மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 26

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

‘பால் சார்ந்த மற்ற பொருள்களான தயிர், மோரை சாப்பிடலாமா' என்று கேட்டால் ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றே சொல்வேன்

பால் பற்றி அலசிவருகிறோம். பசும்பால் புரத ஒவ்வாமை (Cow Milk Protein Allergy) பற்றி நாம் அறிய வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் உள்ளன. இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் மறைமுகமாக பிரச்னைகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 5-10% குழந்தைகளுக்கு பாலில் இருக்கக்கூடிய புரதங்களால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

பசும்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைவாக இருப்பது, மலத்தில் ரத்தம் கலந்து போவது என நிறைய பிரச்னைகள் ஏற்படும். அதேபோல ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்து, நிறைய குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றும் நிலையும் ஏற்படலாம். எல்லோருக்கும் இப்படி ஆகும் என பயப்படத் தேவையில்லை. தாய்ப்பால் குடிக்காமல் தினமும் அதிகமாகப் பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் இதுமாதிரியான பாதிப்புகள் வரலாம். குழந்தைகளுக்கு மாதக்கணக்கில் இரும்புச்சத்தை ஏற்றினாலும் பாலை நிறுத்தாதவரை இது சரியாகாது.

குழந்தைகள் நல மருத்துவர்கள் இதுமாதிரியான பிரச்னைகளை தற்போது அதிகம் சந்திக்கிறார்கள். தாய்ப்பாலில் இரும்புச்சத்தின் அளவு குறைவாக இருந்தாலும், அதைக் குழந்தைகளின் உடல் முழுவதுவாக ஏற்றுக்கொள்ளும். பசும்பாலில் இரும்புச்சத்தின் அளவு மிகவும் குறைவு. குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 5 மில்லி கிராம் அளவுக்கு இரும்புச்சத்து தேவை என்று சொல்கிறோம். தேவைப்படும் அளவை எடுத்துக்கொள்ள சுமார் 13 லிட்டர் பசும்பாலைக் குழந்தைகள் குடிக்கவேண்டும். இது சாத்தியமே கிடையாது. ஒன்றிரண்டு லிட்டர் குடித்தாலும் அது 10 சதவிகிதத்துக்குக் குறைவான அளவே. இதன் விளைவாக குழந்தைகளுக்கு தீவிர ரத்த சோகை ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல், பசும்பாலில் இருக்கும் அதிக அளவிலான கால்சியம், அதன் கொஞ்ச நஞ்ச இரும்புச்சத்தையும் கிடைக்காமல் செய்துவிடும். குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதில் இதுபோன்ற நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 26

இரண்டு வயது வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறெதுவும் கொடுக்கக்கூடாது என்பதே என் பரிந்துரை. பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 150-200 மி.லி பாலை எடுத்துக்கொள்வது நல்லது. சுமார் 10,000 ஆண்டுகளாகத்தான் நாம் பாலை உணவுப் பொருளாக எடுத்துவருகிறோம். அதற்கு முன்னர் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மரபணுவே நமக்குக் கிடையாது. கஷ்டப்பட்டு நிறைய பாலைக் குடிக்க எந்த அவசியமும் இல்லை.

‘பால் சார்ந்த மற்ற பொருள்களான தயிர், மோரை சாப்பிடலாமா' என்று கேட்டால் ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றே சொல்வேன். காரணம், பாலில் இருக்கும் லேக்டோஸ் சர்க்கரை, தயிரில் லேக்டிக் அமிலமாக மாறிவிடுகிறது. அதனால், தயிர், மோர் ஓரளவுக்கு ஜீரணமாகும். தீவிர லேக்டோஸ் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு தயிர், மோரை ஜீரணிப்பதிலும் சிக்கல் ஏற்படும். மேலும் தயிரில் சில நல்ல பாக்டீரியாக்களும் இருப்பதால் வயிற்றின் நன்மைக்கும் அவை நல்லது. பாலைக் குடித்தவுடன் வயிறு பிரட்டுதல் தொடங்கி அதிக அளவில் ஏப்பம் ஏற்படுதல், நிறைய வாயு வெளியேறுவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு லேக்டோஸ் இன்டாலரான்ஸ் இருக்கிறது என்று அர்த்தம். அவர்கள் பாலை முடிந்த அளவுக்குக் குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது. இவை அனைத்தும் பாலைப் பற்றிய பொதுவான விஷயங்கள்.

சரி, எந்தப் பால் நல்லது?

உலகத்தில் ஓராண்டுக்கு 73 கோடி டன் பால் உற்பத்தியாகிறது என்று சொல்கிறார்கள். இந்தியாவே மிகப்பெரிய பால் உற்பத்தியாளர். கிட்டத்தட்ட 19 கோடி டன் பால் இந்தியாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 85% பசுமாடுகளில் இருந்தும் 11% எருமை மாடுகளில் இருந்தும் தயாராகிறது. 2% ஆட்டுப்பால். ஒட்டகப்பால் 1.5%. இவைதவிர, கழுதைப்பால், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் விலங்குகள் தரும் பாலும் மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதில் எந்தப் பால் சிறந்தது என்று கேட்டால் அதற்குத் தெளிவான பதில் கிடையாது.

ஏனென்றால், ஆதிமனிதர்கள் தங்களுக்கு அருகில் வாழ்ந்த பாலூட்டிகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். நம் மக்கள் ஆடு மாடுகளை வளர்த்தார்கள். அதனால் இங்கு அவற்றின் பால் குடிக்கப்படுகிறது. இமயமலைப் பகுதியில் யாக் என்ற பாலூட்டி விலங்கின் பால் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் ஒட்டகப்பால் குடிக்கிறார்கள். ஒவ்வொரு விலங்கின் பாலுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. உதாரணமாக, ஒட்டகத்தின் பாலில் இன்சுலின் இருக்கிறது என்று டைப்-1 சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதைக் குடிக்கிறார்கள். அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ஒட்டகத்தின் பாலில் இன்சுலின் இல்லை. மேலும், இன்சுலினை வாய்வழியாக எடுத்துக்கொண்டால் வயிற்றில் இருக்கும் அமிலங்கள் அதைச் செயலிழக்கச் செய்துவிடும். அப்படி எடுக்கும் இன்சுலினால் எந்தப் பயனும் இல்லை.

கழுதைப்பாலில் நன்மை தரக்கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அதில் ஆன்டி மைக்ரோபியல் (Anti-microbial) தன்மை ஓரளவு அதிகம் என்பதால் எளிதில் கெட்டுப்போகாமல் இருக்கும் என்பது மட்டுமே கழுதைப்பாலின் சிறப்பு. பெரும்பாலும் நாம் பாலை நன்கு காய்ச்சியே பயன்படுத்துகிறோம் என்பதால் நமக்குக் கழுதைப்பால் அப்படியொன்றும் சிறப்பில்லை. ஆட்டுப் பாலை நிறைய குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். அதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. ஆட்டுப்பாலில் ஃபோலிக் ஆசிட் (Folic acid) சத்து குறைவு. எனவே அதிகமாக ஆட்டுப்பால் எடுத்துக்கொண்டால் அது ஒருவித ரத்தசோகையை ஏற்படுத்தும். இதுபோல ஒவ்வொரு பாலிலும் பிரச்னைகள் இருக்கின்றன.

இரண்டாவது, ஆரம்பக்காலத்தில் மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தில் கிடைத்த பாலைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று பால் மிகப் பெரிய வர்த்தகமாக மாறிவிட்டது. லூயி பாஸ்டர் என்பவர், பாலை டப்பாவில் அடைத்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்கலாம் என்பதைக் கண்டறிந்த பிறகுதான் உலகம் முழுக்க பலவிதமான பால்பொருள்கள் கிடைக்கத் தொடங்கின.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 26

பாலில் இன்னொரு முக்கியமான கேள்வி: A1 பால் குடிப்பதா, A2 பால் குடிப்பதா?

‘`A1 பால் குடிப்பது ஆபத்து, A2 பால் நல்லது' என்பது போன்ற வதந்திகள் சமீபத்தில் அதிகமாகியுள்ளன. A2 பால் என்ற பெயரில் சாதாரணப் பாலைவிட மூன்று நான்கு மடங்கு அதிக விலை வைத்துக் கடைகளில் விற்பனை செய்தார்கள். இதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை அறிய, A1, A2 என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

பாலில் புரதங்கள் இருப்பது குறித்து நாம் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். பாலில் 80 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக்கூடிய புரதம் கேசின் (Casein). இந்த கேசினில் 35% இருப்பது ‘Beta Casein’ என்கிற புரதம். இந்த ‘Beta Casein’ புரதத்தில் A1, A2 என்று இரண்டு வகை உண்டு. A1 வகையில் ‘Beta casomorphin-7’ என்று சொல்லக்கூடிய புரதம் இருக்கிறது. ‘அது மிக அரிதாக குழந்தைகளுக்கு ஏற்படும் டைப்-1 சர்க்கரை நோயையும் அலர்ஜிகளையும் தூண்டுகிறது... ஆட்டிசம் ஏற்படவும் காரணமாக இருக்கிறது' என்று 1992-ல் நியூசிலாந்து நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்தது. இதுதான் பல குழப்பங்களுக்கும் காரணம். இதற்குப் பிறகு, ‘பால் குடிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படும். பால் குடிப்பதும் விஷம் குடிப்பதும் ஒன்று' என்ற அளவுக்கு பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.

உண்மையில் பால் அந்த அளவுக்கு விஷமாகுமா?

A2 என்பது புரதம் என்பதைத் தாண்டி ஒரு பிராண்ட். A2 என்பது நியூசிலாந்து நாட்டில் இருக்கும் ஒரு நிறுவனம். A2 புரதம் நிறைந்த பாலை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் இந்த நிறுவனம் மேற்கொண்டதுதான், மேலே நான் சுட்டிக்காட்டிய ஆராய்ச்சி முடிவுகள். தாங்களே செய்த ஆராய்ச்சியின் முடிவுகளைக் கொண்டு, தாங்கள் தயாரித்த A2 பாலை விளம்பரப்படுத்தினர். அதன்பிறகு இதுகுறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் எந்த ஆராய்ச்சியின் முடிவும், குழந்தைகளிடையே சர்க்கரை நோயைப் பால் தூண்டுகிறது என்றெல்லாம் சொல்லவில்லை. ஐரோப்பாவின் ‘EFSA’ (European Food Safety Authority) என்ற இயக்கம், பால்மீதான மக்களின் இந்த அச்சம் குறித்து நிறைய ஆராய்ச்சிகளை நடத்தி 2009-ம் ஆண்டில் வெளியிட்ட முடிவுகள், ‘A1 புரதம் சாப்பிடுவது கெடுதல் ஏற்படுத்தும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை' என்று தெளிவாகச் சொல்லின. ‘EFSA’ மிகவும் நம்பகமான நிறுவனம். வேறு சில உணவுகள் குறித்தும் மிகவும் தெளிவான ஆராய்ச்சிகள் செய்து, எந்த வியாபார நோக்கமும் இல்லாமல் நடுநிலையான கருத்துகளை வெளியிட்டிருக்கிறது. அதன் ஆராய்ச்சியின் அடிப்படையில் A1 பால் கெடுதல் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

எனினும் சிலர் ‘நான் இதை நம்ப மாட்டேன்' என்று சொல்லலாம். அப்படியானால் எந்தெந்த மாடுகளில் A1 மற்றும் A2 பால் இருக்கின்றன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மேலை நாட்டு மாடுகளின் பால் எல்லாமே A1 புரதம் கொண்டது என்றும், நம் நாட்டு மாடுகளின் பால் A2 புரதம் கொண்டது என்றும் நம்மில் சிலர் நம்புகிறார்கள். ஆனால் மேலை நாட்டு மாடுகளில் நாம் அனைவரும் அறிந்த ஜெர்சி மாடு A2 பாலே கொடுக்கிறது. ‘ஐயர்ஷயர்’ மற்றும் ‘HF’ மாட்டு இனங்கள்தான் A1 பால் கொடுக்கின்றன. நாட்டு மாடுகள் 98% A2 பால்தான் கொடுக்கின்றன. நம்மூரில் இருப்பவை பெரும்பாலும் கலப்பின மாடுகளே. இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலரிடமும் பேசி, தகவல்களைச் சேகரித்தேன். மேலை நாட்டு மாடுகளுடன் நம்மூர் மாடுகள் இணைசேர்க்கப்பட்ட Cross-Breed வகைகளே இங்கு நிறைய இருக்கின்றன.

நம்மூரில் உள்ள 90% கலப்பின மேலை நாட்டு மாடுகளே A2 பாலைத்தான் கொடுக்கின்றன என்பதே அறிவியல் உண்மை. இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. எருமைப் பாலும் சுத்த A2 தான். அதில் A1 வகை இல்லவே இல்லை. எனவே, A2 என்று சொல்லிக்கொண்டு ஏதோவொரு நிறுவனம் நான்கைந்து மடங்கு விலை அதிகமாக விற்கும் பாலை வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. A1 மற்றும் A2 இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

அப்படியும் சந்தேகம் தீராதவர்கள், கலப்பின மாடுகளின் பாலைக் குடிக்கலாம். அதில் 90% இந்த வகைதான் இருக்கிறது. அல்லது நாட்டு மாடு, எருமைமாட்டுப் பாலை எடுத்துக்கொள்ளலாம். எந்தப் பாலாக இருந்தாலும் ஒரு நாளைக்கு 150-200 மி.லி-க்கு மேல் பால் உட்கொள்ள வேண்டாம். அந்த அளவில் ஒன்றும் பெரிய பிரச்னையில்லை. A1, A2-க்குப் பெரிய முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை.

பால் குடித்தால் கேன்சர் முதலிய பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று ஒரு காலகட்டத்தில் நம்பினார்கள். பாலில் Saturated கொழுப்பு இருப்பதால் மாரடைப்பும் ஏற்படலாம் என்று சொல்லப்பட்டது. இவையெல்லாம் தவறான கற்பிதங்கள் என்று ஆராய்ச்சிகளில் தெளிவாகி விட்டன. பாலில் இருப்பவை நல்ல கொழுப்புகளே என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், பால் குடிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கிறது என்றுகூட முடிவுகள் வந்தன. அதேபோல பக்கவாதம், சர்க்கரை ஆகியவற்றையும் பால் அதிகரிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும், 200 மி.லி அளவுக்கு தினமும் பால் குடிப்பவர்களுக்கு மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதேநேரம் மிக அதிக அளவில் பால் குடிப்பவர்களுக்கு ‘Prostate cancer' ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகம் என்று கூறப்பட்டாலும் அடுத்தடுத்த ஆராய்ச்சிகளில் அதுவும் நிரூபணமாகவில்லை. அதனால் பாலை ‘வெள்ளை விஷம்' என்று சொல்வதிலும், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று கூறுவதிலும் உண்மையில்லை.

சாதாரணமாக தாய்ப்பாலில் ஹார்மோன் இருப்பதுபோல மாட்டுப்பாலிலும் அதன் ஹார்மோன்கள் இருப்பது இயல்புதான். அது மிகக்குறைந்த அளவில் மட்டுமே இருப்பதால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த ஹார்மோன்களால் நம் உடலில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் நாள் ஒன்றுக்கு சுமார் 5,000 லிட்டர் பாலை நாம் குடிக்க வேண்டும். எனவே, பாலில் உள்ள ஹார்மோன்களால் உடல் பாதிப்படையும் என்பது உண்மையல்ல.

அடுத்து பாக்கெட்டில் அடைத்து வரும் பால் பற்றிப் பார்ப்போம்.

பாக்கெட் பாலில் யூரியா கலக்கப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள். பாலில் உள்ள சத்துகள், அது சார்ந்த அறிவியல் பற்றி மட்டுமே என்னால் தெளிவாக விளக்க முடியும். கலப்படம் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. யூரியா கலந்தால் பால் அதன் இயல்பான சுவையில் இருக்குமா என்பதும் எனக்குத் தெரியவில்லை. அரசு நிர்வாகம், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்தான் இந்தக் கேள்விக்கு விடை சொல்லவேண்டும். இது மிகைப்படுத்தப்பட்ட விஷயமா அல்லது உண்மையிலேயே நடக்கிறதா என்பது தெரிய வில்லை.

இறுதியாக, பால் என்பது அத்தியாவசிய உணவா என்று கேட்டால், உண்மையில் இல்லை. அது இல்லாமல் நாம் தாராளமாக உயிர் வாழலாம். பாலில் கிடைக்கக்கூடிய அனைத்து சத்துகளும் நமக்கு மற்ற உணவுகள் மூலமாக தாராளமாகக் கிடைத்துவிடுகின்றன. அசைவம் சாப்பிடுபவர்களுக்குப் பால் கட்டாயமில்லை. ஆனால் சைவர்கள் சிறிதளவு பாலைச் சேர்த்துக் கொள்வது சில முக்கிய சத்துக்குறைபாடுகளைத் தடுக்கும். நனி சைவர்கள் (vegan) எனப்படும், பால்கூடச் சேர்த்துக்கொள்ளாத மக்கள் சில சத்துக்குறைபாடுகளுக்கு ஆளாவதற்குக் காரணம் பாலைச் சிறிதளவுகூடச் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதுதான்.

அதேபோல தயிர், மோரை தினமும் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதன் தீமைகளும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களே!

அடுத்த வாரம் இன்னொரு உணவு குறித்துப் பேசுவோம்!

- பரிமாறுவோம்

சர்க்கரை நோய் இருப்பவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிடலாமா? - வண்ணை கணேசன்

அதிக அளவு மாவுச்சத்து உள்ள உணவுகளையும் சர்க்கரைச் சத்துள்ள உணவுகளையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். பொதுவாக, பழங்களில் இனிப்பு அதிகம் என்று சொல்லப்பட்டாலும், சாதம் போன்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில் இதில் மாவுச்சத்து குறைவுதான். 100 கிராம் வெந்த அரிசி சாதத்தில் 28 கிராம் மாவுச்சத்து இருக்கும். ஆனால் அதே 100 கிராம் பப்பாளிப்பழத்தில் 11 கிராம் மட்டுமே மாவுச்சத்து இருக்கும். அதனால் 100 கிராம் அரிசி சாதத்தை சாப்பிடுவதைவிட 100 கிராம் பப்பாளிப்பழம் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறைவாகவே அதிகரிக்கும். ஆனாலும் அதில் இனிப்புத் தன்மைக்குக் காரணமான பிரக்டோஸ் சர்க்கரை உள்ளதால் பழங்களைக் குறைவாகச் சாப்பிடுவது நல்லது.

மரபணு மாற்றப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாமா? - கே.விஸ்வநாதன்

மரபணு மாற்றப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்கள் பற்றி அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் 25 ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. 130-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற சாதாரணக் காய்கறிகள், தானியங்களுடன் ஒப்பிடுகையில் இதில் எந்தவித அதீத தீய விளைவும் ஏற்படவில்லை என்பதே பல ஆராய்ச்சிகளின் முடிவு. ஆனாலும் பொதுமக்களிடையே இருக்கும் பெரும் பயத்தாலும், இந்தப் பயிர்களை விளைவிக்கும்போது நிலம் கெட்டுவிடும் என்பதுபோன்ற விவசாயிகளின் கருத்துகளாலும் இது பரவலாக்கப்படவில்லை. உடனடியாக தீமை தரவில்லை என்றாலும் ஒவ்வாமை ஏற்படுத்துவது, நமது உடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளில் மாற்றம் செய்வது, ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாமல் போவது போன்ற வேறு பல பிரச்னைகளை எதிர்காலத்தில் உருவாக்குமா என்ற கேள்விகளும் இதில் உள்ளன. அதனால் இதைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்த பின்னர் தான், இதன் பயன்பாடு பற்றி அரசுகள் முடிவெடுக்க வேண்டும்.