ஸ்பெஷல்
Published:Updated:

டீ-பன் டிபன் போதுமா?

டீ-பன் டிபன் போதுமா?

டீ-பன் டிபன் போதுமா?

ராமசாமி, மதுரை

“எனக்கு 41 வயது. என்னுடைய வாய் எப்போதும் உலர்ந்தே இருக்கிறது. அதிக அளவு தண்ணீர் அருந்தி னாலும்கூட, நாக்கும் தொண்டையும் வறண்ட நிலையிலேயே இருக்கிறது. எனக்கு என்ன பிரச்னை? இதற்கு என்ன தீர்வு?”

டாக்டர் என்.தம்பிஅருள்,  காது மூக்கு தொண்டை நிபுணர், ராமநாதபுரம்.

‘‘உமிழ்நீரானது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றைத் தவிர்க்க உதவுகிறது. உமிழ்நீர் போதுமான அளவுக்குச் சுரக்காமல்போவதற்கு, பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், வாய் உலரும். புகை பிடித்தல், மருந்துகள் ஒவ்வாமை, உமிழ்நீர் சுரப்பியில் பிரச்னை, நுரையீரல் பிரச்னை, நரம்பியல் பிரச்னைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றால் நீர் இழப்பு நேரலாம். அதிகம் பேசுவது,  சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும் வாய் உலரலாம். 40 வயதைக் கடந்துவிட்டதால், நீங்கள் அவசியம் சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுக்குப் பின்னர்தான் என்ன காரணம் எனக் கண்டுபிடிக்க முடியும். பொதுவாக வாய் உலர்ந்து இருப்பது நல்லது அல்ல. எனவே, நீங்கள் விரைவாகப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நாக்கு உலராமல் இருக்க, வாய் வழியாக சுவாசிப்பதை நிறுத்தி, மூக்கு வழியாக சுவாசியுங்கள். ஃப்ளூரைடு பற்பசை உபயோகியுங்கள்.”

அருண், மேட்டுப்பாளையம்

“வீட்டில் பிள்ளைகள் ஜூஸ் குடிக்க மறுத்து, எப்போதும் மில்க் ஷேக் கேட்கிறார்கள். சில பழங்களுடன், பால் சேர்க்கக் கூடாது என்று படித்துள்ளேன். பாலுடன் பழம் கலந்த மில்க் ஷேக் சாப்பிடலாமா? இதனால் குழந்தைகளுக்குப் பாதிப்பு வருமா?”

டீ-பன் டிபன் போதுமா?

டாக்டர் ராஜநாயகி,  சித்த மருத்துவர், கோவை

“பாலையும் பழத்தை‘யும் சேர்த்துச் சாப்பிடும்போது, அது நல்ல விளைவையே ஏற்படுத்தும். ஆனால், கடைகளில் மில்க் கேக், ஃபலூடா போன்றவற்றைப் பதப்படுத்த, சில பவுடர்களை சேர்க்கின்றனர். இதனால், அஜீரணக் கோளாறு உட்பட பல சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தவிரவும், ஐஸ் கட்டிகள் செய்ய சுகாதாரமற்ற நீரைப் பயன்படுத்துவதால், தொண்டையில் கிருமித் தாக்குதல் ஏற்படலாம். அதனால், முடிந்த வரை வீட்டிலேயே, சுத்தமான பாலில் பழங்களைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பழங்களுடன் பாலையும் சேர்த்துச் சாப்பிடுவதால் கால்சியம் அதிகமாகக் கிடைக்கிறது. ஐஸ் சேர்க்காமல் இருப்பது நல்லது. வாழைப்பழ மில்க் ஷேக்கில் வைட்டமின் பி6 சத்து அதிகமாகக் கிடைக்கும். உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், உடல் சுருக்கங்
களை மறைக்க விரும்புபவர்கள், தசைகளை முறுக்கி பாடி பில்டராக விரும்புபவர்கள், மாம்பழத்தில் செய்த மில்க் ஷேக்கை அருந்தலாம். ஆனால் மில்க் ஷேக்கில் கொழுப்புச்சத்து சற்றே அதிகம் என்பதால், சர்க்கரை நோயாளிகளும், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களும், முதியவர்களும் இதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக மாம்பழம், ஆப்பிள், முலாம் பழம், பப்பாளி போன்ற பழங்களை மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம். ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களைப் பயன்படுத்தும் போது, பால் திரிந்துவிட வாய்ப்பு உள்ளது. அதனால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.”

டீ-பன் டிபன் போதுமா?

எழில்முத்து, பாலவாக்கம்.

“எனது நண்பர் காலை உணவு சாப்பிடுவதில் அவ்வளவு அக்கறை காட்டுவது இல்லை. ‘டீ, பன்’தான் அவருக்கு காலை டிபன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதையே தொடர்ந்து ஃபாலோ செய்கிறார். அவருக்கு உடலளவில் கோளாறுகள் வந்த மாதிரியும் தெரியவில்லை. எதிர்காலத்தில் பிரச்னைகள் வரக்கூடுமோ?”

ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  உணவு ஆலோசகர், சென்னை

“காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, மிகத் தவறான நடைமுறை. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, தாதுச்சத்துக்கள் மிகமிக முக்கியம். இதில், ஏதாவது ஒரு சில சத்துக்கள் மட்டுமே கிடைக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல. வெறும் டீ, பன் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், மாவுச் சத்து மட்டுமே கிடைக்கும். இளவயது என்பதால், உடலில் எந்தவித நோயும் வராமல் இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் பல்வேறு பிரச்னைகள் வரக்கூடும். 40 வயதுக்கு மேல் வரும் பல நோய்களுக்கு, சரிவிகித உணவு சரியாக எடுத்துக்கொள்ளாதது முக்கியக் காரணம்.  உங்கள் நண்பரிடம் காலை உணவை சரியாக 7.30 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக உண்ணப் பழகச் சொல்லுங்கள். காய்கறி, பழங்கள், தானியங்கள் என உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் அந்த உணவில் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வயது ஏறினாலும், உடல் வலுவோடு இருக்கும்.”