Published:Updated:

இதயத்தின் 6 மணி நேர ஓய்வு, 27 வருட கோமா, நூறாயுசு எய்ட்ஸ்... மருத்துவ ஆச்சர்யங்கள்! #VikatanRewind2019

Heart  / Representational Image
Listicle
Heart / Representational Image

2019-ம் ஆண்டு நிகழ்ந்த சுவாரஸ்யமான 10 மருத்துவ ஆச்சர்யங்களின், அற்புதங்களின் தொகுப்பு.


`வாவ்! இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' என்ற வார்த்தையை நிறைய சினிமாக்களில் கேட்டிருப்போம். ஆனால், மருத்துவத் துறையின் கோட்பாடுகளுக்கெல்லாம் அப்பால், இயற்கையின் மடியில் பல மெடிக்கல் மிராக்கிள்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. 2019-ம் ஆண்டு நிகழ்ந்த சுவாரஸ்யமான 10 மருத்துவ ஆச்சர்யங்களின், அற்புதங்களின் தொகுப்பு இதோ!


1
Tooth ( Pixabay )

மூக்கினுள் வளர்ந்த பல்!

சளி பிடித்தால், மூக்கடைத்து வாசனை எதையும் உணர முடியாமல் அவஸ்தைப்படுவோம். இதேபோன்று டென்மார்க்கைச் சேர்ந்த ஒருவர் மூக்கடைப்பால் நீண்ட காலம் அவஸ்தைப்பட்டிருக்கிறார். பல மருத்துவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் வேறு வேறு மருந்துகளைக் கொடுத்துள்ளனர். ஸ்டீராய்டு மருந்துகள்வரை கொடுத்தும் பயனில்லை. இறுதியாக ஆர்ஹஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றபோது, சி.டி. ஸ்கேன் செய்து பார்த்ததில், அவர் மூக்கினுள் ஒரு பல் வளர்ந்து வந்தது கண்டறியப்பட்டது. அதைச் சுற்றி சளி அடைத்திருந்தது. அறுவைசிகிச்சை இல்லாமல், மருத்துவர்கள் பயன்படுத்தும் இடுக்கியை வைத்தே அதை அகற்றிவிட்டனர். அவருக்கு, சிறு வயதில் தாடைப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, ஒரு பல் மூக்கினுள் சென்றிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


2
Twins ( pixabay )

குழந்தை பிறந்த 26 நாள்களில் மீண்டும் ட்வின்ஸ்!

வங்கதேசத்தைச் சேர்ந்த 20 வயது பெண் அரிஃபா சுல்தானா. இவருக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுகப்பிரசவத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதை உறுதிசெய்த மருத்துவர்கள், அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்குச் சென்ற அரிஃபாவுக்கு 26 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறியது போன்ற நிலை ஏற்பட்டதோடு, வயிற்றில் வலியும் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுல்தானாவுக்கு இரண்டாவது கர்ப்பப்பை இருந்ததையும், அந்த கர்ப்பப்பையில் இரட்டைக் குழந்தைகள் உருவாகியிருந்ததையும் கண்டறிந்தனர். குழந்தைகள் முழு வளர்ச்சியை அடைந்ததையடுத்து சிசேரியன் மூலம் வெளியே எடுக்கப்பட்டனர். இரண்டாவது பிரசவத்தில் ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


3
Coma ( Pixabay )

27 ஆண்டுகள் கோமா... மகனைப் பெயர் சொல்லி அழைத்த தாய்!

பல ஆண்டுகளுக்கு முன்னர், அபுதாபியைச் சேர்ந்த முனிரா அப்துல்லா என்ற பெண், தன் 4 வயது மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துவந்தபோது, அவருடைய காரை ஒரு பள்ளிப் பேருந்து மோதியது. மகனுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று குழந்தையைக் கட்டியணைத்துக்கொண்டார் முனிரா. வாகனம் மோதியதால் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றார் முனிரா. அவர், மீண்டு எழுவதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அவரால் வலியை உணர முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் அந்த மகனுக்கு நம்பிக்கை போகவேயில்லை. அவர், எப்படியும் தன் தாய் மீண்டு வந்துவிடுவார் என்று நம்பினார்.

லண்டன், அரேபியா, ஜெர்மன் என மாறி மாறி சிகிச்சைக்காக முனிரா அழைத்துச்செல்லப்பட்டார். குழாயின் மூலம் உணவு உடலுக்குள் செலுத்தப்பட்டது. இறுதியில், ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் கோமாவிலிருந்து மீண்டெழுந்தார். `என் அம்மா கோமாவிலிருந்து முதன்முதலாக விழித்துப் பார்த்து, ஏதேதோ வித்தியாசமான சத்தங்களை எழுப்ப ஆரம்பித்தார். நான் ஓடிச்சென்று மருத்துவர்களை அழைத்துவந்தேன். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இயல்பாக இருப்பதாகத் தெரிவித்தனர். மூன்று நாள்கள் கழித்துத்தான் அவர் பேசினார். அவர் பேசிய முதல் வார்த்தை, `உமர்' என்ற என் பெயர்தான். அவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தபோது, நான் சந்தோஷத்தில் மிதந்தேன். இந்தத் தருணத்துக்காகத்தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன்' என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மகன்.


4
sextuplets ( Freepik )

ஒரே பிரசவத்தில், 9 நிமிடங்களில் 6 குழந்தைகள்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த தெல்மா கியாகாவுக்கு, ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்தன. இரட்டைப் பெண் குழந்தைகள், இரண்டு இரட்டை ஆண் குழந்தைகள் என மொத்தம் 6 குழந்தைகள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளும் பிறந்துள்ளன. அதிகாலை 4.50 மணிக்குத் தொடங்கிய பிரசவம், 4.59 மணிக்கெல்லாம் முடிந்தேவிட்டது. ஆறு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்த மருத்துவர்கள், இதுபோன்ற நிகழ்வு 47 லட்சம் பிரசவங்களுக்கு ஒருமுறைதான் நிகழ வாய்ப்புள்ளது என்று ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.


5
teeth ( Pixabay )

சிறுவனின் வாயில் 526 பற்கள்!

சென்னையை அடுத்த புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபுதாஸ் என்பவரின் 7 வயது மகனின் வாயிலிருந்து 526 பற்களை மருத்துவர்கள் நீக்கினர். மூன்று வயதிலிருந்தே குழந்தையின் கீழ்த்தாடைப் பகுதியில் வீக்கம் இருந்துள்ளது. சிறுவன் வளர வளர வீக்கமும் அதிகரித்திருக்கிறது. ஆனால் வலி இல்லை. இதனால் சிகிச்சையை அந்தக் குடும்பத்தினர் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தனர்.

ஒரு கட்டத்தில், உடன் படிக்கும் மாணவர்கள், சிறுவனின் முகம் குரங்குபோல இருக்கிறது என்று கேலி செய்ததை அடுத்து சிகிச்சைபெறச் சென்றனர். புற்றுநோய்க்கட்டியாக இருக்கும் என்று மருத்துவர்கள் பரிசோதனைகளைச் செய்ய, முடிவு `நெகட்டிவ்' என்று வந்தது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் என்ற அடிப்படையில் 5 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்தனர். அறுவைசிகிச்சை செய்து நீக்கிய பின்பும் அது என்னவென்று தெரியவில்லை. வாய் நோய்க்குறியியல் ஆய்வகத்துக்கு அனுப்பிய பிறகுதான், அவை பற்கள் என்றே தெரியவந்தன. மொத்தம் 526 பற்கள் இருந்தன. ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் பற்கள் இருந்தன.


6
womb ( Freepik )

2 வெஜைனாக்கள், 2 கர்ப்பப்பைகள், 4 குழந்தைகள்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 வயதான பெண் லாரன் காட்டருக்கு, பிறவியிலேயே இரண்டு இனப்பெருக்க மண்டலங்கள் இருந்தன. அதனால் இரண்டு கர்ப்பப்பைகள் இருந்ததோடு மட்டுமல்லாமல், வெஜைனாவின் நடுப்பகுதியில் ஒரு வெட்டுத் தோற்றமும் இருந்து, இரண்டு வெஜைனாக்களாகப் பிரிந்திருந்தன. அந்தப் பெண்ணுக்கு, தற்போது நான்கு குழந்தைகள் உள்ளனர். இளமைப் பருவத்தில் மாதவிடாய்க் காலமெல்லாம் மிகவும் வேதனை மிகுந்ததாக இருந்துள்ளது லாரனுக்கு. அறுவைசிகிச்சை மூலம், வெஜைனாவை இரண்டாகப் பிரித்திருந்த சுவர் போன்ற பகுதி நீக்கப்பட்டது.

`இதன் பிறகு, இயல்பான தாம்பத்யத்தில் ஈடுபடலாம். ஆனால், குழந்தை பிறப்பது சற்று சிக்கலாக இருக்கும்' என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். திருமணத்துக்குப் பின் லாரன் கருத்தரித்தார். முதலில் ஒரு பெண் குழந்தை, அடுத்ததாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. மேலும், மீண்டும் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகியுள்ளார் லாரன். குழந்தையே பிறக்காது என்ற மருத்துவரின் கூற்றைப் பொய்யாக்கி, போதும் போதும் என்ற அளவுக்கு குழந்தை வரத்தைப் பெற்றிருக்கிறார் லாரன்.


7
100 years ( Pixabay )

100 வயதைக் கொண்டாடிய எய்ட்ஸ் நோயாளி!

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், 2019-ம் ஆண்டில் 100 வயதை எட்டினார். தன் பெயரை மிகேல் என்று தெரியப்படுத்த விரும்பும் அந்த நபர், லண்டனைச் சேர்ந்தவர். 16 வயதில் அவருக்கு எய்ட்ஸ் நோய் பாதித்திருப்பது கண்டறியப்பட்டது. மருந்துகளைச் சரியாக எடுத்துக்கொண்டதும், ஆரோக்கியமான வாழ்க்கையைக் கடைப்பிடித்ததும்தான் அவரது ஆயுளை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

`இத்தனை வருடங்களையும் துயரங்களோடும் வலிகளோடும்தான் கடந்திருக்கிறேன். ஆனாலும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தவறவிடவில்லை. நான் புகைபிடித்ததே இல்லை. ஒவ்வொரு நாள் இரவும் தூங்கச் செல்லும் முன், ஒரு கப் லெமன் டீ சாப்பிடுவது எனது வழக்கம்' எனும் மிகேலை, உலகில் வாழும் 3.69 கோடி எய்ட்ஸ் நோயாளிகளின் `நம்பிக்கை நட்சத்திரம்' என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.


8
surgery ( Pixabay )

பெண்ணின் வயிற்றில் 759 கட்டிகள்!

சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண்ணின் வயிற்றிலிருந்து 759 கட்டிகளை ஒரே நேரத்தில் அகற்றினர் மருத்துவர்கள். மிகுந்த வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில், வயிற்றில் நான்கு பெரிய நீர்க்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. நாடாப்புழுக்களின் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டு, இந்தக் கட்டிகள் உருவாகியிருந்தன.

அறுவைசிகிச்சை செய்து பார்த்தபோது, நான்கு நீர்க்கட்டிகளும் அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதியை 50 சதவிகிதத்துக்கும் மேல் ஆக்கிரமித்திருந்தன. மேலும், அந்தப் பெரிய கட்டிகளுக்குள் சிறிய சிறிய பல்புகள் போன்ற கட்டிகள் நிறைய காணப்பட்டன. அதனால் பெரிய கட்டியைத் திறந்து, அதற்குள் இருந்த நீர்க்கட்டிகளைக் கரண்டியின் உதவிகொண்டு எடுத்து என, 759 கட்டிகளை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள்.

கட்டியிலிருந்து ஏதேனும் திரவம் வெளியேறினால், அது உயிரைப் பறிக்கலாம் என்ற ஆபத்தும் இதில் இருந்தது. மிருகங்களுக்கு மட்டுமே இந்தத் தொற்று பொதுவாக ஏற்படும். மனிதர்களுக்கு ஏற்படுவது மிகவும் அரிது. செல்லப்பிராணிகளை அதிகம் கையாண்டதால் இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.


9
pregnant ( Freepik )

பிரசவத்துக்கு 9 நாள்களுக்கு முன்பு தெரியவந்த கர்ப்பம்!

தென்கிழக்கு அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாவில் வசிக்கும் தம்பதி லாரன் மற்றும் கெய்த் சாக். 28 வயதான லாரனுக்கு ஏற்கெனவே இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டது. இனி, தங்களுக்கு குழந்தையே பிறக்காது என்ற மனஅழுத்தத்தில் இருந்துவந்த லாரன், தன் பெற்றோரை சந்திக்கச் சென்றிருந்தார்.

அப்போது தாயிடம் பேசிய லாரன், தனக்கு ஏதோ அசௌகர்யம் இருப்பதாகத் தெரிவித்தார். மருத்துவத் துறையைச் சேர்ந்த அவரின் தாய், ஏதாவது ஹார்மோன் பிரச்னையாக இருக்கும் என்று நினைத்து, மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அப்பாயின்ட்மென்ட் வாங்கினார்.

மருத்துவரை சந்திப்பதற்கு முந்தைய நாள், லாரனுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது. ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்ட துயரத்தில் இருந்த லாரனை இது மேலும் பதற்றமாக்கியது. உடனே அவசர அப்பாயின்ட்மென்ட் வாங்கி மருத்துவரைச் சந்தித்தனர். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து பார்த்ததில் லாரன் கருத்தரித்திருந்தது உறுதிசெய்யப்பட்டது.

நான்கு அல்லது 5 மாத கர்ப்பமாக இருக்கலாம் என்று நினைத்த லாரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கருவிலிருந்த குழந்தை முழு வளர்ச்சியடைந்திருந்தது. இதையடுத்து, `Induced labour' முறைப்படி அன்றைய தினமே குழந்தையைப் பெற்றெடுத்தார் லாரன். 3 கிலோ எடையில் அழகிய குழந்தைக்குத் தாயான மகிழ்ச்சியில் இருக்கிறார், லாரன்.


10
heart beat ( Pixabay )

6 மணி நேரத்துக்குப் பிறகு துடித்த இதயம்!

ஸ்பெயினில் வசித்துவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண், ஆட்ரி ஷோமேன். 34 வயதான இவர், ஒருநாள் பனிப்புயலில் சிக்கி உடலின் வெப்பநிலையை வேமாகக் குறைக்கும் `ஹைப்போதெர்மியா' என்ற பிரச்னையால் தாக்கப்பட்டார். பேசுவதற்கும் நடப்பதற்கும் சிமரப்பட்ட ஆட்ரிக்கு, மாரடைப்பும் ஏற்பட்டதால் சுயநினைவை இழந்து விழுந்தார்.

அவரை மீட்பதற்கு அந்தப் பகுதிக்கு அவசரகால வாகனம் வந்து சேர்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆகியிருக்கிறது. `அந்த நேரத்தில், ஆட்ரிக்கு நாடித்துடிப்பு, சுவாசம், இதயத்துடிப்பு எதுவுமே இல்லை' என்கிறார் அவரின் கணவர். மீட்புக் குழுவினர் வந்து ஆட்ரியை மீட்டபோது, அவரது உடலின் வெப்பம் வெறும் 64.4 டிகிரி மட்டுமே இருந்தது.

மருத்துவமனைக்குச் சென்றபோதும் அவரிடம் எந்த அசைவும் இல்லை. மருத்துவமனையில், ஒரு கருவியின் மூலம் ஆட்ரியின் ரத்தத்தை வெளியேற்றி, அதில் ஆக்ஸிஜனைப் புகுத்தி மீண்டும் உடலுக்குள் செலுத்தியிருக்கின்றனர். இதனால், உடலின் வெப்பநிலை 86 டிகிரியாக அதிகரித்திருக்கிறது.

அதற்குப் பிறகு, மின் அதிர்வின் மூலம் இதயத்தின் இயக்கத்தை மீட்டெடுத்தனர் மருத்துவர்கள். `ஹைப்போதெர்மியா' ஏற்பட்டு உடலின் வெப்பநிலை குறைந்ததால்தான் ஆட்ரியாவின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என்றும், இயல்பான வெப்பநிலை இருந்திருந்தால் மாரடைப்பு ஏற்பட்டு இத்தனை மணி நேரம் உயிரோடு இருந்திருக்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.