
ஹெல்த்

உடலில் தைராய்டு ஹார்மோன் குறைவாகச் சுரப்பதையே 'ஹைப்போதைராய்டு' என்கிறோம். இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்துகளை முழுமையாக உட்கிரகிப்பதில் சிக்கல் இருக்கும். உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காது. அதனால், செரிமானப் பிரச்னைகள், சோர்வு, உடல்பருமன் போன்ற வாழ்வியல் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. `ஹைப்போதைராய்டு' பிரச்னை உள்ளவர்கள் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கவும், உடலுக்குத் தேவையான ஆற்றலை முழுமையாகப் பெறவும் எத்தகைய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் டயட்டீஷியன் கற்பகம் விநோத்.
வைட்டமின் ஏ, பி2, பி3, சி, ஈ போன்ற சத்துகள் நிறைந்த கேரட், பீட்ரூட், பூசணிக்காய், கீரைகள், போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
`தைரோசின்' என்ற அமினோ அமிலம் நிறைந்த உணவுகளான பால்பொருள்கள், இறைச்சி, பருப்பு போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
`ஒமேகா 3 கொழுப்பு அமிலம்’ நிறைந்த நட்ஸ் வகைகள், ஆளிவிதைகள், மீன் வகைகள் போன்றவை ஹார்மோன் அளவைச் சீராக்க உதவும். தேவைப்பட்டால், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைக்குப் பிறகு ஒமேகா 3 மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.
செலினியம் சத்து அதிகமுள்ள உணவுகளான சூரியகாந்தி விதைகள், காளான், நட்ஸ் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம். 'புரோபயாடிக்' நிறைந்த தயிரை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சமையலுக்குத் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். செக்கில் ஆட்டிய எண்ணெயைப் பயன்படுத்துவது சிறந்தது.