மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 23

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

உயர் ரத்த அழுத்தத்துக்காக சிகிச்சைக்குச் செல்லும்போது ‘உப்பைக் குறைக்க வேண்டும்' என்று மருத்துவர்கள் பொதுவாக அறிவுரை சொல்வார்கள்.

தண்ணீர் பற்றி நிறைய அலசிவிட்டோம். ‘காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு மிக முக்கியத் தேவை உப்பு' என்று மகாத்மா காந்தியே ஒருமுறை கூறியிருக்கிறார். இப்போது உப்பைப் பற்றிப் பார்த்துவிடலாம். இவ்வுலகில் மனிதன் கண்டறிந்த முதல் சுவை, அனேகமாக உப்பாகத்தான் இருக்கும். மனிதன் பல கண்டங்கள் தாண்டிப் புதிய நிலங்களைத் தேடிச் சென்றதற்குத் தங்கமும் உப்புமே முக்கிய காரணம். சில இடங்களில் தங்கத்துக்கு இணையாக உப்பு பரிமாறிக்கொள்ளப்பட்ட வரலாறும் உண்டு.

அதேநேரத்தில் மருத்துவ உலகில் உப்பு பற்றி நிறைய தவறான எண்ணங்கள் இருக்கின்றன. மருத்துவர் ஒரு அர்த்தத்தில் சொல்வார், நோயாளி வேறு ஒரு அர்த்தத்தில் புரிந்துகொள்வார். அதேபோல பெரும்பாலான நோய்களை உப்போடு சம்பந்தப்படுத்துவார்கள். அரிப்பு வந்தால் உடலில் உப்பு அதிகமாகிவிட்டது; சிறுநீரகம் பாதிப்படைந்துவிட்டால் அதற்கு உப்புதான் காரணம்; அதேபோல மூட்டுவலி, முதுகுப் பிடிப்பு, ரத்த அழுத்தம் என அனைத்துக்கும் உப்புமீதுதான் பழி போடப்படுகிறது. இவை எந்த அளவு உண்மை?

முதலில் ஓர் அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, உப்பு என்று கூறியவுடன் நம் நினைவுக்கு வருவது நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் ‘டேபிள் சால்ட்’ (சோடியம் குளோரைடு). ஆனால் வேதியியலில் பல பொருள்கள் உப்பின்கீழ்தான் வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பின்போது நம் ரத்தத்தில் அதிகமாகும் யூரியா, கிரியாடினின் ஆகியவை உப்புக்களே. அதேபோல மூட்டு வலியின்போது ரத்தத்தில் அதிகம் இருப்பது, யூரிக் ஆசிட் எனும் உப்பு. தசைப்பிடிப்பு வந்தால் தட்டுப்பாடு ஏற்படுவது பொட்டாசியம் எனும் உப்பு. இப்படி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு உப்பு வகை காரணமாக இருக்கையில், அனைத்துக்கும் காரணமாக சமையல் உப்பை நினைத்துக்கொண்டு அதைக் குறைக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம். இது அறியாமையால் செய்யும் செயல்.

உயர் ரத்த அழுத்தத்துக்காக சிகிச்சைக்குச் செல்லும்போது ‘உப்பைக் குறைக்க வேண்டும்' என்று மருத்துவர்கள் பொதுவாக அறிவுரை சொல்வார்கள். சிலர் ‘உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வதால்தான் ரத்த அழுத்தமே வருகிறது' என்றுகூட நினைக்கிறார்கள். அதேபோல உப்பு சாப்பிடுவதால்தான் இதயத்தில் பிரச்னை வருகிறது என்றும் சிலர் நம்புகிறார்கள்.

‘மனிதன் மட்டுமே தனியே உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறான்... விலங்குகள் உப்பில்லாமல்தானே உணவு உண்கின்றன’ என்பது ஓர் அடிப்படை வாதம். கடல் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் விலங்குகளுக்கு பெரிதாக உப்புப் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. அதேநேரத்தில் விலங்குண்ணிகளுக்கும் உப்புப் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. காரணம், பிற மிருகங்களைச் சாப்பிடும்போது அந்த இரையின் உடலில் இருக்கும் உப்பு இவ்விலங்குகளுக்கும் கிடைத்துவிடுகிறது. ஆனால் தாவர உண்ணிகளுக்கு உப்புப் பற்றாக்குறை உண்டு. வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு உப்புப் பற்றாக்குறை ஏற்படுகையில் உப்புக் கல்லைச் சாப்பிடத்தரும் வழக்கம்கூட இங்கு உண்டு. இதை Salt Lick என்று சொல்வார்கள். எனவே, மறைமுகமாக அவற்றுக்கும் உப்புச்சத்து தேவைதான். மேலும் சில எறும்பு வகைகளை ஆராய்ச்சி செய்து பார்க்கையில் இந்த உப்புப் பற்றாக்குறை காலத்தில் அவை விலங்குண்ணிகளாக மாறி மற்ற எறும்புகளைச் சாப்பிடும் நிலைகூட ஏற்படுகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே, விலங்குகளுக்கும் உப்பு மிக அவசியத் தேவை.

அவை எடுத்துக்கொள்ளும் உணவின் வழியாகவே அந்த உப்பு அவற்றுக்கு மறைமுகமாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால் மனிதனுக்கு, பேலியோலித்திக் காலத்தில் உணவில் உப்பு சேர்த்து சாப்பிடும் வழக்கம் கிடையாது. காரணம், அப்போது வேட்டையாடிச் சாப்பிடும் உணவிலிருந்தே அவர்களுக்கான உப்பு கிடைத்துவிட்டது. விவசாயம் செய்து, தாவர உணவை அதிகமாக சாப்பிடத் தொடங்கிய பின்புதான் தனியாக உப்பு சாப்பிடும் சூழ்நிலை உருவானது. அதனால்தான், பழைமையான ஆசியப் பழங்குடியினர் பேசும் மொழியில் உப்பு என்ற பொருளுக்கு வார்த்தையே கிடையாது. காரணம், அதை அவர்கள் பயன்படுத்தியதே கிடையாது. அதாவது விலங்குகளைப் போலவே, உப்பு அவர்களுக்குத் தனியாகத் தேவைப்பட வில்லை. ஆனால், சில பழங்குடிச் சமூகங்கள் உப்புக்காக விலங்குகளின் ரத்தத்தைக் குடிப்பது, அவற்றின் சிறுநீரைக் குடிப்பது என சில அதிர்ச்சியளிக்கும் பழக்கங்களைப் பின்பற்றியிருக்கிறார்கள்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 23

உப்பு சார்ந்து இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. சம்பளம் என்பதற்கான ஆங்கில சொல் ‘Salary.’ இந்த வார்த்தை Salarium என்ற சொல்லில் இருந்து வந்தது. அதன் உண்மையான பொருள் ‘Salt Money.’ ஏனென்றால் அக்காலத்தில் உப்பு மிகவும் மதிப்பு மிக்க விஷயமாகக் கருதப்பட்டது. உப்பு விற்பனையும் அது சார்ந்த வணிகமும் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. அதுமட்டுமல்லாமல், உப்புக்கு வரிபோட்டதுதான் பிரெஞ்சுப் புரட்சிக்கே காரணம். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி தொடங்கிய ஒத்துழையாமைப் போராட்டத்துக்கும் இதுதான் காரணம். எனவே, மனிதகுல வரலாற்றில் உப்புக்கு மிக முக்கிய இடம் உண்டு.

வரலாற்றைத் தாண்டி இப்போது அறிவியலுக்குச் செல்வோம். நாம் உணவில் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு நம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மையா?

இந்தக் கேள்விக்கு விடைதேட சோடியம் மற்றும் குளோரைடு ஆகிய இரண்டின் பண்புகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். ‘நம் ரத்தத்தில் Osmolarity என்று சொல்லக்கூடிய ரத்தத்தின் அடர்த்தியை சீராக வைப்பதில் உப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால், ரத்தத்தில் சோடியம் அளவு அதிகரிக்கையில் அது நீரை ஈர்த்துக்கொள்ளும். அது நீரின் அளவை அதிகரித்து ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும்' என்று நம்பினார்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கையில் இதயம் துடிக்க சிரமப்பட்டு இதயக் கோளாறுக்கு வழிவகுக்கும். ‘நாம் தினசரி சோடியம் குளோரைடு உப்பை எடுத்துக் கொள்வதால் அது ரத்தத்தில் சோடியத்தின் அளவை அதிகரிக்கச்செய்யும். எனவே ரத்த அழுத்தம் மற்றும் இதயப் பிரச்னைகள் உள்ளவர்கள் குறைவான உப்பையே எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது.

1980-90களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளிலும் உப்புக்கும் ரத்த அழுத்தத்துக்கும் சிறிது சம்மந்தம் இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், உப்பைக் குறைக்கும்போது ரத்த அழுத்தமும் சற்று குறைவது போன்ற முடிவுகளும் கிடைக்கப்பெற்றதால் அனைத்து மருத்துவக் கூட்டமைப்புகளும் சேர்ந்து, ‘உணவில் உப்பின் அளவைக் குறைக்கவேண்டும். அப்படிச் செய்தால் மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் குறைகிறது' என்றார்கள்.

இதன் அறிவியலை இன்னும் சிறிது ஆழமாகப் பார்ப்போம். நாம் சாப்பிடும் உப்பு நேரே ரத்தத்துக்குச் சென்று அங்கிருக்கும் தண்ணீரை ஈர்த்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வது கிடையாது. நம் ரத்தத்தில் சோடியத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு ‘Renin', ‘Aldosterone' போன்ற சில முக்கிய ஹார்மோன்கள் நம் சிறுநீரகத்தில் உண்டு. ரத்தத்தில் உப்பு அதிகரிக்கையில் இந்த ஹார்மோன்கள் வேலை செய்யத் தொடங்கி அதை நம் சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். ஒருவேளை, ரத்தத்தில் உப்பு குறைந்தாலும் இதே ஹார்மோன்கள் உதவியுடன் உப்பு வெளியேற்றத்தைக் குறைத்து பேலன்ஸ் செய்துவிடும். எனவே, நாம் நினைப்பதுபோல உப்பானது நேரே போய் நம் ரத்தத்தில் படிவது கிடையாது.

இதில், இரண்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். நான் நிறைய ஆராய்ச்சிகள் பற்றிக் கூறினேன். அதில் முக்கியமான ஆராய்ச்சி யாளர்களின் கூட்டமைப்பால் நிறுவப்பட்ட ஒன்று ‘Intersalt’ என்ற ஆராய்ச்சி. அந்த ஆராய்ச்சியில் இதுபற்றிய எந்த வலுவான முடிவுகளும் கிடைக்கவில்லை. இறுதி முடிவாக, உப்பைக் குறைப்பதால் சுமார் 4 பாயின்ட் வரை ரத்த அழுத்தம் குறைவதாக அவர்கள் கூறினர். இந்த முடிவுகள் ரத்த அழுத்தம் அதிகம் உள்ளோருக்கு மட்டுமே பொருந்தும். மேலும் cochrane review போன்ற பல்வேறு உயர்தர ஆராய்ச்சிகளும், ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் உப்பு எடுத்துக்கொள்வதை நன்கு குறைத்தால் 4 பாயின்ட் வரை குறைவதாகக் கூறுகின்றன. ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும் மக்கள் உப்பின் அளவைக் குறைத்தால் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை. அது, சிலமுறை ரத்த அழுத்தத்தின் அளவை அதிகமாக்கவும் செய்கிறது என்று அறியப்பட்டது.

நார்மலான ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பின் அளவைக் குறைத்தால் ‘Secondary Aldosterone' ஆக்டிவேட் ஆகும். அதாவது உப்பின் அளவு குறையும்போது நம் சிறுநீரகம் Aldosterone-ஐ தூண்டிவிட்டு உப்பை வெளியேற்றாமல் சோடியத்தின் அளவை அதிகரிக்க முயல்கிறது. அப்போது சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூட செய்கிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. உப்பை வெவ்வேறு அளவுகளில் எடுத்துக்கொள்ளும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்கள் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். உதாரணத்துக்கு சீனாவின் டையான்ஜின் (Tianjin) மாகாணத்தில் 16-20 கிராம் உப்பு சாப்பிடுகிறார்கள். இதே அமெரிக்காவின் சிகாகோவில் குறைவாகவே உப்பு எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த இருவேறு மக்களின் ரத்த அழுத்தமும் ஒரே அளவில்தான் இருக்கிறது. சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளின் உணவுகளில் மிக அதிக உப்பு இருக்கும். ஆனால் அங்கே உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற இருதயக் கோளாறு பிரச்னைகள் குறைவாகவே இருக்கின்றன. பெரிதாக உப்பு எடுத்துக்கொள்ளாத பபுவா நியூ கினியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பிரச்னைகள் சற்று அதிகமாக காணப்படுகின்றன.

இந்த உப்பால் ஏற்படும் பிரச்னைகளை ‘J-Shaped curve' என்று சொல்வோம். உப்பை நல்லது என்று நான் கூறவில்லை, மிகவும் அதிக அளவில் எடுத்துக்கொண்டால் ரத்தக்குழாய் சார்ந்த பாதிப்புகள் மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பதிலும் மாற்றமில்லை. மீடியமான அளவில் உப்பு எடுத்துக்கொள்பவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்பட பெரிதாக வாய்ப்பில்லை.ஆனால் உப்பின் அளவை ரொம்பவும் குறைத்தாலும் இறப்புகள் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். மிக அதிகமாகவும் இல்லாமல், மிகக் குறைவாகவும் இல்லாமல் ஓரளவுக்கு உப்பு எடுத்துக்கொள்வதே நல்லது. ஒரு நாளைக்கு 5 கிராம் அளவுக்கு உப்பு பயன்படுத்தவேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை. அப்படிச் செய்தால் 2.5 கிராம் அளவு சோடியம் நம் உடலுக்குக் கிடைக்கும் என்பது கணக்கு. அதன்மூலம் 4 பாயின்ட் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது. ஆனால், யோகா செய்தால் 5 பாயின்ட் வரை ரத்த அழுத்தம் குறைகிறது. இதே உடற்பயிற்சி செய்தால் 7-8 பாயின்ட் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது. உடல் எடையைக் குறைத்தால் 10-15 பாயின்ட் குறைகிறது. பழங்கள் சாப்பிட்டால் 7-8, மது அருந்தும் பழக்கத்தை விட்டால் 5 பாயின்ட் குறைகிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 23

கஷ்டப்பட்டு உப்பைத் தவிர்த்து 3-4 பாயின்டாகக் குறையும் ரத்த அழுத்தத்தின் அளவு, அதைவிட எளிதான வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுகையில் 10-15 பாயின்ட் வரை மிக எளிதாகக் குறைகிறது. இதைப் பார்க்கும்போது வாட்ஸ்அப்பில் படித்த ஒரு காமெடிதான் என் நினைவுக்கு வருகிறது. அதாவது அமெரிக்காகாரன் விண்வெளியில் எழுதுவதற்கு 100 கோடி ரூபாய் செலவு செய்து பேனா கண்டுபிடித்தானாம். வேறொரு நாட்டுக்காரன் இரண்டே ரூபாய் பென்சிலில் வேலையை முடித்தானாம். அப்படித்தான் இருக்கிறது இந்தக் கதை.

140 பாயின்டில் இருந்து 137-க்குக் கொண்டு வர உப்புச்சப்பு இல்லாத உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வதைவிட, மிக எளிதாக பழங்கள் சிலவற்றை எடுத்து மாவுச்சத்தைக் குறைத்து உடற்பயிற்சியை மேற்கொண்டால் ரத்த அழுத்தம் 20 பாயின்ட் வரைகூட குறைய வாய்ப்பிருக்கிறது.

என்ன டாக்டர், மாவுச்சத்தை இங்கேயும் கொண்டு வந்துவிட்டீர்களா என்கிறீர்களா? ஆம், கட்டாயம் தொடர்பிருக்கிறது. உடல் பருமன், சர்க்கரை நோய் முதலிய இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உடலில் அதிகம் இருக்கையில் ‘Renin', ‘Aldosterone' முதலிய ஹார்மோன்கள் அளவு பாதிப்பு அடைகிறது. இதுமட்டுமல்லாமல் நம் உடலின் ‘Sympathetic system' அதிகம் வேலை பார்க்கிறது. நிறைய உள்காயங்கள் ஏற்படுகின்றன. இவையெல்லாம் சேர்த்து உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமாக அமைகின்றன. அதனால்தான் மாவுச்சத்தைக் குறைத்து, உடல் எடையைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவருவது, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உப்பைக் குறைப்பதைவிடச் சிறந்த வழி. இது ரத்தக்குழாயில் உள்ள உப்பின் அளவை நேரடியாகக் குறைக்கும். உப்பை நேரடியாகக் குறைத்தால்கூட அதன் வெளியேற்றத்தைத் தடுக்க சில ஹார்மோன்கள் தூண்டப்பட்டு அதைத் தேக்கிவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் மாவுச்சத்தை ஓரளவுக்குக் குறைத்தால் இன்சுலின் அளவு ரத்தத்தில் குறைந்து, ஹார்மோன்களும் கட்டுக்குள் வந்து, ரத்தத்தில் உள்ள உப்பின் அளவும் குறைந்து, உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

உப்பைக் குறைப்பதைவிட, இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைக் குறைப்பதற்கு மாவுச்சத்துகளைக் குறைத்தால் அது அதிகபட்ச பலனைத் தருகிறது. பல உயரிய ஆராய்ச்சிகளின் முடிவுகளே இவை. இதை மருத்துவ உலகம் சீக்கிரம் புரிந்துகொள்ள வேண்டும். உப்பு பற்றிய பயம் எதுவும் தேவையில்லை. மிதமான அளவு உப்பை நாம் தினசரி உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அதிகமாக சேர்க்கவேண்டாம். அதற்காக உப்புச் சப்பில்லாத உணவுகளைச் சாப்பிடுவதும் தேவையில்லை. இதய மற்றும் சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களுக்கு உடலில் சீக்கிரம் நீர் கோத்துவிடும் என்பதால் அவர்கள் மட்டும் மருத்துவர்களின் அறிவுரைப்படி உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். அதேநேரத்தில் உடற்பயிற்சி செய்து தொப்பையைக் குறையுங்கள். ரத்த அழுத்தமும் மற்ற பிரச்னைகளும் தானாகக் குறைந்துவிடும்.

- பரிமாறுவோம்

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் உடலில் கொழுப்பு கட்டாது என்று ஒரு டயட்டீஷியன் கூறுகிறார்... இது உண்மையா?

- கிடையூர் மாணிக்கம்

மிகவும் தவறான கூற்று. வெந்நீர் குடித்தால் உடல் கொழுப்பு ஏறாது என்பது போன்ற தவறான எண்ணம் வேறு எதுவும் இல்லை. உடல் பருமன் பற்றி விரைவில் நமது தொடரில் ஆச்சரியமூட்டும் தகவல்கள் பேசப்படும். தொடர்ந்து வாசியுங்கள்.

வேர்க்கடலை தினசரி சாப்பிடலாமா... எப்படி, எவ்வளவு சாப்பிடவேண்டும்?

- விஸ்வநாதன் கருப்பையா

தாராளமாக வேர்க்கடலை சாப்பிடலாம். ஆனால், நீங்கள் வெறும் தின்பண்டமாக இதைச் சாப்பிடுகிறீர்களா அல்லது உடல் எடைக்குறைப்பு, சர்க்கரை நோய்க் கட்டுப்பாடு போன்ற காரணங்களுக்காக சாப்பிடுகிறீர்களா என்பதைப் பொறுத்து அளவு மாறுபடும். அவித்த அல்லது ஊறவைத்த பச்சை வேர்க்கடலை நல்லது. வறுத்த அல்லது மசாலா சேர்த்த கடலை வகைகளை எப்பொழுதாவது எடுத்துக்கொள்ளலாம்.