சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இன்னா நாற்பது இனியவை நாற்பது
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் 13

நெடுந்தூர விமானப்பயணங்களில் ஜன்னலோர இருக்கையைக் கேட்டு வாங்கினாலும், இறங்கும்போதோ ஏறும்போதோ தவிர, பிற நேரங்களில் உலகை ரசிக்க முடியாது. அப்போதெல்லாம் கைகொடுப்பது புத்தகங்களும், உலக சினிமாக்களும்தான். இவ்விரண்டுமே விமானம் தரையிறங்குகையில் நம்மை உயரப் பறக்கவைக்கும்; சிறகு விரிக்கவைக்கும். கடந்த பயணத்தில் அப்படி என்னை உலுக்கியது, ‘தி ஹவுஸ் வேர் தி மெர்மெய்டு ஸ்லீப்ஸ்’ (The house where the mermaid sleeps) என்ற ஜப்பானிய மொழிப்படம். ஜப்பானியர்கள் நம் ‘காலா’வை ‘கன்னாபின்னாவென ரசித்தாலும், அவர்கள் எடுக்கும் படங்கள் எப்போதுமே வேற லெவல். ‘டோக்கியோ ரயில்’ படம் பற்றி ஒருமுறை எழுத்தாளர்

எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி, இணையத்தில் தேடிப்பிடித்துப் பார்த்தேன். அதுவும், கடந்தமுறை வெளிநாட்டுப் பயணத்தில் பார்த்த ‘மை புரொபசர் அண்டு ஹிஸ் பிலவ்டு ஈக்வேஷன்’’ (My professor and his beloved equation) எனும் படமும் மறக்க முடியாதவை.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நீண்ட விமானப்பயணமென்றாலே கைகள், முன்னால் உள்ள திரையில் ஜப்பானியப் படங்களைத் தேடும். ‘சரி, இன்னா நாற்பதில் இன்னாத்துக்கு இது?!’ எனச் சண்டை கட்டாதீர்கள். 40-50 வயதில் நல்ல திரைப்படங்களில் ‘கரைவதும்’ நல்ல புத்தகங்களில் ‘பசியாறுவதும்’ ஏகத்துக்கும் ஆயுளை நீட்டும்.

இந்த ஜப்பானியப் படம், மூளைச்சாவு பற்றியும் உறுப்புகளை தானம் செய்வது பற்றியும் பேசுகிறது. இரு அழகிய குழந்தைகள்; அதீத அன்பைச் செலுத்தி வளர்க்கும் அம்மா... ஜப்பானியத் தாயார்கள் ஏறக்குறைய நம் அம்மாக்கள் மாதிரி. கண்டிப்பும் கவனிப்பும் கரிசனமும் மிக அதிகமாய் அவர்களிடம் வெளிப்படும். தேனீக்களாய் சுறுசுறுப்பாக ஜப்பானியர்கள் திரிவதற்கு அந்த ஊர் அம்மாக்கள் முக்கிய காரணம். அப்பாவோ 24 மணி நேரமும் தன் கம்பெனி வேலையில் மூழ்கித் திரியும் ஒரு தொழில்நுட்பன். ‘குழந்தையின் தேர்வு முடிந்ததும் விவாகரத்து செய்துகொள்ளலாம்’ என முடிவுசெய்து, இருவரும் காத்திருக்கின்றனர். தேர்வு முடிவை வாங்க, பள்ளிக்குத் தாமதமாகச் சென்று முடிவை வாங்கிக்கொண்டு அமருகையில், அவசரத் தொலைபேசி அழைப்பு. நீச்சல்குளத்தில் நடந்த விபத்தில் மகள் மூளைச்சாவு அடைந்த செய்திவருகிறது. நொறுங்கிப்போகிறது குடும்பம். ‘இனி பிழைக்கமாட்டாள்... மகளின் உறுப்புகளைத் தந்து உதவமுடியுமா?’ என மருத்துவர் கேட்க, அங்கு ஆரம்பிக்கும் திரைப்படம், அடுத்த ஒன்றரை மணிநேரம் நம்மை ஒருவழி செய்துவிடுகிறது.

இப்படியான சினிமாக்கள் நம்மை வேறு ஒருதளத்துக்குத் தூக்கிப்போய் உட்கார வைக்கத்தான் செய்கின்றன. நாம் சந்திக்காத, நம்மைச் சாராத, நம்மைச் சூழ்ந்திருக்கும் உலகின் பல நுணுக்கங்களை, பிற மரபுகளை, பிற உயிர்களின் ஓட்டத்தைத் தெரிந்துகொள்ளும், புரிந்துகொள்ளும், ஒவ்வொரு மனமும் எக்கச்சக்கமாய் நோய் எதிர்ப்பாற்றலை நமக்கு அள்ளித்தரும். நோயை எதிர்கொள்ளும் வலிமையை அதிகரிக்கும். இந்த வலிமையை நிச்சயம் சிறந்த திரைப்படங்களும் சிறந்த புத்தக வாசிப்பும் தரும்.

தொடைக்கறியை வெட்டித்தந்த சிபிச்சக்கரவர்த்தி யாகட்டும்... ‘அனஸ்தீசியா வெல்லாம் வேணாம்; நீ அப்படியே அறுத்து எடுத்துக்கோப்பா’ என அறுவை சிகிச்சையை எதிர்கொண்ட சுவாமி ரமணானந்தாவா கட்டும்... தன் கழுத்துக்குக் கீழே எதுவும் இயங்காமல்போன பின்னரும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்த, ஐன்ஸ்டினுக்குப் பிந்தைய ஒரே சம அறிவாளியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் ஆகட்டும்... இவர்களெல்லாம் துவண்டு போகாமல் அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்து போனதற்குக் காரணம் என்ன தெரியுமா? சமகாலத்தில் உலகின் பக்கவாட்டு அறிவைத் தன் ஆய்வால், வாசிப்பால், அக்கறை யால், ஆழ்மன தியானத்தால் பெற்றதால்தான்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இப்படி எதையுமே பெற மெனக்கெடாமல் ஆதார் அட்டை, அலுவலக அடையாள அட்டை, கடன் அட்டை, கடவுச்சீட்டு என அனைத்து அட்டைகளையும் வாங்கி, ரசனைகளுக்கு இடங்கொடாத வாழ்வை வாழ்கிறார்கள்.

‘96’ படத்தைப் பார்த்து அழுது, உருகி, இரண்டு நாளாய் தோசைக்கல்லுக்கு வெளியே மாவு ஊற்றினீர்களா..?

‘நான் வந்தேன் ஜானு, லெட்டர் கொடுத்தேன் ஜானு, உன் காலேஜுக்கு வந்தேன்... அப்ப நீ ராமர் கலர் புடவைகட்டி அப்படியே...’ என, அதன்பின் வசனமில்லாமல், கைகளைக் கூப்பி விஜய்சேதுபதி பேசும்போது கவிழ்ந்து அழுதீர்களா?

அப்படியென்றால், 45 வயதிலும் உங்கள் மூளையின் ‘அமைக்டலா’வும் ‘ஹைப்போதாலமஸு’ம் நிச்சயம் பிரமாதமாக வேலை செய்கின்றன என்று பொருள். இந்த வயதிலும் காதலிக்கத் தெரிந்தாலே பாதி வியாதி வருவதில்லை.

‘தி ஹவுஸ் வேர் தி மெர்மெய்ட் ஸ்லீப்ஸ்’ திரைப்படமும் சரி, ‘தி பயாலஜி ஆஃப் பிலீஃப்’ புத்தகமும் சரி, 20 வயதில் பார்த்தால், படித்தால் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத படைப்புகளாகத் தெரியும். நாற்பதுகளில் படிக்கையில் மட்டுமே, நம்மைப் பல பரிமாணங்களில் யோசிக்கவைக்கும்.

சித்த மருத்துவம் மட்டுமல்ல, ஆயுர்வேதம் உட்பட அண்ணன் தம்பி மருத்துவங்களான அனைத்துப் பாரம்பர்ய மருத்து வங்களும், ‘காதல் வித்துகளான சுக்கிலத்தையும் சுரோணிதத்தையும் வலுவாய் வைத்திருப்பது ஆரோக்கியத்தின் அடையாளம்’ என்கிறது. நவீன அறிவியலின் மூலம் தட்டையாய் அதைப் பார்க்கையில், இது தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். ‘விந்து - நாதம்’ எனும் ஏழாம் தாதுவின் வலு என்பது ஆரோக்கி யத்தின் அடிநாதம்’ என்கிறது சித்த மருத்துவம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

உடனே அவசரப்பட்டு ‘அடடே! அந்தத் தாதுவை நாற்பதில் பலப்படுத்த, ‘எந்த லேகியம் சாப்பிடணும்?’ எனக் கேட்டு மெயில் அனுப்ப வேண்டாம். ஏழாம் தாது பலப்பட சக உயிரிடம் காட்டும் அன்பு, காற்றைப் பிடித்து ஆளும் மூச்சுப்பயிற்சி, குடலின் மூலைக்குள் உட்கார்ந்திருக்கும் கோடானுகோடி நுண்ணுயிரி களுக்குப் பங்கம் விளைவிக்காத உணவு, ‘என் பேட்டைடா இது’ என எல்லா உயிரினங்களும் வாழும் பூமியை, ‘தேனியில நியூட்ரினோவுக்குத் தோண்டுறேன்’, ‘கூடங்குளத்துல அரைகுறை அறிவியலோடு அணுக்கழிவைப் புதைக்கிறேன்’, ‘ஆத்துல மண் அள்ளுறேன்’ என அநியாயம் செய்யாமல், ‘கிளாமிடா மோனசு’க்கும் பட்டாம்பூச்சிக்கும் பன்றிக்கும் எருமைக்கும் பாதுகாப்பான சுற்றுச்சூழல் என எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.

விமானத்தில் வாசித்த இன்னொரு புத்தகம், டாக்டர் லிப்டன் எழுதிய ‘தி பயாலஜி ஆஃப் பிலீஃப்’ (The biology of belief). நவீன அறிவியலின் மனசாட்சியை உலுக்கும் நூல். குறிப்பாய் டார்வினின் ‘எல்லாமே மரபணு தான்’ என்ற நிலைப்பாட்டை மாற்றி, ‘டேய் மடையா! எல்லாமே சுற்றுச்சூழலால்தான்டா’ (All because of the environment, stupid), ‘உன் உடலின் சுற்றுச்சூழலும் பிரபஞ்சத்தின் சுற்றுச்சூழலும்தான் காரணம்...

அதைச் சரியாக வைக்காதபோது எதுவும் சீராயிராது’ என உயிர் அறிவியலைப் பேசும் புத்தகம். படிக்கப் படிக்க நம் மரபின் புரிதல்கள் மனசுக்குள் விரிந்துகொண்டேபோகின்றன. ‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரியும் கடுகும் பூச்சி பிடிக்காமல் நிறைய மகசூல் தரலாம்; ஆனால் உன் உடலுக்குள்ளிருந்து உன்னைக் காப்பாற்றிவரும் பூச்சி உயிரிகளை அது கட்டாயம் சிதைக்குமடா’ என என்னென்னவோ பேசுகிறது அந்நூல். வெற்று முழக்க மாயில்லாமல், அறிவியல் தரவுகளுடன்.

‘அப்பாவின் சர்க்கரைநோய் எனக்கு வந்தே தீருமா?’, ‘அம்மாவின் மார்பகப்புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் எனக்கு வருமா?’ என்பவை இன்றைக்கு நாற்பதில் இருக்கும் ஆண்கள், பெண்கள் மத்தியில் காணப்படும் பயங்கள். உணவுப் பழக்கவழக்கம் சரியில்லாமல், அதிக உடல் எடை யுடன் இருந்தால் சர்க்கரைநோய், இதயநோய் வர நிச்சயம் சாத்தியம் உண்டு. ஆனால் புற்றுநோய் அப்படி இல்லை. ‘அம்மாவின் மார்பகப் புற்றுநோயின் மரபணு மகளுக்கு இருக்கலாம். ஆனால், மனதும் உடலும் உற்சாகமாய் இருந்தால் புற்றுநோய் வராமலும் போகலாம்...’ என்கிறார் லிப்டன்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

புற்றுநோயின் டி.என்.ஏ என்பது ஒரு சாவி மட்டுமே; சாவி, சட்டைப்பையில் இருந்தால் வண்டி நகருமா... அதைத் திருக வேண்டுமல்லவா? அதேதான் மரபணுவிற்கும். ‘மரபணுவில் புற்றுநோயின் சாத்தியம் இருந்தாலே நோய் வந்துவிடாது. சூழல் திருகிவிடும்போதுதான் புற்றுநோய் பாதிக்கத் தொடங்கும்’ என்கிறார். ‘மேல் மரபியல்’ (Epigenitics), இப்போது புற்றுநோயின் ஆய்வில் அதிகம் பேசப்படும் வார்த்தை. சூழலைத் திருகிவிட்டுப் புற்றுநோயைக் கொணர்வதைத்தான் ‘எபிஜெனிடிக் டேமேஜ்’ (Epigenitic damage) என்கிறது நவீன அறிவியல்.

அதேசமயம் நம் அப்பா, அம்மா அல்லது அண்ணனுக்கு 40-45 வயதில் இதயநோய் வந்திருக்கும்பட்சத்தில், நிச்சயம் நமது நாற்பதில் இதய அக்கறையோடுதான் இருக்க வேண்டும். புற்றுநோய்போல் இதில் மரபணுப் பிரச்னை இல்லை. ஆனால் நம் மூத்த தலைமுறைபோலவே நமக்கும் மரபாக இதய ரத்தக்குழாய்கள் மெலிந்து, இதயநாடியின் உட்சுவரில் பிளவு இருக்கலாம். இந்தச் சூழலிலும் உணவு, உடற்பயிற்சி மூலம் இதயநாள நாடியின் ஆரோக்கியத்தை வலுவாக்க முடியும். ‘எனக்கு எதுவும் வராது’ என்கிற அலட்சியமும் ‘மரபு என்பதே பொய், எல்லாமே நவீனம்தான்’ என்கிற அகங்காரமும் ‘நவீனமே முழு ஏமாற்றுவேலை; எங்க மண்ணுக்குத் தெரியாத சயின்ஸா? எங்க மரபுதான் எல்லாம், நாங்கெல்லாம் புஷ்பக விமானம் விட்டவங்கடா’ என வெட்டி வேதாந்தம் பேசுவதும் சேர்ந்துதான் நாற்பதுகளை மருத்துவமனை வாயிலில் குவிக்கிறது.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

மரபும் நவீனமும் கைகோக்க வேண்டும். அதற்கு, ஆழமான வாசிப்பு தேவை. காதலை, சமூக அக்கறையை, மாற்று அறிவியலைக் காட்சிப்படுத்தும் திரையும் தேவை. ‘சோத்தைக் குறை; இனிப்பே வேணாம்; உப்பை மற; வியர்க்க ஓடு’ என்கிற மாதிரி, ‘96’-ல் தொலைந்துபோ; ‘வேள்பாரி’யைப் படி’ என்கிற வாழ்வியலும்கூட நோயற்ற நாற்பதுகளுக்கு நிச்சயம் தேவை.

‘நோயர் நாற்பது’களுக்கு மட்டுமல்ல, நாற்பதுகளைக் குணப்படுத்த முயலும் அத்தனை துறை மருத்துவர்களுக்கும்கூட நிறைய வாசிப்பும் சமூகத்தைப் பற்றிய பார்வையும் பயணமும் நிறையவே வேண்டும். தான் சார்ந்திருக்கும் துறை குறித்த ஆய்வுகள், அலங்காரங்கள், அதன் வணிகம் தவிர வேறேதும் வாசிக்கத் தவறும் அல்லது தவிர்க்கும் பெருவாரி மருத்துவர்கள், அன்றைக்கு வெளியான ‘ஆரோக்கிய நிகேதனமு’ம், இன்றைக்கு வெளியாகியுள்ள ‘சுளுந்தீ’யும் எப்போது வாசிக்கப்போகிறார்கள்? அப்படியான வாசிப்புகள் மட்டுமே நோயருக்கும் மருத்துவருக்குமான இடைவெளியை இனிவரும் காலத்தில் குறைக்கும்.

‘தி ஹவுஸ் வேர் தி மெர்மெய்டு ஸ்லீப்ஸ்’ திரைப்படமும் சரி, ‘தி பயாலஜி ஆஃப் பிலீஃப்’ புத்தகமும் சரி, 20 வயதில் பார்த்தால், படித்தால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத படைப்புகளாகத் தெரியும். நாற்பதுகளில் படிக்கையில் மட்டுமே நம்மைப் பல பரிமாணங்களில் யோசிக்கவைக்கும், நாற்பதுகளில் நோயோடு இருப்பவருக்கும் சரி; நோயை நீக்க உதவும் மருத்துவருக்கும் சரி!

- இனியவை தொடரும்...