சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் 19

25 வருடங்க ளுக்கு முன் கோடிக் கணக்கில் விற்றுத் தீர்த்த ஒரு புத்தகம், ‘Men Are from Mars, Women Are from Venus.’ அதில் ஒரு கட்டுரை, கணவன் மனைவிக்கு இடையிலான உரையாடல் குறித்தது. ‘ரெண்டு பேரும் வேற வேற கிரகத்தில் இருந்து வந்த மாதிரி இருக்கு; எப்படிப்பா உரசல் உடைச்சலில்லாம வாழ முடியும்?’ என்பதைச் சற்று நகைச்சுவை தூக்கலாக எழுதியிருப்பார் ஆசிரியர். அந்தப் புத்தகத்துக்கு உலகெங்கும் ஏகப்பட்ட வரவேற்பு. என்ன காரணம் என்றால், அநேகமாக மதுரவாயலிலிருந்து மான்செஸ்டர் வரை, உலகின் எல்லா மூலைகளிலுமே அதே ‘உர்ர்ர் உரையாடல் உற்சவம்’ நடந்ததால்தான்.

நாற்பது வயதில், பெரும்பாலான வீடுகளில் எரிச்சலும் கோபமும் எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம், இந்த ‘உர்ர்ர் உரையாடல் உற்சவம்’ பாரபட்சமே இல்லாமல் எல்லாத் தருணங்களிலும் நடைபெறுவதால்தான்.

“காலையில் என்ன பிரேக்ஃபாஸ்ட்?”

“எப்பவும் எது இருக்குமோ அதுதான்.”

“நான் சீக்கிரம் போகணும்.”

“என்னைக்கு நீங்க நிதானமாப் போனீங்க?”

“நிதானமாப் போறேன்னு நீ அப்படியே பனீர் பட்டர் மசாலா பண்ணிடுவியா என்ன? புளிச்ச மாவு தோசைய விட்டா உனக்கு வேற என்ன தெரியும்...”

இன்னா நாற்பது இனியவை நாற்பது

“அப்ப ஹால்டிராம் வீட்டுல பொண்ணு கட்டியிருக்க வேண்டியதுதானே? அவ தினம் ஆலு பரோட்டாவா செஞ்சு போட்டிருப்பா.”

“கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்டி. எவன் என் பேச்சைக் அன்னைக்குக் கேட்டான்?”

“இப்ப என்ன கெட்டுப்போச்சு... நாலு வீட்ல பாத்திரம் தேய்ச்சு, இல்லாட்டி ரெண்டு வீட்ல ட்யூசன் எடுத்து நானும் என் பிள்ளையும் வாழ்ந்துக்குறோம். நீங்க போபாலுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போய் ஆலியா பட்டும் ஆலு பரோட்டாவும் கிடைக்குமான்னு ட்ரை பண்ணுங்க.”

அப்புறம், மூக்கைச் சிந்துதல், பாத்திரம் உடைத்தல், தலையணையை கோல்கீப்பர் ஸ்டைலில் உதைத்தல் (நிச்சயமாக கணுக்கால் முறியாது, வலிக்காது என்ற கியாரன்ட்டியுடன்), பல் கடித்தல், ஆளுக்கொரு பக்கமாய்க் குப்புறப்படுத்தல், இரவெல்லாம் மாமியார், மாமனார் முதல் ஓர்ப்படியாள்வரை, கணவர் குடும்பத்தின் மொத்த ஆதார் ஆதாரங்களையும் திட்டித் தீர்த்தல் என அத்தனையும் செய்து முடிக்கையில், இரவு நாசமாய்ப் போயிருக்கும். ‘எங்கே தீப் பற்றியது?’ என நன்கு யோசித்துப் பார்த்தால், மேலே நடந்த உரையாடலில், உரையாடலின் தொடக்கத்தில் ஆரம்பிக்கும் ‘சாவனிச(chauvinism) அதிகாரத் தோரணை’யில் எழும் கேள்வியில்தான், வரிசை வரிசையாய் பதில்களும் கேள்வியும் பற்றி எரிய ஆரம்பித்திருக்கும். தன் அவசரத்தில் பிறருக்கு சங்கடம் வந்துவிட வேண்டாம் எனக் கொஞ்சம் கரிசனமாய், ‘நாளைக்குக் காலையில எதுவும் அவசரப்பட வேணாம்ப்பா. நான் வெளிய சாப்பிட்டுக்கிறேன். 7 மணிக்கெல்லாம் கிளம்பணும். பிள்ளைங்களைக் கிளப்புற நேரத்தில, நீ சிரமப்பட வேணாம்’ என்று கணவன் சொல்லியிருந்தால், ஒருவேளை ஆலுபரோட்டாவும் கிடைத்திருக்கலாம், ஆலியா பட்டாக அம்மணியும் செல்லமாகச் சிணுங்கியிருக்கலாம்.

இந்தக் ‘குதர்க்க’ உரையாடலை, இப்போதெல்லாம் ஆண் மட்டும் பிரயோகிப்பது இல்லை. வாய்ப்பு கிடைக்கையில் பெண்களும் தவறாமல் எடுத்து எறிகிறார்கள். அதற்கெனத் தொலைக்காட்சியில் மதியமிருந்து நடுநிசிவரை சீரியல்கள் மூலம் ஸ்பெஷல் கோச்சிங் க்ளாஸ் நடக்கின்றது. எப்போதும் குரூரப் பார்வையுடனும், பதறவைக்கும் இசைப் பின்னணியுடனும், குதர்க்க வசனங்களை அள்ளித் தெளித்து, பார்ப்பவர்களை மனப்பாடம் செய்யவைக்க, வருடத்தின் 365 நாள்களும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. ‘செய்தியிலும் சினிமாவிலும், சில வீடுகளிலும் நடக்காததையா நாங்கள் காட்டுகிறோம்?’ வாரிக் குதித்து வருவோருக்கான பதில் இதுதான். குற்றங்களை, குரோதங்களை, கேசரித்தூள் தூவி, வாழை இலையில் சுடச்சுடப் பரிமாறும் பழக்கம், தமிழ்ச் சமூகத்திற்கும் இந்திய மரபிற்கும் வெகுகால வழக்கமான ஒன்று அல்ல.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இப்போதெல்லாம் பாசமும் குழைவும் கொண்ட ‘ஏங்க’, ‘ஏம்மா’ போன்ற சொற்கள் கணவன் மனைவியிடையே வழக்கொழிந்தே போய்விட்டன. கண் பார்த்து பதிலளிப்பதும் மறந்தே போயிற்று. ‘அதான் உனக்கான பதில் வந்திருச்சில்ல... அதுக்கு உன் மூஞ்சைப் பார்த்துப் பேசணுமா?’ எனும் சாவனிச அதிகார உறுமல் இன்றும் தொடர்கின்றது. வண்டிச்சக்கரம் சுளுவாய் ஓட, ஷாக் அப்ஸார்பரும், கிரீஸ் தடவுதலும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு வாழ்க்கை நெகிழ்வாய் ஓட வார்த்தைகளில் கிரீஸ் தடவி, மூளையில் ஷாக் அப்ஸார்பரை சரியாய் வைத்திருப்பதும் முக்கியம். உரையாடலின் கேள்வி பதிலில் அறமும் அன்பும் இருக்க வேண்டும். இணையைச் சுடும் உண்மையோ, அவரைத் தலைகுனியவைக்கும் புத்திசாலித்தனமோ அவசியமே இல்லை. புத்திசாலித்தனமான பதிலை பரீட்சையில் எழுதலாம். நெகிழ்வான பதிலைத்தான் இல்லறக் கேள்விக்கு அளிக்க வேண்டும். அது சில நேரங்களில் முட்டாள்தனமான பதிலாகக்கூட இருக்கலாம்; இருக்கட்டும்.

“ஹேய், இந்த டிஷர்ட் எனக்கு எப்படி இருக்கு?”

“ஷாருக்கான் மாதிரி இருக்குங்க! சரி, காபி பத்தி ஒண்ணும் சொல்லலையே நீங்க..?”

“சே... உன் கையால ஒரு கப் காபி சாப்பிட்டுருந்தார்னா, ‘காஃபி டே’ சித்தார்த்தா அந்த முடிவை எடுத்திருப்பாரா?! அமர்க்களம்ப்பா! இன்னொரு பாதி கப்..?”

மேலே சொன்ன இரண்டு பதில்களும் ஒருவேளை 100% பொய்யாகக்கூட இருக்கலாம். எட்டாம் மாத கர்ப்பகாலத்தில் தான் போட்ட டைட்டான நைட்டி மாதிரிகூட, அந்த டீ-ஷர்ட் லுக் அவள் மனசுக்குப் பட்டிருக்கலாம். காபித்தூளும் சூடும் போதாமல், போட்டுக்கொடுத்த கடமைக்காக அவன் அந்தக் காபியைக் குடித்துக்கொண்டிருந்திருக்கலாம் என்றாலும், அந்த அழகான பொய்கள் இருவருக்கிடையே ஷாருக்கானின் குசும்புக் காதலையும், ‘காஃபி டே’யின் ‘A lot can happen over a coffee’ எனும் கவிதைத் தருணத்தையும் நிகழ்த்தியிருக்கும்.

“நீ நீங்கிடும் நேரம்

காற்றும் பெரும் பாரம்

உன் கைதொடும் நேரம்

தீ மீதிலும் ஈரம்” எனக் கவிஞர் விவேகா மாதிரி நமக்கு எழுதத் தெரியுமா? அல்லது அதை உயிரை உருக்கி சித் ஸ்ரீராம் குரலில்தான் பாட முடியுமா? குறைந்தபட்சம், சற்று மென்மையான குரலால், அதன் குழைவால் நீவிவிடும் சம்பாஷணைகள் மட்டும்தான் வாழ்வின் மிகப்பெரிய வலி நீக்கும் மருந்து. அலுவல் முடிந்து களைத்து வரும் மனைவியிடம், ‘ஏன் எதையோ யோசிச்சிக்கிட்டு இருக்க? என்னவா வேணாலும் இருக்கட்டும். நான் போட்ட மசாலா டீ... இந்தா ஒரு கப் சாப்பிடேன்’ என்று சொல்லும் கணவரின் வார்த்தைகளில், ‘வேலையை விட்டுடலாமா’ என்று யோசிக்கும் அளவுக்கு அலுவலகத்தில் இருந்த பிரச்னையைக் கையாளும் பலம் அவளுக்கு வந்து சேரும்.

கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் அன்றாட உரையாடல்கள் வார்த்தைகளால் மட்டும் நடப்பவை அல்ல. மூளையும் மனமும் சேர்ந்து நடத்தும் உற்சவம் அது. குரலின் கசிவும், கனிவும், கேட்பவர் உள்ளம் புரிந்து உயர்த்தும், தாழ்த்தும் ஒலியும்தான் அந்த உரையாடலின் அடிநாதங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உரையாடலில் முகமொழி மிக முக்கியமான ஒன்று. சில கேள்விகளுக்கு, சரியான முகமொழியுடன் கூடிய மௌனம் மிகச்சிறந்த பதில். சில கேள்விகளுக்கு, அலட்சியமான மௌனமாகத் தரும் பதில், குரூரத்தின் உச்சம். மௌனம் கரிசனத்திலா, குரூரத்திலா என்பது, பதிலுக்குக் காத்திருப்பவருக்கு அப்பட்டமாகத் தெரிந்துவிடும். வருத்தத்தாலும் வலியாலும் காட்டும் மௌனத்தில், அதற்கான கேள்விகளோ அல்லது பதில்களோ அடுத்த கணத்தில் சொற்களாகத் தொடராமல், தலைகோதலும் அரவணைப்புமாய்க் கிடைத்துவிடும். அலட்சியப்படுத்தி மௌனிப்பது, ஆதங்கத்தையும் எரிச்சலையும் உருப்பெறவைத்து ஆத்திரமாய் வெடிக்கவைக்கும்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

உரையாடலின் அழகியலே, அடுத்தவர் பேச்சைப் பொறுமையாகக் கேட்டு, சில விநாடிகள் அதை ஆழ யோசித்து, பின் அதற்கான பதிலை, ‘கனியிருப்ப காய்கவர்ந்தற்று’ எனும் வள்ளுவன் கூற்றை மறந்திடாமல், கனிவான சொற்களால் கட்டமைப்பதுதான். ‘என் பதில்தான் சரியானது’ என்ற இறுமாப்பை இறுக்கமாய் உள்ளே வைத்துக்கொண்டு, துணை சொல்லி முடிக்கும் முன்னரே பதிலைப் படுவேகமாக வாந்தியெடுப்பதும், அல்லது கேள்வி முடியும் முன்னரே கேள்வியைவிட உரத்த குரலில் பதிலைச் சொல்வதும் நன்றன்று.

80களின் ராஜா பாடல்களில், 7 ட்ராக் இசையில், காதலனின் வரிகள் மேல் காதலியின் வரிகள் ‘தீந்தன தீந்தன’ என உட்கார்ந்து ஒரே நேரத்தில் இசைப்பதைக் கேட்டு சுகம் பெறாத நாள்கள் கிடையாது. சந்தங்கள் தழுவும் அந்த இசை, காதலின் முத்தங்களைப் போன்றது. ஆனால் அடுத்தவர் பேசிக்கொண்டிருக்கையில், அதைச் சற்றும் மனதில் உள்வாங்காமல், அவர் சொற்கள் மேலேயே தன் கருத்தைச் சத்தமாக உரைப்பது உச்சபட்ச ஈகோவின் இலக்கணங்கள்.

அன்பின் உரையாடல்கள் ஒருபக்கம் குறைந்துபோவது மட்டுமல்லாமல், இன்னொருபக்கம் அறிவின் உரையாடல், நடுவயதில் முற்றிலுமாக அகன்றுபோவதும் வாழ்வு கரடுமுரடாவதற்கான முக்கிய காரணம். திருமணமான புதிதில், தனது அலுவலகத்தின் சின்னச் சின்ன நகர்வுகளையும் தன் இணையிடம் கண்களை விரித்து, ‘உனக்குத் தெரியுமா? இன்னைக்கு ஆபீஸ்ல இன்டர்நெட் கனெக்‌ஷன் வந்துச்சு. எனக்குக்கூட ஹாட்மெயில்ல ஒரு ஈமெயில் முகவரி கொடுத்துட்டாங்க’ என உரையாடியவர்கள் பலர். இன்று 50 வயதுகளில் இருக்கும் பலருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். அதே தம்பதி இப்போது 25 ஆண்டுகள் கழித்து, ‘ ‘பிராண்ட் ஈக்விட்டி’ பத்தி உனக்கென்ன தெரியும்? சும்மா தொணதொணன்னு...’ என விலகுவதும், ‘என் அறிவு வேற லெவல்; உங்கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண முடியாது’ என நடந்துகொள்வதும் இறுக்கங்களை ஏற்படுத்தும் நோய்க்கிருமி. அதற்காக, ஆபீஸ் எக்ஸல் ஷீட்டை விரித்து லாப, நஷ்ட சதவிகிதத்தை அனலைஸ் பண்ணும் உரையாடல் சத்தியமாய் அவசியமில்லை. அலுவலகத்தின் சில அழகான கணங்களை, தோற்றுப்போய் திருதிருவென விழித்த சில நொடிகளை, எள்ளலோடும் அலங்கரித்தும் சொல்லி இளைப்பாறும் உரையாடல் ஏன் இல்லாமலே போயிற்று?

அடுத்த தலைமுறை ஆப்பிளோடும் ஆண்டிராய்டோடும் மட்டுமே, முகமொழி இல்லாமல் தட்டையாக, ஆனால் படுவேகமாக உரையாடுவது இன்னும் பயமுறுத்துகிறது. யாருமில்லா உலகில் ஒற்றை உயிரியாய் நகர்ந்து செல்ல அவனைத் தயாரிக்கிறோமோ என பயமாக இருக்கிறது.

சில விருந்தினர் வீடுகளுக்குச் செல்கையில், நம் வரவைச் சற்றும் அங்கீகரிக்காமல், இன்றைய நாகரிகப் பிள்ளைகள் காதில் ஒயரைத் தொங்க விட்டுக்கொண்டு, வீட்டின் மூலையில் உட்கார்ந்துகொண்டோ, குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டோ இருப்பது, படு அநாகரிகமாகப்படுகிறது. ‘ஹி ஹி... அவன் கொஞ்சம் அமைதி... யார்கிட்டயும் அவ்வளவு லேசா பேச மாட்டான்’ என அவன் அப்பா சொன்னால், ‘இன்ட்ரோவெர்ட்டாக(introvert) இருக்கப்போறான்; உளவியல் நோய் வந்துடாம பார்த்துக்கோங்க’ என ஒரு வார்த்தை எச்சரித்துவிட்டு வாருங்கள். உரையாடலின் கடுஞ்சொற்களாலும், அவசியமற்ற மௌனத்தாலும் இன்று பெருகும் உளவியல் நோய்களும், திருமண முறிவுகளும் ஏராளம். ‘நீட்’, ‘கேட்’ கோச்சிங் கொடுப்பது இருக்கட்டும், சராசரி உரையாடலுக்கு முதலில் பிள்ளைகளுக்கு வீட்டில் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். கலகலவெனச் சிரித்தும் மகிழ்ந்தும் உரையாடும் நபர்கள், வாழ்வில் எதிர்வரும் பெரும் சிக்கல்களை அழகாய் எதிர்கொள்வர்; ஆணித்தரமான முடிவை எடுத்து நகர்வர். வார்த்தைகளை அழகாய், அன்பாய் பிரயோகிக்கத் தெரியாதவரும், குதர்க்க மௌனத்தில் குதூகலம் பெற்று வளர்ந்தவரும் சவால்களில் அதிகம் சங்கடப்படுவர்.

அத்தனை வாழ்வியல் நோய்களைத் தடுக்கவும் ஆற்றுப்படுத்தவும், அழகிய உறவுகளுக்கும் அரவணைக்கும் உரையாடலுக்குமான மிகப்பெரிய தேவை இன்று மிக அதிகமாக உள்ளது. அன்று இயல்பாய் கூட்டுக் குடும்பங்களில் கிடைத்த இதற்கான பயிற்சி, இன்று கிடைப்பதற்குக் கொஞ்சம் கூடுதல் மெனக்கெட வேண்டியது உள்ளது. தினம் சாப்பிட வேண்டிய கீரை, மாதுளை மாதிரி, தினம் கண் பார்த்து, காதுகொடுத்து, அன்பான வார்த்தைகளால் அளவளாவதும்கூட அவசியம்தான்.

மெல்லப் பேசுங்கள், தினமும்!

- இனியவை தொடரும்...