
ஆதிமனிதனின் நிலையை யோசித்துப் பாருங்கள். காலை எழுந்தவுடன் பெட் காபியும், நாலு இட்லியும் அவனுக்குத் தயாராக இருந்திருக்குமா என்ன?
விரதம் பற்றி, கடந்த இதழில் நிறைய விஷயங்கள் பார்த்தோம். அதை வாசித்த பலரும் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்கள். ‘விரதம் இருந்தால் அல்சர் வரும், உடல் சோர்வாகிவிடும் என்று சொல்கிறார்களே... அது உண்மையா?'
‘காலை உணவு மிகவும் முக்கியமான ஒன்று. காலை உணவை ராஜா போல சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள். அதைத் தவிர்ப்பது சரியா? அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் சென்றால் பாதிப்பில்லையா?' இதுமாதிரியான கேள்விகள் என்னிடம் நிறைய வந்துள்ளன.
இரவு உறங்கும் நேரத்தில் நாம் உணவருந்துவதில்லை. அந்த விரதத்தை நிறுத்தும் உணவுதான் பிரேக் பாஸ்ட் (Break-fast). நான் முன்பு சொன்னது போல, நாம் உறங்கும் 12 மணி நேரத்துக்கு உடலில் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் க்ளைகோஜன்தான் (Glycogen) எரிசக்தியாக மாறுகிறது. காலையில் அது கிட்டத்தட்ட தீர்ந்துபோயிருக்கும். அதற்குப் பிறகு நம் உடலுக்குக் காலை உணவு தேவைப்படும். ஆனால் இந்த உணவு, மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் மற்றும் நார்மல் எடையில் உள்ள குழந்தைகளுக்கே அவசியம். உடல் எடை கூடுதலாக இருப்பவர்கள் மற்றும் பெரியவர்களின் உடலில் நிறைய கொழுப்புகள் சேமிக்கப்பட்டிருக்கும். எனவே, அவர்களுக்கு க்ளைகோஜன் தீர்ந்து விரதம் நீடித்தாலும் ஒன்றும் ஆகாது. உடலில் உள்ள கொழுப்புகள் எரிசக்தியாக மாறத்தொடங்கும்.

ஆதிமனிதனின் நிலையை யோசித்துப் பாருங்கள். காலை எழுந்தவுடன் பெட் காபியும், நாலு இட்லியும் அவனுக்குத் தயாராக இருந்திருக்குமா என்ன? பழங்களைச் சிறிது சேமித்து வைத்திருந்தால் உண்டு... மற்றபடி உணவு சேமிப்பு என்ற ஒன்றே அப்போது கிடையாது. பசியோடு வேட்டைக்குச் சென்று, அங்கு கிடைத்ததை உணவாக எடுத்துக்கொண்டார்கள். காலை பிரேக்-ஃபாஸ்ட் எல்லாம் அவர்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு பின்னால்கூடச் செல்லத் தேவையில்லை, 15-16-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் மதிய உணவுக்கான பெயர்தான் பிரேக் ஃபாஸ்ட். நண்பகல் 12 மணிக்குத்தான் ஐரோப்பியர்கள் நாளின் முதல் வேளை உணவு எடுத்துக்கொள்வார்கள். ‘லஞ்ச்' என்ற ஒன்று அந்தக் காலத்தில் இல்லவே இல்லை. டின்னரையும் மாலை 6 மணிக்கே சாப்பிட்டுவிடுவார்கள். சுமார் 6 மணி நேரத்துக்குள்ளாகவே ஒரு நாளின் மொத்த உணவையும் அவர்கள் சாப்பிட்டார்கள். தொழிற்புரட்சி ஏற்பட்டு இந்த நேரத்திற்கு இந்தப் பணி என்றான பிறகுதான் காலை உணவு என்பதே வழக்கத்துக்கு வந்தது. அதேபோல ‘லஞ்ச்', ‘டின்னர்' வழக்கமும் அதன்பிறகே வாழ்க்கையோடு ஒட்டியது.
இதே பழங்காலத்துத் தமிழர்கள் வேறு மாதிரியான உணவுமுறையைக் கொண்டிருந்தார்கள். காலையில் எழுந்தவுடன் முதல் நாள் இரவு மீந்த உணவை நேரமே சாப்பிட்டுவிட்டு வயல் வேலைக்குச் செல்வார்கள். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடும் பழக்கம் அவர்களுக்கு இருந்ததில்லை. வேலைகள் அனைத்தும் முடிந்தபிறகு மீண்டும் மாலையில் உணவு எடுத்துக்கொள்வார்கள். இப்படிப் பார்த்தால் அவர்களும் கிட்டத்தட்ட இரு நேர உணவு மட்டுமே எடுத்துக்கொண்டிருந்தார்கள். மூன்று வேளை, நான்கு வேளை உணவுகள் அப்போது இருந்ததில்லை. எனவே, காலை உணவு முக்கியமான ஒன்று என்பது வரலாற்றுரீதியாகவே தவறு. அது சமீபத்தில்தான் நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் சாப்பிடலாமே தவிர, இது ஓர் அவசியமான தேவை கிடையாது. காலை உணவு கட்டாயம் வேண்டும் என்று நினைப்பவர்கள், காலையும் மாலையும் உணவு எடுத்துக்கொண்டு இரவு விரதம் இருக்கலாம். காலை விரதத்தைப் போல இரவு விரதமும் அதே பயன்களைத் தரும்.
சாப்பிடாமல் இருந்தால் அல்சர் வருமா?
‘சாப்பிடாமல் இருந்தால் நம் வயிற்றில் சுரக்கும் அமிலம் நம் குடலை அரித்துவிடும்' என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையில்லை என்று ஆராய்ச்சிகள் தெளிவாகச் சொல்கின்றன. சாப்பிடாமல் இருக்கும் நேரத்தில் நம் வயிற்றில் குறைந்த அளவிலேயே கேஸ்ட்ரிக் அமிலம் சுரப்பதாக ஆராய்ச்சிகளில் தெள்ளத் தெளிவாக நிரூபணமாகியுள்ளன. காரணம், நாம் சாப்பிடாமல் இருக்கும்பட்சத்தில் அதுபற்றிய தகவல் நம் மூளைக்குச் சொல்லப்பட்டுவிடும். உடனடியாக அமிலம் சுரப்பதை நம் உடல் சுவிட்ச்-ஆப் செய்துவிடும். இதுதான் இயற்கை.

இதுமட்டுமல்லாமல், சிலருக்கு வயிற்றுப் புண் (Chronic Ulcer) அவ்வளவு சீக்கிரத்தில் ஆறுவதில்லை. அவர்கள் விரதம் இருந்து மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு காலியாக இருக்கையில் உள்ளிருக்கும் புண்கள் விரைவாக ஆறும். இது ஓர் அறிவியல் உண்மை. மேலும், அல்சர் போல சிலருக்கு ‘டிஸ்பெப்சியா’ (Dyspepsia) என்று சொல்லக்கூடிய ஓர் அசௌகரிய நிலை இருக்கும். அவர்களுக்குமே விரதம் இருப்பதுதான் தீர்வு.
உண்மை இப்படியிருக்க, ‘சாப்பிடாமல் இருந்தால் அல்சர் ஏற்பட்டுவிடும்' என்று மருத்துவ உலகில் சொல்லப்பட்டதற்கான காரணம் என்ன?
ஏற்கெனவே வயிற்றுப் புண் உள்ளவர்கள் சாப்பிடாமல் இருக்கும்போது, அமிலம் கொஞ்சமாக சுரந்து அது அந்தப் புண் மேல் படும்போது அவர்களுக்கு வலி மற்றும் அசௌகரியம் ஏற்படும். இதை வைத்துத்தான் ‘அல்சர் இருப்பவர்கள் விரதம் இருக்கக்கூடாது, வயிற்றுப்புண் இல்லாதவர்கள்கூட விரதம் இருந்தால் அல்சர் ஏற்பட்டுவிடும்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள்... இதுமட்டும் உண்மையாக இருந்தால், மூன்று வேளை சாப்பிடும் மனிதர்களைத் தவிர்த்து உலகில் உள்ள மற்ற உயிரினங்கள் அனைத்துக்கும் அல்சர் வந்திருக்கும்.
சாப்பிடாமல் இருந்தால் லோ-சுகர் ஏற்பட்டுவிடாதா? உடலும் சோர்வாகிவிடுமே?
இந்தக் கேள்விக்கு விடை தேடுவோம்.
இதுபற்றி நான் முன்பே கூறியிருக்கிறேன். சர்க்கரை நோய்க்காக மருந்து எடுத்து வருபவர்கள் உணவு உண்ணாமல் மருந்து எடுத்துக்கொண்டால் லோ-சுகர் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதேபோல ஒல்லியாக இருப்பவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு க்ளைகோஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால், சாப்பிடாமல் இருப்பது அவர்களை எளிதில் சோர்வாக்கிவிடும். இயல்பாக இருப்பவர்கள் விரதம் இருக்கும்போது அவர்கள் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ், புரதம் மூலமாகக் கிடைக்கிறது. இதை Gluconeogenesis (க்ளுக்கோநியோஜெனிசிஸ்) என்று சொல்வார்கள். இந்த ப்ராசஸ் மூலம் புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகள் மூளைக்குத் தேவையான குளுக்கோஸாக மாறிவிடும். மேலும் ‘பீட்டா ஆக்சிடேஷன்' (Beta-Oxidation) மூலம் கொழுப்புகள் எரிசக்தியாக மாறும். இதைத்தாண்டி ஒரு நாளுக்கு மேல் விரதம் இருக்கும்போது கீட்டோஜெனிசிஸ் (Ketogenesis) என்ற ப்ராசஸ் செயல்படத் தொடங்குகிறது. இதில் ‘கீட்டோன்' என்ற பொருள் தயாராகி நம் உடலில் ஒவ்வொரு செல்களுக்கும் எரிசக்தியை நேரடியாக அளித்துவிடும். மனித உடல் எப்படியெல்லாம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது பார்த்தீர்களா? சாப்பிடாமல் இருக்கும்போது உடலில் இத்தனை விஷயங்கள் இயற்கையாகவே நடக்கின்றன.
இந்த அடிப்படையான உயிர் வேதியியலைப் புரிந்து கொள்ளாமல் ‘சாப்பிடாமல் இருந்தால் மயக்கம் வரும், லோ-சுகர் வந்துவிடும்' என்றெல்லாம் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். 2-3 நாள்கள் தொடர்ந்து விரதம் இருந்தாலும் நம் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் தானாகவே கிடைத்துவிடும். அதே நேரத்தில், விரதமே இருந்து பழகாதவர்கள் திடீரென்று ஒன்றிரண்டு வேளை சாப்பிடாமல் இருந்தால் பசி ஏற்பட்டு நம் உடல் சோர்வடைவது இயல்புதான். அதேபோல, மாவுச்சத்து உணவுகளை ஃபுல் கட்டு கட்டிவிட்டு அதன்பிறகு விட்டு விட்டு விரதம் இருப்பதும் சிரமமான காரியமே.
எனவே, சாப்பிடும்போது சரியான உணவுகளை எடுத்துக்கொள்வது லோ-சுகர் போன்ற உணர்வு ஏற்படாமல் இருக்க உதவும். விரதம் இருந்தால் தசை இழப்பு ஏற்படுமா என்ற மற்றொரு கேள்வியும் நம் மத்தியில் உள்ளது. இதுவும் ஒரு தவறான நம்பிக்கையே. 72 மணி நேரத்துக்கும் மேலாக நாம் சாப்பிடாமல் இருக்கும்போதுதான் நம் தசைகளில் உள்ள புரதங்கள் எரிசக்தியாக மாறி நமக்கு தசை இழப்பு ஏற்படும்.
ஆனால், 16 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும்போது நம் உடலில் ‘குரோத் ஹார்மோன்’ அதிகமாகச் சுரக்கும். அதுவும் கிட்டத்தட்ட இருபது மடங்கு அதிகமாகச் சுரக்கும். நம் உடலின் தசைக் கட்டுமானத்திற்கு மிக முக்கியமாக உதவுவது இந்த குரோத் ஹார்மோன் தான். இது நாம் விரதம் மேற்கொள்ளும் நேரங்களில் தசை இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.
நிறைய பேர் கேட்கும் இன்னொரு கேள்வி, ‘விரதம் மேற்கொள்வதற்குப் பதிலாக லோ கலோரி (low calorie) உணவுமுறையைப் பின்பற்றலாமே' என்பது. விரதமும் ‘லோ-கலோரி’ உணவுமுறையும் ஒன்றல்ல.
அளவு குறைத்துச் சாப்பிடும் ‘low calorie’ உணவுமுறை என்பது மூன்று வேளைகளும் சாப்பிடுவது. ஆனால் உணவின் அளவைக் குறைத்துச் சாப்பிடுவதால் தசை இழப்பு அதிகம் ஏற்படும். இதற்கு பதிலாக, விரதம் மேற்கொண்ட பின்பு அதே கலோரி அளவைப் பிரித்து இரண்டு வேளைகளாக சாப்பிடும்போது பெரிதாக தசை இழப்பு ஏற்படாது. இதற்குக் காரணம், விரத நேரத்தில் சுரக்கும் ‘குரோத் ஹார்மோன்’தான் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மூன்று வேளைகளும் அளவைக் குறைத்துச் சாப்பிடுவதால் இன்சுலின் அளவு கட்டுக்குள் வராது. கொஞ்சம் கொஞ்சமாக சுரந்துகொண்டே இருக்கும். பசியும் இருந்துகொண்டே இருக்கும். இதனால் உங்களுக்கு சாப்பிடாதது போன்ற உணர்வு எப்போதும் இருக்கும். ஆனால், விரதம் இருந்துவிட்டு இரண்டு வேளை நாம் திருப்திகரமாக சாப்பிட்டாலும், இன்சுலின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதால் பசியும் கட்டுப்பாட்டில் இருக்கும். கொஞ்சம் பழக்கப்பட்ட பின்னர், இந்த முறை நம் உடலுக்கு நன்றாகப் பொருந்திவிடும். அதன்பின் எந்த நேரத்தில் விரதம் மேற்கொண்டாலும் நமக்குப் பசி எடுக்காது. நம் உடல் அதற்குப் பழக்கப்பட்டு விடும். இதன் மூலம் நாம் ஆரோக்கியமாக சாப்பிட்டு, உடலின் கொழுப்பை எரிசக்தியாக மாற்றி உடல் எடையைக் குறைக்கமுடியும். எனவே விரதமும் லோ-கலோரி முறையும் ஒன்றல்ல. விரதத்திற்கு உயர்தர பலன்கள் இருக்கின்றன.
விரதம் மேற்கொள்ளும்போது வேறெந்த சத்துக்குறைபாடும் ஏற்படுமா? நான் ஏற்கெனவே சொன்னதுபோல விரத நேரங்களில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தும் உப்புச்சத்தும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 16 மணி நேர விரதம் என்றால் தண்ணீர் எடுத்துக்கொண்டால் போதும். ஆனால் நீண்ட நேரம் விரதம் மேற்கொள்பவர்கள்... உதாரணமாக ஒரு நாள் முழுவதும் விரதம் மேற்கொள்பவர்கள், எலுமிச்சைச் சாற்றில் உப்புப் போட்டுக் குடிப்பது, அல்லது, காய்கறி சூப் எடுத்துக்கொள்வது நல்லது. அதன்மூலம் உடலுக்குத் தேவையான சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் கிடைத்துவிடும்.
இதுபோல நாம் பார்த்துக்கொண்டால் 2-3 நாள்கள்கூட தாராளமாக விரதம் இருக்கலாம். அதை எடுத்துக் கொள்ளவில்லை என்றால்தான் தசைப்பிடிப்பு போன்ற விளைவுகள் ஏற்படும். விரதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான விஷயம். எல்லோரும் விரதம் இருக்கலாம் என்றாலும், அவரவர் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று விரதம் கடைப்பிடிக்கலாம்.
அடுத்த வாரம் இன்னொரு விஷயம் பேசுவோம்!
- பரிமாறுவோம்
வேர்க்கடலையை வேக வைக்காமல் வெறுமனே ஊற வைத்து சாப்பிடலாமா?
- ஜெயலக்ஷ்மி
தாராளமாக சாப்பிடலாம். ஆனால் ஊறவைத்த தண்ணீரைக் கீழே கொட்டிவிட வேண்டும். வேர்க்கடலையில் பூஞ்சைக் காளான்கள் உருவாகலாம். அவை aflatoxin எனப்படும் சில ரசாயனங்களை உமிழும். அந்த ரசாயனங்கள் கடலையில் இருந்தால் பச்சையாக மட்டுமல்ல, சமைத்துச் சாப்பிட்டாலும் வேர்க்கடலையை விட்டு நீங்காது. அதனால் பூஞ்சைக் காளான் பாதிக்கப்பட்ட வேர்க்கடலையை முழுவதும் தவிர்த்துவிடுவது நல்லது.
வாரம் ஒருமுறை தலை முதல் கால் வரை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்கிறார்களே, அது உண்மையில் நமக்கு நல்லதுதானா?
- ப.த.தங்கவேலு
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வறண்ட சருமம் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மிகவும் உதவி செய்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், அதனால் உடல் சூடு குறையும் என்பதற்கு எந்த ஆராய்ச்சியிலும் ஆதாரங்கள் இல்லை.
ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.