
நலம் 18
நாற்பதுகளில் நம்மில் பலரும் எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய நோய்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு. கூடவே இப்போது புற்றுநோயும் இந்தப் பட்டியலில் இணைய ஆரம்பித்திருக்கிறது. இந்தத் தொற்றாத வாழ்வியல் நோய்க் கூட்டங்களின் பிடிக்குள் போகாதிருக்க அல்லது அந்தப் பிடி இறுகாமல் இருக்க மருத்துவம் தாண்டியும் சில அக்கறைகள் மிக அவசிய மானவை. சின்னச் சின்ன அந்த அக்கறைகள் மெல்ல மெல்ல இந்தப் பிடியைத் தளர்த்த வல்லவை.
முதலில், காலை பானத்தை எடுத்துக்கொள்வோம். காபி, தேநீரைத் தவிர இதில் வேறு தேர்வு இல்லையா? நிச்சயம் உண்டு. என்ன அவை என்பதை அறிய, அமேசான் காட்டுக்கோ, அமேசான் நிறுவனத்துக்கோதான் போக வேண்டும் என்பதில்லை. நம் அடுப்பங்கரைக்குள் சில நிமிடங்கள் கரிசனத்தோடு இயங்கினாலே போதும். பொதுவாக, அடுப்பங் கரையில் நாம் கூடுதலாகச் செலவழிக்கும் 20 நிமிடங்கள் ஆயுட்காலத்தில் 20 வருடங்களைக் கூட்டித்தரும். ‘அடுப்பங்கரைக்கா, நானா?’ எனப் பிளிறும் ஆணாதிக்கவாதிகள், நோய்க்கு வாக்கப்பட்டுக்கொள்ளுங்கள். தேநீர் சுவைக்க ஆரம்பித்ததற்கு முன்னர் அல்லது காபிக்கு அடிமைப்படுத்தப்பட்டதற்கு முன்னர், நாம் பல கஷாயங்கள் வைத்துக் குடித்து, காலை வேளையில் உற்சாகம் பெற்றுக்கொண்டிருந்தோம். அந்தக் கஷாயங்கள் எல்லாமே உற்சாகத்தோடு உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்துவந்தன. இப்போதைய கும்பகோணம் டிகிரி காபி குடிக்கும் பழக்கம் வந்து, 200 ஆண்டுகள்தான் ஆகின்றன. காபி, தேநீர்ப் பழக்கத்தால் நாம் தொலைத்த பாரம்பர்ய பானங்கள் ஏராளம்.
அப்படித் தொலைந்துபோனவற்றில் மிக முக்கியமான ஒன்று, ஆவாரைக் கஷாயம். வறண்ட மானாவாரி நிலங்களில் பொன் மஞ்சளாய்ப் பூத்துக்குலுங்கும் ஆவாரைக்கு சமீபகாலமாய்த்தான் சந்தை சற்றுப் பெரிதாய் உருவாகியுள்ளது. ‘ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ’ எனத் தமிழ் சித்தர்கள் அன்று பாடினர். தமிழ் சித்த மருத்துவ சமீபத்திய ஆய்வுகள், ‘உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரக்கூடியது மட்டுமல்ல ஆவாரை; சர்க்கரைநோயைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் ஆவாரையின் பூக்களும் இலைகளும் தண்டுகளும் உதவுகின்றன’ என்பதைக் கண்டறிந்துள்ளன. ‘ஆவாரை சமூலம்’ எனும், அதன் இலை, பூ, தண்டு, வேர் இவற்றை உலரவைத்துக் கஷாயமாக்கிச் சாப்பிடலாம். மேலும், ஆவாரையைப் பிரதானமாகக் கொண்ட ‘எழுவர் கூட்டணி மருந்தா’ன ஆவாரை, கொன்றை, நாவல், மருதம், கோரை, கடலழிஞ்சில், கோஷ்டம் - இம்மூலிகைகளின் உலர்ந்த பொடிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் கஷாயம், சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, நாள்பட்ட சர்க்கரைநோயால் சிறுநீரகத்தில் புரதம் கழியும் நிலை வராமல் தடுக்கவும் உதவும். இதைத் தமிழ் சித்தர்கள், ‘காவிரி நீரும் வற்றும் கடல் நீரும் வற்றும்தானே’ என சூசகமாகப் பாடியுள்ளனர்.

காலை எழுந்தவுடன் அல்லது 11 மணி அளவில் காபி, தேநீரைத் தேடாமல், சூடாக ஒரு கப் ஆவாரை நீரை இனி குடித்துப் பழகலாமே! நாம் ஆவாரையும் சுக்குக் கஷாயமும் குடித்துக் கொண்டிருந்த காலத்தில், சீனர்கள் மட்டும் தேநீர் குடித்துக்கொண்டிருந்தார்கள். வணிகத்துக்கு அங்கு போன இங்கிலாந்து ஆங்கிலேயன் அந்தத் தேநீரின் சுவையில் ஈர்க்கப்பட்டு, தேயிலைக்கு மாற்றாக ஈடாகத் தங்கம் கொடுத்து வாங்கிவந்த வரலாறும், அதைப் பெற அபினுக்கு அவனை அடிமைப்படுத்தி, உலகெங்கும் தேயிலையை எடுத்துவந்த வரலாறும் உண்டு. இன்று 50,000 மில்லியன் டாலர் சந்தைப் பொருள், தேநீர். இந்தியா, சீனா, இலங்கையில்தான் தேயிலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் உலகிலேயே அதிகமாகத் தேநீர் பருகுவது துருக்கி, இங்கிலாந்து, மொராக்கோ முதலிய நாடுகள்தான்.
எது கருஞ்சீரகம் என்பதில் சிலருக்குக் குழப்பம். Black Cummins என ஆங்கிலத்தில் சொல்வதால், இதற்குக் ‘கருஞ்சீரகம்’ எனப் பெயர் வைத்துவிட்டனர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீரகத்துக்கும், அதன் குடும்பத்துக்கும், கருஞ்சீரகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை
இன்று சீனர்கள் வீடுகளில் எத்தனை வகையான தேநீர் தயாரிக்கிறார்கள் தெரியுமா? தேயிலையிலேயே அதன் உற்பத்தி நிலையில் Black tea, Oolong tea, Green tea வகைகள், தேநீரில் லவங்கப்பட்டை, இஞ்சி, சாதிக்காய், ஸ்டார் அனைஸ் எனும் அன்னாசிப்பூ (அன்னாசிப்பழத்துப் பூவல்ல, நட்சத்திர வடிவில் பிரியாணியில் போடுவோமே, அந்த உலர்ந்த பூ) என அவர்கள் நாட்டில் வளரும் மூலிகைகள் பலவற்றை தினசரி ஒன்றாகத் தேநீரில் போட்டுக் குடிக்கிறார்கள். இன்று சீனர்கள் மூலமாக, மூலிகைத் தேநீர் வகைகளுக்கு உலகெங்கும் பெரும் வணிகம் வளர்ந்து வருகிறது.

தேயிலை ஆலையிலேயே, சீனர்கள் Black tea, Oolong tea, Green tea என மூன்று வகையாகத் தயாரிக்கின்றனர். அதிகம் ஆக்ஸிடேஷன் (oxidation) நடக்காததால், கிரீன் டீக்குத்தான் மருத்துவ மவுசு அதிகம். ஊலாங் தேநீரின் சுவை சீனாவில் மிகப் பிரபலம். இப்போது சீனர்கள் வாழும் நாடெங்கும் இதைப் பிரபலப்படுத்திவருகிறார்கள். இந்தத் தேயிலை உலரவைக்கப்பட்டு, சுருண்டு, அவர்கள் வணங்கி மகிழும் Black Dragon போல் இருப்பதால் இதற்கு ‘ஊலாங்’ எனப் பெயர் வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். நமக்கான சேதி என்னவென்றால், மூன்று வகைத் தேநீரையுமே தொடர்ச்சியாக அருந்துவது டைப் 2 சர்க்கரைநோய்க்கு (type 2 diabetes) நல்லது என்பதுதான்.
‘ஊலாங்கில் அப்படி ஒண்ணும் மருத்துவப் பயன் இல்லை’ என்ற ஆய்வுக்கூச்சல் ஒரு பக்கம் இருந்தாலும், இதுவரை வெளியான 519 ஆய்வுக்கட்டுரைகளை meta analysis எனும் புள்ளியியல் ஆய்வுமூலம் அலசி ஆராய்ந்து, ‘சார், டெய்லி 3 கப் டீ சாப்பிடுவது, சர்க்கரைநோய்க் கட்டுப்பாட்டில் கொஞ்சம் உதவும்’ என முடிவாய்ச் சொல்கிறார்கள். ஆனால், நம் ஊரில் டீ போடுவதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. சுவையான, சத்தான, மருத்துவக் குணம் பாழாகாத தேநீர் வேண்டுமென்றால், கொதிக்கும் நீரில் தேயிலையைப் போட்டு, 60 விநாடிகள் முதல் 2 நிமிடம் வரை மட்டும் மூடிபோட்டு, கொதிக்கவிட்டு இறக்கி, அதை வடிகட்டி இளஞ்சூட்டில் பருகுவதுதான் சிறந்தது. பால் பாயசம் மாதிரி பாலோடு சேர்த்துக் காய்ச்சுவது, அல்லது டீ டிகாக்ஷனில் பாலூற்றி ருசிப்பது எல்லாம் மணம் தரலாம், மருத்துவப் பலன் தராது.
சீனர்களுக்கு இணையாக, ஏராளமான மூலிகை பானங்கள் பருகும் பழக்கம் நம்மிடமும் நெடுங்காலமாக இருந்துவந்தது. ஆனால் 1700களுக்குப் பிறகு, நாம் அத்தனையையும் தொலைத்ததில், தொலைந்துபோயின நம் நலவாழ்வும் நல்வணிகமும். சித்த, ஆயுர்வேத மருந்துகளில் சொல்லப்பட்ட பல கஷாயங்களில் மருத்துவ குணங்களுடன், உடலுக்கு வலுவேற்றி உற்சாகமும் அளிக்கக்கூடிய மூலிகைத் தேநீர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. Functional foods அல்லது Functional beverage என இன்று அடையாளப்படுத்தப்படும் சில மூலிகைத் தேநீர்கள், உங்கள் வீட்டு அடுப்பங்கரையில் மணப்பது ஆரோக்கியம் தரும் பழக்கம்.
திங்களன்று சுக்கு - மல்லி காபி, செவ்வாயில் செம்பருத்தி - தேயிலைக் கலவையான தேநீர், புதனன்று கரிசாலை - முசுமுசுக்கைக் கஷாயம், வியாழன் இஞ்சி, எலுமிச்சை, பூண்டு, காடி, தேன் ஐந்தின் கலவையும் கொண்ட பஞ்ச ஔஷதி பானம், வெள்ளிக்கிழமை நெல்லிக்காய்த் தேநீர், சனிக்கிழமை லவங்கப்பட்டை, ஏலம், இஞ்சி போட்ட தேநீர், ஞாயிறன்று திரிகடுகம் காபி எனப்படும் சுக்கு - மிளகு - திப்பிலி - பனக்கருப்பட்டி கலந்த பானம் எனப் பருகிப்பாருங்கள். அத்தனையும் ஜீரண உறுப்புகளிலிருந்து இதயம்வரை பாதுகாக்கும் மருந்தாக அமையும்; இதில் சேரும் சிறு சிறு மணமூட்டிகளால் பல புற்றுகளைத் தடுக்கும் ஆற்றலையும் பெற முடியும். மேலே சொன்ன எவையும் ஆலையில் தயாரிக்கும் மருத்துவ ரசாயனங்கள் இல்லை. பெரும்பாலானவை அன்றாடம் நாம் ரசத்துக்கோ சாம்பாருக்கோ சேர்க்கும் விஷயங்களே. இவற்றைப் பருக அச்சம் தேவையில்லை. தொற்றாத வாழ்வியல் நோய்க்கூட்டங்களின் பிடியிலுள்ளோர் வழக்கமான டிகிரி காபி, பால் டீயிலிருந்து இப்படியான மூலிகைத் தேநீருக்கு மாறுவது நல்வாழ்வு நடைக்கு நாம் எடுத்துவைக்கும் முதல் அடி.

சமீபமாய் கருஞ்சீரகத்துக்கு நம் தமிழ் உலகில் பெரிய வரவேற்பு வந்துள்ளது. ஆனால், எது கருஞ்சீரகம் என்பதில் சிலருக்குக் குழப்பம். Black Cummins என ஆங்கிலத்தில் சொல்வதால், இதற்குக் ‘கருஞ்சீரகம்’ எனப் பெயர் வைத்துவிட்டனர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீரகத்துக்கும், அதன் குடும்பத்துக்கும், கருஞ்சீரகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சிலர், கறுப்பு நிறமாய் உள்ள காட்டுச்சீரகத்தைக் கருஞ்சீரகம் எனத் தவறாக நினைத்துப் பயன்படுத்துகின்றனர். கருஞ்சீரகம் என்பது ‘கலோஞ்சி’ எனப் பெயர் கொண்ட அரபிலும் துருக்கியிலும் வட இந்தியாவிலும் பிரபலமான மூலிகைப்பொருள். நம்மைவிட அரபு மக்கள் மிக அதிகமாகக் கருஞ்சீரகத்தைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தி வந்தனர். நமக்கு எப்படி நெல்லிக்கனியோ, அப்படி அரபுக்குக் கருஞ்சீரகம். ‘மரணத்தைத் தவிர மற்ற அனைத்தையும் நீக்கும்’ எனக் குரானில் உயர்த்திப் பேசப்பட்டுள்ளது கருஞ்சீரகம் எனும் இந்தக் கலோஞ்சி. இதுகுறித்து இப்போது நடைபெற்றுள்ள ஆய்வுகள், இது ஒரு மிகச் சிறந்த Anti inflammatory என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
கருஞ்சீரகத்தில் உள்ள Thymoquinone பலவகைப் புற்றுகளின் பாதிப்பைக் குறைப்பதில் எப்படி உதவுகிறது எனத் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அழற்சியைக் (Inflammation) குறைப்பதிலிருந்து, புற்றின் பரவலைக் குறைக்க எளிய Cytotoxic ஆகவும், புற்று வராது நம்மைக் காக்கும் உடலின் மிக முக்கியப் பணியான Apoptosis எனும், முறையான தன் பணியை முடித்த பின்னர் உடலே நடத்தும் செல் அழிவுப்பணி (Programmed cell death) வரை கருஞ்சீரகத்தின் இந்த தைமோகுய்னோன் பணியாற்றுவதை ஆராய்ந்து, வியந்து சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

இன்னும் சர்க்கரைநோய், நுரையீரல் நோய்களுக்கும் இதன் பயன் பெரிதினும் பெரிது என்கின்றன பாரம்பர்ய மருத்துவங்களும் நவீன மருத்துவ ஆய்வுகளும். இன்னும் சில ஆண்டுகளில் இதிலிருந்து நுண்ணிய மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து மில்லியன் டாலர் வணிகம் வரத்தான் போகின்றது. நாம் தைமோ குய்னோனைப் பிரித்தெடுத்து சாம்பார், ரசத்தில் ஊற்றிச் சாப்பிட வேண்டாம். 2 - 3 கிராம் கருஞ்சீரகப்பொடியை, அதன் எண்ணெயை உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஓர் ஆலோசனை பெற்றுவிட்டுச் சாப்பிடலாம்; அதில் எந்தப் பக்கவிளைவும் வரப்போவதில்லை. சிலருக்கு அலர்ஜி எனும் ஒவ்வாமை சருமத்தில் ஏற்படலாம்; வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம் என ஆய்வுகள் சொல்வதால், இப்பிரச்னைகள் வரக்கூடியவர்களோ, வந்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
‘சார்! யூடியூபில பார்த்தேன்... கருஞ்சீரகம் நல்லதாமே! என் பையனுக்கு ஒண்ணரை வயசு ஆகுது. தினம் கருஞ்சீரகம் கொடுக்கலாமா... இப்பவே கொடுத்துவந்தா, பின்னாடி இந்த இன்னா நாற்பதெல்லாம் படிக்க வேண்டி வராதில்ல’ என ஒரு முன்ஜாக்கிரதை முத்தம்மா தொலைபேசியில் பேசினார். இதுதான் இன்றைய சவாலான பிரச்னை. ஒரு பொருள் நல்லதென அறிய வந்தால், அது உங்கள் உடல்நிலைக்கு நல்லதா, உங்கள் வயதுக்கு ஏற்றதா, நீங்கள் சாப்பிடும் பிற மருந்துகளோடு பொருந்தி வேலை செய்யுமா, எந்த அளவு சாப்பிடலாம், எவ்வளவு காலம் சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம்... இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் பெற வேண்டியது அவசியம். அதற்கு, சித்த, ஆயுர்வேதம், யுனானி என மரபு மருத்துவங்களை முறையாய்ப் படித்த, அனுபவமிக்க, அறத்தோடிருக்கும் மருத்துவர்களை ஆலோசித்து, அவர் பரிந்துரைக்கும் ஆலோசனைப்படி சாப்பிடுங்கள். ‘எல்லாத்திலும் 100 கிராம் வாங்கி ஒரு கலக்கு கலக்கி’ என ஆரம்பிப்பது பிரச்னையில் போய் முடியலாம்.
ஒடியல், புழுக்கொடியல் மாவு என இலங்கையில் அழகாய்க் கதைக்கப்படும் பனங்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் மாவு, சர்க்கரை நோயில் பயனாகும் கிழங்கு மாவு. வழக்கமாய் பிற கிழங்குகள் எல்லாமே அதன் மாவுச்சத்து காரணமாக இனிப்பு நோய்க்குப் பயனாகாதபோது, பனங்கிழங்கு அதிலுள்ள அதிகபட்ச நார்த் தன்மையால் சற்று லோ கிளைசெமிக் தன்மையைப் பெறுகிறது. ஆதலால் அவ்வப்போது கொஞ்சமாக இந்தப் பனங் கிழங்கைச் சாப்பிடலாம். நிறைய சாப்பிட்டால் செரிமானம் சிரமமாகும். இந்த மாவில் ஒடியல் புட்டு, அதில் மீன் சேர்த்துச் செய்யும் நான் வெஜ் மெனு, மரக்கறியாய் ஒடியல் புட்டு எனப் பல ரெசிப்பிகளை வைத்துள்ளார்கள் நம் ஈழச் சகோதரிகள்.
தொற்றா வாழ்வியல் நோய்களைப் பொறுத்த மட்டில், மருந்துகளைத் தாண்டிய கரிசனங்கள் மட்டுமே நோயிலிருந்து முழுமையாய் ஒருவரை விலக்கிவைக்கின்றது. உடற்பயிற்சியும், நடையும், யோகப்பயிற்சியும், கூடவே மூலிகைத் தேநீர் போன்ற சின்னச் சின்ன உணவு அக்கறைகளும் தினசரி அத்தியாவசியத் தேவையாகிவிட்ட நாள்களில் நாம் இருக்கிறோம்.
கருஞ்சீரகத்தை எப்படிச் சாப்பிடுவது?
கஷாயமாக்கிச் சாப்பிடுவதில் அவ்வளவாகப் பயனிருக்காது. அதில் உள்ள தைனோகுய்னோன் சத்து, ஒரு கீட்டோன் வகை வேதிப்பொருள். முழுமையாகக் கருஞ்சீரகத்தைப் பொடித்துச் சாப்பிடும்போது, அது வயிற்றுக்குள் போன பின்னர் கணைய, ஈரல் நொதிகளால் தேவை யான அளவில் பிரித்தெடுத்துக் கொள்ளப்படும்; தண்ணீர் சேர்த்துக் கஷாயமாகக் காய்ச்சினால், மிகக் குறைந்த அளவிலேயே அந்தச் சத்து கிடைக்கும் என்கின்றன தற்போதைய ஆய்வுகள். உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனையின் கீழ், 2 - 3 கிராம் அளவு பொடி செய்து, வெந்தயத்துடனோ வேறு உணவுடனோ அப்படியே சாப்பிடுவது சிறப்பான மருத்துவப் பயனளிக்கலாம்.