மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 19

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 19

நோய்களை இப்படிப் பிரிப்பது போலவே சூட்டுத்தன்மையுள்ள உணவுகள், குளிர்ச்சித்தன்மையுள்ள உணவுகள் எனப் பிரிக்கிறார்கள்

நிறை கொழுப்புகள், நிறையுறாக் கொழுப்புகள் பற்றி கடந்த சில வாரங்களில் நிறைய ஆய்வு செய்தோம். கொழுப்பு குறித்து சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளைத் தகர்க்க வேண்டும் என்பதே நம் நோக்கம். அது தொடர்பாக சந்தேகங்கள் ஏதுமிருந்தால் arokkiam@vikatan.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். விவாதிப்போம்.

இந்த வாரம் கொஞ்சம் லைட்டான விஷயத்தைப் பற்றிப் பேசலாம். சாதாரணமாக உணவு விஷயத்தில் நம் வீடுகளில் ஒலிக்கும் வார்த்தைகள் `குளிர்ச்சி', `சூடு'. ‘இது சூடுப்பா, இதைச் சாப்பிட்டா வயித்துல எரிச்சல் ஏற்படும்'. `இது குளிர்ச்சி, இது சாப்பிட்டா சளிப்பிடிச்சுக்கும்' என எல்லா உணவுகளையும் பெரியவர்கள் வகைப்படுத்துவார்கள். குளிர்ச்சி, சூட்டை மையமாக வைத்து நிறைய நோய்களைத் தொடர்புபடுத்தும் வழக்கமும் இருக்கிறது.

ஒரு குழந்தைநல மருத்துவராக, சளி காய்ச்சலுடன் வரும் பல குழந்தைகளை தினம் தினம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். “நல்லாத்தான் டாக்டர் இருந்தா. சொல்லச் சொல்லக் கேட்காம கொய்யாப்பழம் சாப்பிட்டா... குளிர்ச்சி... சளிப்புடிச்சுக்கிச்சு’’, “சாத்துக்குடி ஜூஸ் குடிச்சான், அதுல இருந்தே சளியும் காய்ச்சலுமா இருக்கு”, “ரெண்டு மாம்பழம் ஒண்ணா சாப்பிட்டான்... சூடு, வயித்துவலியைக் கிளப்பிருச்சு’’ என்றெல்லாம் என்னிடம் வரும் பெற்றோர் சொல்வார்கள். அறிகுறிகளைச் சொல்வதைவிட எதனால் ஏற்பட்டது என்று சொல்லி அதற்கான தீர்வுகளைக் கேட்பார்கள். அந்த அளவுக்கு நோய்களை நாம் சூடு, குளிர்ச்சி ஆகிய இரண்டோடு தொடர்புபடுத்தி வைத்திருக்கிறோம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 19
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 19

சூடு, குளிர்ச்சி போன்றவை உண்மையில் நோய்களைத் தீர்மானிக்கின்றனவா? இவை நம்மூர் மருத்துவ முறைகளில் மட்டும்தான் இருக்கிறதா? அல்லது, பிறநாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் உண்டா? குளிர்ச்சியான, சூடான உணவுகள் எவை, அவற்றை எந்த அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்பதையெல்லாம் அலசுவோம்.

இந்திய மருத்துவ முறைகளான சித்தாவும் ஆயுர்வேதமும் குளிர்ச்சி, சூடு பற்றிப் பொதுவான செய்திகளையே கூறுகின்றன. ஆயுர்வேதத்தில் வாதம், பித்தம், கபம் என நோய்களை மூன்றாகப் பிரிக்கிறார்கள். சித்த மருத்துவத்திலும் இதுபோன்ற பிரிவினைகள் இருக்கின்றன. பித்தத்தைச் சூடு சார்ந்தும்; வாதம், கபம் இரண்டையும் குளிர்ச்சி சார்ந்தும் வகைப்படுத்துகிறார்கள்.

சூடு என்றால் வெறும் காய்ச்சல் என்ற பொருள் மட்டும் கிடையாது. எவையெல்லாம் எரிச்சல், வலி ஆகியவற்றைத் தருகின்றனவோ அவையெல்லாம் பித்த நோய்கள்; கண் எரிச்சல், சிறுநீர் மலம் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல்கள், வயிற்று எரிச்சல், கடும் வியர்வை, தோல் வெடிப்பு, வெயில் புண், காமாலை, வாய்ப்புண் போன்றவற்றைப் பித்த நோய்களாக வகைப்படுத்துகிறார்கள். குளிர்ச்சியை வாதம் என்று சொல்கிறோம். பெரும்பாலும் தசை, எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்னைகள், பக்கவாதம் போன்ற நரம்பியல் பிரச்னைகள், மலச்சிக்கல், இதயத் துடிப்பு சார்ந்த பிரச்னைகள், பல்வலி, காதுவலி, நடுக்கம் ஆகியவை வாதம் என்ற வகைக்குள் வரும். அடுத்தது கபம். சளி, இருமல், சோர்வு, உடல் பருமன் போன்றவை கபத்தில் அடங்கும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 19
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 19

நோய்களை இப்படிப் பிரிப்பது போலவே சூட்டுத்தன்மையுள்ள உணவுகள், குளிர்ச்சித்தன்மையுள்ள உணவுகள் எனப் பிரிக்கிறார்கள். இரண்டிலும் அடங்காத நியூட்ரல் வகை உணவுகளும் உண்டு. முட்டை தொடங்கி பெரும்பாலான அசைவ உணவுகள் சூடு வகையில் வருகின்றன. மீன் மற்றும் எருது இறைச்சி இதில் விதிவிலக்கு. மேலும் காரமான மசாலாப் பொருள்கள், மிளகாய், பூண்டு, வெங்காயம், புளிப்புத் தன்மையைக் கொடுக்கும் பொருள்கள், பயறு வகைகள் ஆகியவையும் இந்த வகையில் அடங்கும். உலர் திராட்சை, பப்பாளி, தக்காளி, மாம்பழம் ஆகியவற்றைத் தவிர பெரும்பாலான இனிப்புத்தன்மையுடைய, நீர்த்தன்மை அதிகமுள்ள பழங்கள் குளிர்ச்சியைத் தருபவை. காய்கறிகளும் குளிர்ச்சி வகைதான். தயிர், மோர், பால் போன்ற உணவு வகைகள், நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் சோறு, கோதுமை, சர்க்கரை ஆகியவையும் இந்த வகைதான். ஆட்டுப்பால், கல் உப்பு, பச்சைப் பயிறு, பழைய அரிசி, பொரி ஆகியவற்றைச் சூடு, குளிர்ச்சி வகைகளில் சேராத உணவுப்பொருள்கள் என்று வகைப்படுத்தலாம்.

சூடு அல்லது பித்தம் அதிகமாவதால் ஏற்படும் நோய் வயிற்றுப்போக்கு என நம்பப்படுகிறது. காரமான உணவுகள் பேதியை உண்டாக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. அதுபோல சளி என்பது, பழங்கள், சர்க்கரை, தயிர், மோர் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு எனச் சொல்லக் கேட்டிருப்போம். அதேநேரம் இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கூர்ந்து கவனித்தால் இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள முடியும். சூட்டினால் ஏற்படும் பேதியை குளிர்ச்சியான உணவுகளைக் கொடுத்து சரி செய்வார்கள். குளிர்ச்சியால் ஏற்படும் சளி போன்ற பிரச்னைகளுக்குக் காரமான சூப் மற்றும் அசைவ உணவுகளைச் சாப்பிடத் தருவார்கள். வெயில் தாக்கத்தால் ஏற்படும் புண் போன்ற பிரச்னைகளுக்கு இளநீர், மோர் குடித்து உடலைக் குளிர்ச்சியாக்க முயல்வார்கள்.

நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் போலவே உலகின் அனைத்துப் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இந்தச் சூடு, குளிர்ச்சி கான்செப்ட் இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமூட்டும் விஷயம். TCM என்று சொல்லக்கூடிய Traditional Chinese Medicine என்பது உலகின் முதன்மை மருத்துவ முறைகளில் ஒன்று. அதில் யின், யாங் என உணவுகளையும் நோய்களையும் இரண்டாகப் பிரிக்கிறார்கள். யின் என்பது குளிர்ச்சி, யாங் என்பது சூடு. நம்மூரில் செய்வதுபோல யின் வகை நோய்களுக்கு யாங் வகை உணவுகளைக் கொடுத்தும், யாங் வகை நோய்களுக்கு யின் வகை உணவுகளைக் கொடுத்தும் சரி செய்கிறார்கள். ஈரான் நாட்டின் பெர்ஷிய மருத்துவமுறையான யுனானி மருத்துவத்திலும் மெஜஸ் என்ற பெயரில் இதே கான்செப்ட்தான் பின்பற்றப்படுகிறது. கரீபியன், தென் அமெரிக்க நாடுகளிலும் இப்படித்தான்.

ஆனால் சில வித்தியாசங்கள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, நாம் மாம்பழத்தைச் சூடு என்கிறோம். சீன மருத்துவத்தில் குளிர்ச்சி என்கிறார்கள். மீன்களை நாம் குளிர்ச்சி என்கிறோம். ஆனால், சீனாவில் இது யாங் என்று வகைப்படுத்தப்படுகிறது. பயிறு வகைகளை நாம் சூடு என்று சொல்ல, அவர்கள் இதை நியூட்ரல் வகையில் சேர்த்திருக்கிறார்கள். எனவே இந்தச் சூடு, குளிர்ச்சி கான்செப்ட் பெரும்பாலான மருத்துவ முறைகளில் இருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று சின்னச் சின்ன மாறுதல்களைக் கொண்டிருக்கிறது. அந்தந்த நாடுகளின் தட்பவெப்பம், அங்கு விளையும் உணவுப்பொருள்களின் தன்மைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 19

இப்போது நோய்கள் பற்றிய நம்முடைய புரிதல் மாறியிருக்கிறது. `சூடு என்றால் என்ன, எதனால் சூடு என்று சொல்கிறோம், அந்த உணவுகளுக்கு ஏதேனும் பொதுவான தன்மை இருக்கிறதா' போன்ற கேள்விகளுக்கான பதில் தெரிய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்களா என்றால், இந்தியாவில் இதுகுறித்து எந்தவித ஆராய்ச்சிகளும் நடத்தப்படவில்லை என்பதுதான் சோகம்.

மிகவும் தீவிரமாகத் தேடிப் பார்த்ததில், 1969-ல் ஹைதராபாத்தில் உள்ள National Institute of Nutrition-ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி மட்டுமே இருந்தது. அவர்கள் சூடான உணவுகளையும் குளிர்ச்சியான உணவுகளையும் கொடுத்து சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதா என்பதையும் எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களையும் ஆராய்ச்சி செய்ய முயன்றுள்ளார்கள். ஆனால், அது முழுமையான ஆராய்ச்சியாக இல்லை. சில வித்தியாசங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்களே தவிர, பெரிதாக எந்த முடிவுகளும் கிடைக்கவில்லை. ஆனால், நிறைய சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நவீன மருத்துவக் கருத்துகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்வதற்கு முயற்சியெடுத்திருக்கிறார்கள்.

நவீன மருத்துவக் கோட்பாடுகளின்படி, நாம் உணவுகளை உடலுக்கு எரிசக்தி தரக்கூடிய மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்துகளை Macro nutrients என்றும் வைட்டமின் சத்துகள், தாதுச்சத்துகள், நார்ச்சத்து, நீர்ச்சத்து, உப்புச்சத்து போன்றவற்றை Micro nutrients என்றும் பிரிக்கிறோம். இந்தச் சத்துகளுக்கும் சூடு குளிர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ச்சி செய்ய மேலை நாடுகளில் நிறைய முயற்சி எடுத்திருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சிகளில் என்ன மாதிரியான பதில்கள் கிடைத்திருக்கின்றன?

இதில் சில விஷயங்களை நம் பொதுஅறிவின் வழியே புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, எல்லாவிதமான மசாலாப் பொருள்கள், மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றில் ‘Pungent’ என்று சொல்லப்படும் எரிச்சல் உண்டு பண்ணும் தன்மை இயற்கையாகவே இருக்கிறது. அதனால் அந்த உணவுகளைச் சூடு என்று சொல்வதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதேபோல, பெரும்பாலான பழங்கள், நீர்ச்சத்து உள்ள காய்கறிகளைக் குளிர்ச்சியானவை என்றும் நாம் இயல்பாக அறிவோம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 19

ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரை, புரதங்கள் அதிகம் இருக்கக்கூடிய உணவுகள் சூடு என்று சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு பயிறு வகைகளைச் சொல்லியிருந்தேன், ஒன்றிரண்டு தவிர பெரும்பாலான அசைவ உணவுகள், முட்டை இவற்றிலெல்லாம் புரதங்கள் இருப்பதால் சூடான உணவு என்று சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், புரதங்களைச் செரிமானம் செய்ய உடலுக்குக் கூடுதல் ஆற்றல் தேவைப்படும். இதை Thermogenic effect of Proteins என்று சொல்வோம். இதனால்தான் பல குளிர்ச்சியான நாடுகளில் புரதங்கள் நிறைந்த உணவான அசைவம் அதிகம் உட்கொள்ளப்படுகிறது. புரதத்தின் செரிமானம் உடலின் வெப்பத்தை அதிகப்படுத்துகிறது. இதன் காரணமாகவே அந்தக்காலத்தில் பயிறு வகைகள் போலவே புரதம் அதிகமுள்ள உணவுகள் சூடு உணவுகள் என்று நம்மால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. Acidity எனப்படும் அமிலத்தன்மை அதிகமுள்ள உணவுகள் சூடு உணவுகளின்கீழ் வருகின்றன.

Alkalinity என்று சொல்லும் காரத்தன்மை அதிகம் உள்ள உணவுகள் குளிர்ச்சி என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, சிறுநீரில் Alkaline-ஐ அதிகப்படுத்தும் தன்மை கொண்ட ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவையெல்லாம் குளிர்ச்சியான உணவுகளின்கீழ் வருகின்றன.

Inflammation பற்றி கடந்த வாரம் பேசியிருந்தோம். Inflammation-ஐ அதிகரிக்கும் தன்மை சில வகையான சூடு உணவுகளுக்கு இருக்கிறது என்றும் Inflammation-ஐக் குறைக்கும் தன்மை சில வகையான குளிர்ச்சி உணவுகளுக்கு இருக்கிறது என்றும் உறுதி செய்திருக்கிறார்கள். ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும் தன்மை சூடு உணவுகளுக்கு இருக்கிறது. ரத்தக் குழாய்களைச் சுருக்கும் தன்மை குளிர்ச்சியான உணவுகளுக்கு இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள். Sympathetic Nervous System என்று சொல்வோம். படபடப்பு, வியர்வை சுரப்பு ஆகியவற்றைத் தூண்டக்கூடிய தன்மை சில சூடு உணவுகளுக்கு இருக்கிறது; குளிர்ச்சியான உணவுகளுக்கு அந்தத் தன்மை இல்லை என்று சில ஆராய்ச்சிகளில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த முடிவுகளை மட்டுமே வைத்து இந்தக் குறிப்பிட்ட காரணிகள் இருந்தால் சூடு உணவு; இந்தக் காரணிகள் எல்லாம் இருந்தால் குளிர்ச்சியான உணவு என்று நாம் பொதுவாக வகைப்படுத்தமுடியாது. இதில் இன்னும் அதிகப்படியான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் இந்தக் கருத்துகள் நவீன உணவு பற்றிய கோட்பாடுகளுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகின்றன என்று தெரியவரும். அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் அப்போதைய மருத்துவ முறைகளுக்கும் சாதன வசதிகளுக்கும் ஏற்ப நோய்களையும் உணவுகளின் தன்மைகளையும் கடினப்பட்டு வகைப்படுத்தியிருக்கிறார்கள் ஆனால் இதன் தற்போதைய தாக்கம் என்ன என்று பார்த்தால், சில முக்கியமான விஷயங்களை நாம் மறுபடியும் நினைவுபடுத்தவேண்டும்.

நோய்கள் எதனால் வருகின்றன... வாதம், பித்தம் பற்றியெல்லாம் பார்த்தோம். அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்ட வகைப்பாடு. அவ்வளவு அருமையாக அத்தனை நோய்களையும் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் கடந்த நூறு அல்லது இருநூறு ஆண்டுகளில் அறிவியல் முறைகளில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. அவற்றோடு நம் பாரம்பரிய அறிவையும் கொண்டு நோய்களுக்கான காரணங்களை நாம் கண்டறிந்திருக்கிறோம். உதாரணமாக, பேதி என்றால் சூடு என்று மட்டும் சொல்லாமல், அது எந்தவிதமான பாக்டீரியாவால் வருகிறது, அந்த பாக்டீரியா உருவாக்கும் எந்த நச்சுப்பொருள் இதற்குக் காரணமாக இருக்கிறது என்றெல்லாம் பரிசோதனைகளின் வழியே கண்டறியும் இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம். சளிப்பிடிக்கிறது என்றால், குளிர்ச்சியான உணவே காரணம் என்று சொல்லாமல் அதற்குக் காரணம் ஒரு வைரஸ் என்று நாம் அறிந்திருக்கிறோம். உதாரணமாக கொரோனாவை எடுத்துக்கொண்டால், அது பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கையாள்கிறோம். இதுபோல ஒவ்வொரு நோய் குறித்த கூடுதல் புரிதலும் கண்டுபிடிப்புகளும் இன்றைய முன்னேறிய மருத்துவத்தில் இருக்கின்றன. மிகவும் கடினமான PCR பரிசோதனை என்பது சாதாரணமாக ரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை போல இன்றைய நவீன மருத்துவ வளர்ச்சியில் மாறிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் உணவுகளின் சூடு, குளிர்ச்சி குறித்த கருத்துகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. என்னைப் பொறுத்தவரை, சில விஷயங்களில் ஏற்றுக்கொள்ளலாம் சில விஷயங்களில் ஏற்றுக்கொள்ளமுடியாது.

உதாரணமாக, வாந்தி பேதி என்று எடுத்துக்கொண்டால் அது சூட்டின் காரணமாக ஏற்படும் நோய்; அதற்கு நிறைய நீர்ச்சத்து உட்கொள்ளவேண்டும்; அதுதான் உயிரைக் காப்பாற்றும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர், மோர் போன்றவற்றைத் தருவார்கள். இதில் நீர்ச்சத்து மட்டுமல்லாமல் உப்புச்சத்து, குளுக்கோஸ் சத்தும் சேர்ந்திருப்பதால் இரண்டும் இணைந்து உப்புச்சத்துக் குறைபாட்டை நீக்கி உயிரைக் காப்பாற்றும். எனவே வாந்தி, பேதிக்கு நீர்ச்சத்து நிறைந்த இளநீர், மோர் குடிக்கவேண்டும் என்பது மிகவும் அருமையான அறிவியல்பூர்வமான விஷயம்தான். அதேபோல, சளிப்பிடித்திருந்தால் காரமான சூப் அல்லது மிளகுப் பால் குடிக்கச் சொல்கிறோம். இது நோயைக் குணப்படுத்துமா என்றால், கிடையாது. ஆனால் தொண்டைக் கரகரப்பை நீக்கி நமக்கு இதம் கொடுக்கும். இதுபோன்ற விஷயங்களை ஏற்றுக்கொள்ளலாம்.

- பரிமாறுவோம்

******

“எல்லாக் காய்கறிகளையும் சமைக்காமல் சாப்பிடலாமா? ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா?” - ஜெயலட்சுமி

பொதுவாகவே காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிட்டால் அதில் உள்ள முக்கியமான வைட்டமின் சத்துகள் அழிந்து விடாமல் முழுமையாகக் கிடைக்கும். ஆனால் சில விதிவிலக்குகள் உள்ளன. உருளைக்கிழங்கையும் கத்தரிக்காயையும் சமைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள solanin என்ற வேதிப்பொருள் காரணமாக வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதேபோல முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அதிக அளவு சமைக்காமல் உண்டால் செரிமானப் பிரச்னை ஏற்படலாம். காய்கறி என்ற வரையறைக்குள் வரவில்லை என்றாலும், காளானையும் குச்சிக்கிழங்கையும் சமைக்காமல் உண்பது நல்லதல்ல. மற்ற அனைத்துக் காய்கறிகள், கீரைகளை தாராளமாக சமைக்காமல் உண்ணலாம்.

“இதய நோயாளிகள் முட்டையை எப்படிச் சாப்பிட வேண்டும்? மஞ்சள் கருவைச் சாப்பிடலாமா?” - மயில்வாகனன்

இதய நோயாளிகள் முட்டையை எப்படி வேண்டுமானாலும் சமைத்துச் சாப்பிடலாம். சமைத்துச் சாப்பிடும் முறை, முட்டையின் சத்துகளையோ தன்மையையோ பாதிக்காது. நம் தொடரின் முதல் இரண்டு வாரங்களில் வந்த கட்டுரைகளைப் படித்தீர்கள் என்றால் உங்களுக்கு இதற்கான விடை கிடைத்துவிடும். தாராளமாக தினமும் ஒரு முட்டை மஞ்சள் கருவுடன் சாப்பிடலாம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 19

டாக்டரிடம் கேளுங்கள்...

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.