மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 22

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

அதேபோல காலை எழுந் தவுடன் முதல் வேலையாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. இதிலும் பெரிய பயன்கள் இல்லை.

தண்ணீர் சார்ந்து அதிகம் கேட்கப்படும் இன்னும் இரு கேள்விகள்: வெயில் காலங்களில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா? உணவு ஜீரணமாகும் செயல் பாடுகளின் வேகத்தை அது குறைக்குமா?

‘குளிர்ந்த நீர் நம் ஜீரணத்தைக் குறைப்ப தில்லை' என்பதே பதில். நாம் குடிக்கும் நீர் உணவுக்குழாய் மூலமாக இரைப்பைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களிலேயே அது நம் உடலின் வெப்பமான 37 டிகிரி செல்சியஸுக்கு மாறிவிடும். நாம் நினைப்பது போல அது 2-3 மணி நேரம் உடலில் அப்படியே இருந்து நம்மைக் குளிர வைக்காது. நாம் அதிகபட்சம் குடிப்பது 200 மி.லி. ஆனால் 60 கிலோ எடையுள்ள நபரின் உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு 36 கிலோ. எனவே இந்தக் குளிர்ந்த நீரால் ஜீரணம் குறையாது.

இந்தியா போன்ற நாடுகளில் குளிர்ந்த நீரைக் குடிப்பது, குளிர்ப்பிரதேசத்தில் வெந்நீர் குடிப்பதெல்லாம் பல காலமாகப் பின்பற்றப்படுவது தான். எனவே, ஃப்ரிட்ஜ் தண்ணீரை தாராளமாகக் குடிக்கலாம். ஆனால், மிகவும் குளிராக, அதாவது ஐஸ் போன்ற நிலையில் தண்ணீரைக் குடிப்பது பற்களில் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்லதல்ல.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 22
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 22

சூடான தண்ணீரை அடிக்கடி குடித்தால் உடல் எடை குறையும் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். குளிர்ந்த நீரைக் குடித்தால் உடல் எடை கூடும் என்றும் சிலர் சொல்லக் கேட்டுள்ளேன். இவை யெல்லாம் உண்மை கிடையாது. உடல் பருமனைப் பற்றி அடுத்த சில வாரங்களில் விரிவாகப் பேசுவோம். அது ஒரு காம்ப்ளெக்ஸ் ப்ராசஸ். சூடான தண்ணீர் குடித்தால் நம் உடலின் கொழுப்பு அனைத்தும் கரைந்துவிடாது. இது ஒரு தவறான புரிதல். அதேபோல சாதாரண தண்ணீரை அதிகம் குடித்தாலும் உடல் எடை கூடும் என்று சிலர் நம்புகிறார்கள். ஜிம்களில் பயிற்சி செய்யும் சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று தண்ணீர்கூடக் குடிக்க மாட்டார்கள். அதற்குப் பெயர், எடைகுறைப்பு அல்ல, Dehydration. நீர்ச்சத்து குறைவதால் சிலருக்கு உடல் எடையும் குறையும். அது உண்மையான எடைகுறைப்பு கிடையாது. உண்மையைச் சொல்வ தென்றால், எடையைக் குறைக்க விரும்புவோர் நல்ல உணவுகளைச் சாப்பிட்டு, நன்கு உடற்பயிற்சிகள் செய்து, அதிக தண்ணீர் குடிப்பது நல்லது.

அதேபோல காலை எழுந் தவுடன் முதல் வேலையாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. இதிலும் பெரிய பயன்கள் இல்லை. சிலருக்கு எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது Gastro Colic Reflex-ஐ ஆக்டிவேட் செய்யும். இதனால் மலம் கழிக்கும் உணர்வு உண்டாகும். மற்றபடி நாம் குடிக்கும் தண்ணீர் நச்சுகளை உடனடியாக வெளியேற்றும் என்றெல்லாம் கிடையாது. நாம் தூங்கும் நேரத்தில் நம் உடலின் மெட்டபாலிசம் சற்று குறைவாக நடப்பதால் பகலில் உருவாகும் அளவுக்கு இரவில் சிறுநீர் உருவாகாது. அதனால் தான், காலை எழுந்தவுடன் கழிக்கும் சிறுநீர் அதிகம் மஞ்சளாகக் காணப்படும். இரவு முழுவதும் உடலை விட்டு நீர் வெளியேறாமல் இருந்ததே இதற்கான காரணம். இவையெல்லாம், இயற்கையாய் நடப்பதுதான். எனவே, இந்த 8 மணிநேரம் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் ஒன்றும் ஆகாது. நாம் வழக்கம் போல எழுந்து நம் வேலைகளைத் தொடங்கினால் போதுமானது. எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது தவறில்லை. ஆனால் அதைக் கஷ்டப்பட்டுப் பின்பற்ற வேண்டியதில்லை.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 22
ஆரோக்கியம் ஒரு பிளேட் - 22

சிக்ஸ்பேக் போன்றவற்றை முயற்சி செய்பவர்கள் உடலில் உள்ள கொழுப்பின் சதவிகிதத்தை நன்கு குறைத்து தசைகள் அனைத்தும் கட்டுக் கட்டாகத் தெரிய போட்டிக்கு முன்தினம் தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இந்த Dehydration ஓர் ஆபத்தான முறை. இதனால் நிறைய பேருக்கு சிறுநீரக பாதிப்புகூட ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்தால் நிறைய வியர்வை வெளியேறும்; நீர் மற்றும் உப்புச்சத்துக் குறைபாடு உண்டாகும். எனவே, தண்ணீரையும், நீர்ச்சத்துள்ள உணவுகளையும் போதிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளால் நம் கொழுப்புதான் குறைய வேண்டுமே தவிர, தண்ணீரின் அளவைக் குறைத்துவிட்டு உடல் எடை குறைந்துவிட்டது என்று சொல்வது மிகவும் தவறான எண்ணம்.

இன்று தண்ணீர் என்றால் RO தண்ணீர்தான் என்றாகி விட்டது. முன்பெல்லாம் மண்ணின் தன்மைக்கேற்ப ஊருக்கு ஒரு சுவையில் தண்ணீர் இருக்கும். இப்போது எல்லா ஊர்களிலும் ஒரே சுவை. கேன் தண்ணீர்தான். மினரல் வாட்டர் என்று சொல்லப்படும் கேன் வாட்டர், பானைத் தண்ணீர், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர், ஃப்ரிட்ஜ் தண்ணீர், செம்புப் பாத்திரத் தண்ணீர்... இவற்றில் எது நல்லது?

அந்தக்காலத்தில் வீட்டுக்குப் பின்புறம் அல்லது ஊருக்குப் பொதுவாகக் கிணறு இருக்கும். அந்தத் தண்ணீரைத்தான் குடித்தோம். வாய்க்கால், ஆறுகளில் இருந்தும் தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்தி னோம். நகரங்கள் விரிவானபோது கிணறுகள் தூர்ந்துபோயின. பிறகு ஆற்றுத் தண்ணீர் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது. இந்தத் தண்ணீரின் உப்புத்தன்மை குறைவாக இருந்தாலும், கிணற்று நீருடன் ஒப்பிட்டால் சுத்தம் குறைவாகத்தான் இருக்கும். எனவே, வாந்தி, பேதி, காலரா முதலிய நோய்களைத் தடுக்க நாம் எப்போதும் சொல்லும் அறிவுரை, ‘தண்ணீரை நன்கு காய்ச்சிய பிறகே குடிக்கவேண்டும்.'

காய்ச்சிக் குடிக்கவேண்டும் என்பதைப் பலரும் ‘சூடாகக் குடிக்கவேண்டும்' என்று நினைத்துக்கொள்கிறார்கள். அப்படி இல்லை. தண்ணீரில் உள்ள பாக்டீரியா, வைரஸை அழிக்க வேண்டுமென்றால் அதை நன்கு கொதிக்க வைக்கவேண்டும். கொதிநிலையிலே 10 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். அதன்பின் அதைப் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் குடிக்கலாம். இருப்பதிலேயே சுத்தமான தண்ணீரை ‘கோல்டு ஸ்டாண்டர்டு’ என்று சொல்வோம். இந்த நன்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீர்தான் சிறந்தது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 22

RO தண்ணீர் எப்படி வந்தது? RO என்றால் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (Reverse Osmosis). அதாவது தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்கும் தொழில்நுட்பம். பெரிய தொழிற்சாலைகள் பலவற்றிலும் பிரமாண்ட இயந்திரங்கள் இருக்கும். அவர்களின் பயன்பாட்டுக்கு போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்படும். அந்தத் தண்ணீரின் உப்புத்தன்மை காரணமாக இயந்திரங்கள் பழுதாக வாய்ப்பிருக்கிறது. அந்த உப்புத்தன்மையை நீக்கக் கண்டுபிடிக்கப்பட்டதே RO தொழில்நுட்பம். மக்கள் அருந்துவதற்காக உருவானதல்ல.

ஆஸ்மாசிஸ் என்பது ஓர் அடிப்படை உயிரியல் பிராசஸ். அதாவது நம் ஒவ்வொரு செல்லிலும் நடக்கும் ஒரு விஷயம். செல் ஜவ்வுக்கு இருபுறமும் தண்ணீர் மற்றும் உப்புச்சத்துகள் இருக்கின்றன. உப்புச்சத்து குறைவாக இருக்கும் பக்கத்திலிருந்து உப்புச்சத்து அதிகமாக உள்ள பக்கத்துக்கு அந்த ஜவ்வு வழியாகத் தண்ணீர் மட்டும் செல்லும். அதை ‘ஆஸ்மாசிஸ்' என்போம்.

ரிவர்ஸ் ஆஸ்மாசிஸில் ‘Semi permeable membrane’ என்ற ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். அதாவது சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை மட்டும் வெளியே விடக்கூடிய ஜவ்வு இது. இங்கு துளைகள் மிகச் சிறிய அளவில் இருக்கும். அதில் உப்புத் தண்ணீரை அதிக அழுத்தத்தில் செலுத்துகையில் உப்புகள் அனைத்தும் ஒருபுறம் தங்கிவிட்டு மீதமுள்ள சிறு Molecules மறுபுறம் வந்துவிடும். எனவேதான் போர் தண்ணீர் போன்ற அதிக உப்புத்தன்மையுடைய தண்ணீரை RO செய்தால் உப்புச்சத்து இல்லாத சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் கிடைக்கக்கூடிய தண்ணீரின் உண்மையான பெயர் ‘Demineralised water.’ அதாவது, உப்புச்சத்துகள் அனைத்தும் நீக்கப்பட்ட நீர். இது மிகவும் சுவையாக இருக்கும். தண்ணீரில் எவ்வளவுக்கு உப்புச்சத்து அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அதன் சுவை குறையும். நாம் சமையலுக்குப் பயன்படுத்துவதைப் போன்ற உப்பு வகைகள் தண்ணீரில் இருப்பதில்லை. கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகள் அதில் அதிகம் இருக்கும். இவைதான் தண்ணீருக்கான கனத்தன்மையை (Hardness) அளிக்கிறது. ஆற்று நீரில் சோப் போட்டால் நுரை வருவதற்கும், போர் தண்ணீரில் வராததற்குமான காரணம் இந்த கனத்தன்மைதான்.

RO செய்யப்பட்ட தண்ணீரை எதேச்சையாக ருசி பார்த்த ஒருவருக்கு, ‘இதை ஏன் நாம் குடிநீராகப் பயன்படுத்தக்கூடாது’ என்ற யோசனை வந்திருக்கிறது. அதன்பிறகு பாட்டிலில் அடைத்து மினரல் வாட்டர் என்று விற்கத் தொடங்குகிறார்கள். என்ன முரண் பாருங்கள், உப்புச்சத்து அனைத்தும் நீக்கப்பட்ட Demineralised தண்ணீர்தான் இங்கே ‘மினரல் வாட்டர்' என்ற பெயரில் விற்கப்படுகிறது. மக்களும் இதில் நிறைய சத்துகள் இருக்கின்றதென்று நம்பி வாங்கி அருந்துகிறார்கள்.

தண்ணீரில் உப்புச்சத்து அதிகரிப்பு, தொற்று நோய்கள் பரவல் போன்றவை காரணமாக மினரல் வாட்டரின் பயன்பாடு அதிகரித்து, அதைத் தயாரிக்கப் பெரும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. தற்போது நாம் சர்வசாதாரணமாக வீடுகளில் வாங்கிப் பயன்படுத்துகிற கேன் வாட்டரும் RO செய்யப்பட்டதுதான். நம்மில் பலர் வீடுகளில்கூட RO மெஷின் அமைத்திருக்கிறோம்.

சரி, சுவை தாண்டி இதில் என்னென்ன பயன்கள் இருக்கின்றன என்பதையும் பார்த்துவிடுவோம். இந்த RO முறைக்கு கிருமிகளை நீக்கக்கூடிய தன்மை இருக்கிறது. அதன் Membrane சரியாக இருக்கும் பட்சத்தில் 99.99 சதவிகித பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமிகளை நீக்கிவிடுவதாகச் சொல்கிறார்கள். சுவையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது என்பதால் இதைக் குடிக்கலாம் என்று மக்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்துவிட்டது.

இத்தண்ணீரில் உப்புச்சத்து சிறிதும் இல்லாததால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? எலும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுமா, கிட்னியில் கல் வந்துவிடுமா, மாரடைப்பு வருமா எனப் பல கேள்விகள் இருக்கின்றன.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 22

தண்ணீரில் உப்புச்சத்தின் அளவை அறிந்துகொள்வதற்கு Total Dissolved Solutes (TDS) என்ற அளவீட்டு எண்ணைப் பயன்படுத்துவோம். பொதுவாக போர் தண்ணீரின் TDS அளவு 500, 1000, 2000 என இருக்கும். RO தண்ணீரின் அளவு 50 என இருக்கும். அத்தண்ணீரை மேலும் சுத்திகரித்தால் TDS அளவு இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய ஆற்று நீர் 50-100 வரை இருக்கும். இதே கடல்நீரின் TDS 30,000-40,000 வரை இருக்கும். மழைநீரின் TDS அளவு 6-7 தான். TDS-ன் அளவு 50-க்குக் கீழிருக்கும் தண்ணீரை தினசரி குடிப்பது நல்லதல்ல. ஆற்று நீரின் TDS அளவுக்கு இணையான தண்ணீரை RO அளிக்குமானால் அதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். அதன் அமிலத்தன்மையும் குறைவாக இருக்கும். உப்புச்சத்துகளும் மிகச்சிறிய அளவில் இருக்கும்.

இந்த Demineralised தண்ணீர் குறித்து உலக சுகாதார நிறுவனம் 1970-80-களில் இருந்தே ஆராய்ச்சி செய்துவருகிறது. 2005-ம் ஆண்டில் ‘Nutrients in Drinking water’ என்ற பெயரில் ஓர் புகழ்பெற்ற ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள். அதில், Demineralised தண்ணீர் குறித்த நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஓரளவுக்கு உப்புச்சத்தைக் கொண்ட தண்ணீரைக் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு குறைவாக ஏற்படுகிறது என்றும் உப்புச்சத்து நீக்கிய இந்த நீரைக் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது என்றும் இதில் சொல்லப்பட்டது. மேலும், குழந்தைகளுக்கு எலும்புகள் பலவீனம் அடைந்து அதனால் எளிதில் எலும்புமுறிவு ஏற்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டது. ஒட்டுமொத்தமாக RO தண்ணீரால் நம் உடலில் உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படலாம் என்று ஆய்வு முடிவுகள் கூறின.

மாரடைப்பு குறித்தான இம்முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மெக்னீசியம் சத்துகள் நாம் குடிக்கும் தண்ணீரில் குறைந்து ரத்தத்திலும் குறைந்தால் Atherosclerosis ஏற்பட்டு ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் என்பதுதான் இந்த ஆய்வு சொல்லும் தியரி. காலங்காலமாக TDS குறைவாக உள்ள ஆற்று நீரைத்தான் நாம் பயன்படுத்திவருகிறோம். மேற்சொன்ன காரணத்தால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்றால் அப்போதிலிருந்தே மாரடைப்பு அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? இது தவிர உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படுதல் மற்றும் குழந்தைகளின் எலும்பு பலவீனமாதல் ஆகியவையும் நிரூபிக்கப்படவில்லை. காரணம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகள் நாம் குடிக்கும் தண்ணீரில் இருக்கும் அளவைவிடப் பல மடங்கு நாம் சாப்பிடும் உணவு வழியாகக் கிடைக்கின்றன. எனவே உப்புச்சத்து இல்லாத தண்ணீரைக் குடித்தால் உடலில் உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படும் என்பது அறிவியலுக்கு சற்று அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.

2017-ம் ஆண்டு ‘Guidelines for Drinking Water Quality’ என்ற பெயரில் மற்றுமொரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம். அதில் TDS-ன் அளவு 50-க்கு மேல் இருக்கும்பட்சத்தில் Demineralised தண்ணீரை எடுத்துக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தது. முன் சொன்ன குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறியது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 22

தற்போது TDS அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய RO யூனிட்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இவை தண்ணீரின் TDS அளவை 100-150 வரை பார்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது, RO யூனிட்களைப் பராமரிப்பது மிகவும் அவசியம். சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் கிருமிகள் நீங்காமல் இருக்கக்கூடும். UV எனப்படும் ultraviolet சுத்திகரிப்பு முறை இந்த RO யூனிட்களில் இருந்தால் இன்னும் நல்லது. மேற்சொன்னவற்றை சரியாகப் பின்பற்றினால் RO தண்ணீரை தாராளமாகக் குடிக்கலாம். வீடுகளில் பயன்படு்த்தும் கேன் வாட்டர்கள் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறது என்பது தெரியாது. நம்பகமான இடங்களில் வாங்குங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கார்ப்பரேஷன் குடிநீர். அதை நன்கு காய்ச்சிக் குடித்தால் எந்தப் பிரச்னையும் இல்லை.

சரி, தண்ணீரை சுத்தம் செய்தாயிற்று, அதை எதில் வைத்துப் பயன்படுத்துவது? அந்தக்காலத்தில் பானையில் சேமித்துத் தண்ணீரை உபயோகித்தோம். பின்னர் செம்பு, எவர்சில்வர், பித்தளைப் பாத்திரங்களில் வைத்துப் பயன்படுத்தினோம். தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களைப் பெருமளவு பயன்படுத்திவருகிறோம்.

பானைத் தண்ணீர் நல்லது. ஆனால், தண்ணீரைப் பானையில் வைத்துக் குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. எவர்சில்வர் என்று சொல்லக்கூடிய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. மிகவும் நல்லது என்று சொல்லப்படும் செம்புப் பாத்திரங்கள் குறித்து இரண்டு விஷயங்கள் உண்டு. அதில் தண்ணீரை சேமித்துக் குடிக்கையில் அச்செம்பு தண்ணீரில் கலந்து நமக்குச் சில நல்ல விஷயங்களைக் கொடுக்கிறது என்று சொல்லப்படுகிறது. இது உண்மையில்லை. காரணம், அத்தனை எளிதில் பாத்திரத்திலிருந்து தண்ணீரில் கலக்கும் தன்மை செம்புக்குக் கிடையாது. இரண்டாவது, செம்புத் தட்டுப்பாடு என்ற ஒன்று நமக்கு இயற்கையிலேயே கிடையாது. நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் கிடைக்கக்கூடிய ஓர் உப்புச்சத்து அது. எனவே, செம்புப்பானைகள் மற்றும் பாட்டில்கள் மூலமாகத்தான் அச்சத்து நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதில்லை.

ஆனால், Direct Oxidising effect, Direct Antibacterial effect போன்ற சில நல்ல குணங்களும் செம்புக்கு உண்டு. அதாவது, செம்பின் மீது வேறொரு பொருள் படும்போது அங்கு எளிதில் கிருமிகள் உருவாகாது. அல்லது கிருமிகள் இருப்பினும் அதை அழிக்கக்கூடிய தன்மை செம்புக்கு இருக்கிறது. அதனால்தான், முக்கிய ஆய்வகங்களில் உள்ள கைப்பிடிகள் செம்பால் செய்யப்பட்டிருக்கும். இதைக் காரணமாக வைத்துதான் தண்ணீரை செம்பில் வைத்துப் பயன்படுத்தும்போது கிருமிகள் அழிக்கப்படும் என்கிறார்கள். ஆனால், செம்பு எந்த அளவுக்குக் கிருமிகளை அழிக்கும் என்பது குறித்தும் எந்த ஆராய்ச்சி ரீதியான நிரூபணமும் இல்லை. அசுத்தமான தண்ணீரைக் கொதிக்க வைத்து அல்லது UV ஃபில்டரேஷன் மூலம் சுத்தப்படுத்தும் அளவுக்குச் செம்பினால் முடியுமா என்றால் நிச்சயம் இல்லை. சிறிய அளவில் உருவாகும் கிருமிகளை வேண்டுமானால் அழிக்கும் தன்மை அதற்கு இருக்கலாம். ஆனால் மிகைப்படுத்திக் கூறும் அளவுக்கு அது பெரிய விஷயம் கிடையாது. அதேநேரத்தில், விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

அடுத்து, பிளாஸ்டிக் பாட்டில்கள். இவற்றைப் பொறுத்தவரையில் 1, 2, 3, 4 போன்ற Grading இருக்கிறது. அதில் டைப்-1 என்று சொல்லப்படுகிற PET பாட்டில்களைப் பயன்படுத்துவது பிரச்னை இல்லை. சில பாட்டில்கள் ஒருதடவை மட்டுமே பயன்படுத்த உகந்தவை. உதாரணத்துக்கு ரயில் நிலையங்களில் விற்கப்படுகிறதல்லவா... அவற்றை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். HDPE என்று சொல்லப்படும் Grade-2 பாட்டில்களை நாம் வீட்டு உபயோகத்துக்குக்கூடப் பயன்படுத்தலாம். அதில் எந்தக் கெடுதலும் கிடையாது. அதேநேரத்தில், மிக சூடான தண்ணீரை இந்த HDPE பாட்டிலில் ஊற்றக்கூடாது. சூடான தண்ணீர்பட்டால் ஆவியாகும் தன்மையை அப்பிளாஸ்டிக் கொண்டிருப்பதால் அதை முழுவதுமாகத் தவிர்ப்பது நல்லது.

அடுத்த வாரம் இன்னும் விரிவாக வேறொரு முக்கிய விஷயத்தை அலசலாம்!

- பரிமாறுவோம்