சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நாப்கின்
பிரீமியம் ஸ்டோரி
News
நாப்கின்

நலம் 9

ந்தப் பெண்ணுக்கு வயது நாற்பதுக்கு அதிகமாக இருக்கும் என்று பார்த்தவுடனே தோன்றியது. அவர் வங்கியில் வேலை பார்க்கும் அலுவலர். “எனக்கு இதை இப்பவே பிச்சு எறியணும்போல இருக்கு. கிட்டத்தட்ட அறுபது நாளா அவதிப்பட்டுட்டு இருக்கேன். கொட்டுது சார்” என்று அவர் பேசியபோது, கலங்கிய கண்களைத் தாண்டி, வெளிறிய முகம் ‘பளிச்’செனத் தெரிந்தது. எந்த மூத்த மருத்துவரும் அந்த வெளிறிய முகத்தை வைத்தே அவர் கடும் ரத்தசோகையில் இருப்பதைக் கண்டுபிடித்துவிடுவார். பேச்சிலும் நடையிலும் இருந்த நீள் மூச்சுகள் அந்தப் பெண்ணின் ரத்தசோகையை உறுதிப்படுத்தின. நாற்பது வயதையொட்டிய பெண்களுக்கு மிக முக்கியத்தொல்லை ‘பெரும்பாடு’ எனப் பேச்சுவழக்கில் சொல்லக்கூடிய அதிக ரத்தப்போக்குள்ள மாதவிடாய். வலியும் அதிக ரத்தப்போக்கும் முதுகுவலியும் நாவெல்லாம் வறண்டு நிற்கும் உடற்சோர்வும், எல்லாவற்றிற்கும் மேலாக, மேகம்போல் சூழ்ந்து நிற்கும் மன அழுத்தமும் சேர்ந்து இப்படி நாற்பதில் வரும் ‘மெனரேஜியா’ (Menorrhagia), பெண்களின் வாழ்வில் கடக்கக் கடினமான ஒரு காட்டாறு.

எங்கள் அம்மா, அத்தைகளுக்கு இவ்வளவு சிக்கல் இருந்ததாகத் தெரியவில்லை. சானிடரி நாப்கின்களை இருட்டில்போய் மறைவாக வாங்கிவந்த அப்போதைய சமூகத்தில், அந்தச் சிக்கலும் வலியும்கூட வெறும் மனக்குமுறலாகவே இருந்திருக்க வாய்ப்புண்டு. அன்றைக்குச் சத்தமில்லாமல் பெண்கள் மட்டும், நள்ளிரவில் ஒன்றுகூடி, கொழுக்கட்டை அவித்து அவ்வையாருக்கு வேண்டி விரதம் இருந்த போதாவது இந்தச் சிக்கலைப் பேசித் தீர்வு காண முயன்றார்களா என விசாரித்தால், அப்படி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. அங்கும்கூட `குழந்தை பிறக்கணும்... நல்ல வரன் அமையணும்’ என வேண்டியதாகவே கூறப்படுகிறது. ஆண்களுக்குத் தெரியாமல் படுரகசியமாக நடைபெறும் இந்த விரதத்தைப்பற்றிக் கேட்டால், ‘காது போயிடும். பார்த்தால் கண்ணு குருடாயிடும்’ என்கிற கர்ணபரம்பரைக் கதைகள் இன்றும் தெற்கத்தி மாவட்டங்களில் அதிகம் உள்ளன. மாதவிடாய் சிரமங்கள் அனைத்தும் இன்றைக்கும் நம் சமூகத்தில் அலட்சியத்துடனோ அருவருப்புடனோ தாழ்வுமனப்பான்மை யுடனோதான் பார்க்கப்படுகின்றன.

இச்சமூகத்தில் பெண்ணின் மார்பகப் பிரச்னைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கருப்பையின் சங்கடங்களுக்குக் கொடுக்கப்படாததுகூட, ‘ஒருவித ஆணாதிக்க மனோபாவம்தான்’ என உளவியல் ரீதியாக அணுகுவோரும் உண்டு. நாற்பது வயதுக்கு மேல் பெண்ணுக்கு மாதவிடாய்ச் சிக்கல் ஏற்படுகையில் நவீன அறிவியல், ‘முதலில் புற்று ஏதுமில்லையே?’ எனச் சோதித்துப் பார்த்துக்கொள்ள வலியுறுத்துகிறது. முதல் சோதனை, கருப்பை வாய்ப்பகுதியின் செல்களைச் சேகரித்து (Swab), அதில் மாறுபட்ட தகவமைப்புடைய புற்று செல்கள் இருக்கின்றனவா எனக் கவனிப்பது. இன்னொன்று, அல்ட்ரா சவுண்டு மூலம் கருப்பையின் உட்சுவரின் தடிமன் எந்த அளவில் உள்ளது என்பதைப் பார்ப்பது. கருப்பைக் கழுத்துப்பகுதி செல்களில் இயல்பற்ற (Atypical)செல்கள் இருக்கும்பட்சத்தில் திசுப்பரிசோதனை (Biopsy)பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல் கருப்பையின் உட்சுவர் தடித்துப்போய் 15மி.மீ., 20மி.மீ. என்ற அளவில் இருந்தால் அதிலிருக்கும் திசுக்களையும் சோதித்துப் பார்க்க வலியுறுத்துகிறது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

‘`இதுக்குத்தான் நான் ஆஸ்பத்திரிக்கே வரலைன்னு சொன்னேன்... `பயாப்ஸி எல்லாம் செய்யவே கூடாது’ன்னு வாட்ஸ்அப்பில் எவ்ளோ தகவல் வருது தெரியுமா?’’ என வாதிடுவோர் இன்று பெருகிவிட்டனர். உலகச் சந்தையில் வாட்ஸ்அப் மருத்துவர்கள் இப்போது மிக அதிகம். பயாப்ஸியினால் புதிய நோய் பிறந்ததாகவோ, இருக்கும் சாதாரணக் கட்டி புற்றாக மாறியதாகவோ, பயாப்ஸிக்காகத் திசுக்களைச் சுரண்டியதால் கட்டி பெரிதாகிப்போனதாகவோ எங்கும் சான்று இல்லை. அதேசமயம் மார்பில் கடுகளவில் உள்ள சின்ன வளர்ச்சியை பயாப்ஸி செய்துபார்த்து, அதைப் புற்றுக்கட்டி என அடையாளம் கண்டு மார்பகத்தையும் காப்பாற்றி, கட்டியையும் சிறு கம்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து, முழு நலத்துடன் குதூகலத்துடன் இருக்கும் மகளிர் இன்று ஏராளம். ‘பயாப்ஸிக்கு மாட்டேன்’ என்பது அறியாமையின் உச்சம். மூன்று விதமான தாமதங்கள்தான் பல நேரத்தில் இப்பிரச்னையைப் பெரிதாக்குகின்றன.

1. நோயாளி செய்யும் தாமதம், 2. மருத்துவர் செய்யும் தாமதம், 3. சிகிச்சை தாமதம்.

இந்த மூன்றையும் தவிர்க்க வேண்டியது நாற்பது வயதான பெண்களுக்கு மிகவும் அவசியம்.

நாற்பது நாள், ஐம்பது நாள் தொடர்ச்சியான ரத்தப்போக்கு என்பது பெரும்பாலும், ‘எண்டோமெர்ரியோசிஸ்’, ‘அடினோ மயோசிஸ்’ (Endometriosis and Adenomyosis) பாதிப்புகளாக இருக்கலாம். சில நேரங்களில் ஃபைபிராய்டு (Fibroid) எனும் நார்க்கட்டிகளாகவும் இருக்கலாம். இவற்றுக்கெல்லாம் அறுவை சிகிச்சை என்பது கடைசித் தேர்வு மட்டுமே. மரபிலும் நவீனத்திலும் இன்று ஏராளமான மருந்துகள் முறையாக ஆய்ந்தறியப்பட்டு வந்துவிட்டன. கடந்த இருபது ஆண்டுகளில், அதிக ரத்தப்போக்கைக் காரணமாக வைத்து, தேவையில்லாமல் அதிகம் அகற்றப்படும் உறுப்பு அநேகமாகக் கருப்பையாகத்தான் இருக்கும். (அதன் வரிசையில் இன்று பித்தப்பைகளும் அவசியமில்லாமல் பல நேரங்களில் அகற்றப்படுகின்றன).

இந்தியாவில் இன்னும் மருத்துவ வசதி எட்டாத கிராமங்கள் ஏராளமாய் இருக்க, நகர்ப்புறங்களில் நட்சத்திர வசதி கொண்ட மருத்துவமனைகள் சற்று அளவுக்கு அதிகமாகவே புற்றீசல்போல் பெருகி வருகின்றன. ரூ. 200 கோடி முதல் ரூ. 2,000 கோடி வரை முதலீடு செய்யப்பட்ட பெரு மருத்துவமனைகள் ஒருபக்கம், ‘உலகத்தரமான சிகிச்சையை அங்கு மட்டும்தான் பெற முடியும்’ என்ற நிலையை உருவாக்கிவருகின்றன. இன்னொரு பக்கம், அவசியமற்ற அறுவை சிகிச்சை, தேவையில்லாத சோதனைகள் எனத் தொடர்ந்து மருத்துவ அறத்தைச் சிதைக்கின்றன. இப்படியான பல பெரு மருத்துவமனைகளில், நீட் தேர்வெழுதாமல், அரசுப்பள்ளியில் பயின்று வந்த திறமைசாலி மருத்துவர்கள் பலர் மௌனமாகவும், கொஞ்சம்பேர் வலியுடனும், கொஞ்சம் பேர் ‘வேறென்ன செய்வது?’ என்ற மனோபாவத்துடனும் நசுங்கிக் கொண்டிருக்கின்றனர். இதில் பல மருத்துவமனைகள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக வேறு வணிகச் செய்திகள் உலா வருகின்றன. ஒருவேளை இந்தியாவில் இரண்டு மூன்று பெரிய மருத்துவமனைகளை மூடிவிட்டால், ‘அட போங்கப்பா! நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ எனச் சொல்ல அரசோ அரசு மருத்துவமனைகளோ உள்ளனவா? மழைத் தண்ணீரைச் சேமித்து வைக்க வழி தெரியாமல் கடல் நீரில் உப்பைப் பிரிக்கும் உற்சவம் நடத்தும் அரசுகள், தேர்தலைத் தவிர எதற்கும் முன்யோசனையுடன் இயங்குவதில்லை.

இன்றைக்கு இந்தியாவில் உச்சத்தில் உள்ள ஒரு பெரு மருத்துவமனையில் கிட்டத்தட்ட 90,000 பணியாட்கள் இருக்கிறார்களாம். அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் 63 சதவிகித பணம், ஊதியத்துக்கும் சந்தைப்படுத்துதலுக்கும் சோதனைக்கும் செல்கிறதாம். காப்பீடுகள் மூலமாக இங்கு கணிசமாக உறிஞ்சப்படும் பணம், நோயாளிகளின் சிகிச்சைக்கான மருந்துகளைத் தாண்டி இந்த 63 சதவிகிதச் செலவுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. மருத்துவமனையில் 1000 ரூபாய் காப்பீடு மூலமாகவோ கையிலிருந்தோ நாம் கொடுத்தால் அதில் ரூ.180 மட்டும்தான் மருத்துவருக்கும் சிகிச்சைக்குமானது. மீதம் அனைத்தும் ‘நாங்க பாத்துக்கமாட்டோமா? வாங்க ப்ளீஸ்’ என ஆடிப்பாடி அழைக்கும் விளம்பரம் முதல் ஈசிஜி, எக்ஸ்-ரே, டிடிஹெச், சாட்டிலைட் வாடகை என அத்தனைக்குமானது. ‘எக்ஸ்-ரே, ஈசிஜி எல்லாம் அவசியமான ஒண்ணுதானே?’ எனக் கேட்டால், அவசியம்தான். ஆனால், ‘இப்போது இந்த சிடி ஸ்கேன் அவசியமா?’ என்பதற்கும் ‘அதற்கு வசூலிக்கப்படும் தொகை சரியானதா?’ என்பதற்கும் ‘இந்த அறுவை சிகிச்சை 100 சதவிகிதம் இப்போதே அவசரமாய் அவசியமா?’ என்பதற்கும் பல நேரங்களில் நேர்மையான பதிலில்லை.

இன்னொரு பக்கம் இணையமும் ஊடகங்களும் வாட்ஸ் அப்பும் விழிப்புணர்வு என்ற பெயரில் கொஞ்சம் அதிகபட்ச அச்சத்தை வெகுஜன மத்தியில் விதைத்ததாலும், இவற்றில் உலாவும் சில நேர்மையற்ற மனிதர்கள் உருவாக்கிவிட்ட வதந்திகள் பலவும் சேர்ந்து, மிகக் கடுமையான நம்பகத்தன்மையற்ற நிலையை மருத்துவம்மீதும் மருத்துவர்கள்மீதும் பெரிதும் உருவாக்கிவிட்டன. விளைவு? மருத்துவமனைக்குள் நுழையும்போது, ரோலர் கோஸ்டரில் ஏறப்போகிற திகிலில்தான் சாமானியப் பெண் நுழைகிறாள். எல்லாவற்றிலும் சந்தேகத்துடன்! பயத்துடன்!

ரத்தப்போக்கின் உச்சத்தில் வெளிறிப்போய் விக்கி நிற்கும் நடுத்தர வர்க்கத்துப் பெண்ணுக்கு, இப்படியான உறிஞ்சலும் பயமும் கூடுதலாய் வெளுக்க வைக்கிறது. இந்தக் கடினமான சூழலில் விக்கித்துப்போய் நிற்கும் பெண்ணிடம்தான், ‘மூணே வேளை... இந்த மருந்தைச் சாப்பிடு...எதுக்கு தாயி கண்ட கண்ட மருந்தெல்லாம்? இதுவரை ஒரு லட்சம் பேரை குணப்படுத்தி யிருக்கேன்’ எனப் பச்சைப் பொய்யைச் சொல்லி இழுக்கும் மருத்துவராய் வேடமிட்ட சமூக விரோத கும்பலின் நிழல் ஆசுவாசப்படுத்துகிறது. இறங்கிக்கொண்டே இருக்கும் சாதாரண இரும்புச்சத்தின் அளவைக்கூடக் கணிக்கத் தவறுவதும் ஆரம்பநிலைப் புற்றைக் கணிக்கத் தவறுவதும் இப்படியான போலிகளிடம் சிக்கித்தான்.

நாற்பதில் இச்சங்கடங்களை அணுகும் போது, சரியான நோய்க்கணிப்புதான் முதல்படி. ‘ஏன் அதிக ரத்தப்போக்கு? அதிக ரத்தப்போக்கினால் என்னுள் என்ன நடக்கிறது?’ என்பதைத் துல்லியமாய் ஒரு பெண் அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். அடுத்து தாமதிக்காமல் உரிய மருத்துவ சிகிச்சை. வெகு சொற்பமாய் சிலருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை அவசியப்படலாம். அதற்கான தேவை 100 சதவிகிதம் இருக்கும்பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதிலும் தயக்கமே காட்டக் கூடாது.

குடும்பத்திலும் சமூகத்திலும் அதிக ரத்தப்போக்குடன் சோர்ந்து நிற்கும் பெண் கூடுதலாய்ப் பந்தாடப்படுவது இன்னும் அதிகபட்ச வேதனை. கொட்டித் தீர்க்கும் ரத்தப்போக்கால், வயிற்றைப் பிழிந்ததுபோன்று வலிக்கும்போது மேஜையில் சாய்ந்து அழத்தோன்றும். ‘மணி அஞ்சரைதானே ஆகுது...ஏன் இங்க படுத்திருக்கீங்க? இந்த ஒரு ஃபைலை மட்டும் முடிச்சுக்கொடுத்துட்டு நீங்க வேணா ஓலால போயிடுங்களேன்” எனச் சொல்லிவிட்டு நகரும் அதிகாரியைப் பார்க்கும்போது ‘இவங்கள மாதிரி ஆள்களுக்கெல்லாம் ரத்தப்போக்கே வராதா’ என்று தோன்றும். வீட்டுக்குப் போனால் இப்போதெல்லாம் முறைத்துக்கொண்டே திரியும் பையனோ, துச்சமாய் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு நகர்ந்துபோகும் மகளோ இருக்கக் கூடும். 16, 18 வயதில் அந்தப் பிள்ளைகள் அலட்சியப்படுத்துவதும் சற்று முன்னர் அலுவலகத்தில் அந்த அதிகாரி அலட்சியமாய் ஆர்டர் போட்டுவிட்டுக் கடந்துபோனதும் ஒன்றாகவே தெரியும். ‘எல்லோரும் உதாசீனப்படுத்துகிறார்களே’ என்று ‘ஓ’வென அழத்தோன்றும்.

இவை எல்லாம் சேர்ந்து எரிச்சலின் உச்சத்தில் இருக்கையில், உப்பிப்பருத்த உடம்பில் கொஞ்சூண்டு ஒட்டியிருக்கும் கழுத்தில் செல்போனை செருகிக்கொண்டே படியேறும் கணவன் துளியும் புன்னகைக்காமல், மின்சார வண்டியில் இறங்கப்போகும் நபரை இடித்துக்கொண்டு ஏறும் வஸ்தாது மாதிரி, ‘தள்ளு’ எனச் சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழையும்போது ஸ்ரீஹரிகோட்டா கவுன்ட் டவுனின் கடைசிப் பத்து எண்கள் தொடங்கும்.

“நான் இங்க ஒருத்தி இருக்கிறதே கண்ணுக்குத் தெரியாதா?”

“அதான் நந்தி மாதிரி இருக்கியே... சொல்லு...”

“நான் செத்துக்கிட்டிருக்கேன்...”

“அப்படியா... மூணு தோசையும் சட்னியும் அரைச்சு வெச்சிட்டு முடிவு பண்ணேன்” என்கிற வசனத்தோடு தொடங்கும் காட்சியில் அதுவரை அமைதியாய் இருந்த அத்தனை சமையலறை சாமான்களும் சத்தம் போடும்.

கேவி அழமுடியாத அழுகையும் காட்டு விலங்கைப் பார்க்காமலேயே பயங்கொள்வதும் கைகள் வீசி ஓடாமலேயே வியர்ப்பதும் என எல்லாம் சேர்ந்து புழுங்கி நிற்கும் நம் சக மனுஷிகள் பெரும்பாலானோருக்குச் சின்ன தலைகோதலும், ‘வர்றியா ஒரு சின்ன நடை போயிட்டு வரலாம்’ என்கிற அழைப்பும் ‘ஏன் இவ்வளவு சோர்வா இருக்க, ஒரு டீ போட்டுத்தரவா?’ என்கிற கேள்வியும்தான் மருந்துகள். அதைக் கொஞ்சம் கொடுத்துதான் பாருங்களேன் ஆண்களே!

- இனியவை தொடரும்...

என்ன சாப்பிடலாம்?

1. பருமனாகவே இருந்தாலும் கொள்ளுப்பயறு வேண்டாம்.

கொள்ளுப்பயறு
கொள்ளுப்பயறு

2. கோழிக்கறி வேண்டாம்.

3. மாதுளைச்சாறும் நெல்லிச்சாறும் சிறப்பு.

4. வாழைப்பூப் பொரியல், சுண்டைக்காய் வற்றல் சுகம் தரும்.

5. பருப்புப்பொடிபோல கறிவேப்பிலைப் பொடி தூவி ஒரு பிடிச் சோறு.

6. வறுக்காத, பொரிக்காத வேகவைத்த மீன்.

மூலிகை மருந்து

துவர்ப்புச் சுவையுள்ள மூலிகைகளைப் பெரும்பாட்டின் ரத்தப்போக்கைக் குறைக்கப் பயன்படுத்துகிறது சித்த மருத்துவம்.

மூலிகை மருந்து
மூலிகை மருந்து

- ஆல், வேல், அரசு, அத்தி, பூவரசு வேர்ப் பட்டைகளைக் கசாயமிட்டுக் கொடுக்கலாம். `எப்படி, எந்த அளவில், யாருக்கெல்லாம்...’ என்கிற முடிவை கூகுளில் தேடாமல், அருகிலுள்ள அரசு மருத்துவரிடம் ஆலோசியுங்கள். இன்னும் கூர்மையாகக் கவனித்துக் கணித்து, சரியான நிரந்தரத் தீர்வை அவர் சொல்லக்கூடும்.

யோகா மற்றும் உடற்பயிற்சி

உடலுக்கும் மனதிற்கும் ஃபிட்னஸ் வேண்டிய இந்தப் பருவத்தில் யோகாவும் உடற்பயிற்சியும் மிக மிக அவசியம்.

யோகா
யோகா

குறிப்பாய் சீதளி பிராணாயாமம், சூரிய நமஸ்காரம் பயிற்சி, IRT, DRT, QRT relaxation technique-ஐ முறையாகப் பயின்ற யோகாசன ஆசிரியர்களிடம் கற்றுச் செய்வது, நாற்பதில் எரிச்சல் மனதையும் ஹார்மோன் குழப்பங்களையும் சேர்த்தே தெளிவிக்கும்.