ஸ்பெஷல்
Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அன்பெனும் அக(ல்) விளக்கு!

அமெரிக்காவின் கென்டக்கி நகரில் 73 வயதான முதியவர், உடல் நலக்குறைவால்  அங்குள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவரது உடல் நிலை தேறவில்லை. அவர் சரியாக சாப்பிடாமல், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அந்த முதியவர், தன்னுடைய செல்லப்பிராணியான ஒற்றைக் கண் நாயைப் பார்க்காமல் இருந்ததால்தான் அந்த மன உளைச்சலாம். இதைக் கேள்விப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், சிறப்பு அனுமதியோடு, அந்த நாயை மருத்துவமனைக்கு வரவழைத்தது. நாயைக் கண்ட முதியவருக்கு ஆனந்தக் கண்ணீர் வழிந்ததாம். அந்த எஜமானரைப் பிரிந்திருந்த நாட்களில் நாயும் சாப்பிடவில்லையாம். இப்போது அந்த முதியவரும் உடல்நலன் தேறி வருகிறார். மருத்துவ சிகிச்சைகள் செய்யாத அதிசயங்களை அன்பு நிகழ்த்திவிடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

அக்கம் பக்கம்

எய்ட்ஸ்க்கு மருந்து!

எய்ட்ஸ் எனும் உயிர்கொல்லி நோய்க்கு அவ்வளவு எளிதில் கொள்ளி வைக்க முடியாது என்று உலகம் நம்பிக்கொண்டிருக்கையில், நம்பிக்கை வார்க்கும் விதத்தில் ஒரு செய்தி! அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஃஎப்.டி.ஏ அங்கீகாரம் செய்த ட்ருவாடா (Truvada) என்ற மருந்து தற்போது விற்பனைக்கு வர உள்ளது. இந்த மருந்து 90 சதவிகிதம் அளவுக்கு ஹெச்.ஐ.வி கிருமியைக் கட்டுப்படுத்துகிறதாம். ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இந்த மருந்து ஹெச்.ஐ.வி கிருமியைக் கட்டுப்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். நீண்ட காலத்துக்கு ஆரோக்கியமாக வாழ முடியும். 

அக்கம் பக்கம்

கூகுள் ‘டாக்’...டர்!

ஒவ்வொரு நாளும் புதுமையைக் கையாண்டு பயனாளர்களுக்குத் தேவையான விஷயங்களை விரைந்து தரும் கூகுள் தொழில்நுட்பம் உலகின் அதிகப் பயனாளர்களைக் கொண்டுள்ளது. தற்போது, மருத்துவத் துறையில் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொள்ள இருக்கிறது கூகுள். நோய்கள் தொடர்பாக பயனாளர்கள் கூகுள் தளத்தில் தேடும்போது, அந்த நோய் தொடர்பான சந்தேகங்களைக் கேட்க,  மருத்துவர் ஒருவருடன் வீடியோ கால் மூலம் உரையாடக்கூடிய வசதியையும் கொண்டுவர முயல்கிறார்கள். இந்த வசதியை கூகுள் ஹேங்அவுட்ஸ் (Google Hangouts) வழியாக ஏற்படுத்தலாம். இந்த முயற்சிக்கான சோதனைகள் விரைவில்  தொடங்கப்படும்.

மகாதமனி பிரச்னை!

சில நாட்களுக்கு முன்பு 80 வயதான முதியவர் ஒருவர் தீவிர வயிற்றுவலியால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்துபார்த்தபோது ‘அரோடா அனியூரிசம்’ என்ற மகாதமனி விரிவடைந்த பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தனர். வழக்கமாக மகாதமனி 20 மி.மீ சுற்றளவுதான் இருக்க வேண்டும். ஆனால் இவருக்கோ 100 செ.மீ அளவுக்கு மெகா சைஸ் பலூன்போலக் காணப்பட்டது. எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற சூழல். வழக்கமான சிகிச்சைகள் மூலம் அவருக்கு இதை சரிசெய்ய முடியாத நிலைமை. அறுவைசிகிச்சை மற்றும் இன்ட்ராவென்ஷன் என்ற இரண்டு சிகிச்சைகளை ஒன்று சேர்த்து ஹைபிரிட் சிகிச்சையை அளித்தனர்.  டாக்டர்கள் விஜயசந்திர ரெட்டி, பாலாஜி மற்றும் டாக்டர் எஸ்.ஐ.சின்கா. “மகாதமனி விரிவடைவது போன்ற பிரச்னைகளை சாதாரண அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலமாகவே கண்டறிய முடியும். ஆனால் இவர் மிகவும் காலதாமதமாகத்தான் மருத்துவ உதவியை நாடினார். இதனால்தான் சிகிச்சை இவ்வளவு கடினமாக மாறிவிட்டது” என்றார் டாக்டர் விஜயசந்திர ரெட்டி.

அக்கம் பக்கம்

பார்வையை மீட்டுத்தரும் ஸ்டெம் செல்கள்!

கண்பார்வை இழப்பு என்பது மிகவும் கொடிய குறைபாடு. அண்மையில் அமெரிக்க விஞ்ஞானிகள், கரு முட்டையில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்து, அதைப் பார்வை செல்களாக மாற்றி, பார்வைக் குறைபாடு உள்ள 18 பேருக்கு செலுத்தினார்கள். தொடர்ந்து அவர்களிடம் ஆராய்ச்சி மேற்கொண்டதில் பார்வைத் திறன் அதிகரித்துள்ளதைக்   கண்டறிந்துள்ளனர். வயது,மூப்பு காரணமாக பார்வைத் திறனை இழப்பவர்களுக்கு, இந்த சிகிச்சைமுறை வெற்றியளிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.