மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 20

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தை வெயிலில் வைத்தால் அது சிறிது நேரத்திலேயே சூடாகிவிடும். அதுபோல நம் உடலும் வெயிலில் இருக்கும்போது சூடாகும்தான்

சூடு, குளிர்ச்சி பற்றிய உண்மைகள், கற்பனைகளை கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இன்னொரு முக்கிய விஷயத்தை இந்த வாரம் பார்க்கலாம். தண்ணீரில் தொடங்கி, இளநீர், ஜூஸ் எனப் பலவித நீர்ச்சத்து உணவுகளை நாம் எடுத்துக் கொள்கிறோம். அவற்றில் எது நல்லது? எதற்கு உடல் சூட்டைக் குறைக்கும் தன்மை இருக்கிறது?

மனிதர்களைப் போல கோடானுகோடி உயிரினங்கள் இங்கே உண்டு. ஆனால் வெயில் காலத்தில் அவை மோர், இளநீர், பழச்சாறு என்றெல்லாம் சிறப்பு நீர்ச்சத்து உணவுகளைத் தேடி ஓடுகின்றனவா என்றால், இல்லை என்பதே பதில். பிறகு எப்படி அந்த உயிரினங்கள் தங்களின் சூட்டைக் குறைத்து நீர்ச்சத்தை சரியான அளவில் வைத்திருக்கின்றன? இந்தக் கேள்வியோடு தண்ணீரைப் பற்றிய தவறான புரிதல்கள் குறித்தும் நாம் பேசலாம்.

உடலைக் குளிர்ச்சியாக்குவதற்குச் சிறந்த உணவு எது என்பதைப் பார்க்கும்முன் உடல் குளிர்ச்சியாதல் என்பதன் அடிப்படை அறிவியலைப் பற்றிப் பார்க்க வேண்டும்.

விலங்குகளில் இரண்டு வகை உண்டு. ஹோமியோதெர்மிக் (Homeothermic), பாய்கிலோதெர்மிக் (Poikilothermic). நம் சுற்றுச்சூழலின் வெப்பத்திற்கேற்ப நம் உடலின் வெப்பமும் மாறிவிடுவது பாய்கிலோதெர்மிக். உதாரணத்திற்கு, பல்லி, பாம்பு ஆகிய விலங்குகளின் வெப்பம் சுற்றத்தின் வெப்பத்தை வைத்து மாற்றமடையும். சிறிய விலங்குகள் பலவும் இந்தவகையில் சேரும். மனிதர்கள் ஹோமியோதெர்மிக் வகை. வெளிப்புறம் எந்த மாதிரியான வெப்பம் இருந்தாலும் நம் உடல் குறிப்பிட்ட வெப்ப அளவிலேயே இருப்பதுதான் ஹோமியோதெர்மிக். நீங்கள் சஹாரா பாலைவனத்தில்கூட இருக்கலாம், ஆனால் நம் உடலின் வெப்பம் 37 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். அதேபோல நீங்கள் குளிர்ச்சியான அண்டார்ட்டிகாவில் இருந்தாலும் உங்கள் உடலின் வெப்பம் 37 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். இந்தக் குறிப்பிட்ட வெப்பத்தில்தான் நம் உடலின் ஹார்மோன்கள் முதல் என்சைம்ஸ் வரை அனைத்தும் சரியாக வேலை செய்யும். அதிக சூட்டிலும் சரி, குளிர்ச்சியிலும் சரி, நம் உடல் உறுப்புகள் சரியாக வேலை செய்யாது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 20

ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தை வெயிலில் வைத்தால் அது சிறிது நேரத்திலேயே சூடாகிவிடும். அதுபோல நம் உடலும் வெயிலில் இருக்கும்போது சூடாகும்தான். அந்தக் கூடுதல் சூட்டை வெளியேற்ற நம் உடல் பல்வேறு செயல்முறைகளைக் கொண்டிருக்கிறது. இதேபோல பனிக்காலத்தில் சுற்றத்தின் வெப்பம் மிகக்குறைவாக இருக்கும். ஆனால் அப்போதும் நம் உடலின் வெப்பம் 37 டிகிரியில் சீராக இருக்கவேண்டும். அந்தநேரத்தில் நம் உடல் தானாகவே சூட்டை உருவாக்கி வெப்ப அளவைச் சீராக வைத்துக் கொள்ளும். இதுவே ஹோமியோதெர்மிக் விலங்குகளில் உடற்செயல் முறை.

வெளி வெப்பத்தைக் கணக்கிட நாம் தெர்மாமீட்டரைப் பயன்படுத்துவதைப் போல நம் உடலுக்குள்ளும் ஒரு தெர்மாமீட்டர் உண்டு. நம் மூளையின் ஒரு முக்கியமான பகுதி ஹைப்போதலாமஸ். அப்பகுதியில் வெப்பத்தைக் கணக்கிடும் ஒரு தெர்மாமீட்டர் இயற்கையிலேயே உள்ளது. வெப்பத்தை வெளி யேற்றவேண்டுமா அல்லது அதிகரிக்க வேண்டுமா என்பதை அந்த மீட்டர்தான் முடிவு செய்கிறது. அதற்காக நம் ரத்தக் குழாய்களுக்குச் சில சிக்னல்களைக் கொடுக்கிறது இந்த ஹைப்போதலாமஸ்.

நம் தோல்பகுதியின் வியர்வை நாளங்களில் உள்ள ரத்தக் குழாய்களுக்கு இந்தச் சிக்னல்கள் செல்கின்றன. உடனே அங்கிருக்கக்கூடிய ரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. வியர்வை நாளங்களுக்கான ரத்த ஓட்டம் அதிகரித்து நீர் வியர்வையாய் வெளியேறுகிறது. அதோடு சிறிதளவு சோடியம் குளோரைடு, பொட்டாசியம் முதலிய உப்புச் சத்துகளும் வெளியேறுகின்றன.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 20

எதற்காக இந்த நீர் வெளியேறுகிறது?

12-ம் வகுப்பு இயற்பியல் பாடம் உங்களில் எத்தனை பேருக்கு நினைவு இருக்கிறது? எப்போதெல்லாம் நீர் ஆவியாக மாறுகிறதோ அங்கு ஒருவித குளிர்ச்சி உண்டாகும் என்பது அறிவியல். இந்த `Evaporation causes Cooling'-கைத்தான் நம் உடலும் செய்கிறது.

அதாவது, நம் ரத்த நாளங்கள் அனைத்தும் விரிவடைந்து நம் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வையாக வெளியேறு கிறதல்லவா, அந்த வியர்வை ஆவியாகும்போது குளிர்ச்சி உண்டாகிறது. எனவே உடலில் சேரக்கூடிய இந்தக் கூடுதல் வெப்பம் குளிர்ச்சியால் மீண்டும் குறைந்துவிடும்.

இதை எளிதாகப் புரிந்துகொள்ள ஒரு குளிர்சாதனப்பெட்டியுடன் (AC) ஒப்பிட்டுப் பார்ப்போம். ஏசியில் ‘தெர்மோஸ்டாட்’ என்று ஒரு கருவி இருக்கும். அறையின் உஷ்ணத்தைக் கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல், கண்டன்சர் என்னும் பகுதி மூலம் அந்த உஷ்ணத்தை வெளியேற்றும். நமது மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியை ஏசியின் தெர்மோஸ்டாட் உடன் ஒப்பிடலாம். நமது வியர்வை நாளங்களை ஏசியின் கண்டன்சர் உடன் ஒப்பிடலாம்.

வெயில்காலத்தில் ரத்தக் குழாய்கள் எப்படி விரிவடைகிறதோ, அதேபோல குளிர்காலத்தில் சுருக்கமடைகின்றன. சுருக்கமடைவதால் வியர்வை நாளங்களுக்கான ரத்த ஓட்டம் பெரிய அளவில் இருக்காது. அதனால் வியர்வை வெளியேறாது. உடல்சூடும் குறையாது.

இதுமட்டுமல்லாமல், அந்தத் தருணத்தில் நம் உடலின் பெரிய தசைகள் பலவும் ஆக்டிவேட் செய்யப்படுகின்றன. அப்படிச் செய்கையில் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சூடு உண்டாகிறது. குளிர்காலத்தில் நம் உடல் நடுக்க மடைவது இதனால்தான். இவைதான், வெப்பத்தை முறைப்படுத்த நம் உடல் கடைப்பிடிக்கும் செயல் திட்டங்கள். இதைப் புரிந்து கொண்டால்தான் உடலைக் குளிர்ச்சி அடையச் செய்வதற்கு என்ன நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் புரியும்.

வெயில் காலத்தில் மிக அதிக அளவில் வியர்வை வெளியேறுவதால் சிறுநீரின் அளவு குறைந்துவிடும். பொதுவாக சிறுநீரில் உடலுக்குத் தேவையில்லாத கழிவுகள் வெளியேறும். தேவையான அளவு சிறுநீர் உடலில் இருந்து வெளியேறாதபோது, அந்தக்கழிவுகள் மிக அடர்த்தியான அளவில் வெளியேறும். அப்போது சிறுநீர்ப் பாதையில் மிகுந்த எரிச்சல் ஏற்படும். இதை `Strangury' என்று சொல்வோம். உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிதான் இது. இது ஒருபுறம் இருக்க, நம் உடலால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சாத்தியங்களும் சில நேரம் உருவாவதுண்டு. அந்தத் தருணங்களில் நம் உடலின் ஏசி மெக்கானிசம் வேலைசெய்யாமல் போய்விடும். இதை Heat Exhaustion அல்லது Heat Stroke என்று சொல்கிறோம். இந்த நிலை மிக ஆபத்தானது. காரணம், உடலின் வெப்பம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகரிக்கும்போது அதை நம் உறுப்புகளால் தாங்கிக்கொள்ள இயலாது. சுயநினைவை இழத்தல், வலிப்பு, உறுப்புகள் செயலிழப்பு தொடங்கி நம் உயிருக்கேகூட ஆபத்தாக அமையக்கூடும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 20

இதைத் தவிர்ப்பதற்கு என்ன வகை உணவுகளை எடுத்துக்கொள்வது என்பதைப் பார்க்கலாம்.

ஏசி எந்திரத்தில் சென்ஸார் மற்றும் கன்டன்ஸரைப் போல `கூலண்ட்' என்ற மற்றொரு பொருளும் இருக்கும். உஷ்ணத்தைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது அதுதான். அதைப்போல நம் உடலுக்கும் `கூலண்ட்' இருக்கிறது. அதுதான் தண்ணீர். நம் உடல் அதிக அளவிலான வெப்பத்துக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு அடிப்படை தண்ணீர் என்ற கூலண்ட்தான். நிறைய தண்ணீர் குடிக்கக் குடிக்க அதிக அளவிலான வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும். அதனால் நம் உடலும் குளிர்ச்சியாகவே இருக்கும். ஒரு அளவுக்குமேல் நீர்ச்சத்து குறைந்துபோனால் நம் உடலின் ரத்த ஓட்டம் குறையும். வியர்வையை வெளியேற்றுவதைவிட மூளை, இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளுக்கு ரத்தத்தைச் செலுத்துவதே முக்கியம் என அவற்றுக்கு திசை திருப்பி விட்டுவிடும் நம் உடல். வியர்வை வெளியேறாமல் வெப்பம் அதிகரிக்கும். எனவே, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதுதான் நம் உடல் உஷ்ணம் ஆகாமல் இருப்பதற்கான சிறந்த வழி.

தண்ணீரை அப்படியே குடிப்பதா, அல்லது, பானை, ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிர்ச்சியாகக் குடிப்பதா என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். அதெல்லாம் ஒன்றுமே தேவையில்லை. சாதாரண தண்ணீரை நிறைவாகக் குடித்தாலே உஷ்ணம் ஆகாமல் நம் உடலைப் பாதுகாக்கலாம்.

வியர்வை வெளியேறும்போது அதோடு சில உப்பு வகைகளும் சேர்ந்தே வெளியேறும். பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் மூலமாகவும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மூலமாகவுமே நமக்குத் தேவையான உப்புச் சத்துப்கள் கிடைத்துவிடும். அதனால், உடல் குளிர்ச்சியாக இருக்க தண்ணீர் மட்டுமே போதுமானது. சிலநேரங்களில் நாம் அதிக நேரம் வெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த நேரத்தில் வியர்வையோடு அதிக அளவு உப்புச்சத்தும் சேர்ந்து வெளியேறும். அப்போது இழப்பு ஏற்படும். உடலில் இருக்கும் உப்பின் அளவு போதாது. அந்த நேரத்தில் உப்புச்சத்தையும் சேர்த்து நாம் உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தச்சூழலில், தண்ணீரையும் தாண்டி சில நீர் ஆகாரங்களை நாம் எடுத்துக்கொள்வது நல்லது. அந்தத் தருணத்துக்கேற்ற உணவாக இளநீர் மற்றும் உப்பு கலந்த மோர் ஆகியவற்றை நான் பரிந்துரைப்பேன். காரணம், தண்ணீரோடு சேர்த்து அவற்றில் நமக்குத் தேவையான உப்புகள், சிலவகை சர்க்கரைகளும் சேர்த்துக் கிடைக்கின்றன.

நீர்ச்சத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள செயற்கையான முறையில் சிறந்த வழி ORS. ‘Oral Rehydration Solution' என்று சொல்லக்கூடிய இவை வாந்தி, பேதி சமயங்களில் மட்டுமன்றி, மிகுந்த வெயிலில் நம் உடலைப் பாதுகாக்க உதவிகரமாய் இருக்கும். இதில் தண்ணீரோடு சேர்த்து உப்பு, சர்க்கரைச் சத்துகளும் இருக்கின்றன. உப்புச் சத்தோடு சேர்த்து சர்க்கரைச் சத்தும் இருந்தால்தான் உப்புகளை நம் குடல் சரியாகக் கிரகித்து ரத்தத்தில் சேர்க்கும். எனவேதான், உப்புச்சத்தும் சர்க்கரைச் சத்தும் சரி சம அளவில் இருக்கும் இளநீர் மோர் மற்றும் ORS போன்ற நீர்ச்சத்து உணவுகளை நாம் வெயில் காலத்திற்கு ஏற்ற சிறந்த நீர்ச்சத்து உணவுகளாகப் பரிந்துரை செய்கிறோம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 20

உப்புச்சத்தைச் சரியான அளவில் எடுக்காவிட்டால் தசைப்பிடிப்பு, நடக்கவே முடியாத நிலை ஏற்படும். ஏன், மூளையின் செயல்பாடுகூட மங்கிப்போக வாய்ப்பிருக்கிறது. ஆனால், உப்புச்சத்துக்காக மேற்சொன்ன உணவுப்பொருள்களை மட்டும்தான் எடுத்துக்கொள்ளவேண்டுமா என்றால், கிடையாது. ஓரளவுக்கு இளநீர், மோர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மீதம் சாதாரண தண்ணீரை மட்டும் குடித்தாலே போதும்.

வெயில்காலத்தில் நீர்ச்சத்துக்காகப் பழ ஜூஸ், கூல்ட்ரிங்ஸ் குடிப்பார்கள். சிலர் எலக்ட்ரோலைட் (Electrolyte) போன்ற பானங்களையும் குடிப்பதுண்டு. பழ ஜூஸ் இயற்கையான ஒன்று என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. பழங்களில் இனிப்புச் சத்து நம் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். ஆனால் உப்புச்சத்து பெரிய அளவில் இருக்காது. எனவே, சர்க்கரை போட்டோ, போடாமலோ கிடைக்கும் பழ ஜூஸில் இருந்து நமக்கு நீர்ச்சத்தும் சிறிதளவு பொட்டாசியம் சத்தும்தான் கிடைக்குமே தவிர சோடியம் குளோரைடு உப்பு நமக்குக் கிடைக்காது. குறிப்பாக சர்க்கரைச் சத்தே அதிகம் கிடைக்கும். இதுவே குளிர்பானங்கள் குடித்தால் இந்தப் பொட்டாசியம் சத்தும் கிடைக்காமல் போய்விடும். அவற்றில் வெறும் தண்ணீர் மற்றும் சர்க்கரை மட்டுமே நம் உடலுக்குக் கிடைக்கின்றன. மிகுந்த தாகமாக இருக்கும்போது வெறும் சர்க்கரைச் சத்தை மட்டுமே எடுத்துக் கொள்கையில் அது நம் தாகத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

வெயில் நேரத்தில் தண்ணீர், இளநீர், மோர் குடித்தால் தாகம் தணியும். இதே சர்க்கரை போட்ட பழ ஜூஸ் அல்லது குளிர்பானங்கள் குடிக்கையில் அந்த நேரத்திற்கு தாகம் தணிந்ததுபோலத் தோன்றுமே தவிர மீண்டும் மீண்டும் தாகம் எடுக்கும். காரணம், நம் தாகத்தைத் தணிப்பதற்கான அடிப்படை விஷயம் உப்புச் சத்தே. அதை எடுக்காமல் விடும்போது நம் தாகம் மேலும் மேலும் அதிகரிக்கும். பழங்களில்கூட பொட்டாசியம் போன்ற சத்துகள் இருக்கின்றன. ஆனால் செயற்கை பானங்களில் இவை எதுவும் கிடையாது. தாகத்தைத் தணிக்காமல் மேலும் அதிகப்படுத்தி நம்மைச் சோர்வடையச் செய்பவை அவை. அதனால் மிகுந்த தாகமாக இருக்கும் பொழுது வெறும் பழச்சாறு அல்லது கூல்ட்ரிங்ஸ் வகைகளைக் குடிப்பது நல்லதல்ல. லெமன் ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்கையில்கூட சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

எலக்ட்ரோலைட் பானத்தைப் பொறுத்தவரை சர்க்கரைச் சத்து அதிக அளவிலும் உப்புச்சத்து குறைந்த அளவிலும் இருக்கும். இவை சரிசமமாக இருக்கும் பானங்களின் விலை அதிகம். இந்த அடிப்படையான சத்துகளை எடுத்துக்கொள்ள நூற்றுக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. வீட்டில் நீங்களே உப்பையும் சர்க்கரையையும் தண்ணீரில் போட்டுக் குடிக்கலாம். அதற்கு ORS-கூடத் தேவையில்லை.

சாதாரண தண்ணீர், இளநீர், உப்பு போட்ட மோர், ORS... நம் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொண்டு நீர்ச்சத்து, உப்புச்சத்து ஆகியவற்றையும் குறையாமல் பார்த்துக்கொள்வதற்கு இவையே போதும். இந்த நீராகாரங்கள் தாண்டி நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவை ஓரளவுக்கு நல்லது என்றாலும் அவற்றோடு சிறிதளவு உப்பு சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்லது.

ஆக, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள எளிமையான தீர்வு நம் கையிலேயே இருக்கிறது என்று தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

தண்ணீர் குடிப்பது பற்றி நம்மிடையே பல தவறான எண்ணங்கள் இன்னமும் இருக்கின்றன. அதைப் பற்றி நாம் அடுத்த வாரத்தில் பேசுவோம்!

- பரிமாறுவோம்

``தவிட்டு எண்ணெய் சமையலுக்கு உகந்ததா?’’ - ஜெயலெட்சுமி

``தவிட்டு எண்ணெயில் ஒமேகா 6 வகை நிறையுறாக் கொழுப்புகள் சற்று அதிகம். இவை ரத்தக் குழாயில் உள்காயங்களை அதிகப்படுத்தும் தன்மை கொண்டுள்ளன என்று ஏற்கெனவே பார்த்தோம். பெரும்பாலும் இந்த எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டு சந்தைக்கு வருவதால், இந்த வகை எண்ணெய்களைத் தவிர்ப்பது நல்லது.’’

``புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து பற்றிக் கூறியிருந்தீர்கள். அவற்றை தினமும் கட்டாயமாக எடுக்க வேண்டுமா? அல்லது அந்த வாரத்திலோ, மாதத்திலோ சமன் செய்துகொள்ளலாமா?’’ - குமாரவேலு

``எந்த விலங்குக்கும் தேவையான அனைத்துச் சத்துகளும் ஒரே அளவில் தினம் தினம் கிடைப்பது கிடையாது. பரிசோதனைக் கூடத்தில் வளர்க்கப்படும் எலிகளுக்கு மட்டுமே அப்படி ஒரு உணவுமுறை சாத்தியம். நமது உடலில், எல்லாவிதமான சத்துகளையும் கிடைக்கும்போது சேமித்துக்கொள்ளவும், கிடைக்காதபோது சேமிப்புக் கிடங்கில் இருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளவும் தேவையான வசதிகள் உள்ளன. அதனால் நான் வலியுறுத்திய சத்துகளின் அளவை தோராயமாக வார அடிப்படையில் சமன்படுத்தி எடுத்துக்கொண்டாலே போதுமானது.’’

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 20

டாக்டரிடம் கேளுங்கள்:

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.