மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 33

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

முன்பு 40-50 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்படைந்தனர் என்றால், தற்போது 25-30 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்து மிகுதியால் அவதிப்படுகின்றனர்

உணவு குறித்துத் தொடர்ந்து நிறைய பேசிவருகிறோம். அதுபற்றி இன்னொரு முக்கிய சந்தேகம் பல காலமாக நிலவிவருகிறது. குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளைக் கொடுக்கலாம், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

எல்லாப் பெற்றோருக்கும் அதுவும் நியூ ஏஜ் பெற்றோர் அனைவருக்கும் இருக்கும் சந்தேகம் இது.

பெரியவர்கள் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டுவிடுவார்கள். ஆனால் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவில் அவர்களுக்கு எது நல்லது, எது பிடிக்கும், எது சத்தானது எனப் பார்த்துப் பார்த்துச் செய்யவேண்டும். இதுபற்றி நம்மிடம் பல குழப்பங்கள் இருக்கின்றன. நான் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் என்பதால் இதுகுறித்து நிச்சயம் பேசியாகவேண்டும்.

உணவு தொடர்பாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1970-80களில் ஊட்டச்சத்துக் குறைபாடே (Malnutrition) பெரும் பிரச்னையாக இருந்தது. எடைக்குறைவு தொடங்கி, புரதச்சத்துக் குறைபாடு, இரும்புச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். இதனால் குழந்தைகள் நல மருத்துவர்களின் கவனமும் இதன்மீதே இருந்தது. தற்போது ஊட்டச்சத்துக் குறைபாடு ஒருபக்கம் இருக்க, ஊட்டச்சத்து மிகுதியால் ஏற்படும் பிரச்னைகளும் குழந்தைகள் மத்தியில் பரவலாக அதிகரித்துள்ளது. ஷாப்பிங் மால் சென்று சாப்பிட்டு உடல் பருமன் வருவதால் இதை காமெடியாக நாங்கள் mall-nutrition என்றும் சொல்வதுண்டு.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 33

முன்பு 40-50 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்படைந்தனர் என்றால், தற்போது 25-30 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்து மிகுதியால் அவதிப்படுகின்றனர். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஊட்டச்சத்து மிகுதி ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் உண்மையிலேயே ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. எனவே, குழந்தைகளின் உணவுமுறை பற்றிப் பேச நிறையவே இருக்கின்றன.

முதலில் குழந்தைகளின் உணவுமுறை எங்கிருந்து தொடங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். பிறப்புக்குப் பின்பாகவே இதைப்பற்றி நாம் யோசிக்கவேண்டும் என்பது தவறான ஒன்று. கரு உருவானதுமே உணவின் தேவை தொடங்கிவிடுகிறது. முதல் 1,000 நாள்கள் என்று ஒன்றைக் குறிப்பிடுவோம். குழந்தை வயிற்றில் இருக்கும் 10 மாதங்கள் மற்றும் பிறப்பிற்குப் பின்பான இரண்டு வருடங்கள் என இரண்டும் மிக முக்கியமான காலகட்டம். காரணம், குழந்தையின் மூளை வளர்ச்சியில் கிட்டத்தட்ட 90% இந்த 1,000 நாள்களில் மட்டும் நடந்துவிடுகிறது.

எனவே, இந்தக் காலகட்டத்தில் உணவுமுறை சரியாக இருந்தால் அவர்கள் மிக ஆரோக்கியமாக இருப்பார்கள், அவர்களின் மூளை வளர்ச்சியும் மிகச் சரியாக இருக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே தாய் கர்ப்பமாக இருக்கும்போதே இதற்கான நடைமுறைகளைத் தொடங்கிவி டவேண்டும். ‘Preconception status’ என்று சொல்வோம். அதாவது, கர்ப்பமாவதற்கு முன்பே ஊட்டச்சத்துகளைப் பெண்கள் எடுத்துக் கொள்வது அவசியம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 33

கர்ப்ப காலத்தில் நுண்சத்துகளின் பங்கு அளப்பரியது. அதேபோல வேறு சில ஊட்டச்சத்துகளும் தேவை. அதற்கேற்ப உணவில் மாற்றம் செய்யப்படவேண்டும். PCOD, ஆரம்பக்கட்ட சர்க்கரை நோய் முதலியவற்றால் பாதிக்கப்படும் பெண்கள், அது தொடர்பான ஹார்மோன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். இதைத் தவறவிடும் பெண்கள் நிறையபேர் முயற்சி செய்தும் கர்ப்பமாவதில்லை. கர்ப்பமானாலும் குழந்தை நிற்பதில்லை. இதன் நீட்சிதான் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில் நாம் பார்க்கும் கூட்டம். உண்மையில் இந்தப் பிரச்னையை எளிய உணவுமுறை மாற்றத்தின் மூலமாகவே சரிசெய்துவிடலாம். இதன் தொடக்கமாக மாவுச்சத்து குறைவான, புரதம் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதைச் செய்தால் நம் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை தானாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் பருமன் பற்றிப் பேசியபோதே இதை நான் கூறியிருந்தேன்.

8-10 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருப்பார்கள். வெறும் 5-6 மாதம் இந்த உணவுமுறையைக் கடைப்பிடிப்பார்கள்... அவர்களுக்கு ஆரோக்கியான முறையில் குழந்தைப் பேறு உண்டாகும். சர்க்கரை நோய் காரணமாக அடிக்கடி அபார்ஷன் ஏற்படுபவர்களுக்கும் இந்த உணவுமுறை பயனளிக்கும். இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் இருக்கும் பெண்கள் கருத்தரிக்கத் திட்டமிட்டால், அவர்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் தேவை என்பதையும் பார்த்துவிடுவோம்.

குழந்தையின் வளர்ச்சிக்கு இரும்புச் சத்து மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, பெண்கள் ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும் பின்பும் பல்வேறு பிரச்னைகள் உண்டாகலாம். குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக்கூட இது பாதிக்கும். ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், அதிகப்படுத்தும் செயல்களில் ஈடுபடவேண்டும். மாத்திரைகளாக இருந்தாலும் சரி, உணவாக இருந்தாலும் சரி... ஏதோ ஒரு வடிவில் அதைச் சரிசெய்துகொள்ள வேண்டும்.

பசலைக் கீரை
பசலைக் கீரை
முளைக்கட்டிய பயறு
முளைக்கட்டிய பயறு

இரும்புச்சத்து என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது பேரீச்சம்பழம்தான். ஆனால் இரும்புச்சத்துக்கும் பேரீச்சைக்கும் பெரிதாக எந்தவொரு தொடர்பும் இல்லை. இரும்புச்சத்துக் குறைபாடு இருந்தால் அசைவத்தில் ஈரல், மண்ணீரல் முதலிய உள் உறுப்புகளையும், சைவர்கள் கீரை வகைகள், குறிப்பாகப் பசலைக் கீரை போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடவேண்டுமே தவிர பேரீச்சையை அல்ல. அதேபோல முளைக்கட்டிய பயறு வகைகளில் இரும்புச்சத்தின் அளவு அதிகம். பேரீச்சை போன்ற உலர் பழங்களில் இரும்புச்சத்தின் அளவு மிகவும் குறைவு. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு வேறு சில நுண்சத்துகளும் மிகவும் அவசியம். அதில் ஃபோலிக் ஆசிட் (Folic Acid) மிகவும் முக்கியமானது. இந்தச் சத்து குறைவாக இருக்கும் பெண்களுக்கு உருவாகும் கருவில் மூளை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கீரைகள், பயறு வகைகளை எடுத்துக்கொண்டாலே இந்த ஃபோலிக் ஆசிட் குறைபாட்டுப் பிரச்னையைத் தீர்த்துவிடலாம். எனவே, கர்ப்பம் தரித்த காலத்திலிருந்தே கீரை வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

அதிகம் பேசப்படாத இன்னொரு முக்கிய சத்து கோலின் (Choline). முட்டை பற்றிப் பேசும்போது இதையும் நாம் பார்த்திருந்தோம். முட்டையின் மஞ்சள் கருவில் இச்சத்து மிகுதியாக உண்டு. இந்தச் சத்துக் குறைபாடு குழந்தையின் நரம்பு வளர்ச்சியில் பாதிப்பை உண்டுபண்ணும். அப்படி முட்டை எடுத்துக்கொள்ள முடியாதவர்கள் சில நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம். நம் ஊரில் தவறான பழக்கம் ஒன்றுண்டு. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி முதலியவை ஏற்படுவது இயல்பான ஒன்று. அதேபோல அதிக அளவில் ஏப்பம் வருவது, வயிற்று எரிச்சல் என இவை அனைத்தும் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுபவையே. இதன் காரணம் ஜீரணமின்மை என நினைத்து எல்லா உணவு களையும் நிறுத்திவிடுவார்கள். இதனால் உணவுமூலம் கிடைத்துவந்த சத்துகளும் கிடைக்காமல் போய்விடும்.

கர்ப்ப காலத்தில்தான் ஒரு பெண் எப்போதும் சாப்பிடுவதைவிட 25-30 சதவிகிதம் வரை அதிக கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், இதன் மூலமாகத்தான் கருவுக்கும் எரிசக்தி செல்கிறது. அதேபோல 25% அதிகமாகப் புரதங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டை, அசைவ உணவுகள் அல்லது சுண்டல் வகைகள் என இதை எதன் மூலமாக வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். மற்ற நாள்களைவிட கர்ப்ப காலத்தில்தான் இதை அதிகமாக சாப்பிட வேண்டும். இதனால் கரு எந்தப் பிரச்னையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக வளரும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 33

சரி, கர்ப்ப காலத்தில் இவை அனைத்தையும் சரியாகக் கடைப்பிடித்து ஆரோக்கி யமான முறையில் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு குழந்தைக்கு என்ன மாதிரியான உணவுமுறை அவசியம்?

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலை மட்டுமே கட்டாயம் கொடுக்கவேண்டும். இதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கிடையாது. தாய்ப்பால் என்பதை ஒரு குழந்தையின் முதல் தடுப்பூசி என்று கூறுவோம். ஏனென்றால், தாய்ப்பால் மூலம் குழந்தைகள் வெறும் சத்துகளை மட்டும் பெறுவதில்லை. அந்தக் கலோரிகளை நாம் எப்படி வேண்டுமானாலும் ஈடுகட்டிவிடலாம். தாய்ப்பாலில் ஊட்டச்சத்தைத் தாண்டி நோய் எதிர்ப்புத் திறன் தொடர்பான நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. இதை ‘பேஸிவ் இம்யூனிட்டி' (Passive Immunity) என்று கூறுவோம். அதாவது 25-30 வருடங்களாக ஒரு பெண் பல்லாயிரக்கணக்கான நுண்கிருமிகளை எதிர்த்து உடலில் தேக்கிவைத்திருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தி முழுவதும் Anti-bodies வடிவில் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குச் சென்றடைந்து பாதுகாப்பு அரணாக விளங்கும். இது வேறு எந்த பவுடர்கள் அல்லது பாலின் மூலமாகவும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

குழந்தைப் பிறப்புக்குப் பின் சுரக்கும் சீம்பாலில் தொடங்கி தாய்ப்பாலில் எக்கச்சக்க ஊட்டச்சத்துகளும் நோய் எதிர்ப்பு சக்திகளும் இருக்கின்றன. எனவே, தாய்ப்பால் கொடுப்பது கட்டாயம். இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. பால் போதிய அளவு சுரப்பதில்லை என சிலர் கூறுவதுண்டு. தாய்ப்பால் சரியாகச் சுரப்பதற்கு சுறாப் புட்டு சாப்பிடலாமா அல்லது எறாப் புட்டு சாப்பிடலாமா என்றெல்லாம் சிலர் கேட்பார்கள். எந்தப் புட்டும் தேவையில்லை என்றே நான் கூறுவேன். ‘ப்ரோலாக்டின்' (Prolactin), ‘ஆக்சிடோசின்' (Oxytocin) ஆகிய இரண்டு ஹார்மோன்களே தாய்ப்பால் சுரப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல லிட்டர் பாலைச் சுரக்கும் பசு எந்த ஒரு வித்தியாச உணவையும் தேடிச் சாப்பிடுவது கிடையாது. எனவே, தாய்ப்பால் சுரப்பதென்பது இயற்கையான விஷயம். குழந்தையின் பால் குடிக்கும் முறை சரியில்லாமல் இருப்பது, பழக்கமில்லாததால் தொடக்கத்தில் ஏற்படும் பிரச்னைகள், தொடக் கத்திலேயே பாட்டில் கொடுத்துப் பழக்குவதால் குழந்தைக்கு ஏற்படும் குழப்பம் எனப் பல காரணங்களால் குழந்தைகளால் சரியாகத் தாய்ப்பால் குடிக்க முடியாமல் போகலாம். குழந்தை சரியாகப் பால் குடிக்கவில்லையென்றால் அதுகுறித்த சிக்னல் தாயின் மூளைக்குச் சென்று பால் சுரக்கும் அளவு தானாகவே குறைந்துவிடும். குழந்தை பால் குடிக்காமல் இருப்பதால்தான் பால் சுரக்கும் அளவு குறையுமே தவிர, எந்தவித ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும் கிடையாது. உண்மையில், தாய்ப்பால் குறைவாகச் சுரக்கும் நிலை என்று ஒன்று மருத்துவப் புத்தகத்தில் கிடையவே கிடையாது. ஒவ்வொரு தாய்மாருக்கும் தாய்ப்பால் சுரக்கும் அளவுகளில் சிறிதளவு வித்தியாசம் இருக்குமே தவிர, குழந்தைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நிச்சயம் சுரக்கும். இதுகுறித்த ஐயம் ஏதும் இருப்பின் அருகிலுள்ள குழந்தை நல மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.

இரண்டாவது, முன்பு கர்ப்ப காலத்தில் தாய்க்கான ஊட்டச்சத்து மிகவும் முக்கியம் எனக் கூறினேன் அல்லவா? அதேபோல குழந்தை பிறந்தபின்பும் தாயின் உணவுமுறை இன்னும் முக்கியம். கிட்டத்தட்ட 500-1,000 கலோரிகள் கூடுதலாகச் சேர்த்துச் சாப்பிடவேண்டும். 30-40 கிராம் புரதங்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவுகளையும் சரிவர சாப்பிட வேண்டும்.

ஈரல்
ஈரல்
மண்ணீரல்
மண்ணீரல்

தாய் சாப்பிடும் உணவுகள் குறித்தும் நம்மிடம் நிறைய தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன. குழந்தை அடிக்கடி அழுவது இயற்கையான ஒன்று. ஆனால் இதற்கும் தாயையே குற்றம் சாட்டுவார்கள். ‘நீ பூண்டு சாப்பிட்டாய்', ‘கீரை சாப்பிட்டாய்', ‘போண்டா சாப்பிட்டாய், அது ஜீரணமாகாததால்தான் குழந்தை அழுகிறது' என்றெல்லாம் கதை கட்டுவார்கள். இது மிகவும் தவறான விஷயம். குழந்தை அழுவதற்கும் தாய் சாப்பிடும் உணவுக்கும் பெரிதாக எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இயற்கையான காரணங்கள் பல இருப்பினும், தாய்ப்பால் மீதே குற்றம் சாட்டி சத்தில்லாத உணவைத் தாய்க்குத் தந்துவிடுவார்கள். தாய்க்கு எந்தச் சத்தும் கிடைக்கவில்லை என்றால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் எந்தச் சத்தும் கிடைக்காது. எனவே, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உணவில் அனைத்து சத்துகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

இன்று பல பெண்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தாய்ப்பால் கொடுப்பதில்லை. அது நல்லதல்ல. முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும். இதை ‘Exclusive Breastfeeding’ என்று கூறுவார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு வேறு உணவுகளைக் கொடுக்கத் தொடங்கலாம். அதேநேரம் 2 வயது வரை தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். இந்தக் காலத்தில் வேறு விலங்குகளின் பால் கட்டாயமில்லை. 6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளைத் தரலாம் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

- பரிமாறுவோம்

****

நான் சர்க்கரை நோயாளி. 47 வயதாகிறது. தினமும் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் கடுமையாகப் பசிக்கிறது. எனக்குப் பொருத்தமான டயட் பற்றிச் சொல்லுங்கள் சார்? - சாகுல் ஹமீது

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, ஏற்கெனவே நான் கூறியதுபோல மாவுச்சத்து உணவுகளை சரியான முறையில் எரிசக்தியாக மாற்றும் திறன் மிகவும் குறைவாகவே இருக்கும். அதனால் நீங்கள் பழங்கள் அல்லது கூடுதலாக சாப்பாடு சாப்பிட்டாலும் பசி தீராது. அதற்குப் பதிலாக ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதங்கள் உள்ள நட்ஸ் வகைகள், இரண்டு முட்டைகள் சேர்த்து ஆம்லெட், நிலக்கடலை, அரை மூடி தேங்காய் போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் பசியும் அடங்கும், சர்க்கரை அளவுகளும் கூடாது.

உடல் பருமனானால் தொப்பை பெரிதாகிறதே, ஏன்? - ஜவகர்

தொப்பை ஏற்படுவதற்குக் காரணம் நம் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு செல்கள். இந்த செல்கள், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள கொழுப்பு செல்களைவிட மிக எளிதாக ரத்தக்குழாய்களில் உண்டாகும் கொழுப்பைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. மிக அதிக மாவுச்சத்து அல்லது மாவுச்சத்துடன் கொழுப்புச்சத்து சேர்ந்த உணவுகளை உண்ணும்போது, அதிக இன்சுலின் சுரப்பு காரணமாக இந்தக் கொழுப்புகள் உடனடியாக வயிற்றுப் பகுதியிலும் வயிற்றில் உள்ள உறுப்புகள் மேலே உள்ள அடிபோஸ் கொழுப்புத் திசுக்களிலும் படிந்துவிடுகின்றன. இந்தத் தன்மை பெண்களைவிட ஆண்களுக்கு அதிகம் உண்டு. அதனாலேயே ஆண்களுக்குத் தொப்பை வருவது இன்னும் அதிகமாக இருக்கிறது.

டாக்டரிடம் கேளுங்கள்!

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.