
இயற்கையில் இருக்கும் பல நுண்ணுயிரிகள் உடலுக்குப் பல சாதகமான பயன்களை ஏற்படுத்துவது பத்தாயிரம் வருடங்களாகவே மனித குலத்திற்குத் தெரிந்திருக்கிறது.
உணவு தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைப் பற்றி இந்த வாரம் பேச நினைக்கிறேன். சமீபகாலங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது ப்ரோபயாட்டிக் (Probiotics). இது உடம்புக்கு நல்லது என்று கருதி உலகின் பல்வேறு வகையான உணவுகள் மற்றும் பானங்களைத் தேடித்தேடிச் சாப்பிடுகிறார்கள். பல்வேறு சுவைகளில் கிடைக்கும் யோகர்ட் தொடங்கி கெபிர், கொம்புச்சா, டெம்பே, கிம்சி என்றெல்லாம் நாம் இதுவரை கேள்விப்படாத பல்வேறு பெயர்களில் இந்த ப்ரோபயாட்டிக் உணவுகள் கிடைக்கின்றன. விலை கொஞ்சநஞ்சமல்ல. ஆனாலும் இளைய தலைமுறையை இது வசீகரித்திருக்கிறது. ஆன்டிபயாட்டிக் தெரியும், அது என்ன ப்ரோபயாட்டிக்?
இந்த ப்ரோபயாட்டிக் உணவுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதல்ல. 2,000 வருடங்களுக்கு மேலாக, சங்க காலம் தொட்டே நமது வாழ்வியலில் அங்கமாக இருந்தவை என்பது பலருக்குத் தெரிவதில்லை. ப்ரோபயாட்டிக் என்றால் என்ன என்று முதலில் பார்த்துவிடுவோம். எந்த உணவுப்பொருளில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சாதகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றனவோ அவை ‘ப்ரோபயாட்டிக் உணவுகள்' என்று அழைக்கப்படுகின்றன. ‘நுண்ணுயிரிகளா? அவையெல்லாம் தீங்கு விளைவிப்பவை ஆயிற்றே? காய்ச்சலோ, வாந்தி பேதியோ ஏற்பட்டால் மருத்துவர்கள் நுண்ணுயிரிகளை அழிக்க ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கிறார்கள். அதே நுண்ணுயிரிகள் நமது உடலுக்குச் சாதகமாக இருக்கும் என்று சொல்கிறீர்களே... புரியவில்லை' என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நுண்ணுயிரிகளில் 2 வகை உண்டு. முதல் வகை, நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள். இவற்றால்தான் சைனஸ் தொற்று, நிமோனியா, வாந்தி பேதி, சிறுநீர்த் தொற்று முதல் மிக ஆபத்தான நோய்கள் வரை ஏற்படுகின்றன. இவை உடலில் பிரச்னை செய்யும்போது அழிப்பதற்காகத்தான் நாம் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துகிறோம்.
இரண்டாவது வகைக் கிருமிகள், நம் உடலில் பிறந்தது முதல் இறப்பது வரை கூடவே வாழும் நல்ல நுண்ணுயிரிகள். இவற்றை கமென்சால் (Commensal) என்று கூறுவோம். இவை நமது வாய், இரைப்பை, குடல், தோல், ஆசன வாய் உட்பட அனைத்து இடங்களிலும் இருக்கும். எந்தத் தொந்தரவும் தராது. பதிலாக, நல்ல சில பயன்களை உடலுக்கு அளிக்கும். உதாரணத்துக்கு குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்கள், பிறப்பு முதல் ஒரு குழந்தையின் குடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் குடல் கெட்டுப் போகாமல் இருக்க உதவும், நாம் உண்ணும் உணவில் நம்மால் செரிமானம் செய்ய முடியாமல் இருக்கும் சில பொருள்களைச் செரிமானம் செய்ய உதவும். கெட்ட கிருமிகள் நம் குடலைத் தாக்கும்போது, நம் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இந்த நல்ல நுண்ணுயிரிகளும் சேர்ந்து, கெட்ட கிருமிகளை அழிக்கப் போராடும். நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். இத்தனை நல்ல குணம் வாய்ந்தவைதான் இந்த கமென்சால் நுண்ணுயிரிகள்.
இயற்கையில் இருக்கும் பல நுண்ணுயிரிகள் உடலுக்குப் பல சாதகமான பயன்களை ஏற்படுத்துவது பத்தாயிரம் வருடங்களாகவே மனித குலத்திற்குத் தெரிந்திருக்கிறது. மனிதன் எப்போது விவசாயம் செய்ய ஆரம்பித்தானோ, எப்போது ஆடுமாடுகளைப் பால் பொருள்களுக்காக வளர்க்க ஆரம்பித்தானோ, அப்போதே முதல் ப்ரோபயாட்டிக் உணவான தயிர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. பாலை அப்படியே விட்டுவிட்டாலோ, அல்லது எலுமிச்சை சேர்த்தாலோ, அல்லது ஏற்கெனவே புளித்த தயிரின் ஒரு பகுதியைச் சேர்த்தாலோ தயிர் உருவாகின்றது என்று அப்போதே மனிதன் தெரிந்து வைத்திருந்தான். 7,000 வருடங்களுக்கு முன்பாகவே சீன நாட்டில் ‘புளித்துப்போன சில உணவுப் பொருள்கள் உடலுக்கு நன்மை விளைவிக்கின்றன' என்று மருத்துவக் குறிப்புகளில் உள்ளது. கிரேக்க தயிர் அந்தக் காலத்திலேயே நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டதாகச் சொல்லப்பட்டுவந்தது. நமது ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளிலும் சரி, பண்டைய உணவுமுறையிலும் சரி, தயிருக்குத் தனி இடம் உண்டு.
குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் ஓர் அழகிய பாடல், ‘முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்.' சங்க காலத்துப் பெண் தன் கணவனுக்கு முற்றிய தயிர் எடுத்து கடுகு போட்டுத் தாளித்து சுவையான மோர்க்குழம்பு செய்து பரிமாறினாள் என்கிறது இந்தப் பாடல். இதன்மூலம் தயிரும் மோரும் சில ஆயிரம் வருடங்களாக நம் உணவுமுறையில் நீக்கமறக் கலந்துவிட்டன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பால் மட்டுமன்றி, அரிசி, காய்கறி, பழங்கள் என்று அனைத்து உணவுப்பொருள்களும் புளித்துப்போவதால், உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான இயற்கையான ப்ரோபயாட்டிக் உணவுகள் காலம் காலமாக வழக்கத்தில் இருந்துவருகின்றன.
ஆனால், இந்த சாதாரண உணவுகள் புளித்துப்போவதற்கு நுண்ணுயிரிகளே காரணம் என்று அந்தக் காலத்தில் தெரியாது. இந்த வரலாறு, சில நூறு வருடங்களுக்கு முன்பாகத்தான் தொடங்குகிறது. பிரெஞ்சு அரசர் பிரான்சிஸ் 1 என்பவர் தீவிர வயிற்றுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டபோது, துருக்கி நாட்டுப் பேரரசர் சுலைமான் அவரது மருத்துவரை அனுப்புகிறார். அந்த மருத்துவர், ஆட்டுத்தயிரில் சில மூலிகைகளைக் கலந்து கொடுத்து பிரெஞ்சு அரசரின் வயிற்றுப் பிரச்னையைச் சரி செய்ததாகக் குறிப்புகள் உள்ளன. ‘இந்தப் புளித்துப் போன உணவுகளில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது' என மேலை நாட்டினருக்கு அப்போதே தேடல் தொடங்கிவிட்டது.
நுண்ணுயிரியல் துறையின் பிதாமகன் லூயி பாஸ்டர், இதற்கான முதல் புள்ளியை வைக்கிறார். பால் தயிராக மாறுவதற்குச் சில வகையான பாக்டீரியாக்களே காரணம் என்று முதலில் கண்டுபிடித்தவர் அவரே. அவற்றை அவர் ‘Lactobacillus' என்று அழைத்தார். ஹென்றி டிஸியர் (Henry Tissier) என்னும் குழந்தை நல மருத்துவர், ஆரோக்கியமான பச்சிளம் குழந்தைகளின் வயிற்றில் ‘Bifidobacterium' எனும் நல்ல பாக்டீரியா இருக்கிறது என்று கண்டுபிடித்தார். ஆனால் இந்த ப்ரோபயாட்டிக் துறையைப் பிரபலமாக்கிய பெருமை, ப்ரோபயோட்டிக் துறையின் தந்தை என்று அழைக்கப்படும் இலீ மேத்னிக்கோவ் (Elie Metchnikov) என்பவரையே சேரும். பல்கேரியா நாட்டில் தயிரை அதிகமாக உணவில் பயன்படுத்தும் மக்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வதைக் கண்டறிந்த அவர், ‘பாலைப் புளித்துப் போகச் செய்யும் சில நல்ல பாக்டீரியாக்களை மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தலாம்' என்று பரிந்துரைத்தார். அவருக்குப் பிறகுதான் இந்தத் துறை பெருவளர்ச்சி அடைந்தது.

இப்போது வயிற்றுப் பிரச்னைகள் தொடங்கி அலர்ஜி, ஆஸ்துமா, சிறுநீர்த் தொற்று, வாய்ப்புண், சர்க்கரை நோய், அதிக ரத்த கொலஸ்ட்ரால், நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு, பல்வேறு தோல் நோய்கள், மன நோய்கள், பச்சிளம் குழந்தை ஆரோக்கியம் என்று பலவற்றுக்கு இந்த ப்ரோபயாட்டிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் பயன்படுமா என ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. ‘எந்த ப்ரோபயாட்டிக் கொடுத்தால் எந்த நோய்க்குப் பயனளிக்கும்' என்று தெரிந்துகொள்வதுதான் லேட்டஸ்ட் மருத்துவ ஆராய்ச்சிகளின் ட்ரெண்ட். இந்த ப்ரோபயாட்டிக் மருந்துகளில் பல வகை உண்டு. Lactobacillus, Saccharomyces, Bacillus clausii உள்ளிட்டவை அவற்றுள் சில. தற்போது இவை இயல்பாக மருத்துவர்களால் மேற்கூறிய பிரச்னைகளுக்குத் தீர்வாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ப்ரோபயாட்டிக் அனைத்தையும் மருந்து போல கேப்சூல், பொடி வடிவில்தான் உண்ண வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். நாம் தினசரி சாப்பிடும் பல உணவுகள் ப்ரோபயாட்டிக் நிறைந்தவைதான். இவற்றுள் தலைசிறந்தவை தயிர் மற்றும் மோர். அவற்றில் உள்ள Lactobacillusதான் மிக அதிகமாக மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ப்ரோபயாட்டிக். நம் தென்னிந்தியாவில் கிடைக்கும் தயிரிலேயே காலரா, டைபாய்டு உள்ளிட்ட கொடிய கிருமிகளை எதிர்கொள்ளும் திறன் படைத்த நல்ல நுண்ணுயிர்கள் இருப்பதாகச் சில ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு தயிர் புளிப்பாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அதில் ப்ரோபயாட்டிக் அதிகம் இருப்பதாக அர்த்தம். அதனால்தான் வாந்தி, பேதி வரும்போது தயிர், மோர் அதிகம் சாப்பிடச் சொல்கிறோம்.

ஆனால், சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். இப்பொழுது ‘யோகர்ட்' என்று பல்வேறு சுவைகளில் தயிர் போன்ற ஓர் உணவு கடைகளில் கிடைக்கிறது. அதுமட்டு மல்லாமல் பல்வேறு நிறுவனங்களும் கெட்டியான, சுவையான தயிரை விற்கின்றன. வீட்டுத் தயிரை ஒருநாள் விட்டாலே சாப்பிட முடியாதபடி புளித்துப் போகின்றது அல்லவா? அதற்குக் காரணம், அதில் உயிரோடு இருக்கும் நுண்ணு யிரிகள் அளவுக்கு மேல் பெருகி அதிக அளவு லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்வதுதான். ஆனால் கடைகளில் கிடைக்கும் யோகர்ட் மற்றும் தயிர் வகைகள் ஒருநாள் வெளியில் வைத்தால்கூட பெரிதாக புளித்துப் போவதில்லை. அதற்குக் காரணம், மேலும் புளித்துப்போகாமல் இருப்பதற்காக இவை சூடாக்கப்பட்டு அதில் உள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. சர்க்கரை போட்ட, நுண்ணுயிரிகளே இல்லாத இந்தச் சுவையான உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியம் பெருகுவதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இதைச் சாப்பிட்டால் தொப்பைதான் வரும். இயற்கையாக வீட்டில் தயாரிக்கும் தயிரே சிறந்தது.
அப்படியே கடையில் கிடைக்கும் தயிர் மற்றும் யோகர்ட் எடுத்துக்கொள்வதாக இருந்தால், ‘Contains live active cultures' என்ற வார்த்தைகள் அந்த கன்டெய்னரில் இடம்பெற்றுள்ளதா என்பதைக் கவனிக்கவும். அவை உடலுக்கு நன்மை தரும்.
நம் வாழ்க்கை முறையோடு ஒன்றிய, ஆனால் இப்பொழுது அதிகம் இளைய தலைமுறை சாப்பிடாத இன்னொரு அருமையான ப்ரோபயாட்டிக் உணவு, பழைய சாதம். பாலில் எப்படி நல்ல பாக்டீரியாக்கள் சேர்ந்து தயிர் உருவாகிறதோ, அதேபோல மீந்துபோன சாதத்திலும் அதே Lactobacillus வகையான நல்ல பாக்டீரியாக்கள் சேர்ந்து ஆரோக்கியமான உணவாக மாறுகிறது. முதல் நாள் மீந்துபோன சாதத்தை அப்படியே பானையில் நீரூற்றி வைத்து அடுத்த நாள் அந்தப் பழைய சாதத்தை மோருடன் சேர்த்து உண்ணும் பழக்கம் நம் உணவு முறையில் இருந்ததுதான். எப்படி டபுள் ப்ரோபயாட்டிக் உணவுகளை காம்பினேஷனில் எடுத்து அசத்தியிருக்கிறார்கள் பாருங்கள் நம் மூதாதையர்கள். ப்ரோபயாட்டிக் மட்டுமல்லாது, பொட்டாசியம் போன்ற நல்ல உப்புகளும் இதில் கிடைக்கப்பெறுகிறோம். சாதாரண அல்சரில் தொடங்கி, தீவிர வயிறு சம்பந்தமான நோய்களான Ulcerative colitis, Crohn’s disease, Celiac disease என்று பல்வேறு விதமான நோய்களுக்கு இந்தப் பழைய சாதம் தீர்வாக அமையலாம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இன்னொரு ப்ரோபயாட்டிக் உணவு, ஊறுகாய். ஆனால் பாட்டில் ஊறுகாய்களில் ப்ரோபயாட்டிக் இருக்காது. வீட்டில் தயாரிக்கும் வகைகளில் அதிகம் கிடைக்கும். பழைய சாதத்தில் நீர்மோர் ஊற்றி, வீட்டிலேயே தயாரித்த ஊறுகாயைத் தொட்டுக்கொண்டால் அருமையான ப்ரோபயாட்டிக் காம்பினேஷன் ரெடி.
மார்க்கெட்டில் இப்பொழுது மேலை நாடுகளின் பல்வேறு வகையான ப்ரோபயாட்டிக் உணவுகள் கிடைக்கின்றன. கெபிர் தயிர் என்றதொரு உணவு, நம் தயிரைப்போல, ஆனால் பாலில் வேறு வகையான நல்ல பாக்டீரியாக்கள் வளர்வதால் கிடைக்கிறது. பால் இயல்பான முறையில் தயிராக மாறாமல், கெபிர் தயிராக மாறுவதற்கு கெபிர் grains என்ற பொருள் பயன்படுகிறது. அதைப் பாலில் கலந்து புளிக்கச் செய்தால் கெபிர் தயிர் ரெடி. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கும் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நம்மூர் தயிரும் இதற்குச் சளைத்ததல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதுமட்டுமல்லாமல் கொம்புச்சா என்று ஒரு பானம் கிடைக்கிறது. இது கிரீன் டீயைப் புளிக்கச் செய்து பெறப்படும் பானம். இதைப்பற்றி இணையத்தில் அதிகமாகப் பேசப்பட்டாலும், இதில் அந்த அளவுக்கு ப்ரோபயாட்டிக் நுண்ணுயிரிகள் இல்லை. அதனால் இது அந்த அளவு ஆரோக்கியத்திற்குப் பயன்தராது என்பதே உண்மை.

கொரிய உணவான கிம்சி, முட்டைக்கோஸைப் புளித்துப்போகச் செய்து உருவாக்கப்படுகிறது. சோயாவைப் புளித்துப்போகச் செய்து டெம்பே, மிசோ என்று சில ப்ரோபயாட்டிக் உணவுகளும் கிடைக்கின்றன. ஆனால் நம்மூர் பழைய சாதம், தயிர், மோர், ஊறுகாயைவிட இவை ஒன்றும் பெரிதில்லை என்பதையும் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு முன்னர் நினைவில் கொள்ளவும்.
அதுமட்டுமல்லாமல் ப்ரீபயாட்டிக் (Prebiotic) என்று இப்போது இன்னொரு விஷயம் பற்றியும் பேசப்படுகிறது. அதாவது வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் பெருகுவதற்கு உதவியாக சில உணவுப்பொருள்கள் இருக்கின்றன. அவற்றை ப்ரீபயாட்டிக் என்று அழைக்கிறோம். வாழைப்பழம், தேன், சுண்டல் பயறு வகைகள், நிறைய கீரைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவை வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் பெருகுவதற்குக் கைகொடுத்து ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகின்றன. ஆனால் இந்த உணவுகளை அதிகமாக எடுத்தால் Irritable bowel syndrome எனப்படும் பிரச்னை உள்ளவர்களுக்கு அசௌகரியமும் அதிகரிக்கும்.
ப்ரோபயாட்டிக் மற்றும் கமென்சால் நுண்ணுயிரிகள் நம்மை அழிக்க வந்த ராட்சஸன்கள் இல்லை. நம் கூடவே பயணித்து நமக்கு நலம்பயக்கும் தேவதைகள். அவற்றை நாம் சரியாகப் பார்த்துக்கொண்டால், அவை இன்னும் நூறு மடங்கு அக்கறையுடன் நம்மைப் பாதுகாக்கும்.
அடுத்த வாரம் வேறு ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவோம்.
- பரிமாறுவோம்

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.