Published:Updated:

மகப்பேறு மருத்துவரிடம் செல்வதற்கு முன்பு பெண்கள் அறிய வேண்டிய 10 தகவல்கள்!

மகப்பேறு மருத்துவர் முதன்முதலாக உங்களை ஏதேனும் பரிசோதனைகள் செய்யச்சொன்னால் அவற்றை எதற்காகப் பரிந்துரைக்கிறார் என்று கேட்டுத் தெளிவுபெறுங்கள்.

திருமணமான பெண் கருவுற்றிருந்தாலோ திருமணமாகியும் கருத்தரிக்கவில்லை என்றாலோதான் மகப்பேறு மருத்துவர்களிடம் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதயம், சிறுநீரகம், கண், பல் போல பிறப்புறுப்பு, மார்பகம் ஆகியவற்றின் நலமும் பராமரிக்கப்பட வேண்டியவைதான். மகப்பேறு மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்? அவரிடம் செல்லும்போது கவனிக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்களின் தொகுப்பு:

1
Age ( Freepik )

எது சரியான வயது?

மகப்பேறு மருத்துவரைச் சந்திக்க சரியான வயது 13 முதல் 15 தான். அந்த வயதில் இருக்கும் பெண்களை பெற்றோர் மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்று இனப்பெருக்க உறுப்புகளின் சுகாதாரத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்துவது அவசியம். அந்த வயதில் மருத்துவரிடம் செல்லவில்லை என்றால் இப்போதும் தாமதிக்க வேண்டாம். உடனே அணுகுவது நல்லது.

2
அசௌகர்யம் வேண்டாம் ( Pixabay )

அசௌகர்யம் வேண்டாம்!

மகப்பேறு மருத்துவர்களிடம் செல்லும்போது பிறப்புறுப்பைப் பரிசோதிப்பதென்பது ஒரு சாதாரண விஷயம். அதை ஓர் அருவருப்பான விஷயமாகவோ அசௌகர்யமாகவோ கருத வேண்டாம். கண், பல்லைப் போன்று முழுக்க முழுக்க மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே பிறப்புறுப்பையும் மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3
Representational Image ( Pixabay )

உடன் அழைத்துச் செல்லுங்கள்!

முதன்முதலாக மகப்பேறு மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போது குடும்ப உறுப்பினரையோ அல்லது இதற்கு முன்பாக மகப்பேறு மருத்துவரை அணுகியிருக்கும் தோழியையோ உடன் அழைத்துச் செல்வது நல்லது. யாராவது உடன் வருவது மனதளவில் தைரியத்தையும் அங்கு செய்யப்படும் நடைமுறைகளை எளிதாக எதிர்கொள்ளவும் உதவும்.

4
நேர்மை முக்கியம்! ( Pixabay )

நேர்மை முக்கியம்!

தாம்பத்ய வாழ்க்கை, மாதவிடாய் சுழற்சி உள்ளிட்ட அனைத்து அந்தரங்க விஷயங்கள் தொடர்பான மகப்பேறு மருத்துவரின் கேள்விகளுக்கும் நேர்மையாகப் பதிலளியுங்கள். உங்களுக்கு மருத்துவரிடம் பகிர்வது முதல்முறையாக இருக்கும். ஆனால், மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 100 பேரிடம் இதுபோன்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள் என்பதால் வெட்கப்படாமல் உண்மையை மட்டும் பேசுங்கள். நமது உடல்நலம்தான் எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம்.

5
தோற்றம் முக்கியமல்ல ( Pixabay )

தோற்றம் முக்கியமல்ல!

மருத்துவரிடம் பரிசோதனை செய்யும்போது உங்கள் அந்தரங்க உறுப்புகளின் தோற்றத்தைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்காதீர்கள். அதையெல்லாம் மருத்துவர்கள் கவனிப்பதும் இல்லை. அவர்களின் நோக்கம் உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்வதுதான்.

6
Hygiene ( Pixabay )

சுகாதாரம் பேணுங்கள்!

தோற்றத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும் அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரம் மிகவும் முக்கியம். மகப்பேறு மருத்துவரைச் சந்திக்கச் செல்லும்போது பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

7
Privacy ( Pixabay )

தனியுரிமை பாதுகாக்கப்படும்!

18 வயதுக்கு மேற்பட்டவர் என்றால் அந்த நபரின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி வெளியே பேசாமல் மகப்பேறு மருத்துவர்கள் ரகசியம் காப்பார்கள். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் அவர்களுடன் வரும் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர்களிடம் அவர்களின் உடல்நலம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள். ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களை எக்காரணம் கொண்டும் வெளியே சொல்லமாட்டார்கள். சட்டபூர்வமாக ஏதேனும் பிரச்னை இருந்தால் மட்டுமே மருத்துவர்கள் அதை சட்ட ரீதியாக அணுகுவார்கள்.

8
clarify the doubts ( Pixabay )

தெளிவு பெறுங்கள்!

மகப்பேறு மருத்துவர் முதன்முதலாக உங்களை ஏதேனும் பரிசோதனைகள் செய்யச்சொன்னால் அவற்றை எதற்காகப் பரிந்துரைக்கிறார் என்று கேட்டுத் தெளிவுபெறுங்கள். உங்கள் உடல்தான் உங்கள் கோயில். பிறப்புறுப்பு நலம் மிகவும் முக்கியமானது. அதனால் அந்தப் பகுதியில் ஏதேனும் பரிசோதனை என்றால் அதைப்பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

9
Mensuration ( Freepik )

மாதவிடாய் - நோ டென்ஷன்!

`20 வயதிலேயே மாரடைப்பு வருமா? அறிகுறிகள் என்ன?' - மருத்துவர் விளக்கம்
 #Video

மருத்துவரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கி தேதி குறித்த பின்னால் மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால், முடிந்தவரைச் சந்திப்பை வேறு தேதிக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றாலும் பிரச்னையில்லை. மாதவிடாய் நேரத்தில் மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பதும் தவறில்லை. மருத்துவ அவசரம் ஏதேனும் இருந்தால் மாதவிடாய் நாள்களாக இருந்தாலும் மருத்துவரிடம் போய்விடுவது நல்லது.

10
Ask Questions ( Pixabay )

கேள்வி கேட்கத் தயங்காதீர்கள்!

மருத்துவரிடம் உங்கள் அந்தரங்க உறுப்புகளின் நலன் பற்றி நீங்கள் கேட்க விரும்பும் சந்தேகங்களைக் கூச்சப்படாமல் கேட்டுத் தெளிவுபெறுங்கள். உங்கள் சந்தேகங்களைப் போக்கி உங்கள் உடல்நலத்தை உறுதி செய்வதற்காகத்தான் மருத்துவர் இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால் எத்தனை கேள்விகளைக் கேட்க முடியுமோ அத்தனையையும் கேட்டுவிடுங்கள்.