மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 21

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

நம் எலும்புகள் கற்களைப் போல உறுதியாக இருந்தாலும், அதிலும் சுமார் 30% தண்ணீரே நிறைந்திருக்கிறது. எதற்காக எலும்புகளில் தண்ணீர் என்ற சந்தேகம் வரக்கூடும்

குளிர்ச்சி பற்றி கடந்த வாரம் பேசியபோது தண்ணீரின் மகத்துவம் குறித்துப் பல விஷயங்களை அலசினோம். அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கக்கூடிய பொதுவான விஷயம், தண்ணீர் குடிப்பது. தண்ணீர் குடிப்பதைப் பற்றி நிறைய காணொலிகள், கட்டுரைகள், செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

‘நீங்கள் தண்ணீர் குடிப்பதில் என்னென்ன தவறுகளைச் செய்கிறீர்கள்?', ‘இந்த நோய்களுக்கெல்லாம் இப்படித் தண்ணீ்ர் குடிப்பதுதான் காரணம்' என நிறைய அறிவுரைகளை வீடியோக்களில் தோன்றும் மனிதர்கள் வாரி வழங்குவார்கள். அதையெல்லாம் பார்த்தால் தண்ணீரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்று தோன்றும். அதனால் தண்ணீரைப் பற்றியும், அதுகுறித்த மாயைகள் மற்றும் தவறான புரிதல்கள் பற்றியும் விரிவாகப் பேசவேண்டியுள்ளது.

அதற்கு முன்னர் சில அடிப்படையான விஷயங்களைப் பார்த்துவிடலாம். நம் உடலில் சுமார் 60% தண்ணீர் இருக்கிறது. 60 கிலோ எடையுள்ள ஒரு நபரின் உடலில் சுமார் 36 கிலோ அளவுக்குத் தண்ணீர் மட்டுமே இருக்கும். பெரியவர்களுக்குத்தான் இந்த அளவு. குழந்தைகளுக்கு இன்னும் அதிகம். ஒரு கைக்குழந்தையின் உடலில் சுமார் 75% தண்ணீர் மட்டுமே இருக்கும். அதாவது 10 கிலோ எடையுள்ள ஒரு கைக்குழந்தையின் உடலில் 7.5 கிலோ வெறும் தண்ணீர்தான். மீதமுள்ள தசைகள், எலும்புகள் வெறும் 2.5 கிலோதான். இந்த அளவுக்கு தண்ணீர் நம் உடலின் உயிர்நாடியாக விளங்குகிறது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 21

சரி, தண்ணீர் நம் உடலில் என்ன வடிவத்தில் எந்தப் பகுதிகளில் இருக்கிறது என்பதைப் பார்ப்போம். கோடானுகோடி செல்களால் ஆனதே நம் உடல். முன் சொன்ன 60% தண்ணீரில் 40% இந்த செல்களுக்கு உள்ளிருப்பவைதான். மீதமுள்ள 20% செல்களுக்கு வெளியே இருப்பவை. செல்களுக்கு வெளியே என்றால் நடுவேயும் இருக்கலாம், ரத்தக் குழாய்களுக்குள்ளும் இருக்கலாம். இவ்வளவுக்கு நம் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் நிறைந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், நம் உடல் உறுப்புகள் சில, 60 சதவிகிதத்திற்கும் மேல் தண்ணீரால் நிரம்பியிருக்கின்றன. உதாரணத்துக்கு, நம் நுரையீரல் 83% தண்ணீரால் ஆனது. சிறுநீரகத்தில் 79%, மூளையில் 73% தண்ணீரே இருக்கிறது. நம் கண்களின் எடையில் 95% தண்ணீர் மட்டுமே. இதேபோல நம் தசைகள், இதயம் ஆகியவற்றில் 75% தண்ணீர்தான்.

இன்னொரு ஆச்சர்யமூட்டும் விஷயமும் இருக்கிறது. அதாவது நம் எலும்புகள் கற்களைப் போல உறுதியாக இருந்தாலும், அதிலும் சுமார் 30% தண்ணீரே நிறைந்திருக்கிறது. எதற்காக எலும்புகளில் தண்ணீர் என்ற சந்தேகம் வரக்கூடும். நம் உடலின் மெட்டபாலிசம் அனைத்திலும், அதாவது நாம் சாப்பிடும் உணவு எரிசக்தியாவதில் தொடங்கி எல்லாப்பணிகளிலுமே தண்ணீர் மிகமுக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல நம் உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கும் தண்ணீர் அவசியம். நம் உடல் வெப்பநிலையை சரியான அளவில் பராமரிப்பது தண்ணீர்தான் என்று சென்ற வாரமே பார்த்தோம். எலும்புகளின் இடைப்பகுதியில் இருக்கும் தண்ணீர், வாகனங்களுக்கு ‘ஷாக் அப்சர்பர்' இருப்பதுபோல நம் உடலில் செயல்படும். உடலின் சில முக்கியப் படலங்கள், உதாரணத்திற்கு கண் விழிகள் முதலியவை நீர்ச்சத்தின் உதவியால்தான் செயல்படுகின்றன. அதேபோல நம் உடலிலிருந்து சிறுநீராக வெளியேறும் கழிவுகளுக்கும் தண்ணீரே உதவுகிறது. இப்படி உடலின் மிக முக்கியச் செயல்பாடுகள் அனைத்திலும் தண்ணீரின் பங்கு மிக முக்கியம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 21

பலர் அறியாத இன்னொரு செய்தியும் உண்டு. நாம் குடிக்கும் தண்ணீர் மட்டுமே உடலுக்கு உதவுகிறது என்றில்லை. நம் உடலில் தண்ணீர் உருவாகவும் செய்யும். உணவு ஜீரணமாகும்போது அந்த உயிர் வேதியியல் பிராசஸில் சிறிதளவு தண்ணீரும் உருவாகிறது. அதை Endogenous water என்று சொல்வோம். இப்படிப் பல்வேறு வழிகளால் உடலுக்குள் வரும் தண்ணீர், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. இதன்மூலம் நம் உடலின் நீர்ச்சமநிலை சரியான அளவில் பார்த்துக் கொள்ளப்படுகிறது.

நாம் சரியான அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டால்தான் நம் உடலுக்குத் தேவையான அளவில் அது பராமரிக்கப்படும். காரணம், உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உயிரிழப்புகூட ஏற்படும். அதே நேரத்தில், நம் உடலில் நீரின் அளவு அதிகமானாலும் பிரச்னைதான். சிறுநீரக, இதய மற்றும் கல்லீரல் செயலிழப்பு முதலிய நோய்களில் தண்ணீர் அளவு உடலில் அதிகமாகி அதனால் பல பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. எனவே, உடலில் தண்ணீரைச் சமநிலையில் வைப்பது அவசியம்.

பொதுவாக, நாம் தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். ஒன்று, இரண்டு என்று எண்ணிக்கை வைத்துக் குடிப்பவர்களெல்லாம் உண்டு. இப்படி தண்ணீரை எண்ணிக்கை வைத்துக் குடிக்கத்தான் வேண்டுமா? சிலபேர் இன்னும் அதிகமாகக் குடிக்கிறார்களே... அது சரியா? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண, நம் உடலில் தண்ணீரின் அளவு எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

நம் உடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதை அறிய மூளையில் ஏகப்பட்ட மெக்கானிசங்கள் உண்டு. Osmoreceptor, Baroreceptor எனச் சொல்லப்படும் இவை நம் உடலில் நீர்ச்சத்து குறைந்தாலோ, அதிகரித்தாலோ சில சிக்னல்களை உருவாக்கும். தண்ணீரின் அளவு குறைந்தால் Antidiuretic ஹார்மோனைத் தூண்டிவிட்டு, சிறுநீரகத்திலிருந்து நீர் வெளியேறுவதைக் குறைக்கும். நம் தாகத்தை அதிகரிக்கச்செய்து நம்மைத் தண்ணீர் குடிக்கவைக்கும். இதை Self-Regulation என்று சொல்வோம். இதுவே, உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருந்தால் அதற்கு நேர்மாறான ஒரு செயல்பாடு உடலில் நடக்கும். கூடுதல் நீர்ச்சத்தைச் சிறுநீரில் வெளியேற்றி, தாகத்தையும் குறைக்கும். இதுபோன்ற செயல்பாடுகளைச் சில முக்கிய ஹார்மோன்கள் நிர்ணயிக்கின்றன. இவை நம் உடலில் தானாகவே நிகழ்கின்றன. உடலின் நீர்ச்சத்து அளவைப் பொறுத்து தாகத்தைக் கூட்டிக் குறைத்துத் தண்ணீர்த் தேவையை நம் உடலே பேலன்ஸ் செய்யும். வெயில் காலத்தில் அதிக தாகம் எடுப்பதும், குளிர்காலத்தில் குறைவான தாகம் எடுப்பதும் இதனால்தான். எனவே, உடலுக்குத் தேவையான தண்ணீரை அதுவே நிர்ணயித்துக்கொள்ளும். இத்தனை கிளாஸ் தண்ணீர்தான் வேண்டும் என்று அளந்து குடிப்பது அவசியமே இல்லை. மேலும், நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின்படி நமக்கு வேண்டிய தண்ணீரின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 21

எனவே, நீங்கள் கவனிக்க வேண்டியது ஒன்றை மட்டும்தான். உங்கள் சிறுநீர் நல்ல வெள்ளை நிறத்தில் அல்லது இள மஞ்சள் நிறத்தில் இருந்து உங்களுக்கு அதிக தாகம் எடுக்காமல் இருந்தால் உங்கள் உடலில் தேவையான நீர்ச்சத்து இருக்கிறது என்று அர்த்தம். அப்படி இல்லாமல், வெளியேறும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்தில் இருந்து, தாகமும் எடுத்துக்கொண்டே இருந்தால், நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம். எனவே, கணக்குப்போட்டுத் தண்ணீர் குடிக்கவேண்டிய அவசியமே இல்லை. ஒரு படி மேலே போய், இப்போது எலெக்ட்ரானிக் வாட்டர் பாட்டில் சந்தைக்கு வந்துவிட்டது. இந்த பாட்டிலை நம் ஸ்மார்ட் போனோடு இணைத்துவிட்டால் நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று கண்காணிக்கப்படும். அதாவது, ஒரு தவறான கான்செப்டைச் சரியாகப் பின்பற்ற எவ்வளவு காஸ்ட்லியான உபகரணங்கள் வந்திருக்கின்றன என்பதைப் பாருங்கள்.

இதைப்போல தண்ணீர் குறித்த இன்னொரு நம்பிக்கையையும் அலசிவிடுவோம். ‘சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காதீர்கள். ஜீரணம் என்பது உஷ்ண சக்தி, தண்ணீர் குளிர்ச்சி சக்தி. எனவே அந்த உஷ்ணத்தைக் குளிர்ச்சி அடக்கிவிடுகிறது' என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் ‘தண்ணீர் நிறைய குடித்தால் நம் வயிற்றில் இருக்கும் அமிலங்கள் நீர்த்துப் போய்விடும். அதனால் ஜீரணம் சரியாக நடக்காது' என்று சொல்கிறார்கள். லாஜிக்படி பார்த்தால் இது சரியானதுதானே என்று நமக்குத் தோன்றும். ஆனால் ஜீரணம் பற்றிய அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டு இந்த விஷயத்தை அணுகவேண்டும்.

உடலில் உணவானது பல்வேறு Enzyme-களால் ஜீரணம் செய்யப்படுகிறது. உணவை எச்சிலோடு சேர்த்து மெல்லத் தொடங்கும்போதே ஜீரணம் தொடங்கிவிடுகிறது. நம் எச்சிலில் இருக்கக்கூடிய Amylase முதலிய என்சைம்கள் அங்கேயே மாவுச்சத்தை உடைக்கத் தொடங்கிவிடுகின்றன. அதன்பிறகு நம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், Pepsin போன்ற முக்கிய என்சைம்களைத் தூண்டிவிட்டு ஜீரணத்திற்கு உதவி செய்யும். அந்த உணவு நம் வயிற்றில் 3-4 மணி நேரம் தங்கி இருக்கும். அதற்கு அடுத்தகட்டமாக நம் கணையத்திலிருந்து Amylase, lipase, trypsin போன்ற என்சைம்கள் சுரக்கும். அவையும் நம் ஜீரணத்துக்கு உதவிசெய்யும். அந்த அளவுக்கு ஜீரணமானது ஒரு காம்ப்ளெக்ஸ் செயல்பாடு. நாம் தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள அமிலங்கள் நீர்த்துப்போய்விடும் என்பது உண்மையல்ல. இதை ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள். நாம் குடிக்கும் தண்ணீர் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறதா, ஜீரணத்தை மெதுவாக நடக்க வைக்கிறதா, வாந்தி பேதி போன்றவற்றை ஏற்படுத்துகிறதா என்றெல்லாம் ஆராய்ந்தபோது அனைத்திலும் இதற்கு எதிரான முடிவுகளே வந்துள்ளன. மாறாக, அதிக தண்ணீர் குடிப்பது நம் ஜீரணத்திற்கு உதவும் என்பதே மருத்துவ உண்மை. அதனால், உணவு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்டு முடித்த பிறகோ தேவையான அளவு தண்ணீரை தாராளமாகக் குடிக்கலாம். மேலும் நாம் சாப்பிடும் உணவுகளே பெரும்பாலும் நீர்ச் சத்துக்களால் ஆனதுதான். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே பிராதன உணவு. தாய்ப்பாலில் 85% தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இப்படி இருக்க, தண்ணீர் குடிப்பது நம் ஜீரணத்தை பாதிக்கும் என்று கூறுவது அறிவியலுக்குப் புறம்பானது. உணவு சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்காமல் விக்கி விக்கிக் கஷ்டப்படுவதற்கு பதிலாக, தேவையான அளவு தண்ணீரை தாராளமாகக் குடியுங்கள்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 21

இன்னொருபுறம், ‘நிறைய தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றிவிடும்' என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கலாம். இதைப் பின்பற்றி சிலர் தினமும் 5-6 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் நச்சுப்பொருளை வெளியேற்றும் என்பது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கான்செப்ட். நச்சுப்பொருளை வெளியேற்றுவதற்கென்று நம் உடல் சில வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதில் நம் கல்லீரல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நம் சிறுநீரகமும் இப்பணியை மேற்கொள்கிறது.

சிங்க் தொட்டியில் அடைப்பு இருந்தால் அதை நீக்குவதற்கு நிறைய தண்ணீரை ஊற்றிக் கழுவுவோம். அதுபோல நிறைய தண்ணீர் குடித்தால் உடலில் இருக்கும் கழிவுகள் அடித்துக்கொண்டு போய்விடும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், இந்தக் கழிவை நீக்குதல் என்பது Molecular லெவலில் நடக்கக்கூடிய ஒரு காம்ப்ளெக்ஸ் வேலை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் சிறுநீரகம் பாதிப்படைந்த ஒருவரால் அதிக அளவிலான தண்ணீரை பிராசஸ் செய்ய இயலாது. அவர் அதிக தண்ணீரைக் குடித்தால் அவருக்குப் பிரச்னைகள்தான் அதிகமாகும். இந்தப் பிரச்னைகள் இருப்பவர்கள் குறைவான தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் இதுதான். எனவே, தண்ணீரை அதிகமாகக் குடித்தால் நம் உடலிலிருந்து நச்சுப்பொருள் வெளியேறிவிடும் என்று நினைப்பது தவறு.

சில விஷயங்களுக்கு வேண்டுமானால் இக்கூற்று சரியானதாக இருக்கும். உதாரணத்திற்கு, சிறுநீரகக் கற்கள் இருப்பவர்களுக்கு Oxalate, கால்சியம் முதலிய உப்புகள் சிறுநீரில் இயற்கையாய் வெளியேறும். அதனால் கற்கள் உருவாகும். அவர்களுக்கு அந்த உப்பு படியாமல் இருக்க கூடுதலாகத் தண்ணீர் குடிக்கச் சொல்வோம். இதுபோன்ற ஒரு சில விஷயங்களில் மட்டும் தண்ணீர் அதிகமாகக் குடிப்பது நச்சுப்பொருள்களின் வெளியேற்றத்திற்கு உதவியாக இருக்குமே தவிர, இக்கூற்று எல்லோருக்கும் பொருந்தாது. எனவே, கஷ்டப்பட்டு இவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. தோராயமாக 2-3 லிட்டர், அதையும் கணக்குப் பார்க்காமல் குடித்தாலே போதுமானது.

அதேபோல, நார்மலாக இருப்பவர்கள் 7-8 லிட்டர் தண்ணீர் குடிப்பதைப் பார்க்கமுடிகிறது. இது Dilutional Hyponatremia என்ற பிரச்னைக்கு வித்திடும். அதாவது நிறைய தண்ணீர் குடிக்கையில் நம் உடலில் உள்ள உப்புச்சத்து குறையத் தொடங்கிவிடும். அதனால், நமக்குக் குழப்பமான மனநிலை தொடங்கி வலிப்பு வரைகூட ஏற்படலாம். அதேபோல நிறைய தண்ணீர் குடித்தால் முகம் பொலிவடையும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். நம் தோலின் ஆரோக்கியம், தோலில் சுரக்கக்கூடிய சுரப்பிகளின் செயல்பாடு, நாம் உட்கொள்ளும் நுண்சத்துகள், கிருமிகள் வராமல் தடுப்பது என முகப்பொலிவுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தண்ணீரால் பெரிய மாற்றம் ஏதும் நிகழாது. ஒருவேளை வெயில் காலங்களில் நீர்ச்சத்து குறைந்தால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தண்ணீர் தடுக்குமே தவிர மற்றபடி வேறெதுவும் கிடையாது.

தண்ணீர் பற்றி இன்னும் பல கேள்விகள், நம்பிக்கைகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஆதாரபூர்வமாக அறிவியல்பூர்வமாக பதிலைத் தேடுவோம்!

- பரிமாறுவோம்

நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா? - புன்னகை ரமேஷ்

நாம் சர்க்கரை நோயைப் பற்றிப் பேசியபோது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை பற்றியும் பேசியிருந்தோம். உணவில் இந்த இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கு, மாவுச்சத்தைக் குறைத்து தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதங்களை எடுக்க வேண்டும் என்று பேசியிருந்தோம். அதேபோல நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைக் குறைக்கும் திறனை உடலுக்கு அளிக்கும். அதனால் நன்கு உடற்பயிற்சி செய்பவர்கள் மிதமான அளவு மாவுச்சத்தை எடுத்தால்கூட, அவர்களது உடல் அதை பிராசஸ் செய்து சர்க்கரை அளவு ஏறாமல் பார்த்துக்கொள்ளும். அதனால்தான் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்கிறோம்.

பரோட்டா, சர்க்கரை நோயை வரவழைக்கும் என்றும், அதைத் தவிர்க்கவேண்டும் என்றும் ஒரு டாக்டர் கூறுகிறார். அது உண்மையா? - கிடையூர் மாணிக்கம்

உணவைத் தனித்தனியாகப் பார்க்கும் கோணத்தை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நான் இந்தத் தொடரில் எழுதிவருவதுபோல நீங்கள் எவ்வளவு மாவுச்சத்து எடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். மைதா மாவால் செய்த நூடுல்ஸ் மற்றும் ரொட்டியை முழுநேர உணவாக எடுத்துக்கொள்ளும் மக்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், மேகாலயா போன்ற பகுதிகளில் வசிக்கிறார்கள். ஆனால், உழைப்பு மற்றும் உடற்பயிற்சி காரணமாக அவர்களுக்கு எந்த நோயும் பெரிதாக வருவதில்லை. எவரெஸ்ட் போன்ற பெரிய மலைகளில்கூட சுலபமாக ஏறுகிறார்கள். எனவே நீங்கள் எந்த உணவை எவ்வளவு எடுக்கிறீர்கள், எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். குறிப்பிட்ட உணவை எடுத்தால் சர்க்கரை நோய் வந்துவிடும் என்பது தவறான கூற்று.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 21

டாக்டரிடம் கேளுங்கள்:

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.