Published:Updated:

மருத்துவ சிகிச்சையில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை எப்போது? A-Z தகவல்கள்

மருத்துவ சிகிச்சையில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை எப்போது? A-Z தகவல்கள்
மருத்துவ சிகிச்சையில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை எப்போது? A-Z தகவல்கள்

செயற்கை ஆக்சிஜன் உதவி:

சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக, சில பத்தாண்டுகள் கழித்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை, நாம் முதுகில் சுமக்க வேண்டிய நிலைமை வரலாம் என்பது பொதுக் கருத்து. வேற்றுக் கிரகங்களில் உயிர் வாழ ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் அவசியம் என்பதும் அனைவருக்கும் தெரியும். ’பிராணவாயு (ஆக்சிஜன்) இன்றி மனிதர்களால் உயிர் வாழ முடியாது…’ ஆரம்பப் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் முக்கியமான மருத்துவ செய்தி. மரங்கள் நமக்கு செய்யும் பல நன்மைகளில் பிராணவாயுவை அள்ளிக்கொடுப்பது முக்கியமானது. ஆக்சிஜன் இன்றி ஏதுமில்லை என்பது நியதி!

ஆக்சிஜன் உபகரணங்கள்:

தன்னிச்சையாக நடைபெறும் சுவாச நிகழ்வுகளின் மூலம் ஆக்ஸிஜன் உடலுக்குள் சென்று இயக்கத்திற்கு உதவுகிறது. இயற்கையாக கிடைக்கும் ஆக்ஸிஜனை சில நேரங்களில் நுரையீரல் திசுக்களால் முழுமையாக உட்கிரகிக்க முடியாத சூழ்நிலைகளில், ஆக்சிஜன் உட்செலுத்தும் உபகரணங்களின் உதவி தேவைப்படுகிறது. ‘மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் உயிரிழப்பு’ என மனதை உருக்கும் செய்திகளும் அவ்வப்போது வருவதை பார்த்திருக்கலாம்.   

அவ்வளவு முக்கியமானதா ஆக்சிஜன்? நிச்சயமாக. பிராணவாயு இல்லாமல் நம்முடைய உடல் இயங்காது. ஆக்சிஜன் சப்போர்ட் எப்போதெல்லாம் தேவைப்படுகிறது? பிராணவாயுவை இயற்கையாக நுரையீரல் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதற்கு காரணங்கள் என்ன? 

நுரையீரல்கள்:

சுவாசிக்கும் காற்று வாயிலாக பிராணவாயு (O2) நுரையீரலுக்குள் சென்று, பின் குருதி சுற்றோட்டத்தில் கலக்கிறது. சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் துணையோடு உடலின் அனைத்து திசுக்களுக்கும், செல்கள்களுக்கும் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு, நமது உடலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. பிராணவாயு மற்றும் கரியமில வாயு பரிமாற்றத்திற்கு நுரையீரலின் பங்கு முக்கியமானது. மிகப்பெரிய வேலையை செய்யும் நுரையீரலை பேணிக்காப்பது மிகவும் அவசியம். நுரையீரல்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டால், ஒரு கட்டத்தில் ஆக்சிஜன் சப்போர்ட் இன்றி இருக்கவே முடியாது. நுரையீரலை பாதிப்படையச் செய்யும் காரணங்கள் பல.

புகையும் நுரையீரலும்:

நுரையீரல் பாதிப்பிற்கு புகைப்பிடித்தல் மிக முக்கிய காரணமாகிறது. தொடர்ந்து புகைப்பிடிப்பதால் நுரையீரல் திசுக்கள் நிச்சயம் பாதிக்கப்படும். புகைப்பிடிப்பவர்களுக்கு (Active smokers) மட்டுமன்றி அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும் (Passive smokers) நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகனப் புகையிலிருந்து வெளியாகும் நச்சுக்கூறுகள் கொண்ட வேதியல் பொருட்களும், தொழிற்சாலைகள் வரம்பின்றி கக்கும் விஷப்புகையும், காற்றின் தூய்மையை வெகுவாக அழித்துவிட்டன. நுரையீரலை செயல்படாமல் முடக்குவதில், இந்த நூற்றாண்டில் அதிகரித்திருக்கும் காற்று மாசும் முக்கிய காரணம். 

பாடத்திட்ட மாற்றம்:

‘நமது வாயு மண்டலத்தில் உள்ள வாயுக்களின் பங்களிப்பை பற்றி கூறுங்கள்?’ என்ற கேள்விக்கு, நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைடு என நீங்கள் விடையளித்தால், பதில் தவறாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. காற்று மாசு அதிகரித்துக்கொண்டே செல்வதால், மேற்சொன்ன வாயுக்களோடு, கார்பன் மோனாக்சைடு, மீதேன், கந்தகம், கார்பன் நுண் துகள்கள், ஃபார்மல்டிஹைடு போன்ற நச்சு வாயுக்களையும் சேர்த்து சொன்னால் தான் பதில் சரியானதாக இருக்கும். அடுத்த தலைமுறைப் பாடத் திட்டத்தில், வாயுமண்டலத்தின் நச்சு வாயுக்கள் பற்றி கூடுதலாக படிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். அவ்வளவு மாசுக்களோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலான நகரங்களில், ‘மாஸ்க்’ இல்லாமல் நடமாடவே முடிவதில்லை.

செயற்கை சுவாசம்:

மருத்துவ ரீதியில் குழாய்கள், மாஸ்க் மற்றும் சில உபகரணங்கள் மூலமாக பிராணவாயு உட்செலுத்தப்படும். அவசரகால சிகிச்சையில் தற்காலிகமாகவும், நாட்பட்ட நோய் நிலைகளில் நீண்ட நேரத்திற்கும் பிராணவாயு செயற்கையாக கொடுக்கப்படும். முதல் உதவி சிகிச்சையில் ஆக்சிஜன் மாஸ்க்குகளின் பங்கு மிகவும் அவசியமானது. அதிக இரத்த இழப்பு ஏற்பட்டு அதிர்ச்சி காரணமாக சுவாசிக்க முடியாத நிலைகளிலும் ஆக்சிஜனின் ஆதரவு தேவைப்படுகிறது. சில வகையான தலைவலிகளைக் குறைப்பதற்கும் ஆக்சிஜன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக நாட்பட்ட நுரையீரல் நோய்த் தொகுதிகளுக்கு ஆக்சிஜன் உதவி கட்டாயம் அவசியம். 
நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள், திசுக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பிராணவாயுவை உட்செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

நிமோனியா நோயில் காற்றுப்பைகள் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜனை குருதிச் சுற்றோட்டத்தில் கலக்க செய்ய முடியாத போதும், விபத்துக்களில் சுவாசப்பாதைகள் பாதிக்கப்படும் போதும் செயற்கை சுவாசம் தேவை. Cystic fibrosis, Chronic bronchitis, Emphysema ஆகிய நுரையீரல் சார்ந்த நோய்நிலைகளிலும் அவசியம். அறுவை சிகிச்சைகளின் போதும் தேவைப்படும். இதய செயலிழப்பு ஏற்பட்ட சூழ்நிலையில், ஆக்சிஜன் செறிந்த குருதியை இதயத் தசைகளால் வெளித்தள்ள முடியாத போது, ஆக்சிஜனின் ஆதரவு தேவை. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளையும், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் உயிர்வாழ வைத்ததில் செயற்கை சுவாசத்தின் பங்கு அளப்பரியது. குறிகுணங்களை வைத்தும், சில பரிசோதனை முடிவுகளை கருத்தில் கொண்டும் ஆக்சிஜன் தேவை மற்றும் பயன்படுத்தப்பட வேண்டிய உபகரணங்களை மருத்துவர் முடிவு செய்வார்.

பிராணாயாமம்:

நுரையீரல் பாதிக்கப்படாமல் இருக்க, அதற்கு சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்குவது அவசியம். நச்சு மிகுந்த இப்போதைய சூழலில் நுரையீரல்களை பாதுகாக்க, சித்தர்கள் வழிவகுத்த ‘பிராணாயாமம்’ எனும் மூச்சுப் பயிற்சியை செய்வதே சிறந்ததாக இருக்கும். மூச்சுப்பயிற்சி செய்வதால், கூடுதல் பிராணவாயு செல்களுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். நுரையீரலின் செயல்பாட்டையும் பிராணாயாமம் அதிகரிக்கும். 

முன்னோர்களின் ஆக்சிஜன் சப்போர்ட்:

தலைவலிகளுக்கு கூட ஆக்ஸிஜன் சப்போர்ட் கொடுக்கப்படும் இன்றைய நிலையில், தொடர்ந்து பிராணாயாமம் செய்து வந்தால், தலைவலிகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. பிராணாயாமம் செய்ய தூய்மையான இடத்தை தேர்ந்தெடுப்பதும் அவசியம். புகைப்படிப்பவர்களுக்கு அருகில் அமர்ந்து பிராணாயாமம் செய்வது விபரீதம். உபகரணங்கள் இல்லா ’ஆக்சிஜன் சப்போர்ட்’ தான் நமது முன்னோர்கள் சுட்டிக்காட்டிய ‘பிராணாயாமம்’ என்று தாராளமாக கூறலாம். 

வரும்முன் காப்பதற்கு மூச்சுப்பயிற்சி சிறந்தது. நுரையீரல்களை பாதிக்கும் காரணிகளை விலக்க வேண்டும். சூற்றுச்சூழலை தூய்மையாக்க இயற்கையின் வழி பயணிப்பதும் அவசியம். உயர்ந்த இடங்களுக்கு செல்லும் போது குறையும் ஆக்சிஜன், நாம் வாழும் சமவெளிப் பகுதிகளில் கிடைக்காமல் போய்விடக்கூடிய நிலைமை வருங்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது. சிகெரட் புகை… வாகனப் புகை, தொழிற்சாலைகளின் புகை… இப்படி நுரையீரல்களை பாதிக்கப்படும் காரணிகளை வழிமுறைப்படுத்துவது அவசியம். நோய்கள் பாதிக்காத வண்ணம் சுவாச உறுப்புக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் முக்கியம். அனைத்தையும் மீறி நோய்நிலைகளால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது, ஆக்சிஜன் உபகரணங்கள் வழங்கும் செயற்கை சுவாசம் பெரும் உதவியாக இருக்கும்,

மனிதநேயத்தோடு சப்ளை நிறுத்தப்படாமல் இருந்தால்!...