறை எல்லா வகையான சர்க்கரை நோயாளிகளுக்கும் பயன்படாது. உடல் பருமனுடன் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். அதுவும் அவர்கள் விரதம் இருக்கும் நேரம் போக, மற்ற நேரத்தில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது முக்கியம். ஏற்கெனவே நான் தொடரில் கூறியுள்ளவாறு மாவுச்சத்து குறைந்த உணவுகளை எடுப்பது சரியான பயன்களைக் கொடுக்கும். அதே சமயத்தில் உடல் எடை குறைவான சர்க்கரை நோயாளிகளுக்கு விரதமுறை பெரிதாகப் பயன் தராது. அப்படியே எடுக்க விருப்பப்பட்டால் ஒரு நாளைக்குத் தேவையான அனைத்து கலோரிகளும் இரண்டு வேளை உணவில் கிடைக்கும்படி அளந்து உணவை எடுக்க வேண்டும்.

இரவில் கீரை, தயிர், மீன் சாப்பிடக் கூடாது. அதுபோல பகலானாலும் ஊறுகாய், கருவாடு சாப்பிடக் கூடாது என்று சொல்கிறார்களே, இது சரியா? - அ.யாழினி பர்வதம்

அந்தக் காலத்தில் இரவில் விளக்குகள் இல்லாத சமயத்தில் வீட்டின் அருகிலுள்ள கீரையைப் பறிக்க நாம் சென்றால், இருட்டில் விஷத்தன்மையுள்ள செடிகளைக் கீரை என்று நினைத்துப் பறித்துக் கொண்டுவந்து சாப்பிட வாய்ப்பு இருந்தது. அதனால் சுருக்கமாக ‘கீரையை இரவில் சாப்பிட வேண்டாம்' என்று சொன்னார்கள். இப்போதும் இரவு கீரையைச் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது என்று நினைப்பது தவறு. இரவில் மீன் சாப்பிடக்கூடாது, தயிர் சாப்பிடக்கூடாது, பகலில் கருவாடு சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்லப்படும் விஷயங்களுக்கு வேறு ஏதாவது நடைமுறைக் காரணங்கள் இருந்திருக்கலாம். அவை உடலுக்கு ஒவ்வாது என்பது அறிவியல்பூர்வமான கூற்று இல்லை. இரவில் சென்னை மெரினா பீச்சில் மீன் சாப்பிடும் கூட்டத்தைப் பாருங்கள். அவர்களெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 15

டாக்டரிடம் கேளுங்கள்:

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.