மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 17

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

ரத்தக்குழாயில் கொழுப்பு படிவது பற்றி நாம் சற்று விரிவாகப் பார்க்கலாம். Atherosclerosis என்கிற process-ஐ எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகரித்துவரும் இதய நோய்களுக்குக் கொழுப்புதான் காரணம் என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளது. பலரும் இதனால் கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கிறார்கள். ஆனால், அதனால் இதய நோய்கள் குறைந்ததா என்றால், இரண்டு மடங்கு அதிகமாகியிருப்ப தாகவே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

எங்கேயோ இடிக்கிறது அல்லவா?

மக்கள் கொழுப்புக்குப் பதில் நிறைய சர்க்கரை போட்டு கார்ன்ஃபிளேக்ஸ், மாவுச்சத்து நிறைந்த இனிப்பு வகைகளை இஷ்டத்துக்குச் சாப்பிடத் தொடங்கிவிட்டார்கள். இவை அனைத்தும் சேர்ந்து இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை அதிகரித்து உடல் பருமன், சர்க்கரை நோயை வரவழைத்து இதய நோய்களைப் பலமடங்கு அதிகமாக்கிவிட்டன. மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய கதை என்பார்களே, அதைப்போல ஆகிவிட்டது.

மாரடைப்புக்குக் கொழுப்பு காரணமா என்று ஆன்சல் கீஸ் ஏழு நாடுகளை வைத்து ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்ட நேரத்தில் இன்னும் நிறைய நாடுகள் (22 நாடுகள்) பற்றிய தகவல்களும் இருந்தன. அவர் வெளியிட்ட முடிவுகள்படி, கொழுப்பு அதிகம் எடுத்துக்கொண்ட நாடுகளில் மாரடைப்பு அதிகம் ஏற்பட்டது. அதேநேரம் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஐஸ்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளின் மக்கள் மிக அதிக அளவில் நிறை கொழுப்பைத் தங்கள் உணவில் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே மாரடைப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் யாருக்கும் புரியவில்லை.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 17

இந்நிலையை மருத்துவ உலகில் ‘French Paradox' என்று சொல்வார்கள். அங்குள்ள மக்கள் அதிக அளவில் உடற்பயிற்சி செய்கிறார்கள்; ரெட் ஒயின் குடிக்கிறார்கள்; ஆலிவ் எண்ணெய் உபயோகிக்கிறார்கள். அதனால்தான் கொழுப்பு அதிகமாக சாப்பிட்டாலும் அங்கு மாரடைப்பு இல்லை என்று பல சப்பைக் காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம் இதுதான் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. ஜார்ஜியா, அஜர்பைஜான், மால்டோவா, குரோஷியா, மாசிடோனியா, உக்ரைன் போன்ற நாடுகளில் மக்கள் குறைவான கொழுப்பை எடுத்துக் கொண்டாலும் அதிக அளவில் மாரடைப்பு ஏற்பட்டது. இதற்கான காரணமும் புரியவில்லை. அப்போது ஆன்சல் கீஸ், தனக்குத் தேவையான முடிவுகள் வரவேண்டும் என்பதற்காகச் சில நாடுகளின் முடிவுகளை மட்டும் முன்னிலைப் படுத்தினார் என்பதே ஆராய்ச்சியாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.

அதற்கு முன் வந்த எல்லா ஆராய்ச்சிகளையும் British Medical Journal 2016-ம் ஆண்டில் மீண்டும் ஒருமுறை ஆராய்ந்தது. நாம் சாப்பிடும் எண்ணெயை மாற்றி கொலஸ்ட்ராலைக் குறைக்க முயற்சி செய்தாலும் அதனால் எந்த Mortality Benefits-ம் இல்லை என்று அதில் சொல்லப்பட்டது. அதாவது ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்தாலும் இறப்பு விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லை. இதன் பின்னணியில் இன்னொரு அதிர்ச்சியான விஷயமும் இருக்கிறது. ஒவ்வொரு 30 கிராம் கொலஸ்ட்ராலைக் குறைக்கும்போதும், மாரடைப்பு இல்லாமல் மற்ற நோய்களால் இறக்கும் விகிதம் 22 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று British Medical Journal-ன் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. எனவே, உணவில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால் மாரடைப்பு குறைவது போன்ற மாயத் தோற்றம் ஏற்பட்டாலும், ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை. எனவே, வெறுமனே மாரடைப்பை ஏற்படுத்துவதற்காக கொலஸ்ட்ரால் படைக்கப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த ஆராய்ச்சிகள் தவிர Puerto Rico Heart Health study, Honolulu Heart health Study, DeBakey study போன்றவற்றில் ‘உணவில் இருக்கும் கொழுப்பு விகிதத்துக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கும் பெரிய தொடர்பு இல்லை' என்றே வந்தது.

ரத்தக்குழாயில் கொழுப்பு படிவது பற்றி நாம் சற்று விரிவாகப் பார்க்கலாம். Atherosclerosis என்கிற process-ஐ எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். மாரடைப்பு என்றால் நீங்கள் நினைப்பது மாதிரி குழாயில் உப்பு படிவதைப் போல் இல்லை. கொழுப்பு அப்படியே ரத்தக்குழாயில் போய் ஒட்டிக்கொள்வதில்லை. உயர் ரத்த அழுத்தம், புகைப்பழக்கம், உடல் பருமன், சர்க்கரை நோய், அதிக இன்சுலின் எதிர்ப்புத் தன்மை போன்ற காரணங்களால் ரத்தக்குழாய்களில் காயங்கள் (inflammation) ஏற்படலாம். தொடர் மன அழுத்தம், மரபணு காரணங்கள், தொற்று, மாசு மாதிரி காரணங்களாலும் ரத்தக்குழாய் பழுதாகும். வயது முதிர்வும் ரத்தக்குழாய் பழுதாக முக்கியக் காரணம். இப்படிப் பழுது ஏற்படும்போது உடலில் இருக்கும் கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைந்து, உள்ளே போய்ப் படிகிறது. சில அறிவியலாளர்கள் ‘அது காயத்தை ஆற்றுவதற்காகத்தான் போகிறது' என்றும் சொல்கிறார்கள். எனவே ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்து மாரடைப்பு ஏற்படக் காரணம், ரத்தக்குழாயில் காயம் ஏற்படுவதற்குக் காரணமாக நான் சொன்ன பிரச்னைகள்தானே தவிர, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருப்பதல்ல. மிக அரிதாக சில தீவிர மரபணுக் குறைபாடுள்ளவர்களுக்கு (familial hypercholesterolemia) ரத்தத்தில் 250-300 அளவில் ldl கொலஸ்ட்ரால் மிக அதிகமாக இருக்கும். அதனால் குறைந்த வயதில் மாரடைப்புப் பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால் இதே ஒப்பீடு மற்றவர்களுக்குப் பொருந்தாது. இதுபோன்ற தீவிர மரபணுப் பிரச்னைகள் தவிர, மிதமான அளவில் ரத்த கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் நபர்களுக்கு அதனால் மாரடைப்பு அதிகம் ஆவதாக எந்தவித ஆராய்ச்சிகளிலும் ஆணித்தரமாக நிரூபிக்கப்படவில்லை.

மாரடைப்புக்காக மருத்துவ மனையில் அட்மிட் ஆகும் மக்களில் 70% பேருக்கு கொலஸ்ட்ரால் அளவுகள் நார்மலாக இருப்பதாகவே அமெரிக் காவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படக் காரணம் என்ன? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரத்தக்குழாயில் ஏற்படும் உள்காயங்கள் காரணமா, அல்லது சிவனே என்று ரத்தத்தில் சுற்றி வேலை பார்க்கும் கொலஸ்ட்ரால் அளவுகள்தான் காரணமா என்பது உங்களுக்கே புலப்படும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 17

கொழுப்பு பற்றிய மூட நம்பிக்கைகளை அறிவியல், வரலாற்று ஆதாரங்கள் கொண்டு உடைத்து விட்டோம். இப்போது கொழுப்பு உணவுகளில் என்னென்ன வகைகள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

நான் முன்பே சொன்னதுபோல Triglycerides வகை கொழுப்புகளே நாம் பெரும்பாலும் உணவில் எடுத்துக்கொள்பவை. நம் உடல் தேக்கிவைப்பதும் அவற்றைத்தான். Triglycerides கொழுப்புகளை Fatty Acids என்று சொல்வோம். அவற்றில் இரண்டு முக்கிய வகைகள் இருக்கின்றன. Saturated Fatty acids என்று சொல்லக்கூடிய நிறை கொழுப்புகள், Unsaturated Fatty Acids எனப்படும் நிறையுறா கொழுப்புகள். Unsaturated Fatty Acids-லும் இரண்டு வகைகள் உண்டு. Polyunsaturated Fatty acids (PUFA), Monounsaturated Fatty Acids (MUFA). நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் இதில் அடங்கிவிடும். கொழுப்பு உணவுகள் என்றால் நமக்குப் பொதுவாக ஞாபகம் வருவது அசைவ உணவுகள், முட்டை, பால், நெய், வெண்ணெய், பனீர், எண்ணெய் வகைகள். ஆனால் நிறைய பேருக்குத் தெரியாத விஷயம், சைவ உணவுகளில் அரிசி, பருப்பு, பயிறு வகைகளில்கூட கொழுப்பு உண்டு. ஆனால் அளவு மிகவும் குறைவு. 100 கிராம் தானியத்தில் 1 கிராம் அளவுகூட கொழுப்பு இருக்காது. சிறு தானியங்களில் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். நிறைய பேர் கொழுப்பு குறைவாக இருக்கும் என்று ஓட்ஸ் சாப்பிடு வதுண்டு. ஆனால் தானியங்களிலேயே அதிக அளவு கொழுப்பு இருப்பது ஓட்ஸில்தான். 100 கிராமில் கிட்டத்தட்ட 7 கிராம் அளவுக்குக் கொழுப்பு இருக்கிறது. அது நல்லதா கெட்டதா என்பதைத் தாண்டி ஒரு ஒப்பீட்டுக்காக மட்டுமே இதைக் கூறுகிறேன். அதேபோல சோயாபீன்ஸைத் தவிர பயிறு வகைகளிலும் பெரிய அளவில் கொழுப்பு கிடையாது. நிலக்கடலை, பாதாம், தேங்காய், முந்திரி போன்ற விதை வகைகளில் கொழுப்பு உண்டு. தாவரங்களின் விதைகள், அவற்றிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய்களில் தான் அதிக கொழுப்பு இருக்குமே தவிர இலை, தண்டு ஆகியவற்றில் அல்ல.

இதெல்லாம் ஓகே. ஆனால் இதில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று எதைச் சொல்கிறார்கள் என்று பார்த்தால், அதில்தான் குழப்பமே இருக்கிறது. காலங்காலமாக தாங்கள் வாழும் பகுதியில் என்ன கிடைக்கிறதோ அதையே உணவுகளாக, எண்ணெய்களாக மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். நம்மூரில் தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், சீனாவில் சோயா எண்ணெய், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பனை எண்ணெய், மெடிட்டேரியன் நாடுகளில் ஆலிவ் எண்ணெய் என ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கூடியவை மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

1980-களில் ஆன்செல் கீஸின் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு நிறை கொழுப்புகள்(saturated fats) அதிகம் இருக்கக்கூடிய உணவுகள் ரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றன என்றும் அவை மாரடைப்பு வாய்ப்பை அதிகப்படுத்தும் என்றும் கூறப்பட்டது. அதற்குப் பிறகுதான் நிறைகொழுப்புகளை ‘கெட்ட கொழுப்பு' என்றும் நிறையுறா கொழுப்புகளை ‘நல்ல கொழுப்பு' என்றும் மருத்துவ உலகம் பாகுபாடு காட்டத்தொடங்கியது. பால், அசைவ உணவுகளில் இருப்பவை நிறை கொழுப்புகளின்கீழ் வரும். ஆனால் நிறைய பேர் அசைவ உணவுகளில் இருப்பவை வெறும் நிறை கொழுப்புகள்தான் என்று தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் அசைவத்தில் மேலே கூறிய மூன்று வகை கொழுப்புகளும் சமநிலையில் இருக்கும், அதிலும் முக்கியமாக மருத்துவ உலகம் மிகவும் நல்லது என்று கருதும் MUFA வகை கொழுப்புகளே அசைவத்தில் அதிகம். இந்த உண்மை பலருக்குத் தெரிவதில்லை. தாவரங்களில், இதன் அளவு நிறைய மாறுபட்டிருக்கும். உதாரணத்துக்கு தேங்காய் எண்ணெயில் 87% நிறை கொழுப்பு இருக்கிறது. நிறையுறா கொழுப்பு வெறும் 8% மட்டுமே. வெண்ணெய் மற்றும் நெய்யில் 67% நிறை கொழுப்பு இருக்கிறது. பனை எண்ணெயில் 49% நிறை கொழுப்பு.

ஆலிவ் எண்ணெய் மிகவும் நல்லது என்று சொல்வார்கள். காரணம், அதில் இதயத்துக்கு நல்லது என்று சொல்லப்படும் MUFA நிறைய இருக்கிறது என்பதும் ஒரு கருத்து. அந்த வகை Fatty Acid கிட்டத்தட்ட அதே அளவு இருக்கும் இன்னொரு பொருள் நிலக்கடலை. வெஜிடபிள் ஆயில் என்று நாம் சொல்லும் கார்ன் ஆயில், ரைஸ் ப்ரான் ஆயில் போன்றவற்றில் PUFA வகை நிறையுறா கொழுப்புகள் அதிகமாகவும் நிறை கொழுப்புகள் மிகக் குறைவாகவும் MUFA நடுத்தர அளவிலும் இருக்கின்றன. நிறை கொழுப்புகள் மோசம் என்றும் நிறையுறா கொழுப்புகள் நல்லது என்றும் 1980-களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் முன்வைக்கப்பட்டதால் நிறை கொழுப்புகள் இருக்கக்கூடிய எண்ணெய் முதலிய உணவுப் பொருள்கள் அனைத்தும் கெட்டது என்று மாறுகிறது. தேங்காய் எண்ணெய், வெண்ணெய், நெய், அசைவ உணவுகள் என அனைத்தும் கெட்டதாகிவிடுகிறது.

1980-களுக்குப் பிறகு தேங்காய் எண்ணெய் தொடங்கி அனைத்தையும் விட்டு ஓடத் தொடங்குகிறோம். அதற்கு பதில் PUFA அதிகம் இருக்கக்கூடிய வெஜிடபிள் எண்ணெய் முதலிய உணவு வகைகள் இதயத்துக்கு நல்லது, கொலஸ்ட்ராலுக்கு நல்லது என்று முன்வைக்கப்பட்டன. பாரம்பரிய எண்ணெய்களை விட்டுவிட்டு, மிக அருமையாக மார்க்கெட்டிங் செய்யப் படுகிற இந்த வகை எண்ணெய்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறோம்.

நான் முன்பு சொன்னதுபோல கடந்த 30-40 வருடங்களில் மாரடைப்பு 2-3 மடங்கு அதிகமாகி யிருக்கிறது. மேலும் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமனும் அதிகரித்துள்ளது. உடல்நலனுக்காகக் கொழுப்பு வகைகளை மாற்றினோம். ஆனால், நோய்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இதில் ஏதோ சிக்கல் இருப்பது தெரிகிறது. இதனால் அந்தப் பழைய ஆராய்ச்சி முடிவுகள் தூசி தட்டிப் பார்க்கப் படுகின்றன.

அப்போது இந்த நிறையுறா கொழுப்புகளிலும் பிரச்னை இருப்பது தெரியவருகிறது. நிறையுறா கொழுப்புகளில் PUFA, MUFA என இரண்டு வகை இருப்பதாகச் சொன்னோம். இதில் MUFA ஓரளவுக்கு நல்லது என்றும் பிரச்னைகள் இல்லை என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால் இந்த PUFA-வில் சில சிக்கல்கள் இருக்கின்றன. PUFA வகையில் உள்ள அனைத்துமே நல்லது கிடையாது. அதில் சில ஆரோக்கியம் இல்லாதவை. PUFA கொழுப்புகளை Omega-3 மற்றும் Omega-6 Fatty Acids என்று கூடுதலாகப் பிரிக்கிறோம்.

இதில் Omega-3 எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நம் ரத்தக் குழாய்களுக்கு நல்லது. ரத்தக்குழாய்களில் உள்காயங்களைத் தடுக்கும் தன்மை வாய்ந்த (Anti-inflammatory) கொழுப்பு வகை அது. ஆனால், Omega-6 வகை கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் ஏற்படும் காயங்களை அதிகமாக்கும் தன்மை உடையவை. பாரம்பரிய எண்ணெய் வகைகளில் இருந்து சூரிய காந்தி முதலிய எண்ணெய்களுக்கு மாறியபோது கொலஸ்ட்ரால் அளவு குறைந்தாலும் மாரடைப்பு ஏற்படும் விகிதம் குறையாமல் மற்ற நோய்கள் அதிகரித்ததற்கான முக்கிய காரணம் இதுதான். இந்த எண்ணெய்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை மட்டும் குறைத்தாலும் உள்காயங்களை அதிகப்படுத்துகின்றன.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 17

அதனால்தான், நாம் சாப்பிடும் உணவுகளில் Omega-3 மற்றும் Omega-6 ஆகியவற்றின் விகிதம் எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். அதாவது, நாம் சாப்பிடும் உணவில் 1 மடங்கு Omega-3 வகை கொழுப்பு இருந்தால் நான்கு மடங்கு Omega-6 வகை கொழுப்பு எடுத்துக்கொள்ளலாம். அதற்குமேல் omega-6 வகை கொழுப்புகள் அதிகரித்தால் ரத்தக் குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற விஷயம் தற்போது முன்வைக்கப்படுகிறது. Omega-3 வகை கொழுப்புகள் பெரும்பாலும் அசைவ உணவுகள் அதிலும் குறிப்பாக மீன் வகைகள்... அதேபோல தீவனம் போடாமல் இயற்கையாக புற்களை மேய்ந்து வளரும் ஆடு, கோழியின் இறைச்சிகளில் கிடைக்கும். சைவ உணவுகளில் Flax விதைகளிலும், வால்நட் போன்ற ஒன்றிரண்டு நட்ஸ் வகைகளிலும் இது கிடைக்கிறது.

ஆனால் இந்த உணவுகள் சாமானியன் சாப்பிடக்கூடியவை அல்லவே! உண்மையைச் சொன்னால், இந்த இரண்டு வகை கொழுப்புகளின் விகிதத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள, சூரியகாந்தி எண்ணெய் போன்ற வெஜிடபிள் எண்ணெய் வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலே போதுமானது.

நல்ல கொழுப்புகள் என்னென்ன? கெட்ட கொழுப்புகள் என்னென்ன? சமையலுக்கு உகந்த எண்ணெய்கள் எவை? அடுத்த வாரம் பேசுவோம்!

- பரிமாறுவோம்

****
மருத்துவ குணம் கொண்டதென ஒட்டகப் பால், கழுதைப் பாலை அதிக விலைக்கு விற்கிறார்கள். அவற்றில் மருத்துவக் குணம் இருப்பது உண்மைதானா? - அண்ணா அன்பழகன்

மக்களின் அறியாமையும், தங்கள் பிரச்னைக்கு அதிசயத் தீர்வு எதுவும் கிடைத்துவிடாதா என்ற எண்ணமும்தான் இதற்கெல்லாம் காரணம். பெரும்பாலான பாலூட்டி இனங்களின் பால், சில விஷயங்களில் வித்தியாசங்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படைச் சத்துக்கள் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருக்கும். ‘ஒட்டகப் பாலில் இன்சுலின் இருக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு அது நல்லது’ என்று சொல்லப்படுகிறது. இது முற்றிலும் தவறு. இன்சுலின் என்பது மிருகங்களின் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன். ரத்தத்தில் இருக்கும் இன்சுலின் ஒருபோதும் பாலில் சுரக்காது. அதேபோல ஒட்டகப் பாலுக்கு அப்படி ஒரு தன்மை இருந்தால் அரபு நாடுகளில் சர்க்கரை நோயாளிகள் மிகக்குறைவாக இருப்பார்கள். ஆனால், உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் இருக்கும் நாடுகளில் அரபு நாடுகளும் உண்டு.

கழுதைப் பாலில் பால் கெட்டுப்போகாமல் தடுக்க இயற்கையாக சில ரசாயனங்கள் இருக்கின்றன. அதனால் சளி போன்ற பிரச்னைகளுக்கு அது மருந்தாகச் சொல்லப்படுகிறது. மற்றபடி மிகப்பெரும் வித்தியாசமெல்லாம் இல்லை. தாய்ப்பாலைத் தவிர மற்ற எல்லாப் பாலையும் அளவோடுதான் அருந்த வேண்டும்.

உண்மையில் முந்திரிப்பருப்பு உடலுக்கு நல்லதா? சர்க்கரை, இதய நோயாளிகள் சாப்பிடலாமா? - ராம்பிரசாத்

‘முந்திரிப் பருப்பில் நிறை கொழுப்பு அதிகம் இருக்கின்றது... அது நல்லதல்ல’ என்று தவறாக அறிவுறுத்தப்பட்டு வந்தது. நாம் தொடரில் பார்த்தபடி முந்திரிப் பருப்பில் உள்ள நிறை கொழுப்பு stearic acid எனும் ஆரோக்கியமான வகைதான் என்று நிரூபணம் ஆகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் உடலுக்கு நன்மைசெய்யும் MUFA வகை நிறையுறா கொழுப்பு அதிகம் உள்ளது. அதனால் கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைக்கும் வல்லமைகூட முந்திரிக்கு உண்டு என்பது தெரியவந்துள்ளது. ஆனால், மற்ற நட்ஸ் வகைகளுடன் ஒப்பிடும்பொழுது முந்திரியில் இரண்டு மடங்கு அதிகமாக மாவுச்சத்து உள்ளது. சர்க்கரை நோய், உடல் பருமன் இருப்பவர்களுக்கு முந்திரிப் பருப்பை உண்ணும்படி நான் அறிவுறுத்துவது இல்லை. இதயப் பிரச்னை உள்ளவர்கள் அவ்வப்போது ஐந்து அல்லது பத்து எனும் அளவுகளில் முந்திரி எடுத்துக்கொள்வது தவறில்லை.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 17

டாக்டரிடம் கேளுங்கள்:

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.