
பாலூட்டி இனங்கள் தம் இரையைத் தாமே தேடி உண்ணத் தொடங்கும் வரை பாலையே பிரதான உணவாக உட்கொள்கின்றன.
உப்பு பற்றி விரிவாகப் பார்த்தோம். இப்போது இன்னொரு முக்கியமான உணவுப்பொருளைப் பற்றிப் பார்க்கலாம். பால், நாம் காலங்காலமாகப் பயன்படுத்திவரும் உணவு. பாலூட்டி இனங்கள் அனைத்தும் தாய்ப்பாலை நம்பியே வளர்கின்றன. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பால் பற்றி இங்கே நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன. அதை ‘வெள்ளை விஷம்' என்று ஒரு தரப்பினர் கூற, இன்னொரு தரப்பினர் அதை ‘அமிர்தம்' என்கின்றனர்.
தவிர, பாலில் நிறைய கலப்படம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். A1, A2 என்றெல்லாம் ஏதேதோ கணக்கீடுகளைச் சொல்கிறார்கள். சிலர் ‘நாட்டுப்பசுவின் பாலே நல்லது' என்கிறார்கள். சிலர் ‘எருமைப் பாலில்தான் அதிக சத்துகள் இருக்கின்றன' என்கிறார்கள். இன்னும் சிலர், ‘ஒட்டகப் பாலில் நிறைய இன்சுலின் இருக்கிறது', ‘ஆட்டுப் பாலில் நுண்சத்துகள் நிறைந்திருக்கின்றன' என்றெல்லாம் சொல்கிறார்கள். சில பகுதிகளில் ஒரு லிட்டர் கழுதைப் பால் 5,000 ரூபாய்க்குக்கூட விற்கப்படுவதாகக் கேள்விப்பட்டேன்.


இப்படி பால் குறித்து நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. அதனால் அதன் அடிப்படையிலிருந்து நாம் அலசவேண்டியுள்ளது. மனிதனுக்குப் பால் என்ற உணவு உண்மையிலேயே தேவைதானா? மனிதன் தோன்றிய காலத்திலிருந்து பாலை உணவாக உட்கொண்டானா? இந்தக் கேள்விகளுக்கு முதலில் விடை தேடலாம்.
பாலூட்டி இனங்கள் தம் இரையைத் தாமே தேடி உண்ணத் தொடங்கும் வரை பாலையே பிரதான உணவாக உட்கொள்கின்றன. உணவை சுயமாகத் தேடத் தொடங்கியதும் தாய்ப்பால் அருந்துவதை நிறுத்திக்கொள்கின்றன. வேறொரு விலங்கின் பாலை வாழ்நாள் முழுவதும் ஓர் உணவுப்பொருளாக எடுத்துக்கொள்ளும் ஒரே உயிரினம் மனிதன்தான்.
இதில் ஒரு முக்கியமான சுவாரஸ்யம் இருக்கிறது. வேறு எந்த விலங்குகளாலும், குறிப்பாக நமக்கு லிட்டர் கணக்கில் பாலைச் சுரந்துதரும் பசுவால்கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பாலை அருந்தினால் ஜீரணம் செய்ய இயலாது. தாய்ப்பால் எடுத்துக்கொள்ளும் காலத்தைத் தாண்டியபிறகு எல்லா உயிரினங்களுமே பாலை ஜீரணிக்கும் திறனை இழந்துவிடும். காரணம், பாலில் இருக்கும் முக்கிய சர்க்கரைச் சத்து ‘லேக்டோஸ்.’ இந்த லேக்டோஸை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ‘லேக்டேஸ்' என்ற என்ஸைம் இருக்கிறது. பெரும்பாலான விலங்குகளுக்கு இந்த என்ஸைமை உற்பத்தி செய்யும் மரபணு, தாய்ப்பால் எடுத்துக்கொள்ளும் காலம் முடியும்போது செயலிழந்துவிடுகிறது. இதனால் பிற உணவுகளை மட்டுமே அந்த விலங்குகளால் சாப்பிட இயலும். மனிதர்களால் மட்டும் எப்படி வாழ்நாள் முழுக்க பாலை எடுத்துக்கொள்ள முடிகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழும். இதற்கு மனித இனத்தின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.


பேலியோலிதிக் காலத்தில் வாழ்ந்த கற்கால மனிதனின் எலும்புகள் மற்றும் டி.என்.ஏ-க்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆராய்ச்சியில் மற்ற விலங்குகளைப் போலவே மனிதர்களுக்கும் இந்த ‘லேக்டேஸ்’ செயலிழந்து போகும் தன்மையே இருந்திருப்பது தெரியவந்தது. காலப்போக்கில் வாழ்நாள் முழுக்க லேக்டேஸ் செயல்படுமாறு மனித உடல் மாற்றமைடைந்தது. நவீனக் கற்காலம் என்று சொல்லக்கூடிய நியோலிதிக் காலம், அதாவது சுமார் 10,000 வருடங்களுக்கு முன் மனிதர்கள் விவசாயம் பழகியபோது பல விலங்குகளைப் பண்ணைகளில் வளர்க்கத் தொடங்கினார்கள். அவை வெறும் இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்பட்டன. ஆனால் அவை வளர நீண்ட காலம் ஆனது. அதனால் தேவைக்கேற்றவாறு அவற்றை உணவாக்கிக்கொள்ள முடியவில்லை. இந்தச் சூழலில் சில மனிதக் குழுக்கள் புதியதொரு முயற்சியை மேற்கொண்டார்கள். ‘மனிதனால் புற்களைச் சாப்பிட இயலாது. ஆனால் அந்தப் புல்லை உண்ணும் ஆடு மாடுகள் தம் குட்டிகளுக்குத் தேவையான அளவைவிட அதிகமாகப் பாலை உற்பத்தி செய்கின்றன. நாம் ஏன் அதைக் குடிக்கக்கூடாது’ என்று பரிசோதித்துப் பார்க்கிறான். பால் மனித உடலுக்கு சிறிது சிறிதாக ஒத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.
இப்போது போல அந்தக் காலத்தில் மனிதன் உணவைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்தச் சூழலில் எந்தெந்த மனிதக் குழுக்கள் தங்களின் உணவில் பாலைச் சேர்த்துக்கொண்டார்களோ அவர்களுக்கு வருடம் முழுவதும் குறிப்பிட்ட அளவுக்கு சத்துகள் கிடைத்துக்கொண்டே இருந்தன. அதனால், பால் குடிப்பவர்களின் உயிர் பிழைக்கும் சதவிகிதம் இயற்கையிலேயே அதிகமானது. மற்ற உணவுகள் இருக்கின்றனவோ இல்லையோ, ஆடு மாடுகள் தரும் பாலைப் பஞ்ச காலங்களில் எடுத்துக்கொண்டு அவர்கள் உயிர் பிழைத்தார்கள். இதை ஆதரிக்கும் விதமாக மனித உடலில் சில மரபணு மாற்றங்கள் ஏற்பட்டன. உலகின் எந்தெந்தப் பகுதிகளில் மக்கள் அதிகம் பாலை எடுத்துக்கொண்டார்களோ அவர்களின் மரபணுக்கள் மட்டுமே இயற்கைத் தேர்வின்படி பெருகத் தொடங்கி அதிக காலம் உயிர் வாழ்ந்தார்கள்.
அதுமட்டுமல்லாமல், உடலில் இருக்கும் ‘லேக்டேஸ்’ குறிப்பிட்ட காலத்தில் செயலிழந்து போகாமல், வாழ்நாள் முழுவதும் பாலை ஜீரணிக்கும் விதமாக மரபணு மாற்றம் நிகழ்ந்தது. இந்த மாற்றம் நிகழ்ந்த மனிதர்களின் இனப்பெருக்கம் அதிகரித்ததால் நம்மால் எந்த வயதிலும் பாலை எடுத்துக்கொள்ள முடிகிறது. ஆனால், இம்மாற்றம் உலகம் முழுக்க மாறுபட்ட அளவிலேயே நிகழ்ந்திருக்கின்றன. சுமார் 65 சதவிகித உலக மக்கள், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பாலை ஜீரணிக்கும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. சிறிய அளவு டீ, காபி மட்டுமே குடிப்பதால் இவை எதுவும் நமக்குத் தெரியவில்லை.


பெரும்பாலானவர்களுக்குத் தயிர், மோர் வடிவில் இல்லாமல் பாலாக 150 முதல் 200 மி.லி-க்கு மேல் எடுத்துக்கொண்டால் ஜீரணப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எம்.எஸ்.தோனியைப் போல ஒரு நாளுக்கு இரண்டு லிட்டர் பாலைக் குடிக்கும் திறன் சிலருக்கே இருக்கும். பிறருக்கு தினசரி அரை லிட்டர் பாலை ஜீரணிப்பதே கடினமான காரியம். முன்பு சொன்னதுபோல மிகக்குறைந்த அளவில் டீ, காபியை மட்டும் குடித்துவருவதால் பால் ஒத்துக்கொள்ளுமா இல்லையா என்றே நமக்குத் தெரிவதில்லை. எனவே, 65 சதவிகித மக்கள் இன்னமும் லேக்டோஸ் இன்டாலரன்ஸாகவே (Lactose intolerance) இருக்கிறார்கள்.
அந்த மரபணு மாற்றம் வெறும் 35 சதவிகிதத்தினருக்கு மட்டுமே நடந்திருக்கிறது. இந்தத் தன்மையும் உலகின் பல்வேறு இடங்களில் மாறுபடுகிறது. அதாவது 90 சதவிகித ஐரோப்பிய மக்களுக்குப் பாலை ஜீரணிக்கும் தன்மை இருக்கிறது. பழங்குடிகள் அதிகம் வாழும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இது அப்படியே நேர்மாறாக இருக்கிறது. 200 மி.லி-க்கு மேலான பாலை சுமார் 65 சதவிகித மக்களால் ஜீரணிக்க முடியாது என்பதே உண்மை. பாலை மனிதனின் அத்தியாவசிய உணவாகக் கூறுவது தவறு. பாலை உணவாக எடுத்துக்கொள்ளத் தோதான மரபணு மாற்றங்களுக்கு மனித உடல் இத்தனை காலம் எடுத்திருக்கிறது.
சரி, பாலில் என்னென்ன சத்துகளெல்லாம் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
சர்க்கரைச் சத்தில் முக்கியமாக இருப்பது லேக்டோஸ். பசு, எருமைப் பாலைவிட தாய்ப்பாலில் இந்த லேக்டோஸ் அதிகம் உள்ளது. கொழுப்பு, புரதம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், தாய்ப்பாலைவிட பசு மற்றும் எருமைப் பாலில்தான் அதிகம். 100 மி.லி தாய்ப்பாலில் 1.2 கிராம் அளவே புரதம் இருக்கிறது. இதே பசு மற்றும் எருமைப் பாலில் 3.5 முதல் 4 கிராம் வரை புரதம் இருக்கிறது. கொழுப்பின் அளவு தாய்ப்பால், பசும்பால் இரண்டிலுமே கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் எருமைப்பாலில் இரண்டு மடங்கு உள்ளது. இவை மட்டுமன்றி நிறைய நுண்சத்துகள், தாதுப்பொருள்களும் உள்ளன.


பால் எடுத்துக்கொள்ள நாம் கூறும் முக்கிய காரணம், கால்சியம். இச்சத்து தாய்ப்பாலைவிட பசு மற்றும் எருமைப் பாலில் நான்கைந்து மடங்கு அதிகமாகவே இருக்கிறது. இந்த அளவு இருந்தாலும், கால்சியத்தோடு சேர்த்து பாஸ்பரஸின் அளவு சரிபாதியளவில் இல்லாத காரணத்தால் ஒரு வயது வரையிலான குழந்தைகளால் அனைத்துக் கால்சியத்தையும் உபயோகிக்க இயலாது. குறைவான அளவில் இருந்தாலும் தாய்ப்பாலில் இருக்கும் கால்சியத்தைத்தான் குழந்தைகளால் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுவும் பலருக்குத் தெரியாது. எனவே, அரை லிட்டர் பாலைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு அவர்களுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறு.
பெரும்பாலான விலங்குகளின் 100 மி.லி பால் 65-67 கலோரிகளைக் கொண்டிருக்கிறது. தாய்ப்பால், மாட்டுப்பாலிலும் கிட்டத்தட்ட இதே அளவுதான். மேலும் பசுக்களில் பல்வேறு வகையான இனங்கள் உண்டு. அனைத்தும் ஒரே அளவையே கொண்டிருக்கின்றன. ஆனால் எருமைப்பால் இரண்டு மடங்கு அதாவது சுமார் 115 கலோரிகள் வரை கொண்டிருக்கிறது. எருமைப்பால் குடித்துவிட்டு உடல் மந்தமாக இருக்கிறது என்று சொல்வதற்குக் காரணம், அதன் மூன்று மடங்கு அதிகமான கொழுப்பும், இரண்டு மடங்கு அதிகமான கலோரி சத்தும்தான்.
குழந்தைகளைப் பொறுத்தவரை சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு பாலைக் கொடுக்கக்கூடாது. காரணம், இயற்கையில் நம்முடைய மரபணு, தாய்ப்பாலை மட்டுமே ஜீரணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் A1, A2 பாலைத் தொடர்புபடுத்தி நிறைய பேர் குழப்பிக்கொள்கிறார்கள். ‘‘பிறந்து மூன்று மாதங்களான குழந்தைக்கு நாட்டுப்பசுவின் பால்தான் சார் கொடுக்கிறேன், அதுவும் ஒற்றை மாட்டுப்பால்’’ என நிறைய பேர் ஸ்டைலாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சொந்தப் பண்ணையிலேயே வளர்க்கப்பட்ட மாட்டின் பாலைக் கொடுத்தால் அது நமக்கு நன்கு ஒத்துக்கொள்ளும் என்று நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம். முதல் ஒரு வருடத்தில் அது அமிர்தமாகவே இருந்தாலும் மனித உடல் மாட்டுப்பாலை ஏற்றுக்கொள்ளாது. அதை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
லேக்டோஸ் இன்டாலரன்ஸ் இதற்கு முதல் காரணம். அதுதவிர, இன்னொரு காரணமும் இருக்கிறது. அது...
அடுத்த வாரம் பார்ப்போம்!
- பரிமாறுவோம்
சாப்பிட்ட உடனே நடந்தால் நன்றாகச் செரிமானம் ஆகும் என்கிறார்கள். அது உண்மையா? சாப்பிட்ட உடனே குளிக்கலாமா? - கோ.குப்புசுவாமி
சாப்பிட்ட உடனே நடப்பது உண்மையில் நல்லது. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் உடல் பருமன் இருப்பவர்களுக்கும் மிகவும் நல்லது. ஏனென்றால் நாம் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்துக்குள்ளாக நமது மாவுச்சத்து ஜீரணமாகி ரத்தத்தில் குளுக்கோஸ் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும். அந்தச் சமயத்தில் நாம் நடந்தால் இந்தச் சர்க்கரை அளவுகள் மிகவும் அதிகமாகாமல் கட்டுப்பாட்டில் வரும். உடல் பருமன் இருப்பவர்களுக்கும் இந்த அதீத சர்க்கரை அளவு கொழுப்பாக மாறாமல் இருக்க நடை உதவி செய்யும். அதேபோல சாப்பிட்டவுடன் குளிப்பதும் தவறில்லை.
எண்ணெய்க் குளியல், பேதி முறையில் வயிறு சுத்தம் செய்வது போன்ற மரபுமுறைப் பழக்கங்கள் நல்லவையா? - திலகர் ஈஸ்வரன்
எண்ணெய்க் குளியல் சூட்டைத் தணிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதீத உடல் சூடு என்பது உண்மையா, பொய்யா என்பதைப் பற்றி ஏற்கெனவே பார்த்துள்ளோம். ஆனால் சருமத்தைப் பொலிவாக்கவும் வறட்சியான சருமத்தை குணப்படுத்தவும் எண்ணெய்க் குளியல் பயனளிக்கும். ‘பேதிமருந்து மூலம் வயிற்றைச் சுத்தப்படுத்துவது உடலுக்கு நல்லது, நச்சுக்களை வெளியேற்றும்' என்று சொல்லப்படுகிறது. ஆனால் குடலை எல்லோரும் நினைக்கும்படி முழுமையாகவெல்லாம் சுத்தம் செய்ய இயலாது. என்னதான் பேதிமருந்து கொடுத்தாலும் கோடானுகோடி நல்ல பாக்டீரியாக்கள் உடலில் எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கும். உணவுக்கழிவுகள் மட்டுமே பேதிமருந்து கொடுக்கும்பொழுது காலியாகும். பேதிமருந்து எடுப்பதால் சில குறிப்பிட்ட நச்சுக்கள் உடலில் குறைகிறது என்று எந்த ஆராய்ச்சிகளிலும் நிரூபணம் ஆகவில்லை. அதனால் அவ்வப்பொழுது பேதி மருந்து எடுப்பது என்பது பெரும்பாலும் தேவையில்லை.