மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 48

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

இன்னொரு முக்கியப் பிரச்னை ரத்தசோகை. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பு காரணமாக ஆண்களைவிட பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பு அதிகம்

உணவு தொடர்பான உரையாடலில் நாம் பேச வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், பெண்களின் ஆரோக்கியத்துக்குப் பொருத்தமான உணவுகள். ஆண்களைவிட பெண்கள் 10-20 கிலோ குறைவாக இருப்பதால், பெண்கள் சிறிய சைஸ் ஆண்கள் இல்லை. ஆண்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகள் எல்லாமே பெண்களுக்குப் பொருந்தாது. காரணம், மாதவிடாய், கர்ப்பம் என ஒவ்வொரு தருணத்திலும் பெண்களின் உடல் பல்வேறு மாற்றங்களை அடைகிறது. இது ஆண்களுக்கு இல்லை. எனவே, பெண்களின் உடல் சத்துகளின் தேவை ஆண்களிலிருந்து பல வகைகளில் மாறுபடுகிறது. அதனால் பெண்கள் தங்கள் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

1970-80களில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பதே பெண்களுக்கு இருந்த பிரதான பிரச்னை. ஒல்லியாக இருப்பார்கள்... அதேநேரம் இரும்புச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை பிரச்னைகளும் இருக்கும். அதனால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் எடை குறைவாக இருந்தன. பிறந்த குழந்தைகளுக்கு எந்தெந்தக் காலகட்டத்தில் என்னென்ன சத்துகளைக் கொடுக்கவேண்டும் என்று அரசும் திட்டங்களை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது. ஆனால், பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. பிறகுதான், குழந்தைகளின் ஆரோக்கியம் பிறப்பதற்கு முன்பாகவே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்தது. தாய்மார்களின் ஆரோக்கியமே குழந்தைகளின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது எனத் தெரியவந்த பிறகு, அவர்களின் உடல்நிலை மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரம் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 48

தமிழ்நாட்டில் பெண்கள் கீரை சாப்பிடும் அளவு மிகவும் குறைந்துவிட்டதாகவும், அதேநேரம் ரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து விட்டதாகவும் ஒரு பத்திரிகையில் படித்தேன். இதுதொடர்பாக கொஞ்சம் கூடுதலாகத் தேடத் தொடங்கினேன். ‘National Family Health Survey' என்ற இந்திய அரசின் அதிகாரபூர்வ ஆய்வறிக்கையின்படி, காய்கறி, கீரைகளை உட்கொள்ளும் பெண்களின் சதவிகிதம் 2016-2021 ஆண்டுகளுக்குள், தமிழ்நாட்டில் மட்டும் 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் குறைந்திருக்கிறது. மொத்தமாகவே 10 சதவிகிதப் பெண்கள்தான் போதிய அளவுக்குக் காய்கறி, கீரை சாப்பிடுகிறார்கள்.

பல விஷயங்களிலும் தமிழ்நாட்டை நாம் முன்னோடி மாநிலமாகக் கூறுகிறோம். ஆனால், காய்கறி, கீரைகளை சாப்பிடும் பெண்கள் எண்ணிக்கையில், பல பின்தங்கிய மாநிலங்களைவிட நாம் கீழே உள்ளோம். மிகக்குறுகிய காலத்தில் 50 சதவிகிதத்துக்கும் மேலாக காய்கறி, கீரை சாப்பிடும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. National Family Health Survey, மேலும் சில கவலைதரும் செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறது.

2016, 2021 ஆகிய ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஒல்லியாக இருக்கும் பெண்களின் சதவிகிதத்தில் பெரிய அளவிலான மாற்றம் ஏதுமில்லை. ஆனால், 53 சதவிகிதப் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், ரத்தசோகையால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் சதவிகிதம் 44-ல் இருந்து 48 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. மறுபுறம், உடல் பருமனாக இருக்கும் பெண்கள் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறார்கள்.

ஆரோக்கியமில்லாத, சத்துகளில் சமநிலை இல்லாத குப்பை உணவுகளையே பெண்கள் தற்போது அதிக அளவில் உட்கொள்கிறார்கள் என்பதையே இத்தரவுகள் உணர்த்துகின்றன. கிடைக்கவேண்டிய முக்கிய சத்துகளின் விகிதம் குறைந்துகொண்டே இருக்கிறது. ஒருபக்கம், உடல் பருமனாகிக்கொண்டே செல்கிறவர்கள், ஊட்டச்சத்தில் குறைபாடு உள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மோசமான நிலை. குழந்தைப்பேற்றில் பிரச்னை ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

மேலும் PCOD எனப்படும் கருப்பை நீர்க்கட்டி பிரச்னையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. குழந்தைப்பேற்றில் பிரச்னை இருக்கும் 50 சதவிகிதத்துக்கும் மேலான பெண்களுக்கு, PCOD தான் முதன்மைக் காரணமாக இருக்கிறது. சரியான உணவுமுறை மூலமாக இதற்குத் தீர்வு காண்பது எப்படி என்பது தெரியாமல் நிறைய பேர் கருத்தரிப்பு மையங்களை நம்பி நிறைய லட்சங்களைச் செலவு செய்கிறார்கள். அடிப்படைப் பிரச்னைகளைச் சரி செய்யத் தவறும் சிலரால் கடைசி வரை குழந்தைப்பேற்றை அடைய முடிவதில்லை. எனவே, பெண்களின் ஆரோக்கியம் குறித்த நிறைய விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

உடல் பருமன் தொடர்பான விஷயங்களில் இருந்து இந்தப் பிரச்னையை அணுகத் தொடங்குவோம். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக உடல் பருமன் ஏற்படுவதன் காரணம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு கடினமான வேலை செய்யும் தேவை தற்போது குறைந்திருக்கிறது. பணி மற்றும் வீட்டு வேலை என இரண்டுக்கும் இது பொருந்தும். ஆண்களுக்கும்கூட இது குறைந்திருக்கிறது. இன்னொரு பக்கம், கர்ப்பகாலம் மற்றும் பாலூட்டும் காலங்களில் நிறைய சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுகிறோம் என்ற பெயரில் மாவுச்சத்து உள்ள உணவுகளையே பெண்கள் சாப்பிடுகிறார்கள்.

உடல் பருமனின் விகிதம் இப்போது அதிகமாகிறது. பெண்களின் உடலில் குறிப்பாக Post-pregnancy காலங்களில் நடக்கக்கூடிய மாற்றங்கள் இயற்கையிலேயே அதிகமாக இருக்கும். இன்சுலினுக்கு அடுத்தபடியாக உடலில் கொழுப்பைச் சேகரிக்கும் தன்மை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு உண்டு. குழந்தைப்பேறு அடைந்தபின் நிறைய பேர் உடல் பருமன் அடைவதற்கான காரணம் இதுதான். உடல் பருமன் அடையக்கூடிய தன்மை பெண்களுக்கு இயற்கையிலே அதிகமாக இருப்பதால், கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல ஆண்களைவிட குறைந்த வயதிலேயே அதாவது 25-26 வயதிலேயே பெண்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் வந்துவிடுவதை நான் தினம்தினம் பார்க்கிறேன். இதற்கு என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது பற்றி உடல் பருமன் குறித்த பகுதியிலேயே பார்த்திருக்கிறோம். வெறும் கலோரிகளை மட்டும் தந்து இன்சுலினைத் தூண்டக்கூடிய மாவுச்சத்து உணவுகளை முதலில் குறைக்க வேண்டும். மேலும், பெண்கள் மிகக்குறைந்த அளவிலேயே புரதங்களையும் எடுத்துக்கொள்கிறார்கள். 3-4 இட்லிக்குக் கறிக்குழம்பை மட்டும் தொட்டுக்கொண்டு, அசைவம் சாப்பிட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். இது மாற வேண்டும். புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதோடு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற மாவுச்சத்து உணவுகளையும் பிற குப்பை உணவுகளையும் கண்டிப்பாகக் குறைக்கவேண்டும். இதைச் செய்தால்தான் உடல் பருமன், PCOD போன்ற பிரச்னைகளில் இருந்து பெண்கள் வெளிவர முடியும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 48

இன்னொரு முக்கியப் பிரச்னை ரத்தசோகை. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பு காரணமாக ஆண்களைவிட பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அவர்களுக்கு இரும்புச்சத்தின் தேவை அதிகம். 10 வயதுக்குமுன் 8 மில்லி கிராம் என்றிருக்கும் இரும்புச்சத்தின் தேவை, மாதவிடாயால் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்ய 15 வயதில் 15 மில்லி கிராமாக உயர்கிறது. 15 வயதில் இருந்து இரும்புச்சத்தை சரியான அளவில் பார்த்துக்கொண்டால்தான் கர்ப்ப காலம், குழந்தைப்பேற்றுக்குப் பிறகான காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கமுடியும். பிறக்கும் குழந்தைக்கும் அந்தச் சத்துகள் சென்று சேரும்.

2016-ம் ஆண்டு 5 வயதுக்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு 50% அளவுக்கு ரத்தசோகை ஏற்பட்டது. 2021-ம் ஆண்டில் இது 57 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கவனியுங்கள்... கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படுவது அதிகரித்த அதே நேரத்தில் குழந்தைகளுக்கும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 15 வயதிலிருந்தே பெண்கள் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கூறியதற்கான காரணம் இதுவே. ‘பேரீச்சம்பழம் சாப்பிடுகிறேன்', ‘உலர் திராட்சையை ஊறவைத்து எடுத்துக்கொள்கிறேன்' என்று இதற்கான பதில்களை நீங்கள் வைத்திருக்கலாம். ஆனால், 15 மில்லி கிராம் இரும்புச்சத்து உங்களுக்குக் கிடைக்க, நீங்கள் கிட்டத்தட்ட ஒன்றேகால் கிலோ பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும் என்ற கசப்பான உண்மையை யாரும் அறிவதில்லை. அதே அளவிலான இரும்புச்சத்து இரண்டு கட்டுக் கீரையில் கிடைத்துவிடும். 300-400 கிராம் அசைவத்தில் கிடைத்துவிடும். இரண்டு கப் சுண்டலில் இது அருமையான அளவில் உள்ளது. ஈரல் போன்ற அசைவ உணவுகளில் வெறும் 150 கிராமிலேயே கிடைத்துவிடும். அசைவம் என்ற பெயரில் அதன் குழம்பை மட்டும் சாப்பிடுவது நல்ல பழக்கம் இல்லை.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 48

சத்தான சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது கடந்த 5 வருடங்களுக்குள்ளாகவே 50 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துவிட்டது. அதேபோல் சுண்டல் பயறு வகைகளையும் போதிய அளவில் சாப்பிடுவதில்லை. ஆனால் சத்து என்று நினைத்துக்கொண்டு உலர் பழங்களைச் சாப்பிட்டு உடல் பருமன் அடைவதுதான் மிச்சம். ‘இரும்புச்சத்து குறைவாக உள்ளது, எனவே தினமும் நான்கு பேரீச்சம்பழம் சாப்பிடுங்கள்' என்று மருத்துவர்களே சொல்வதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். மாற்றம் மருத்துவர்களிடமிருந்து முதலில் தொடங்க வேண்டும். அரசும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும்.

Osteoporosis எனப்படும் பலவீனமான எலும்புகள் ஏற்படவும் பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. 25 முதல் 35 வயதிற்குள்ளாக பெண்களின் எலும்புகளுக்கிடையில் அதிக அளவிலான கால்சியம் படிகிறது. 45 வயதுக்குப் பின் மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் எலும்புகளில் இருக்கக்கூடிய கால்சியத்தின் அளவு வேகமாகக் குறையும். எனவே, எலும்புகளில் படியும் காலத்தில் தொடங்கி பெண்கள் சரியான அளவில் கால்சியம் உட்கொள்வது அவசியம். சிறுவயதுப் பெண்கள் நாள் ஒன்றுக்கு 1200 மில்லி கிராம் கால்சியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலங்களில் இந்த அளவு 1500 மில்லி கிராமாக மாறவேண்டும். 45 வயதுக்குப் பின்னும் 1500 மில்லி கிராம் அவசியம். பால், தயிரிலிருந்து கால்சியம் நமக்குக் கிடைத்துவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் 1200 மில்லி கிராம் கால்சியம் கிடைக்க, நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் பால் குடிக்கவேண்டும். பேரீச்சம்பழம் கதைதான் இங்கும். 100 மில்லி டீ அல்லது காபி குடித்துவிட்டு தேவையான கால்சியம் கிடைத்துவிடுகிறது என்று நம்புவது மிகவும் பரிதாபம். இதே 100 கிராம் கீரைகளில் 300-400 மி.கி கால்சியம் நமக்குக் கிடைக்கிறது. இதேபோல 100 கிராம் ராகியில் கிட்டத்தட்ட 350 மி.கி கால்சியம் இருக்கிறது. சோயா, பனீர் ஆகியவை இந்தச் சத்து நிறைந்திருக்கும் மற்ற சில உணவுகள். இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 48

மற்ற சில நுண்சத்துகள் பற்றியும் பேசிவிடலாம். கர்ப்பம் தரிக்க முயற்சி செய்யும் பெண்கள் சில முக்கிய சத்துகளின் குறைபாடுகளால் அவதிப்படுவதுண்டு. முதலாவது Folic Acid, இரண்டாவது Choline. இவை குறைவாக உள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் நிறைய பிறப்புக் குறைபாடுகள் இருக்கும். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவே Folic Acid மாத்திரைகளை மருத்துவர்கள் தருவார்கள். இச்சத்து நல்ல அளவில் கிடைக்கவும் நாம் கீரைகளுக்குத்தான் செல்ல வேண்டும். கீரைகள் சாப்பிடும் சதவிகிதம் தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதைப் பார்க்கையில், ‘வருங்காலத்தில் நரம்பு, மூளைக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் சதவிகிதமும் அதிகரிக்குமோ' என்ற அச்சமும் ஏற்படாமல் இல்லை.

முட்டையின் மஞ்சள் கருவே Choline கிடைப்பதற்கான சிறந்த உணவு. ‘முட்டை வில்லன் இல்லை' என்றுதான் இத்தொடரையே நாம் ஆரம்பித்தோம். சைவர்கள்கூட முட்டை எடுத்துக்கொள்வதற்கு முயற்சி செய்வதில் தவறில்லை என்பது என் பரிந்துரை. வாரம் 3-4 முட்டைகளை நம் உணவில் சேர்த்துக்கொண்டால் தேவையான அளவு Choline நமக்குக் கிடைத்துவிடும். தினமும் ஒன்று என்றால் இன்னமும் நல்லது. சுத்த சைவர்கள் பால் மற்றும் நிலக்கடலை எடுத்துக்கொள்ளலாம். தற்போது இளம் வயதுப் பெண்களுக்கு B-12 என்ற சத்துக் குறைபாடு காரணமாக அதிக அளவு ரத்தசோகையும், நரம்புத் தளர்ச்சியும் ஏற்படுகின்றன. ஈரல் முதலிய அசைவ உணவுகளில்தான் B12 அதிக அளவு இருக்கிறது. சைவர்கள் பால் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம், அல்லது சத்து மாத்திரைகளை உட்கொள்ளலாம். மேலும், Omega-3 என்ற நல்ல கொழுப்புகளை எடுத்துக்கொள்வதும் அவசியம். மீன், நட்ஸ் முதலிய உணவுகளில் இச்சத்து நிறைந்து காணப்படுகிறது.

பெண்கள் வெயிலுக்கு வருவது குறைவதால் வைட்டமின்-D சத்துக் குறைபாடும் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு. நண்பகல் 12 மணி முதல் 3 மணிக்கு உள்ளான வெயிலில் குறைந்தது அரைமணி நேரம் சிறு சிறு வேலைகள் செய்யலாம்.

பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஒட்டுமொத்த சமூகமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால் பெண்கள் நான் மேற்கூறிய விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

- பரிமாறுவோம்

எனக்கு வயது 45. அதற்குள்ளாகவே மெனோபாஸ் ஆகிவிட்டது. தற்போது குறைவான உணவே உட்கொள்கிறேன். இருப்பினும் உடல் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த இயலவில்லை. என்ன செய்வது? - கீதா ஆனந்தன்

மெனோபாஸ் ஆவதற்கும் உடல் எடை கூடுவதற்கும் சம்பந்தமில்லை. உண்மையில் மெனோபாஸ் ஆவதற்கு முன்னர்தான் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உடலில் அதிகமாக இருக்கும். அதுவே உடல் எடை கூடுவதற்குக் காரணமாகவும் அமையும். ஏற்கெனவே நமது தொடரில் கூறியதுபோல, உணவு முறையை சரியாக வடிவமைத்து தக்க உடற்பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக எடை குறைக்கலாம்... மேலும், ஏறாமலும் பார்த்துக்கொள்ளலாம்.

ஒன்று முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துமாவில் என்னென்ன பொருள்கள் சேர்க்கலாம்? எவ்வளவு சேர்க்கலாம்? எந்தெந்த வேளைகளில் கொடுக்கலாம்? - கூரிஸ்மா கவி

அரிசி, சிறு தானியங்கள் உள்ளிட்ட தானிய வகைகள் இரண்டு பங்கு; சுண்டல், பச்சைப் பயிறு உள்ளிட்ட பயறு வகைகள் இரண்டு பங்கு; நிலக்கடலை, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் ஒரு பங்கு... இந்த விகிதத்தில் பொருள்களைக் காய வைத்து அரைத்து சுவைக்குத் தேவையான அளவு சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து, பாலில் கலந்தும் அல்லது உருண்டை போல செய்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

எனக்கு வயது 62. எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. ( HbA1c: 6.4) என்னைப் போல் உள்ளவர்கள் எந்த வகை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? - நடராஜன் சிவராஜன்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்ற வார்த்தை தவறு. உங்களுக்கு ஆரம்பக்கட்ட சர்க்கரை இருப்பதுபோல தெரிகிறது. நம் தொடரில் ஏற்கெனவே கூறியுள்ளபடி, தக்க உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சி செய்து அதை முதலில் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். பிறகு நல்ல புரதங்கள் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டாலே உங்கள் நோய் எதிர்ப்பு நிலை சிறப்புறும்.

காலை வெறும் வயிற்றில் நெய் எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார்களே, சாப்பிடலாமா? பசு நெய், எருமை நெய்... எது நல்லது? - யசோதை

நெய் என்பது ஆரோக்கியக் கொழுப்புகள் நிறைந்த நல்லுணவு. மற்ற எண்ணெய்களைவிட சமையல் செய்வதற்கும் உகந்த பொருள். அதீத ரத்த கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் தவிர, மற்ற அனைவரும் தாராளமாக உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாம். பசு நெய், எருமை நெய் இரண்டும் நல்லதுதான். காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 48

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.