
நலம் 11

‘ஹத்திய குசுக்காவா ஸ்லாலுவத்து சின்த்தாவா...’ என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரியாதுதான். ஆனால், ஜென்சி அந்த வரிகளைப் பாட, இளையராஜா இசைக்கும்போது லிட்டர் லிட்டராக மூளையில் ‘எண்டோர்பின்’ சுரப்பது உண்மை. நாற்பதுகளில் நோய்க்காப்புக்கு இந்த ‘எண்டோர்பின்’கள் ரொம்பவே அவசியம். ‘மெட்பார்மின்’ மாத்திரையையோ, ஆவாரைக் கசாயத்தையோ காலை, மாலை இரண்டுவேளை சாப்பிடுகிற மாதிரி, இளையராஜா பாடலை சாப்பாட்டுக்கு முன்னாலும், ஜென்சி பாடலை சாப்பாட்டுக்குப் பிறகும் கேட்கவேண்டும் என டாக்டர்கள் ‘பிரிஸ்கிரிப்ஷன்’ எழுதிக்கொடுத்தால்கூட ‘எச்பிஏ1சி’ எகிறாது என்று பலமுறை எனக்குத் தோன்றும். நாற்பது என்றால், வெறும் நோயும் வலியும் விரக்தியும்தானா... நிச்சயம் இல்லை. வாழ்வின் கொண்டாட்டங்களும் நாற்பதுகளில்தான் அதிகம் வாய்க்கும். நாம்தான் கொண்டாட மறக்கின் றோம். நம் வெளிநாட்டுச் சொந்தங்கள் நம்மைவிட அதில் ஒருபடி நிச்சயம் மேல். அதுவும் புலம்பெயர்ந்த மக்களிடம் அது அதிகமாகத்தான் இருக்கிறது.
ஒவ்வொருமுறை வெளிநாட்டுப் பயணத்தின்போதும், அங்கு சந்திக்கும் நாற்பதுகளை ஒட்டிய தமிழ்ச் சமூக முகங்களே நினைவில் நிற்கும். பிரசவம் பார்க்கவோ அல்லது பேரன் பேத்தியை டே-கேரில் பார்க்கவோ வந்திருக்கும் மந்தைவெளி, மன்னார்குடி மக்களைத்தாண்டி, அங்குள்ள விழாக்களில் அதிகம் கண்ணில்படுவது 35-40 வயதை ஒட்டியவர்களே. அப்படி நான் இந்தமுறை வியந்து பார்த்தது, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சிகாகோ நகரில் நடத்திய மாபெரும் திருவிழாவில், பட்டையைக் கிளப்பி ஆட்டம்போட்ட பறை இசைக்குழு.
விசாரித்ததில், அது செயின்ட் லூயிஸ் மாநில பறை இசைக்குழு என்பது தெரியவந்தது. ‘இழவுக்கு அடிக்கும் விஷயமில்லை இது... உழவுக்கும் உடலுக்குமான கொண்டாட்ட ஒலி’ என்பதை உரக்கச் சொல்லி, அமெரிக்காவின் மூலை முடுக்கெல்லாம் சென்று பறை இசைக்கின்றனர் அந்தக் குழுவினர்.

வாரம் முழுக்க ஏதோவொரு மென்பொருள் நிறுவனத்தில், Artificial intelligence அல்லது
Machine language code எழுதிக்கொண்டிருக்கும் இவர்கள், சனி, ஞாயிறு ஆனால் பறையைத் தோளில் மாட்டிக்கொள்கின்றனர். அட்டகாசமாக நடனமாடிக்கொண்டே பறை இசைக்கும் இந்தக் குழுவில் அநேகம் பேர் நாற்பதுகள்தாம்.
உறுதியாகவும் உற்சாக மாகவும் ஆடும் அந்தக் குழுவின் தலைவர் பொற்செழியனைப் பார்த்து, கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்தேன். 2003-ல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பறை இசையைக் கற்றுத் தேர்ந்திருக் கிறார்கள். ரோஷிணி எனும் சிறுமிதான் அவர்களின் குருவாம். அந்தச் சிறுமி தன் பத்தாம் வகுப்பு விடுமுறையில் அமெரிக்காவில் இருந்து திண்டுக்கல் வந்து பாரம்பர்யப் பறை இசைக் குழுவிடம் பயிற்சிபெற்றுச் சென்றிருக்கிறார். அவரிடமிருந்து இந்த ஒட்டுமொத்தக் குழுவும் பறை இசையைப் பயின்றிருக்கிறது. இப்போது, அவர்களுக்கே உரிய அமெரிக்க ஸ்டைலில் 32 வகுப்புகளைக் கொண்ட ஆன்லைன் கோர்ஸ், பறைக்கென ஆரம்பித்து உலகெங்கும் இந்த இசையை முறையாகக் கற்க தளம் அமைத்துள்ளனர். தோலினாலும் மரக்கட்டையினாலும் செய்யப்படும் இந்தப் பறையின் இசையை ‘ஆர்கானிக் இசையாக்கும்’ என்கிறார் பொற்செழியன். ‘பாடிக்கொண்டே ஆடுவது, நேர்த்தியாக உடலை அசைப்பது என இந்த நடனம் ஒரு மிகப்பெரிய உடற்பயிற்சி;
சுகர் - பி.பி-யெல்லாம்கூடக் கட்டுப்பாட்டில் வருது சார்’ என அவ்வளவு உற்சாகமாகச் சொன்னார்.
அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் தேசிய கீதமாக இப்போது பறை ஒலிக்கிறது. அநேகமாக, எல்லா ஊரிலும் ஆண்களும் பெண்களும் இதை அழகாக இசைத்து நடனமாடத் தொடங்கியுள்ளனர். தமிழனாக இதைப் பார்க்கையில் எனக்கும் கொண்டாட்டம் பீறிக் கொண்டு வந்தது. மருத்துவனாக இதைப் பார்க்கையில், இந்த இசை தரும் மகிழ்ச்சியில் நிச்சயம் மன அழுத்தம் குறையும். உற்சாகம் பீறிடுகையில் நோய்க்காப்புகூட நிச்சயம் பெருகும் எனத் தோன்றுகிறது. நாற்பதுகளுக்குத் தேவையான Cardio respiratory fitness மற்றும் Muscle and joint fitness சத்தியமாக, பறை பழகினால் கிடைக்கும்.

சிகாகோ நோக்கி விமானத்தில் செல்லும்போது, உலகின் தலைசிறந்த பியானோ இசைக்கலைஞனாகத் தேர்வுபெற்ற நம் தமிழ்ப்பிள்ளை லிடியன் நாதஸ்வரம் (பெயரே இசைக்கிறது) கூடவந்தான். அடர்த்தியான முடியுடன் குட்டி ரஹ்மானாகத் தோற்றம்கொண்ட அவன் இன்னும் சில வருடங்களில், நம் ஊருக்கு எத்தனை ஆஸ்கர்களையும் கிராமிகளையும் அள்ளிவரப்போகிறானோ என யோசித்துக்கொண்டே தரையிறங்கினேன். இங்கே அமெரிக்கப் பிள்ளைகள் பறையில் அதிர வைத்ததில், உண்மையிலேயே எனக்குப் பத்துவயது குறைந்துபோனது. போதாக்குறைக்கு விழாவில் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் செந்தில் - ராஜலட்சுமியின் பாட்டுக்கு 3000 பேரும் போட்ட ஆட்டத்தில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் போனஸாக ஐந்தாண்டு ஆயுள் கூடியிருக்கும். நம் மரபிசையோ, மேற்கத்திய இசையோ, கர்நாடக சங்கீதமோ ஏதோ ஒன்றை இசைக்கவோ, ரசிக்கவோ நாற்பதுகள் நிச்சயம் நேரம் ஒதுக்கவேண்டும்.

‘சங்கீத ஜாதி முல்லை’ என எஸ்.பி.பி-யின் குரலையோ, ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ என சுசித்ராவின் குரலையோ அதிகாலைப்பொழுதில் கேட்டுப்பார்த்துவிட்டு சுகரோ, பி.பியோ பாருங்கள். அவை கொஞ்சம் வெட்கித் தலைகுனியத்தான் செய்யும்.

காலங்காலமாக இசையும் நடனமும் உழைக்கும் மக்களின் வாழ்வோடு கலந்திருக்கின்றன. களை எடுக்கும்போது குலவை பாடுவதும், மீன் வலை விரிக்கும்போது ஐலசா போடுவதும் போல, அலுவலகத்தில் அமர்ந்து கூவமுடியாதுதான். ஆனால், வீட்டில் ஏதாவது ஒரு பொழுதில், நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்து எள்ளலாக நகைத்துச் சிரிக்கச் சிரிக்க சின்னதாக நாட்டியமாடுவதும், குழுவாக மாதமொருமுறை எங்காவது சுற்றுலாச் சென்று நடனமாடுவதும் நிச்சயம் உடலுக்கு உறுதிதரும். 30-40 வருடங்களுக்கு முன்பு, ஞாயிறு மதியம் மர்பி ரேடியோவில் கரகரவென வரும் நேயர் விருப்பத்தில் ‘இளமை இதோ இதோ’ பாடலைக் கேட்டபடி கமலை மனதில் நினைத்துக்கொண்டு, கையில் சொடுக்குப் போட்டுக்கொண்டு, தன் பருத்த இடுப்பை ஆட்டி ஆட்டி மகிழ்ந்த, என் நாற்பது வயது அப்பாவைப் போல நிச்சயம் நிறைய பேருக்கு அப்பாக்கள் இருந்திருக்கலாம். ஆனால் அம்மாக்கள் ஆடினால், தெய்வக் குற்றமாகிவிடும். அதிகபட்சம் குலதெய்வக்கோயிலில் சாமி வந்தால் மட்டுமே அவர்கள் ஆடுவதற்கு அப்போது அனுமதிக்கப்பட்டார்கள். இப்போதேனும் அந்த ஆணாதிக்கத்தை விட்டு, எதிர்பாராத பொழுதில் தோள்பிடித்து உங்கள் இணையோடு நடனமாட முயற்சி செய்யுங்கள்.
இதிலும் இங்கிருந்து புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் ஒருபடி மேல். திருமண விழாக்களில், நட்புச் சுற்றுலாக்களில் அவர்கள் நடனமாடி மகிழ்வதைப் பார்க்கையில், நிச்சயம் நம் ஊரில் இதை ஊக்குவிக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. பல நேரங்களில் கடும் மன அழுத்தத்தில் இருக்கும் நம் மகளிருக்கு உற்சாகத்துடன் கூடிய இந்த நடனம் ஊக்க மருந்தாகத்தான் அமையும்.

வேலைப்பளுவும் குடும்பப் பொறுப்புகளும் நெருக்கும் வயதுதான் நாற்பது. ஆனாலும் இதில் மெல்லிய கணங்களைத் தொலைப்பதுதான் இன்று நோய் நெருக்கடிகளையும் உளவியல் கசப்புகளையும் நிறையபேருக்குத் தருகிறது. ‘கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவா முடியும்? ஒரு காபியாவது சாப்பிடலாம் வா’ என்ற தேவதேவன் கவிதையைப் படித்துக் கிளர்ச்சியுறாத முன்னாள் காதலர்கள் உலகில் இருக்க முடியாது. முன்னாள் காதலியை யதேச்சையாகப் பார்த்தால்கூட `96’ சேதுபதியாகவே இருப்போம். அதுதான் நல்லது. ஆனால், கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கக்கூடிய மனைவியுடன், திடீர் காபி சாப்பிடப் போவதும், அதற்குப் பையனின் பைக்கையோ மகளின் ஸ்கூட்டியையோ இரவல் வாங்குவதும் நிச்சயம் தேவதேவன் எழுதாத கவிதையே. நீங்கள் அந்தக் கவிதையை மட்டும் எழுதுங்கள். பின்னணிக்கு ராஜா இசை கேட்கும்; நடனம் கால்களில் பிறக்கும்!
- இனியவை தொடரும்...
சும்பா நடனம் - இன்று நகர்ப்புறப் பெண்களிடையே இந்தச் சொல் மிகவும் பிரபலம். எடை குறைக்க மகிழ்வான இசை நடனத்துடன்கூடிய இந்த உடற்பயிற்சி, கொலம்பியாவிலிருந்து வந்தது. உலகெங்கும் இப்போது 180 நாடுகளில் இது மிகப் பிரபலம். பெல்லி, சல்சா போன்ற பெண் நடனங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதால், 95 சதவிகிதம் இது பெண்களுக்கானது.

கிட்டத்தட்ட 300 - 900 கலோரி ஆற்றல் வரை ஒரு மணி நேரத்தில் எரிக்கக்கூடிய ஆட்டம் இது. எடையைக் குறைப்பது முதல் பெண்களின் உள்ளுறுப்புகளுக்கு நலம் தருவதுவரை, இந்தப் பயிற்சியால் உடல் குறையும்; மனம் விரியும்..!