மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 8

ஆரோக்கியம் ஒரு பிளேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம் ஒரு பிளேட்

100 கிராம் கோதுமையில் மாவுச்சத்து, அதாவது கார்போஹைட்ரேட்டின் அளவு 75 கிராம். இதுவே மைதாவிலும் ரவையிலும் சுமார் 77 கிராம் உள்ளது

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 8

சிறுதானியங்களில் உள்ள சத்துகள் குறித்தும் அவற்றின் மகத்துவம் குறித்தும் கடந்த இதழ்களில் பார்த்தோம். இந்த இதழில் சுவாரசியமான ஒரு சர்ச்சையைப் பார்க்கலாம். கோதுமை Vs ரவை Vs மைதா.

கோதுமை பற்றி நமக்குத் தெரியும். வட இந்தியாவில் பல மாநிலங்களில் அதுதான் பிரதான உணவு. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லுணவு என்றும் சொல்கிறார்கள். ரவையும் மைதாவும் எதிலிருந்து வருகிறது என்பதுகூடப் பலருக்குத் தெரியாது. ஆனால் மைதா என்ற பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடிவிடுவோம். ஊரில் உள்ள பாதி நோய்களுக்கு காரணம் மைதாதான் என்போம். ரவையைப் பொறுத்தவரை அதுபற்றிப் பலருக்குக் கருத்தே இல்லை. ரவை நல்லதா, கெட்டதா என்பதைக்கூட பலர் ஆராய்வதில்லை.

ஆனால் கோதுமை, ரவை, மைதா மூன்றும் ஒரு தாய்ப்பிள்ளைகள்தான் என்ற விஷயம் பலருக்குத் தெரியாது. ஒரே தானியத்திலிருந்து வருகின்ற ஒரு பொருள் மிக ஆரோக்கியமானதாகவும் இன்னொரு பொருள் மிக மோசமானதாகவும் இருக்க வாய்ப்புண்டா? கோதுமை, ரவை, மைதா பற்றி ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அளிக்கும் பல செய்திகளை நாம் இதில் அலசலாம், வாருங்கள். இதைப் படித்து முடித்ததும் இந்த மூன்று உணவுப்பொருள்கள் மீதான பார்வையும் உங்களுக்குத் தலைகீழாக மாறிவிடும்.

மைதா பற்றி நம்மிடம் இருக்கும் பல நம்பிக்கைகள் தவறு. எந்தெந்த விஷயங்களை வைத்து மைதா உடலுக்குக் கெடுதல் என்று சொல்கிறார்களோ அந்த விஷயங்கள் அனைத்தும் சரிசமமாக ரவையிலும் இருக்கின்றன. அவற்றில் 80% - 90% கோதுமையிலும் இருக்கின்றன. மைதா 100% கெடுதல் என்று நீங்கள் நம்பினால் ரவை 90% கெடுதல். கோதுமை மாவு 80% கெடுதல். முதல் பந்தே யார்க்கர் வீசினால் எப்படி டாக்டர் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சொல்கிறேன், பொறுமையாக வாசியுங்கள்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 8

சரி, மைதாவும் ரவையும் எப்படி உருவாக்கப்படுகின்றன என்று பார்த்துவிடலாம்.

கிட்டத்தட்ட அரிசி போலத்தான் கோதுமையின் வாழ்வும். நெல், உமி, தவிடு, அரிசி என்று அதன் அவதாரங்களைப் பார்த்தோம். கோதுமையிலும் அப்படித்தான். கோதுமையின் மேலிருக்கும் Husk எனப்படும் உமியை எடுத்துவிட்டால் அடுத்து Bran என்கிற தவிட்டுப்பகுதி இருக்கும். அதற்குள் Endosperm, Germ எனப்படும் லேயர்கள் இருக்கும். கோதுமையில் எந்தப் பகுதியையும் நீக்காமல் அப்படியே சாப்பிட்டால் அது முழுக்கோதுமை. அப்படியே அரைத்தால் அது கோதுமை மாவு. அதில் கோதுமையின் தவிடு, உள்ளிருக்கும் லேயர்கள் அப்படியே இருக்கும்.

அப்புறம் மைதா எங்கிருந்து வருகிறது? அரிசியில் எப்படி பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி இருக்கிறதோ அதைப்போலதான் மைதாவும். கோதுமையின் தவிடு மற்றும் லேயர்களை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் Endosperm பகுதியை மட்டும் மாவாக அரைத்தால் அதுதான் மைதா. கோதுமையில் இருக்கும் நார்ச்சத்துகள் இதில் இருக்காது. வெளிநாடுகளில் இதை `All-purpose மாவு' என்று கூறுவார்கள். ஏனென்றால், பிரெட் தொடங்கி பீட்ஸா, பர்கர் வரை எல்லாவற்றுக்கும் இந்த All-purpose மாவுதான் பயன்படுகிறது.

அடுத்து ரவை? உண்மை என்னவென்றால் ரவையும் மைதாவும் ஒன்றுதான். தவிட்டை நீக்கி உள்ளிருக்கும் endosperm-ஐ நைஸாக அரைத்தால் அது மைதா; கொஞ்சம் கரகரப்பாக அரைத்தால், ரவை. இரண்டிலும் ஒரே சத்துகள்தான். எந்த வித்தியாசமும் கிடையாது. இதுவே, தவிடு நீக்காமல் முழுக் கோதுமையையும் கரகரப்பாக அரைத்தால் அது சம்பா ரவை. அது முழுக்கோதுமைக்குச் சமம்.

கோதுமை, ரவை, மைதாவில் இருக்கும் சத்துகளை ஒரு பார்வை பார்த்துவிடுவோம். 100 கிராம் கோதுமையில் மாவுச்சத்து, அதாவது கார்போஹைட்ரேட்டின் அளவு 75 கிராம். இதுவே மைதாவிலும் ரவையிலும் சுமார் 77 கிராம் உள்ளது. மூன்றிலும் மாவுச்சத்தின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் நார்ச்சத்தில் பெரிய அளவில் மாற்றம் உண்டு. 100 கிராம் கோதுமை மாவில் 15 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. மைதா மற்றும் ரவையில் வெறும் 3 கிராம்தான் நார்ச்சத்து இருக்கிறது. மைதாவுக்கும் கோதுமைக்கும் புரதச்சத்தின் அளவில் பெரிய வித்தியாசம் கிடையாது. ஏனென்றால் புரதம் அனைத்தும் Endosperm பகுதியில்தான் இருக்கும். கோதுமை, மைதா, ரவை மூன்றிலுமே 10-11 கிராம் அளவில் புரதம் இருக்கிறது. வைட்டமின் போன்ற நுண்சத்துகள், மைதா, ரவையில் கோதுமையைவிடக் குறைவாகவே உள்ளன. குறிப்பாக வைட்டமின் பி சத்து கோதுமையில் சற்று அதிகமாகவே உள்ளது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 8

அடுத்து, நாம் வழக்கமாக ஆராயும் Glycemic Index மற்றும் Glycemic Load. கோதுமையின் Glycemic index 54. இந்த அளவு 55க்குக் கீழே இருந்தால் ஓரளவுக்கு நல்ல உணவு என்று முன்பே பார்த்தோம். மைதா மற்றும் ரவையின் Glycemic index 70-75. இது, பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்கு சமமானது. இதைப் படித்ததும் `கோதுமை சூப்பரா சார்' என்று நீங்கள் கேட்கலாம். அதில், ஒரு பிரச்னை இருக்கிறது. முழுக்கோதுமையின் Glycemic indexதான் 54. கோதுமை மாவின் Glycemic Index 68.

கோதுமை மாவின் Glycemic Index கிட்டத்தட்ட அரிசிக்கு சமம்தான். பெரிய வித்தியாசம் இல்லை. Glycemic load எனப்படும் மாவுச்சத்தின் அளவைப் பார்த்தால் மூன்றும் கிட்டத்தட்ட ஒன்றுதான். கோதுமை மாவின் Glycemic load கிட்டத்தட்ட 40 என்றால், மைதா மாவின் அளவு 50. எனவே கோதுமை, மைதா, ரவைக்கிடையில் உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவை ஏற்றும் காரணிகள் ஆகியவற்றில் பெரிய வித்தியாசம் இல்லை. மைதா, ரவையைவிட கோதுமையில் 10-20% தான் Glycemic load குறைவு.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 8

ஒரு சர்க்கரை நோயாளி மைதா கெடுதல் என்று அதைத் தவிர்த்தால் மிகவும் நல்லது. ஏனென்றால், அதில் Glycemic load அதிகம். அதே நேரத்தில் கோதுமை மீதும் விழிப்புணர்வு வேண்டும். அதையும் அளவோடு சாப்பிட வேண்டும். மைதாவில் செய்யப்படும் பரோட்டாவைக் கண்டு மிரளும் அதே நேரத்தில் கோதுமையில் செய்யப்படும் சப்பாத்தியையும் லிமிட்டாகச் சாப்பிடவேண்டும். சப்பாத்தியோ, உப்புமாவோ... குறைவாக எடுத்துக்கொண்டு அதிக காய்கறிகளையும் வேகவைத்த பருப்புகளையும் சாப்பிட்டால் நல்லது. அப்படி இல்லாமல் குழம்புடன் சேர்த்து 7-8 சப்பாத்திக்களை உள்ளிறக்கினால் மைதா பரோட்டா செய்யும் அத்தனை கேடுகளையும் கோதுமைச் சப்பாத்தியும் செய்யும்.

நான் படிக்கும் காலத்தில் சர்க்கரை நோய்க்குச் சிறந்த உணவு என்று என் பேராசிரியர்களே சப்பாத்தியைத்தான் கை காட்டுவார்கள். காரணம், நம் அடிப்படை உணவு அரிசி. அதை விட்டு சப்பாத்தி சாப்பிடும்போது நம்மையறியாமல் குறைவாகச் சாப்பிடுவோம். மறைமுகமாக Glycemic load குறையும். ஆனால் அது அந்தக்காலம். இன்று கோதுமைக்கு நாம் முழுவதுமாகப் பழகிவிட்டோம். ஃபுல் கட்டு கட்டுகிறோம். நம்மூர் தானியம் இல்லை என்றாலும், அது நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. ஒரு சர்க்கரை நோயாளி அதிகமாகச் சாப்பிடும்பட்சத்தில் உகந்த உணவாகச் சப்பாத்தியைக் கூற முடியாது. அரிசியைப் பற்றிப் பேசும்போதே பார்த்தோம், கோதுமையை உணவாக எடுத்துக்கொள்ளும் பஞ்சாப்பும், தமிழ்நாடு மற்றும் கேரளா அளவுக்கு சர்க்கரை நோயாளிகளைக் கொண்டிருக்கிறது என்று. உண்மையில் கோதுமைக்கும் அரிசிக்கும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மையில் பெரிய வித்தியாசம் கிடையாது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 8

ஆச்சர்யமூட்டும் தகவல் என்னவென்றால், மைதாவை அரிசிக்கு இணையாகத் தங்களின் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் வடகிழக்கு மாநில மக்களுக்கு சர்க்கரை நோய் மிகவும் குறைவாகவே வருகிறது. அவர்களின் உடல் உழைப்பும் வாழ்க்கை முறையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். மைதாவை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களில் சர்க்கரை நோய் குறைவாக இருக்கும் அதே நேரத்தில், கோதுமை மற்றும் அரிசியை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களில் சர்க்கரை நோயின் அளவு அதிகமாக இருப்பதுதான் கேள்வியை உருவாக்குகிறது. எனவே, எந்த தானியத்தைச் சாப்பிடுகிறோம் என்பதைத் தாண்டி நம் உடல் உழைப்பும் வாழ்க்கைமுறையும் எப்படி இருக்கிறது என்பதுதான் நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பார்க்கலாம். மைதாவின் வெள்ளை நிறம்தான் அதிக கெடுதலை உண்டாக்குவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. மைதாவின் வெள்ளை நிறத்துக்குக் காரணம் அதை ஓவராக பிளீச்சிங் செய்வதுதான் என்கிறார்கள். மிகவும் கவனமாக ஒரு விஷயத்தை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். மைதா முழுவதுமாக நல்லது என்று எங்கும் நான் சொல்லவில்லை. நான் செய்வதெல்லாம் ஒப்பீடு. இதுநாள் வரை நம்மிடம் இருக்கும் கற்பிதங்களின் உண்மைத்தன்மையை அலசுவதுதான் என் நோக்கம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 8

``மைதாவை பிளீச்சிங் செய்து வெண்மையாக்க நிறைய ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள். Azodicarbonamide, Chlorine gas, Benzoyl peroxide, Alloxan போன்ற பிளீச்சிங் ஏஜென்ட்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை கேன்சரை உருவாக்கும் தன்மை கொண்டவை. Chlorine gas நுரையீரல் பிரச்னைகளை உருவாக்கும். Alloxan சர்க்கரை நோயை உண்டாக்கும் ரசாயனம். அதனால்தான் மைதா சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று சொல்கிறோம்.'' இதுதான் மைதா எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் விளக்கம்.

இதை நாம் அறிவியல்பூர்வமாகப் பார்த்துவிடுவோம். கோதுமை பிரவுன் நிறத்தில் இருப்பதற்கு Xanthophyll என்னும் நிறமிதான் காரணம். அந்த நிறத்தை நீக்கி வெள்ளையாக மாற்றவேண்டும் என்றால் அதை பிளீச் செய்தாகவேண்டும். பிளீச்சிங் என்பது ஆக்சிஜனேற்றம் செய்வது (Oxidation). ஆக்சிஜனை அதிகமாக்கும்போது ‘Oxidation’ என்கிற பிராசஸ் நடந்து xanthophyll நிறமி நீங்கி வெள்ளையாக மாறிவிடும். இதற்கு Bleaching agents எனப்படும் ரசாயனங்களைப் பயன்படுத்துவார்கள்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 8

மைதா, இந்தியாவில் மட்டும் பயன்படுத்தும் உணவுப்பொருள் அல்ல. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் சமையலில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. பரோட்டாவைக் கண்டு அஞ்சும் மக்கள் பிரெட், பீட்ஸா, பர்கர் அனைத்தையும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். குழந்தை பெற்ற பெண்களை நலன் விசாரிக்கச் செல்லும் போது வெள்ளை பிரெட்டைத்தான் வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் இவை அனைத்துமே மைதாவில்தான் தயாரிக்கப்படுகின்றன.

மேலைநாடுகளைப் பொறுத்தவரை பிளீச்சிங் பிராசஸில் ரசாயனங்கள் எந்த அளவில் இருக்கலாம்; பிராசஸ் முடிந்த பின்னர் அந்த ரசாயனங்கள் உணவில் எந்த அளவில் தங்கியிருக்கலாம் என்பதற்கெல்லாம் கடுமையான வரையறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. நிறைய விவாதிக்கப்பட்டாலும் இதுவரை வெளிவந்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பிராசஸ் முடிந்து இறுதியாக வெளிவரும் உட்கொள்ளத் தகுதியான மைதாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எந்த ரசாயனங்களும் இருந்ததில்லை. ஏனெனில் பிராசஸ் செய்யும்போதே பிளீச்சிங் ஏஜென்ட்களும் வெளியேறிவிடுவதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். மைதாவில் இந்த பிளீச்சிங் ஏஜென்ட்கள் இருந்து, அதனால் பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்த அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை. Alloxan எனும் ரசாயனத்தை பிராசஸ் செய்யப் பயன்படுத்துவது கிடையாது. alloxan என்பது xanthophyll ஆக்சிஜனேற்றம் நடக்கும்போது உருவாகும் ஒரு ரசாயனம். அதிலும் alloxan மிகவும் குறைந்த அளவிலேயே உருவாகிறது. எனவே alloxan தாக்கம் பெரிதாக எந்த ஆய்வுகளிலும் பாதிப்பை உண்டு பண்ணும் அளவு மைதாவில் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. ஒரு பொருள் எந்த அளவில் இருக்கிறதோ, அதைப் பொறுத்தே அதன் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. ஆப்பிள் விதைகளில் கூட சயனைடு இருக்கிறது. அதனால் ஆப்பிள் சாப்பிடும் அனைவரும் இறந்துவிடுகிறார்களா என்றால், நிச்சயம் இல்லை.

எனவே மக்கள் பயப்படும் அளவிற்கு இந்த பிளீச்சிங் ஏஜென்ட்களால் பாதிப்பு கிடையாது. சமீபத்தில் இதுகுறித்து வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, தேவையான அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டு பாதிப்புகள் எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வழக்கு கைவிடப்பட்டது.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 8

`இதன்மூலம் மைதா நல்லது என்று சொல்ல வருகிறீர்களா' என்று கேட்டால், நிச்சயமாகக் கிடையாது. நீங்கள் மைதா கெடுதல் என்று நம்பினால் தவறில்லை. ஆனால் அதற்கு இந்த பிளீச்சிங் ஏஜென்ட்களோ வெள்ளை நிறமோ காரணம் என்று கருதவேண்டாம் என்பதே நான் சொல்ல வருவது. `அதில் மாவுச்சத்தின் அளவு மிக அதிகம். அதன் காரணமாக மைதா கெடுதல்' என்று எண்ணுவதே அறிவியல்பூர்வமாக இருக்கும். மைதா சாப்பிட்டாலும் குறைந்த அளவில் சாப்பிடுங்கள். மைதாவைத்தான் பிளீச் செய்கிறார்கள், கோதுமை ஓகே என்றெண்ணி, கண்டபடி சாப்பிட வேண்டாம். உள்ளூரில் மைதாவை பிளீச் செய்யும்போது ரசாயனங்களின் அளவு வேறுபட வாய்ப்புண்டு. அதுகுறித்து என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.

இதையெல்லாம் தாண்டி கோதுமை, மைதா, ரவை மூன்றிலும் பெரிய பிரச்னை இருக்கிறது. அதுதான் க்ளூட்டன் (gluten). மாவைப் பிசையும்போது ரப்பர் போன்று இழுத்துக்கொடுக்கும் தன்மைக்குக் காரணமான ஒரு புரதம்தான் க்ளூட்டன்.

நம் ஊரில் 5 முதல் 10% சொரியாசிஸ், தைராய்டு, டைப்-1 சர்க்கரை நோய், தோல் நோய்கள் போன்ற பல Auto Immune disease என்று சொல்லக்கூடிய நோய் எதிர்ப்பு மண்டலம் சார்ந்த நோய்களுக்குக் காரணம் இந்த க்ளூட்டன்தான். பலருக்கு வயிறு தொடர்பான அலர்ஜிகள் ஏற்படுவதற்கும் இந்த குளூட்டனே காரணமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் கோதுமையைவிட மைதாவில் 1 சதவிகிதம் கூடுதலாகவே க்ளூட்டன் இருக்கிறது. கோதுமை, மைதா, ரவை பயன்படுத்தும் 5 முதல் 10% பேருக்கு க்ளூட்டன் சென்ஸி டிவிட்டி (gluton sensitivity) எனப்படும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் வெளிநாடுகளில் க்ளூட்டன் இல்லாத தானியங்களைத் தேடித்தேடி சாப்பிட ஆரம்பிக் கிறார்கள்.

பலர், க்ளூட்டன் ஃப்ரீ (gluten free) உணவுகள் சாப்பிடுகிறேன் என்று வித்தியாசமான உணவுகளை யெல்லாம் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். என்னவென்றே தெரியாமல் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வரும் இப்படியான உணவுகளை வாங்கிச் சாப்பிடுவது நல்லதல்ல. அரிசி, சிறுதானியங்கள் எல்லாம் இயற்கையான க்ளூட்டன் ஃப்ரீ உணவுகள்தான். க்ளூட்டன் சென்ஸிட்டிவிட்டி பிரச்னை இருப்பவர்கள் தாராளமாக இவற்றைச் சாப்பிடலாம்.

எனவே, அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, மாவுச்சத்து அளவுகளைப் பொறுத்தவரை, எல்லா தானியங்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். மைதா, கோதுமையில் gluten allergy போன்ற பிரச்னைகள் ஜாஸ்தி. அதனால் கண்டதைத் தேடி ஓடாமல், அரிசி மற்றும் சிறுதானியங்களை சரியான, தேவையான அளவில் நிறைய காய்கறிகளுடன் சேர்த்துப் பயன்படுத்துவது கோதுமை, மைதா, ரவைக்கு எவ்வளவோ மேல் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

சரி, அடுத்த வாரம் வேறொரு உணவுப்பொருளை எடுத்துப் பேசுவோம்!

- பரிமாறுவோம்

*****

பாசுமதி அரிசி பிரியாணி நல்லதா?

விகடன் வாசகர்கள் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்கள். அவர்களுக்கு விளக்கமளிப்பதற்கே இந்தத் தகவல். ராம் என்ற வாசகர், `அரிசி பற்றி நிறைய சொல்லியிருக்கிறீர்கள். பாசுமதி அரிசியை விட்டுவிட்டீர்களே' என்று கேட்டிருந்தார். பாலகிருஷ்ணன் என்ற வாசகர், `ஹார்மோன் ஊசிகளைப் போட்டு வளர்க்கப்படும் பண்ணைக் கோழிகளின் முட்டைகளைச் சாப்பிடலாமா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியைவிட பாசுமதி அரிசியின் Glycemic index அளவு சற்று குறைவு. பாலீஷ் செய்யப்பட்ட அரிசியின் Glycemic index 66 என்றால் பாசுமதி அரிசியின் அளவு 55-60. சிறுதானியம், பிரவுன் ரைஸ், சிவப்பரிசி ஆகியவற்றுக்கு நிகராக இதை ஒப்பிடலாம். Glycemic index அளவு குறைவாக இருந்தாலும், பாசுமதியில் செய்யப்பட்ட பிரியாணியை ஒரு முழு பிளேட் சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டாயம் அதிகரிக்கும். கவனம்.

பண்ணைகளில் வளர்க்கப்படும் முட்டைக் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போடுவதாகச் சொல்லப்படுவது தவறு. பண்ணைகளில் சில நேரங்களில் கோழிகளுக்குத் தடுப்பூசிகளும் நோய் வராமல் இருக்க ஆன்டிபயாடிக் மருந்துகளும் ஊசி மூலம் செலுத்தப்படுவதுண்டு. ஹார்மோன் ஊசி போட்டு எந்தக் கோழியையும் வளர்க்கமுடியாது என்பதுதான் அறிவியல்பூர்வமான கூற்று. எனவே தயக்கமில்லாமல் பண்ணைக் கோழி முட்டைகளைச் சாப்பிடலாம்.

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 8

டாக்டரிடம் கேளுங்கள்!

ஆரோக்கியம், டயட் தொடர்பான சந்தேகங்களை மருத்துவர் அருணிடம் வாசகர்கள் கேட்கலாம். மருத்துவர் தரும் பதில்கள் vikatan.com-ல் வெளிவரும். சந்தேகங்களை arokkiam@vikatan.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது ‘டாக்டரிடம் கேளுங்கள், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 2’ என்ற முகவரிக்குக் கடிதம் வழியாகவோ அனுப்பலாம்.