மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 16

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

உடல் பருமனாக இருப்பவர்கள் உடலில், குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு இருப்பது தெரிகிறது.

மாவுச்சத்து, சர்க்கரை, புரதம் பற்றி நிறைய பேசிவிட்டோம். இப்போது அதிக குழப்பங்கள் கொண்ட கொழுப்பு உணவுகளைப் பற்றிப் பேசலாம். கொழுப்பு என்றாலே உடல் எடையை அதிகரிக்கும், மாரடைப்பை ஏற்படுத்தும் என்பதே நிறைய பேரின் எண்ணம். அதனால் கொழுப்பைத் தீண்டத்தகாத பொருளாகவே பார்க்கிறார்கள்.

உடல் பருமனாக இருப்பவர்கள் உடலில், குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு இருப்பது தெரிகிறது. அதேபோல மாரடைப்பு ஏற்பட்டால் ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்திருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். எந்தப் பிரச்னைக்கு மருத்துவர்களிடம் சென்றாலும், `எண்ணெயையும் அசைவத்தையும் குறைத்துக்கொள்ளுங்கள்' என்கிறார்கள். பெரியவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவு பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் `கொழுப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள்' என்பதாகவே இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களுக்குக் கொழுப்பு பற்றி பயம் இருக்கிறது.

நவீன உணவுச்சந்தையில் ஜீரோ கொலஸ்ட்ரால் உணவுகள், லோ ஃபேட் உணவுகள், கொழுப்பு நீக்கப்பட்ட பால், கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, எண்ணெய் இல்லாமல் பயப்படுத்தக்கூடிய Non-Stick தவா என எங்கு பார்த்தாலும் கொழுப்புக்கு எதிரான செயல்பாடுகள். இன்னொரு பக்கம், `வெங்காயம், பூண்டு சாப்பிடுங்கள், மாதுளை சாப்பிடுங்கள்... இவை ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்' என்பதுபோன்ற அறிவுரைகள். இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது கொழுப்பு ஒரு தீண்டத்தகாத பொருள். அது நம் உணவில் எப்படியோ கலந்துவிட்டது என்பதுதான் நம் எண்ணமாக இருக்கிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? கொழுப்பு உண்மையிலேயே தீண்டத்தகாத உணவுதானா? பின் எதற்காக இப்படி ஒரு பொருள் படைக்கப்பட்டு நம் உடலிலும் இருக்கிறது?

முதலில், கொழுப்பின் வகைகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நான் முன்பே சொல்லியிருக்கிறேன். மாவுச்சத்து, புரதங்கள் மற்றும் கொழுப்பு ஆகியவை நம் உடலின் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ். இந்த மூன்றில் கொழுப்புக்கு நம் உடலில் இன்றியமையாத பங்கு இருக்கிறது. மக்கள், கொலஸ்ட்ராலையும் கொழுப்பையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்கிறார்கள். ஒட்டுமொத்தமாக கொழுப்பு என்பதை `Lipid' என்று சொல்லலாம். இந்தக் கொழுப்பு `Fatty acids' என்ற ஒரு வகையிலும் `Steroids' என்ற வகையிலும் இருக்கிறது. முன்சொன்ன கொலஸ்ட்ரால் `Steroid' வகையில் வரும். முட்டை பற்றிய கட்டுரையிலேயே இதை விரிவாகப் பார்த்தோம். நம் தோலுக்கு அடியில் படிந்திருப்பது, நாம் சாப்பிடுவது ஆகிய அனைத்தும் இந்த `Fatty acid'-ன் கீழே வரும். இதிலும் நிறைய வகை இருக்கிறது. `Triglycerides', `Glycolipid', `Sphingomyelin' என்பவைதான் இதில் பெரும்பாலும் இருக்கக்கூடியவை. இதில் Triglycerides-ஸைத்தான் உணவாக அதிக அளவில் எடுத்துக்கொள்வோம். இந்த வகை கொழுப்புதான் நம் உடலுக்குப் பெரும்பாலும் எரிசக்தியைக் கொடுக்கக்கூடியது. மற்ற கொழுப்புகள் நம் செல்களில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடியவை. குறிப்பாக நம் மூளை நரம்புகளிலும் அதன் கட்டமைப்பிலும் முக்கியப் பங்கு வகிப்பவை. மூளையையே ஒரு கொழுப்புப் பிண்டம் என்றுதான் சொல்வோம். அதில் `Sphingomyelin' என்ற கொழுப்புவகை இல்லாவிடில் சரியான மூளை வளர்ச்சி இருக்காது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 16

மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் மூன்று வகை இருக்கின்றன என்று சொல்லியிருந்தேன். அதில் அதிக அளவில் எரிசக்தியைக் கொடுக்கக்கூடியவை கொழுப்புகள்தான். அதேபோல எரிபொருளை நம் உடல் மிக எளிதாகச் சேமிக்கவும் இந்தக் கொழுப்புதான் உதவுகிறது. உதாரணத்துக்கு, ஒரு கிராம் மாவுச்சத்து எரிபொருளாக மாறினால் 4 கிராம் எரிசக்தி கிடைக்கிறது. அதேபோல 1 கிராம் புரதத்திலிருந்து மூன்றரை முதல் நான்கு கிராம் எரிசக்தி கிடைக்கிறது. அதே 1 கிராம் கொழுப்பை மாற்றினால் சுமார் 9 கிராம்வரை எரிசக்தி கிடைக்கிறது. அதாவது மற்றவற்றைவிட இரண்டு மடங்கு அதிகம். இதற்காகத்தான் கொழுப்பு நம் உடலில் இருக்கிறது.

தாவரங்களிலும் கொழுப்பு இருக்கிறது. அவற்றில் கொழுப்பு இருக்கும் பகுதியான விதைகளை எடுத்து அரைத்து எண்ணெயாகப் பயன்படுத்துகிறோம். சரி, ஏன் இந்தக் கொழுப்பு விதைகளில் இருக்கிறது? காரணம், விதைகள் ஒரு செடியாக, மரமாக வளர்கின்றன. ஆனால் அவை மண்ணிலிருந்து வெளிவந்து சூரிய ஒளி மூலமாக சக்தி பெறும்வரை கொழுப்பு மாதிரியான உயர்ந்த சக்தியுள்ள உணவுகளே அதற்கு எரிசக்தி கொடுக்க முடியும். அதனால்தான் விதைகளிலிருந்து எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்துகிறோம். தேங்காய் என்பதே கிட்டத்தட்ட விதைதான். இயற்கையாக அவை மரமாய் மாறுவதற்கான தொடக்க சக்தி விதைகளில் இருக்கின்றன.

இதே காரணத்துக்காகத்தான் விலங்குகளிலும் கொழுப்பு இருக்கிறது. இதுபற்றி விரிவாக அறிய நம் உடலின் மெட்டபாலிசத்தை அறிந்துகொள்ள வேண்டும். நாம் இட்லி, தோசை சாப்பிடுகிறோம். அவை அப்படியே எரிசக்தியாக மாறி நம் உடலுக்கு சக்தி தருகின்றன என்றுதான் நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது நாம் நினைப்பதுபோல இவ்வளவு சிம்பிளான ப்ராசஸ் கிடையாது. நாம் சாப்பிடும் உணவு எரிசக்தியாக மாறி செல்களுக்குப் போகாது. நாம் என்ன சாப்பிட்டாலும் இரண்டு, மூன்று மணி நேரத்தில் அவை எரிசக்தியாக மாறும். இல்லையென்றால் சேமிப்புக் கிடங்குக்குச் சென்றுவிடும். இரவு முழுக்க நாம் தூங்குகிறோம். அந்த 12 மணிநேரம் நாம் சாப்பிடுவதில்லை. அப்போது நம் உடலுக்கு எரிசக்தி எங்கிருந்து கிடைக்கிறது என்று பார்த்தால், நம் உடல் சிறிதளவு மாவுச்சத்தை Glycogen என்ற வகையில் கல்லீரலில் சேமித்துவைத்திருக்கும். அந்த Glycogen சிறிதளவு எரிசக்தி கொடுக்கும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 16

அதையும் தாண்டி, நமக்குக் கூடுதல் எரிசக்தி தேவைப்பட்டால்..? உணவு சாப்பிடுவதற்கு சற்று தாமதமாகிறது; அல்லது, விரதம் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இவையெல்லாம் நாமாக விரும்பி மேற்கொள்ளும் ஒன்று. தேவைப்பட்டால் விரதத்தைக் கலைத்துவிட்டு விரும்பிய உணவைச் சாப்பிடலாம். ஆனால் ஆதி மனிதர்களுக்குப் பசியெடுக்கும் நேரத்திலெல்லாம் சாப்பாடு கிடைத்துவிடாது. அதேபோல் விலங்குகளுக்கும்கூட நினைத்த நேரத்துக்கு சாப்பாடு வராது. ஒன்று அவை கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடி சாப்பிடவேண்டும், அல்லது, தேடிப்பிடித்துத் தாவரங்களைச் சாப்பிடவேண்டும். இன்றைக்குக் கிடைக்கும் உணவு, மறுபடியும் கிடைக்க இரண்டு நாள்கள்கூட ஆகலாம். எனவே உணவு என்பது நேராநேரத்துக்குக் கிடைக்கும் பொருள் கிடையாது.

இன்று மூன்று வேளை உணவு என்பது நமக்குப் பழகிய விஷயமாகிவிட்டது. உயிரினங்கள் தோன்றிய காலத்திலிருந்து நேரத்துக்கு உணவு என்ற கான்செப்ட் எல்லாம் இருந்ததில்லை. அப்படி நேரத்துக்கு உணவு கிடைக்காதபோது எங்கிருந்து எரிசக்தி கிடைக்கும் என நீங்கள் கேட்கலாம். அதற்காகப் படைக்கப்பட்டதுதான் கொழுப்பு. விலங்குகளில் தாவர உண்ணிகள், விலங்குண்ணிகள் தொடங்கி மனிதர்களில் சைவர்கள், அசைவர்கள் என அனைவரது உடலிலும் கொழுப்பு இருப்பதற்குக் காரணம் இதுதான். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புசத்து என எதை அதிகமாகச் சாப்பிட்டாலும் கூடுதலாக இருக்கக்கூடிய எனர்ஜியை உடலானது கொழுப்பாகத்தான் சேகரித்து வைக்கும். நமக்கு அடுத்தவேளை உணவு கிடைக்கும்வரை அதுவே எரிசக்தியாக மாறி நமக்கு உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கும். கொழுப்பு எனப்படும் இந்தத் தேக்கநிலை மட்டும் இல்லையென்றால் எந்த உயிரினமும் உயிர்வாழ இயலாது. ஏனென்றால், மாவுச்சத்தைத் தேக்கிவைக்கிற ஆற்றல் எந்த உயிரினத்துக்கும் கிடையாது. பரிணாம வளர்ச்சியில் கொழுப்பு என்ற பொருள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் விலங்குகள் என்ற இனமே வளர்ந்திருக்காது. வெறும் தாவரங்கள் மட்டுமே இருந்திருக்கும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது கொழுப்பு.

இவ்வளவு இன்றியமையாத கொழுப்பு வில்லனாக மாறியது எப்படி என்பதைப் பார்த்துவிடுவோம்.

கொழுப்பு பற்றிய பயம் எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்ள சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பயணிக்க வேண்டும். அப்போதெல்லாம் மாரடைப்பு என்ற ஒன்றைப் பற்றி மக்களுக்கு எதுவுமே தெரியாது. மாரடைப்பால் எவரேனும் இறந்தாலும் அது இயற்கை மரணமாகவே கருதப்பட்டது. 1919-ம் ஆண்டில் இறந்த ஓர் நபரை உடற்கூராய்வு செய்தபோது, `இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாயில் ஏதோ ஒரு பொருள் அடைத்து அவை செயல் இழந்திருக்கின்றன. எனவே இதயம் துடிக்காமல்தான் அவர் இறந்திருக்கிறார்' என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மேலும் மாரடைப்பால் இறந்த நபர்களின் இதயத்திற்குப் போகும் ரத்தக் குழாய்கள் ஆராயப் பட்டபோது, அதில் கொழுப்பு போன்ற பொருள் படிந்திருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதை நாம் Atherosclerosis என்றும் Atheroma என்றும் சொல்கிறோம். அப்போதிலிருந்து இந்தக் கொழுப்பு படிவதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்ற சந்தேகம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எழுந்தது. இந்தக் கொழுப்பு எங்கிருந்து நம் உடலுக்குள் வருகிறது என்பது குறித்துப் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டமாக முயல் போன்ற சுத்த சைவ உணவுகளை உண்ணும் விலங்குகளின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கொழுப்புகள் செலுத்தப்பட்டன. பின்னர், அவற்றை உடற்கூராய்வுக்கு உட்படுத்தியபோது மாரடைப்பால் இறந்தவர்களின் ரத்தக்குழாய்களில் எப்படி கொழுப்பு படிந்திருந்ததோ அதேபோன்று இவற்றிலும் இருந்தது தெரியவந்தது.

உடனே, கொழுப்பு சாப்பிட்டால் ரத்தக் குழாய்களில் இப்படிப் படியும் தன்மை அதிகமாகுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டாலும், ஒரு முக்கியமான தொடர்பை மட்டும் அவர்களால் கண்டறிய முடியவில்லை. அதாவது, மாரடைப்பு ஏற்படுபவர்களின் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்திருப்பது உண்மை. அதை யாரும் மறுக்கவில்லை. அதேபோல சைவ உணவுகளைச் சாப்பிடும் விலங்குகளின் ரத்தக்குழாய்களில் கொழுப்பைச் செலுத்தி ஆராயப்பட்டபோதும், அவற்றில் கொழுப்பு படிவது உறுதி செய்யப்பட்டது. ஆனால் நாம் உணவில் எடுத்துக்கொள்ளும் கொழுப்புதான் நேரடியாகச் சென்று படிந்து மாரடைப்புக்குக் காரணமாக இருக்கிறது என்பது மட்டும் நிரூபணமாகவே இல்லை.

1950 வரையிலும் உலகம் முழுவதும் மக்கள் கொழுப்பை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொண்டார்கள். நம்மூரில் நெய், வெண்ணெய் போன்ற பொருள்களும் வெளிநாடுகளில் பன்றி இறைச்சி, கொழுப்பு போன்றவையும் மிக சகஜகமாகப் பயன்படுத்தப்பட்டன. கொழுப்பு சாப்பிடக்கூடாது என அங்குமிங்குமாக வந்த ஆராய்ச்சி முடிவுகளை மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தநேரத்தில்தான் கதையில் ஒரு முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது.

அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்தவர் ஐசன் ஹோவர். அவர் முன்னாள் ராணுவ வீரர். உடற்பயிற்சிகள் செய்து உடலை மிக ஃபிட்டாக வைத்திருப்பார் அவர். அசைவ விரும்பி. இதுதவிர 3-4 பாக்கெட் சிகரெட்டுகளை ஊதித்தள்ளுவார். அமெரிக்காவின் ஃபிட்டான ஜனாதிபதி என்று சொல்லப்பட்ட அவருக்கு 1955-ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காதவகையில் மாரடைப்பு ஏற்பட்டது. பெரிய ஆட்களுக்கு ஏதேனும் ஏற்படும்போதுதானே ஒரு விஷயம் அனைவராலும் பேசப்படும். அதேபோலத்தான் `அமெரிக்க ஜனாதிபதிக்கே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுவிட்டதே' என மக்கள் ஆடிப்போய்விட்டனர். அதன்பிறகுதான் ஏன் மாரடைப்பு ஏற்படுகிறது என்பதை அறிய அமெரிக்கா தொடங்கி பல நாடுகளில் மிகத் தீவிர ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்தச் சூழலில் அமெரிக்காவின் முக்கிய Physiologist மருத்துவர் ஆன்சல் கீஸ் இக்கதையில் நுழைகிறார்.

இவர் நாம் சாப்பிடும் உணவுக்கும் மாரடைப்பும் தொடர்பு உண்டு என்று நம்பியவர். அதுபோன்ற ஆராய்ச்சிகளுக்காக மிகப்பெரிய அளவில் அப்போது நிதிகள் ஒதுக்கப்படவே, இவரும் அதில் இணைந்து மிகப் பெரிய ஆராய்ச்சி ஒன்றைத் தொடங்குகிறார். அதாவது அமெரிக்கா, பின்லாந்து, நெதர்லாந்து, கிரீஸ், யுகோஸ்லாவியா, இத்தாலி, ஜப்பான் முதலிய ஏழு நாடுகளில், கொழுப்பு - அதிலும் குறிப்பாக Saturated கொழுப்பு எனப்படும் நிறை கொழுப்பை மக்கள் எந்த அளவுக்கு சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு எந்த அளவுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்பது ஆராயப்பட்டது.

அதாவது ஆயிரம் பேரையோ, ஐந்நூறு பேரையோ எடுத்துக்கொள்ளாமல், நாட்டின் மொத்த ஜனத்தொகை எந்த அளவு உணவு உட்கொள்கிறது என்பதைப் பெரும் பொருட்செலவில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை ‘7 Country Study’ என்ற பெயரில் வெளியிடுகிறார் கீஸ். அக்காலத்தில் இது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. `உணவில் எவ்வளவு அதிகமாக கொழுப்பு சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்' என்பது அவர் வெளியிட்ட முடிவு. இதை ஓர் கிராப் மூலம் விளக்கி, ஜப்பான் மக்கள் குறைந்த கொழுப்பு சாப்பிடுவதால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றும், அமெரிக்க மக்கள் அதிக அளவில் கொழுப்பு சாப்பிடுவதால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் மிக அதிகம் என்றும் கூறினார்.

அதேநேரத்தில் 5,000-10,000 பேரை வைத்து வேறு சில ஆராய்ச்சி முடிவுகளும் வெளிவந்து கொண்டிருந்தன. Framingham Heart Study, Minnesota coronary survey, Sydney Heart Health Study முதலியவை இந்த வகை ஆராய்ச்சிகள். மேலும், ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் முடிவுகள் வந்தன. இந்த இரண்டு முடிவுகளையும் சேர்த்து, உணவில் கொழுப்பு சேர்த்து சாப்பிடுவதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்ற முடிவு வெளியிடப்பட்டது. இதை diet heart hypothesis என்பர். இதை அமெரிக்க இதய மருத்துவக் கூட்டமைப்பும் ஆமோதிக்கிறது. இதனால் நெய், வெண்ணெய் ஆகியவற்றை மிக அதிக அளவில் எடுத்துக்கொண்டிருந்த மக்கள் உடனடியாக Fat Free, Cholesterol Free என மாறிவிட்டனர். நம்மைச் சுற்றி இருக்கும் சூப்பர் மார்க்கெட் தொடங்கி நம் உணவுத்தட்டு வரை இதுவே தொடர்கிறது. மக்களும் கொழுப்பு இல்லாத உணவுகளே ஆரோக்கியமானவை என மிக உறுதியாக நம்பத் தொடங்கிவிட்டார்கள். அது இன்றுவரை தொடர்கிறது.

எண்ணெய் இல்லாமல் தோசை சுடத் தொடங்கினோம்; முட்டையின் மஞ்சள் கருவை ஒதுக்க ஆரம்பித்தோம்; அசைவ உணவுகளை நிறுத்திவிட்டோம். ஆனால் இதற்குப் பதில் எண்ணெய் இல்லாமல் கூடுதலாக இரண்டு தோசைகளைச் சாப்பிடத்தொடங்கினோம். கொழுப்பு நீக்கிய பாலை அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தோம். இதுபோல நம் உணவுப் பழக்கவழக்கம் அப்படியே தலைகீழாக மாறத்தொடங்கியது. சரி, கொழுப்பைப் பெருமளவில் ஒதுக்கிவிட்டோம். அப்படிச் செய்த பிறகு நாம் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்ததா? உடல் பருமன் அளவு குறைந்ததா?

அடுத்த வாரம் பார்ப்போம்

- பரிமாறுவோம்

****

முள் சீத்தாப்பழத்தில் Antioxidant அதிகம் இருப்பதாக கேள்விப்பட்டேன். உண்மையா? - எழிலன்

ஊரில் கிடைக்காத வித்தியாசமான, அரிதான பழங்களில் `அந்தச் சத்து உள்ளது, இந்தச் சத்து உள்ளது, சாகா வரம் கொடுக்கும்’ என்றெல்லாம் எப்படித்தான் செய்திகள் பரவுகின்றனவோ தெரியவில்லை. நீங்கள் கூறும் முள் சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி உள்ளது. அதனால் Antioxidant அதிகம் இருப்பதாக எங்காவது யாராவது எழுதியிருப்பார்கள். 100 கிராம் முள் சீத்தாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சியைவிட, 100 கிராம் நெல்லிக்காயில் 15 மடங்கு அதிகம் வைட்டமின் சியும் Antioxidant-ம் உள்ளன. அரிதான உணவுகள் பின்னாலேயே சுற்றுவதைத் தவிர்த்துவிட்டு நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் உள்ள சத்துகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முயல்வோம். தொடரைத் தொடர்ந்து படியுங்கள். நிறைய பேசுவோம்.

ஆட்டு ஈரல்போல கோழி ஈரலையும் சாப்பிடலாமா? - அண்ணா அன்பழகன்

கோழி ஈரலும் சாப்பிடலாம். முக்கியமான இரண்டு சத்துகளுக்காக ஈரல் பரிந்துரைக்கப்படுகிறது. இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12. ஆட்டு ஈரல், கோழி ஈரல் இரண்டிலும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். ஆனால், திறந்தவெளியில் புல், புழுக்களை மேயும் கோழிகளின் ஈரலில் மட்டும்தான் பி-12 சத்து போதிய அளவு இருக்கும். தீவனம் போட்டு வளர்க்கப்படுகிற கோழி ஈரலில் பி-12 சத்து அந்த அளவுக்கு இருக்காது.

டாக்டரிடம் கேளுங்கள்:

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.