ஸ்பெஷல்
Published:Updated:

மனமே நலமா?-36

”கொலை செய்ய துரத்துறாங்க” சந்தேக மனநோய்!

அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கும் தன் மகன் சிவசங்கர்், மருமகள் கிருத்திகா, ஒருவயது பேரக் குழந்தை எல்லோரையும் அழைத்துக்கொண்டு என் மருத்துவமனைக்கு வந்திருந்தார் சிவசங்கரின் அப்பா.

மனமே நலமா?-36

சிவசங்கரிடம் இருந்த பதற்றத்தைப் பார்த்தபோது அவருக்கு ஏதோ மனரீதியான பிரச்னை இருப்பது புரிந்தது. மாமனார் அறிமுகப்படுத்தவும், சிவசங்கரின் மனைவி கிருத்திகா என்னிடம் பேசினார். 'எங்களுக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னால கல்யாணம் ஆச்சு. கல்யாணத்துக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் இவர் அமெரிக்காவிலிருந்து வந்தார். யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டார். ரொம்ப மொக்கையா ஜோக் சொல்லிட்டு அவரே சிரிப்பார். எதையாவது யோசிச்சிக்கிட்டே இருப்பார்.

கல்யாணம் ஆன அடுத்த மாசமே நான் கன்சீவ் ஆயிட்டேன்.  உடனே விசா கிடைக்க, நானும் அமெரிக்கா போயிட்டேன். அங்க டெக்சாஸ்ல ஒரு ஃப்ளாட்ல இருந்தோம். காலையில வேலைக்குப் போனா, சாயங்காலம்தான் வருவார். வந்ததும் லேப்டாப்பும் கையுமா இருப்பார். எப்போதும் ஏதாவது யோசிச்சுக்கிட்டே இருப்பார். எதைப் பார்த்தாலும் அவருக்குச் சந்தேகம்தான். வெளில எங்கயும் கூட்டிட்டுப் போக மாட்டார். டெலிவரிக்கு இந்தியா வரணும்னு ஆசை. ஆனா, அமெரிக்காவிலேயே இருக்கச் சொல்லி, அங்கேயே எனக்கு டெலிவரி ஆச்சு.

15 நாளைக்கு முன்னால, நாங்க வசிக்கிற ஃப்ளாட்ல, தண்ணி பைப் லீக்கேஜ் ஆனதும், அதைச் சரிசெய்யச் சொன்னார். ஆனா அவங்க அதைச் செய்யலை. அன்னைக்கு ஆபீஸ்ல இருந்து வந்ததும், பதற்றமா இருந்தார். தூங்காம எதையோ யோசிச்சுட்டு மறுநாள் காலையில கிளம்பி ஆபீஸ் போயிட்டார். இரண்டு நாள்ல லீக்கேஜ் பெரிசாகி எங்க ஃப்ளாட் உள்ளேயே தண்ணீர் வர, பிளம்பரைக் கூப்பிட்டுச் சண்டை போட்டுட்டு ஆபீஸ் கிளம்பினவர், ரெண்டே மணி நேரத்துல வீட்டுக்கு வந்திட்டார். அப்ப இன்னும் ரொம்பப் பதற்றமா இருந்தார். வீட்ல இருந்த பாஸ்போர்ட், கிரெடிட் கார்ட், கொஞ்சம் துணிகளை அள்ளிப் போட்டுக்கிட்டவர்

மனமே நலமா?-36

கிட்ட, 'என்ன ஆச்சு? எங்க கிளம்பறீங்க?’னு கேட்டேன். 'உனக்கு ஒண்ணும் தெரியாது’ன்னு சொல்லிட்டு, என் கையைப் பிடிச்சபடி, அவசர அவசரமா குழந்தையை தூக்கிட்டு், தேவையான சில பொருட்களை மட்டும் எடுத்துக்கிட்டு கதவைச் சாத்திட்டு கிளம்பிட்டார். காரை ரொம்ப வேகமா ஓட்டினார்.

அப்பப்ப, திரும்பிப் பார்த்துக்கிட்டே ஓட்டிட்டு், 'என்னை உங்களால ஒண்ணும்் செய்ய முடியாது’னு கத்திக்கிட்டே இருந்தார். எங்க போறோம்னு தெரியாமலேயே போயிட்டே இருந்தார்.  கார் பெட்ரோல் ரிசர்வ் வந்ததும் பெட்ரோல் போட்டுக்கொள்வதும், பசிக்கும்போது ஏதாவது சாப்பிடுவதுமாக, மூணு நாள் தொடர்ந்து கார்லயே போயிட்டு இருந்தோம். கிட்டத்தட்ட 60 மணி நேரம். 25003000 கி.மீ. நாங்க டிராவல் பண்ணியிருந்தோம். அவர் கொஞ்சம்கூடத் தூங்காமல், வண்டியை ஓட்டிட்டு இருக்கார். தூங்காம, வண்டியை எங்கயாவது ஆக்சிடென்ட் செய்திடுவாரோனு உயிரைக் கையில பிடிச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா, அவர் நிப்பாட்டுற மாதிரி தெரியலை. இதுக்கும் மேல தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துதான்னு தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு, 'எனக்கு அவசரமா பாத்ரூம் போகணும். வண்டியை நிறுத்துங்க’ன்னு சொன்னேன். அவரும், ஒரு பெட்ரோல் பங்குல வண்டியை நிறுத்தினார். என்னைப் பாத்ரூம் போகச் சொல்லிட்டு பெட்ரோல் நிரப்ப ஆரம்பிச்சார்.

அங்கேயே இருக்கிற டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல, சாப்பிட ஏதாவது வாங்கிவைக்கிறேன்’னு சொன்னார். இதுதான் சமயம்னு அங்க உள்ள போன் பூத்ல இருந்து எமெர்ஜென்சி நம்பருக்கு போன் செஞ்சு, போலீஸை வரவழைச்சேன். அவங்க, இவரைப் பிடிச்சு, அங்கிருந்த மனநல மருத்துவ

மனையில சேர்த்தாங்க. அங்கே அவருக்கு மருந்து மாத்திரை கொடுத்து ஓரளவுக்கு நார்மல் நிலைமைக்குக் கொண்டுவந்து எங்களை இந்தியாவுக்கு அனுப்பிவெச்சாங்க. சென்னை வந்து அடுத்த ஃப்ளைட் பிடிச்சு மதுரை வந்தோம். வீட்டுக்குக்கூட போகாம, நேரா உங்ககிட்டதான் கூட்டிட்டு வந்தோம்' என்றார்.

அமெரிக்காவில் அவருக்குச் சிகிச்சை அளித்திருந்தாலும் சிவசங்கர் இப்போதும் பதற்றத்துடனும், ஓய்வின்றியும் இருந்தார். அவரிடம் பேசியபோது, 'எங்க மூணு பேரையும் கொலை செய்ய என் விரோதிங்க திட்டம் போட்டி

மனமே நலமா?-36

ருக்காங்க டாக்டர். என் வீட்டு பைப் கனெக்‌ஷனை கட் செஞ்சு வீட்டுக்குள்ள தண்ணீர்விட்டு சயனைட் வெச்சுக் கொல்லப் பார்த்தாங்க. அதனாலதான் கார்ல தப்பிக்க நினைச்சேன். ஆனா, விடாம என் காரையும் ஃபாலோ செஞ்சாங்க.  அதுவும் இல்லாம நான் கார்ல போகும்போது யாரோ 'இவனை விட்டுறக் கூடாது. விட்டா தப்பிச்சுப் போயிடுவான். இவனைக் கொல்லணும்னு’ சொல்லிட்டே இருந்தாங்க. முதல்ல என் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போகத்தான் பிளான் பண்ணேன். ஆனா இவங்க என்னை விடாமத் துரத்தினதால்தான் எங்க போறதுனு தெரியாம உயிரைக் காப்பாத்திக்க கார்லயே சுத்திட்டு இருந்தேன். இப்பக்கூட யாரோ என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்யப்போறதா சொல்றாங்க. அது, என் காதுல கேட்குது' என்றார்.

கிருத்திகா மற்றும் சிவசங்கரன் இருவரிடம் பேசியதை வைத்துப் பார்க்கையில், அவருக்குச் சந்தேகத்துடன் கூடிய மனச்சிதைவு நோய் (Paranoid schizophrenia) பாதிப்பு இருந்தது புரிந்தது. மேலும், மாயக்குரல் கேட்டதா கக் கூறியதால் 'ஹாலூசினேஷன்’ பிரச்னையும் இருந்தது. இந்த நோய் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால்  ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் ஏன் பாதிக்கப்படுகிறது என்பதற்கு இன்னமும் பதில் இல்லை. மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால், ஒருவரால் மிகச் சிறந்த இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தாக வேண்டும் என்று சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர். சிவசங்கரன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.  மனப்

பதற்றத்தைக் குறைக்க, மாத்திரை, மருந்துகள் அளிக்கப்பட்டன. தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் நிலையில் நல்ல முன்னேற்றம். இரு வாங்களுக்குப் பிறகு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்று கூறி அவரை டிஸ்சார்ஜ் செய்தோம்.  சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். இப்போது எந்தப் பிரச்னையும் இன்றி, சென்னையிலேயே தங்கி, வேலை பார்த்து வருகிறார்.

அவர்கள் அனைவரும் நலம்!

(படத்தில் இருப்பவர்கள் மாடல்களே...)